Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

கொரானாவுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து நாட்டு மக்களுக்கு பிரதமர் ஆற்றிய உரை


எனதருமை சக குடிமக்களே

தற்போது உலகம் முழுவதும் மிகத் தீவிரமான, நெருக்கடியான காலகட்டத்தில் உள்ளது.

பொதுவாக, நெருக்கடியானதொரு இயற்கை தாக்குதல் நடக்கும் போது, அது சில குறிப்பிட்ட நாடுகள் அல்லது மாநிலங்களில் மட்டுமே இருக்கும். ஆனால், தற்போதைய பேரிடர் ஒட்டு மொத்த மனித குலத்தையும் நெருக்கடியில் ஆழ்த்திவிட்டது. இப்போது கொரானாவினால் பாதிக்கப்பட்ட நாடுகள், முதலாம் உலகப் போர், இரண்டாம் உலகப்போரில் கூட பாதிக்கப்படவில்லை.

கடந்த இரண்டு மாதங்களாக, நாம் இந்த கொடிய கொரோனா வைரஸ் தொடர்பான செய்திகளை தொடர்ந்து கேட்டுக்கொண்டும், கவனித்துக் கொண்டும் வருகிறோம். இந்த இரண்டு மாதங்களில், இந்தியாவின் 130 கோடி மக்கள், உலக அளவிலான இந்த தொற்றுநோயை திறமையாகக் கையாண்டிருக்கிறார்கள்; தகுந்த எச்சரிக்கைகளையும் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

எனினும், கடந்த சில நாட்களாக, நாம் இந்த நெருக்கடியை தவிர்த்து விட்டோம் என்பது போலவும், எல்லாமே வழக்கமாகத்தான் இருக்கிறது என்பது போலவும் எண்ணிக்கொண்டிருக்கிறோம். உலகளாவிய தொற்று நோயான கொரானா போன்ற நோய் குறித்து, இவ்வாறு திருப்தி கொள்வது என்பது சரியானதாக இருக்காது. எனவே, ஒவ்வொரு இந்தியரும் எச்சரிக்கையுடனும், தயார் நிலையிலும் இருக்க வேண்டியது அவசியம்.

நண்பர்களே,

நான் எப்பொழுதும் உங்களிடம் ஏதாவது கேட்டாலும், நீங்கள் என்னை ஒருபோதும் கைவிட்டதில்லை. உங்களுடைய ஆசீர்வாதங்களின் வலிமையினால் மட்டுமே, நம்முடைய முயற்சிகள் வெற்றி பெறுகின்றன.

என் சக குடிமக்களாகிய உங்கள் அனைவரிடமும் ஒன்று கேட்பதற்காகத்தான் நான் இங்கே இருக்கிறேன். இன்னும் சில காலங்களில், உங்களுடைய சில வாரங்களும், நேரமும் எனக்குத் தேவை.

நண்பர்களே,

உலகளாவிய தொற்று நோயிலிருந்து நம்மைக் காப்பாற்றுவதற்கு நிச்சயமான தீர்வு எதையும் இதுவரை அறிவியலால் கண்டுபிடிக்க முடியவில்லை. எந்த ஒரு தடுப்பு மருந்தும்  கண்டுபிடிக்கப் படவில்லை. இது மாதிரியான ஒரு நிலைமையில் கவலைப்படுவது என்பது மிகவும் இயற்கையே.

கொரோனா வைரஸால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகள் மற்றொரு அம்சத்தையும் வெளியிட்டுள்ளது. இந்த நாடுகளில், சில ஆரம்பகட்ட நாட்களுக்குப்பின், இந்த நோய் பயங்கரமாக அதிகரித்தது.

பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை மிக அதிவேகத்தில் அதிகரித்து வருகிறது. இந்த நிலைமை குறித்தும், இந்த நோய் எவ்வாறு பரவுகிறது என்ற தடப்பதிவு குறித்தும் இந்திய அரசு மிக உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.

