ஜெர்மனியில் ஹம்பர்க் நகரில் ஜி20 மாநாட்டின் இடையே, கொரிய குடியரசின் அதிபர் மேதகு மூன் ஜாயே-இன்-னை பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று சந்தித்துப் பேசினார். அதிபர் தேர்தலில் பெற்ற வெற்றிக்காக அதிபர் மூனுக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி நேரில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். தொலைபேசி மூலம் பிரதமர் வாழ்த்து தெரிவித்ததையும், கொரிய மொழியில் டுவிட்டரில் வாழ்த்துகளை பதிவுசெய்ததையும் அதிபர் நினைவுகூர்ந்தார். கொரிய மொழியில் வாழ்த்து தெரிவித்ததை, தென்கொரிய மக்கள், மகிழ்ச்சியுடன் வரவேற்றதாக அவர் தெரிவித்தார். இந்தியா, தென்கொரியா இடையேயான சிறப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது என்ற தங்களது வாக்குறுதியை இரு தலைவர்களும் எடுத்துரைத்தனர். குறிப்பாக, இந்தியாவில் தயாரிப்போம், டிஜிட்டல் இந்தியா, இந்தியாவில் தொடங்குவோம் போன்ற திட்டங்களில் பங்கேற்று ஒத்துழைப்பை வலுப்படுத்துவோம் என்று உறுதிபூண்டனர். இந்தியாவிற்கு விரைவில் வருமாறு அதிபர் மூனுக்கு பிரதமர் அழைப்பு விடுத்தார். இதனை அதிபர் ஏற்றுக் கொண்டார்.
இத்தாலி பிரதமர் மேதகு திரு.பாலோ ஜென்டோலினியை பிரதமர் திரு.நரேந்திர மோடி சந்தித்துப் பேசியபோது, இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதில், குறிப்பாக வர்த்தகம், முதலீடு மற்றும் மக்களுக்கு இடையேயான உறவு ஆகியவற்றை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டது. இந்தியாவில் இந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் நடைபெற உள்ள உணவு பதப்படுத்துதல் கண்காட்சியான உலக உணவு இந்தியா (World Food India) கண்காட்சியில் இத்தாலி பங்கேற்க வேண்டும் என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார். இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த, இரண்டு நாடுகளின் நடுத்தர அளவிலான நிறுவனங்களுக்கு இடையேயான கருத்துப் பரிமாற்றத்தை ஊக்குவிப்பதன் முக்கியத்துவத்தை இரு தலைவர்களும் எடுத்துரைத்தனர். தங்களது நாட்டில் தொழில் துறை உள்ளிட்டவற்றில் இந்தியாவின் முதலீட்டுக்கு இத்தாலி பிரதமர் வரவேற்பு தெரிவித்தார். வானிலை மாற்றத்தைத் தடுக்கவும், ஆப்பிரிக்காவில் வளர்ச்சியை ஊக்குவிக்கவும் நீடித்த தீர்வை ஏற்படுத்துவதற்காக இணைந்து செயல்படுவதற்கான வழிவகைகள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.
பிரதமர் திரு.நரேந்திர மோடியும், நார்வே பிரதமர் மேதகு திருமதி.எர்னா சோல்பெர்க்-கும், இருதரப்பு விவகாரங்கள், குறிப்பாக பொருளாதார நல்லுறவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினர். தேசிய முதலீடு மற்றும் கட்டமைப்பு நிதியில், நார்வே-வின் ஓய்வூதிய நிதியம் பங்கேற்க வேண்டும் என்று பிரதமர் திரு.நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார். ஐக்கிய நாடுகள் பொது சபை கூட்டத்தின் இடையே நடைபெற உள்ள பெருங்கடல்கள் கருத்தரங்கில் இந்தியா பங்கேற்க வேண்டும் என்று நார்வே பிரதமர் அழைப்பு விடுத்தார். நீடித்த வளர்ச்சி இலக்குகளை (SDG) அடைவதற்காக, ஒத்துழைப்பு அளித்துவருவதை வெளிப்படுத்துவதன் அடையாளமாக, இந்தக் கூட்டத்தின் முடிவில், கால்பந்து ஒன்றை பிரதமர் திரு.நரேந்திர மோடிக்கு பிரதமர் சோல்பெர்க் வழங்கினார். அதில், நீடித்த வளர்ச்சி இலக்குகள் பொறிக்கப்பட்டிருந்தது.