ஒரு சில நாடுகள், மிக விரைவான முடிவுகள் எடுத்தும், மக்களை எந்த அளவிற்கு முடியுமோ அந்த அளவிற்கு தனிமைப்படுத்தியும், இந்த நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளன.

கொரோனா போன்ற மிகப்பெரிய அளவில் அதிகரித்து வரும் ஒரு நெருக்கடி, 130 கோடி மக்கள் தொகை கொண்ட, வளர்ச்சியை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கும் இந்தியா போன்ற ஒரு நாட்டில்  சாதாரணமாக நடக்கக் கூடிய நிகழ்வு அல்ல.

எனவே, மிகப்பெரிய, வளர்ந்த நாடுகளும் தொற்று நோயால் மிகப் பரவலாக பாதிக்கப்பட்டு வருவதை நாம் பார்த்துக் கொண்டிருக்கின்ற நேரத்தில், இந்தியா இதனால் பாதிக்கப்படாது என்று அனுமானித்துக் கொள்வது மிகவும் தவறாகும்.

நண்பர்களே

இந்த உலக அளவிலான தொற்றுநோயை எதிர்ப்பதற்கு உறுதி, பொறுமை என்ற இரண்டு முக்கிய அம்சங்களை மனதில் கொள்ள வேண்டியது இன்றியமையாததாகும். இந்த உலக அளவிலான நெருக்கடியை எதிர் கொள்வதற்கு அனைத்து 130 கோடி சக இந்தியக் குடிமக்களும் மேலும் தங்களது உறுதியை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும். குடிமக்கள் என்ற வகையில் நம்முடைய கடமைகளை பூர்த்தி செய்ய வேண்டும். மத்திய மாநில அரசுகள் நமக்கு வழங்கியுள்ள அறிவுரைகளுக்கு கீழ்ப்படிய வேண்டும். நாம் கொரானோ தொற்று நோயால் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்றும், மற்றவர்களுக்கும் இந்த நோய் தொற்று ஏற்படாமல் தடுக்க வேண்டும் என்றும் நாம் இன்று உறுதி பூண வேண்டும்.

நண்பர்களே

இது போன்ற உலக அளவிலான தொற்றுநோய் பரவுகின்ற சமயங்களில் ஒரே ஒரு மந்திரம் மட்டுமே நம்மை வழிநடத்த முடியும். நாம் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தால் உலகமும் ஆரோக்கியமாக இருக்கும். இந்த நோயைக் குணப்படுத்த எந்த மருந்தும் நமக்குத் தெரிந்த அளவில் இல்லை. இத்தகைய சூழ் நிலையில், நாம் ஆரோக்கியமாக இருப்பது அவசியம். இந்த நோயைத் தவிர்த்து, நல்ல உடல் நலத்துடன் இருப்பதற்கு, பொறுமையே ஒரு அடிப்படையான குணமாகும். ஒருவர் பொறுமையை எப்படி கடைப்பிடிப்பது? நெரிசல்களிலிருந்தும், கூட்டத்திலிருந்தும் விலகி இருப்பது; உங்கள் வீடுகளிலிருந்து வெளியே செல்வதைத் தவிர்ப்பது போன்றவை மூலமே. இதுவே சமூக இடைவெளி (சோசியல் டிஸ்டன்ஸிங்) விலகியிருத்தல். உலக அளவிலான தொற்று நோயான கொரோனா நிலவும் இந்த நெருக்கடியான நேரங்களில் இது மிகவும் முக்கியம்.

உலக அளவிலான இந்தத் தொற்று நோயின் பாதிப்பை கட்டுப்படுத்துவதில், நம்முடைய உறுதியும் பொறுமையும் மிக முக்கிய பங்கு வகிக்கும்.

நீங்கள் நன்றாகத்தான் இருக்கிறீர்கள்; உங்களுக்கு எதுவும் ஆகாது; என்று நீங்கள் நம்பினால்; தெருக்களிலும் சந்தைகளிலும் வழக்கம்போல் தொடர்ந்து சுற்றிக் கொண்டிருக்கலாம் என்று நினைத்தால், அது தவறு. இப்படிச் செய்வதால் நீங்கள் உங்களுக்கு மட்டுமல்ல. உங்களுடைய குடும்பத்துக்கும் அநீதி இழைக்கிறீர்கள்.

இவற்றையெல்லாம் மனதில் கொண்டு, அடுத்த சில வாரங்களுக்கு, மிக அத்தியாவசியமான தேவைகளுக்காக மட்டுமே உங்கள் வீடுகளிலிருந்து வெளியே செல்லுங்கள் என்று நான் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். வர்த்தகமோ, பணியோ எதுவாயினும் உங்கள் பணிகளை கூடுமான வரை வீட்டிலிருந்தபடியே செய்யுங்கள்.

அரசுப் பணிகள், சுகாதார சேவை பணிகளில் இருப்பவர்களும், மக்கள் பிரதிநிதிகளும் ஊடகவியலாளர்களும் தொடர்ந்து இயங்க வேண்டும் என்பது அவசியம். மற்ற அனைவரும், தங்களை இதர சமூகத்திலிருந்து தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

முதியவர்கள், மூத்த குடிமக்கள், நம் குடும்பங்களில் உள்ள 65 வயதுக்கும் மேற்பட்டவர்கள் ஆகியோர், அடுத்த சில வாரங்களுக்கு வீடுகளை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என்றும் நான் கேட்டுக்கொள்கிறேன். பழங்காலத்தில் போர்க் காலங்களின் போது இரவு நேரத்தில் இருட்டடிப்பு பிளாகவுட் செய்யப்பட்டது. இது குறித்து இன்றைய தலைமுறைக்கு பரிச்சயம் இல்லாமல் இருக்கலாம். சில சமயங்களில் இது போன்ற இருட்டடிப்பு பல காலங்களுக்குத் தொடரும். பல சமயங்களில் இருட்டடிப்பு ஒத்திகையும் நடைபெறும்.

நண்பர்களே

இன்று என் சக குடி மக்களின் ஆதரவு எனக்கு வேறு ஒரு விஷயத்திற்கும் வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மக்கள் ஊரடங்கு. மக்களே, மக்களுக்காக, மக்களால் தங்கள் மீது நடைமுறைப்படுத்திக் கொள்ளும் ஊரடங்கு என்பதே மக்கள் ஊரடங்காகும்.

இந்த ஞாயிறன்று, அதாவது 22 மார்ச் 2020 அன்று குடிமக்கள் அனைவரும் காலை 7 மணி முதல் மாலை 9 மணி வரை மக்கள் ஊரடங்குக்குக் கீழ்ப்படிய வேண்டும். இந்த ஊரடங்கின் போது நாம் நம் வீட்டை விட்டு வெளியேறக்கூடாது; நமது சுற்றுப்புறங்களிலும் சுற்றித் திரியக் கூடாது; அவசரகால மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கான சேவைகளில் இருப்பவர்கள் மட்டுமே தங்களது வீடுகளில் இருந்து வெளியேற வேண்டும்.

நண்பர்களே

நம்முடைய முயற்சி, நம்முடைய சுயகட்டுப்பாடு, தேச சேவையில் நமது கடமையைப் பூர்த்தி செய்வதற்கான நமது உறுதிப்பாடு ஆகியவற்றின் குறியீடாக 22 மார்ச் இருக்க வேண்டும். 22 மார்ச் மக்கள் ஊரடங்கின் வெற்றி, அதன் மூலம் கிடைத்த அனுபவம் ஆகியவை,  எதிர் வரும் சவால்களை எதிர்கொள்ள நம்மை தயார்படுத்தும்.

இந்த மக்கள் ஊரடங்கு பின்பற்றப்படுவதை உறுதிப்படுத்த தலைமையேற்க வேண்டும் என்று அனைத்து மாநில அரசுகளையும் நான் கேட்டுக்கொள்கிறேன்.

அடுத்த இரண்டு நாட்களுக்கு, மக்கள் ஊரடங்கு பற்றி, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று நம் நாட்டு இளைஞர்களை என்சிசி, என்எஸ்எஸ் சிவில் சமூகம் மற்றும் இதர அமைப்புகளையும் சார்ந்த இளைஞர்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன்.

ஒவ்வொரு தனி மனிதரும், ஒவ்வொரு நாளும் தொலைபேசியின் மூலம், குறைந்தது 10 பேரை அழைத்து, இந்த வைரஸில் இருந்து தங்களை எப்படி பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்றும், மக்கள் ஊரடங்கு என்றால் என்ன என்பது குறித்தும் அவர்களுக்கு விளக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

மக்கள் ஊரடங்கு என்பது நமக்கும், நம் நாட்டிற்கும் லிட்மஸ் சோதனையாக இருக்கும். கொரானா போன்ற உலக அளவிலான தொற்றுநோயை எதிர்ப்பதற்கு இந்தியா எந்த அளவு தயாராக உள்ளது என்பதை பார்க்கவும், பரிசோதிக்கவுமான நேரமிது.

நண்பர்களே

22 மார்ச் மக்கள் ஊரடங்கு பற்றிய இந்த அனைத்து விதமான முயற்சிகளுக்கும் இடையே, அன்றைய தினம் வேறு ஒரு விஷயத்திற்காகவும் உங்களுடைய ஆதரவு எனக்கு வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். கடந்த இரண்டு மாதங்களாக லட்சக்கணக்கான நம்முடைய மக்கள் மருத்துவமனைகளிலும், விமான நிலையங்களிலும் இரவுபகலாக பணி புரிந்து கொண்டிருக்கிறார்கள். மருத்துவர்கள் முதல் செவிலியர்கள் வரை, மருத்துவமனை பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள், விமானப் பணியாளர்கள், அரசு பணியாளர்கள், காவல் துறை பணியாளர்கள், ஊடகவியலாளர்கள், ரயில் பேருந்து ஆட்டோ ரிக்ஷா சேவை தொடர்பான மக்கள், வீட்டிற்கே சென்று பொருட்களை வழங்கும் முகவர்கள், அனைவரும் சுயநலமின்றி, தங்களைப் பற்றிய அக்கறை கொள்ளாமலேயே மற்றவர்களுக்கு சேவை புரிந்து கொண்டுள்ளார்கள்.

இத்தகைய சூழலில் இந்த சேவைகள் சாதாரணமானவை என்று கருதமுடியாது. இவர்களுக்கு தொற்று நோய் பரவக்கூடிய அபாயம் உள்ளது. ஆனாலும் அவர்கள் மற்றவர்களுக்கு சேவை செய்யும் தங்கள் கடமைகளைத் தொடர்ந்து செய்து வருகிறார்கள்.  தேசத்தைப் பாதுகாப்பவர்கள் என்ற வகையில், அவர்கள் நமக்கும் கொரோனா தொற்று நோய்க்கும் இடையே நின்று கொண்டிருக்கிறார்கள். தேசம் அவர்கள் அனைவருக்கும் நன்றிக்கடன் பட்டுள்ளது.

வரும் ஞாயிற்றுக்கிழமையன்று நாம் இத்தகைய மக்கள் அனைவருக்கும் நன்றி செலுத்த வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். 22 மார்ச்சு ஞாயிற்றுக்கிழமை அன்று சரியாக மாலை 5 மணிக்கு நம்முடைய கதவுகள் பால்கனிகள் நம்முடைய வீடுகளில் ஜன்னல்கள் ஆகியவற்றில் நின்றுகொண்டு அவர்களுக்கு கை தட்டுவோம். கை தட்டுதல், வீடுகளிலுள்ள தட்டுகளைத், தட்டுதல் மணி அடித்தல் ஆகியவற்றைச் செய்து அவர்கள் மனம் உற்சாகம் அடையும் வகையில் அவர்களுடைய சேவைக்கு மரியாதை செலுத்துவோம்.

22 மார்ச் 2020 அன்று மாலை 5 மணிக்கு நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் இது குறித்து சைரன் ஒலி எழுப்பி தெரிவிக்க வேண்டும் என்று நான் உள்ளூர் அதிகாரிகளைக் கேட்டுக் கொள்கிறேன்

சேவா பர்மோ தர்மா சேவையே உயரிய கடமை என்ற நமது மதிப்பின்படி வாழ்ந்து கொண்டிருக்கும், இத்தகைய சக குடிமக்கள் அனைவருக்கும், நம்முடைய உணர்வுகளை நாம் முழு மனதோடு தெரிவிக்க வேண்டும்.

நண்பர்களே

இதுபோன்ற நெருக்கடி நேரங்களில், நம்முடைய மருத்துவமனைகள் நம்முடைய அத்தியாவசிய தேவைகள் மீதான சுமை தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்பதையும் நாம் உணர்வது அவசியம்.

எனவே வழக்கமான மருத்துவப் பரிசோதனைகளுக்காக மருத்துவமனைகளுக்கு செல்வதை எவ்வளவு முடியுமோ அவ்வளவு தவிர்க்கவேண்டும் என்று நான் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். தேவைப்படும் போது, உங்களுக்குத் தெரிந்த உள்ளூர் மருத்துவரிடம் அல்லது மருத்துவராக உள்ள உங்கள் உறவினரிடம் தொலைபேசி மூலம் உங்களுக்குத் தேவையான வழிகாட்டுதலை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். அத்தியாவசியம் இல்லாத அறுவை சிகிச்சைகள் செய்ய ஏற்கனவே திட்டமிட்டிருந்தால், அதை ஒரு மாத காலம் ஒத்தி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நண்பர்களே

உலக அளவிலான இந்தத் தொற்று நோய், பொருளாதாரத்தின் மீதும் மிகப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தப் போகிறது. வைரசால் ஏற்படவுள்ள பொருளாதார சவால்களைக் கருத்தில் கொண்டு, நிதியமைச்சர் தலைமையிலான, கோவிட்19 பொருளாதார பொறுப்புக்கான பணிக்குழு ஒன்றை நிறுவ அரசு முடிவெடுத்துள்ளது. அனைத்து நிலைமைகளையும் ஆய்வு செய்து, அனைத்து பங்குதாரர்களின் கருத்துக்கள், கலந்தாலோசனைகள் ஆகியவற்றின் அடிப்படையில், நிலைமைகளுக்கேற்ப இந்தப் பணிக்குழு முடிவுகளை எடுக்கும்.

பொருளாதார சிரமங்களைக் குறைப்பதற்காக எடுக்கப்பட்டுள்ள அனைத்து நடவடிக்கைகளும் பயனுள்ள முறையில்  நடைமுறைப் படுத்தப்படுவதையும் இந்தப் பணிக்குழு உறுதி செய்யும்.

உலகளாவிய இந்த தொற்றுநோய் நமது நாட்டின்  நடுத்தர, நடுத்தர ஏழை மக்கள் மற்றும் அடித்தட்டு ஏழை மக்களின் நலனையும், பொருளாதார நலனையும் மிக மோசமாகப் பாதித்துள்ளது என்பது தெளிவு.  இந்த நெருக்கடியான நேரத்தில், சமுதாயத்தில் வர்த்தக உலகமும், உயர் வருவாய் கொண்ட பிரிவினரும், தங்களுக்கு சேவை செய்யும் மக்களின் பொருளாதார நலன்களைத் தங்களால் இயன்ற அளவு பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். வரவிருக்கும் சிலநாட்களில், இந்த மக்கள் அலுவலகத்துக்கோ, உங்கள் வீடுகளுக்கோ வர முடியாமல் போகும். அப்படி நேரும்போது அவர்களை மனிதாபிமானத்துடன் நடத்துங்கள். அவர்களுடைய ஊதியத்தைப் பிடித்துக் கொள்ள வேண்டாம். அவர்களும் தங்கள் குடும்பங்களை நடத்திச் செல்லவேண்டும். இந்த நோயிலிருந்து தங்கள் குடும்பங்களைப் பாதுகாக்க வேண்டும்.

பால், மளிகைப் பொருட்கள், மருந்துகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்படாது என்பதை உறுதி செய்வதற்காக, தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பதை அனைத்து இந்தியர்களுக்கும் நான் மீண்டும் தெரிவித்துக்கொள்கிறேன்.

எனவே என் சக குடிமக்கள் பொருட்களை வாங்கும்போது சாதாரணமானவற்றையே வாங்க வேண்டும் என்றும், அத்தியாவசியமான பொருட்களை அளவுக்கு அதிகமாகக் குவித்து வைக்கும் வகையில் வாங்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

நண்பர்களே

கடந்த இரண்டு மாதங்களாக, 130 கோடி இந்தியர்களும் ஒவ்வொரு குடிமகனும், இந்த தேசிய நெருக்கடியை, தன்னுடைய சொந்த நெருக்கடியாகவே எண்ணி, தங்களால் இயன்றதை சமுதாயத்திற்கும், தேசத்திற்கும் செய்துள்ளனர். இனிவரும் காலங்களிலும், உங்கள் பொறுப்புகளையும், கடமைகளையும், நீங்கள் தொடர்ந்து இதேபோன்ற முறையில் செய்வீர்கள் என்ற முழு நம்பிக்கை எனக்கு உள்ளது.

ஆம் இது போன்ற காலங்களில் பல பிரச்னைகள் எழும் என்பதை நான் ஒத்துக்கொள்கிறேன். அச்சமும், வதந்திகளும் உள்ள ஒரு சூழல் நிலவுகிறது. பலசமயங்களில், குடிமக்கள் என்ற வகையில் நமக்குள்ள எதிர்பார்ப்புகள், பூர்த்தி செய்யப்படுவதில்லை. இந்த நெருக்கடி மிகவும் கவலையளிப்பதாக இருக்கிறது. இந்த அனைத்து பிரச்னைகளுக்கும் மத்தியில், அனைத்து சக குடிமக்களும் இந்த சவால்களை திடத்துடனும், உறுதியுடனும் எதிர்நோக்க வேண்டும்.

நண்பர்களே

கொரானா நோயிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கு, நாம் நம்முடைய திறமைக்கும், திறனுக்கும் ஏற்ற வகையில், நம்மால் இயன்ற அனைத்து செயல்களையும் மேற்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். மத்திய அரசு, மாநில அரசுகள், உள்ளூர் அதிகாரிகள், பஞ்சாயத்துகள், மக்கள் பிரதிநிதிகள், குடி மக்கள் என யாராக இருந்தாலும் இவர்கள் ஒவ்வொருவரும், இந்த உலக அளவிலான தொற்று நோய்க்கு எதிராக தங்கள் வழியில் பங்காற்றிக் கொண்டிருக்கிறார்கள். நீங்களும் உங்களுடைய முழு பங்கை அளிக்க வேண்டும்.

உலக அளவிலான தொற்றுநோய் நிலவும் சூழலில், மனிதகுலம் வெற்றியடைய வேண்டும். இந்தியா வெற்றியடைய வேண்டும் என்பது மிகவும் முக்கியம்.

இன்னும் சில நாட்களில் நவராத்திரி பண்டிகை வரவிருக்கிறது. இது சக்தியை வழிபடும் பண்டிகையாகும். இந்தியா முழு சக்தியுடன், முழு வலுவுடன், முழு ஆற்றலுடன் முன்னேறுகிறது என்பதே எனது மனமார்ந்த வாழ்த்தாகும்

மிக மிக நன்றி

நன்றிகள் பலப்பல