Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

கூட்டுறவுத் துறையின் வளர்ச்சி குறித்த உயர்நிலைக் ஆய்வுக் கூட்டம் பிரதமர் தலைமையில் நடைபெற்றது


கூட்டுறவுத் துறையின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்வதற்கான உயர்நிலைக் கூட்டம் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்றது. இத்துறையில் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் வாயிலாக மாற்றத்தைக் கொண்டுவரும் கூட்டுறவுத் துறை மூலம் வளம் என்ற நடைமுறையை ஊக்குவிக்கவும் அத்துறையில், இளைஞர்கள், பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதற்கான திட்டங்கள் குறித்தும் மத்திய கூட்டுறவு அமைச்சகம் மேற்கொண்டு வரும் பல்வேறு முயற்சிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

நாட்டின் கூட்டுறவுத் துறையை விரிவுபடுத்த உலக அளவிலான கூட்டுறவு அமைப்புகளுடன் கூட்டாண்மை தேவை என்று வலியுறுத்திய பிரதமர், கூட்டுறவு அமைப்புகள் மூலம் இயற்கை வேளாண் பொருட்களை ஊக்குவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ஏற்றுமதி சந்தைகளில் கவனம் செலுத்தவும், வேளாண் நடைமுறைகளை மேம்படுத்த கூட்டுறவு அமைப்புகள் மூலம் மண் பரிசோதனை மாதிரியை உருவாக்கவும் அவர் பரிந்துரைத்தார். நிதி பரிவர்த்தனைகளை எளிதாக்க ரூபே வேளாண் கடன் அட்டைகளுடன் யுபிஐ அமைப்பை ஒருங்கிணைக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய பிரதமர், கூட்டுறவு அமைப்புகளுக்கு இடையே ஆரோக்கியமான போட்டியின் அவசியத்தையும் எடுத்துரைத்தார்.

கூட்டுறவுத் துறையில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையில், அந்த அமைப்புகளின் சொத்துக்களை ஆவணப்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்தும் பிரதமர் வலியுறுத்தினார். கூட்டுறவு மூலம் வேளாண் நடவடிக்கைகளை நீடித்த நடைமுறை மாதிரியாக ஊக்குவிக்கவும் அவர் பரிந்துரைத்தார். கூட்டுறவுத் துறையில் வேளாண் மற்றும் அது சார்ந்த நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்கும் விவசாயிகளுக்கு சிறந்த சேவைகளை வழங்குவதற்கும் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பை பயன்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். கல்வியைப் பொறுத்தவரை, பள்ளிகள், கல்லூரிகள், இந்திய மேலாண்மைக் கழகங்களில் கூட்டுறவுத்துறை தொடர்பான  பாடப்பிரிவுகளை அறிமுகப்படுத்தவும், எதிர்கால தலைமுறையினரை ஊக்குவிக்கும் வகையில் வெற்றிகரமான கூட்டுறவு அமைப்புகளை உருவாக்கவும் பிரதமர் யோசனை தெரிவித்தார். இளம் பட்டதாரிகள் கூட்டுறவுத் துறையில் தங்களது பங்களிப்பை வழங்க ஊக்குவிக்கப்பட வேண்டும் என்றும், கூட்டுறவு அமைப்புகள் அவற்றின் செயல்திறன் அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறினார். இதன் மூலம் போட்டித் தன்மையையும் வளர்ச்சியையும் ஒரே நேரத்தில் ஊக்குவிக்க முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில், தேசிய கூட்டுறவுக் கொள்கை குறித்த வரைவு மசோதா மற்றும் கடந்த மூன்றரை ஆண்டுகளில் அந்த அமைச்சகத்தின் முக்கிய சாதனைகள் குறித்து பிரதமரிடம் எடுத்துரைக்கப்பட்டது. ‘கூட்டுறவுத் துறை மூலம் வளம்’ என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்கி, விரிவான ஆலோசனைகளுடன் கூடிய செயல்முறை மூலம் தேசிய கூட்டுறவுக் கொள்கை குறித்த வரைவை கூட்டுறவு அமைச்சகம் உருவாக்கியுள்ளது. தேசிய கூட்டுறவு கொள்கை 2025-ல் பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. கிராமப்புறப் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதில் கவனம் செலுத்தி, கூட்டுறவுத் துறையின் முறையான மற்றும் முழுமையான வளர்ச்சியை எளிதாக்குவதும் நோக்கமாகும். இது கூட்டுறவு அடிப்படையிலான பொருளாதார முன் மாதிரியை ஊக்குவிப்பதோடு ஒரு வலுவான கட்டமைப்பை நிறுவுவதற்கும் உதவுகிறது. கூட்டுறவுத் துறையை வலுப்படுத்தவும், நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு கூட்டுறவுத் துறையின் பங்களிப்பை கணிசமான அளவில்  அதிகரிக்கவும் இந்தக் கொள்கை வழிவகை செய்கிறது.

கூட்டுறவு இயக்கத்தை ஊக்குவிப்பதற்கும் வலுப்படுத்துவதற்கும் அந்த அமைச்சகம், ஏழு முக்கியப் பகுதிகளில் 60 வகையான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இந்த முயற்சிகளில் தேசிய கூட்டுறவு தரவுத்தளம் மற்றும் கணினிமயமாக்கல் போன்ற  திட்டங்கள் மூலம் கூட்டுறவு நிறுவனங்களை டிஜிட்டல் மயமாக்கும், நடவடிக்கைகளை மேற்கொள்வதும் தொடக்க வேளாண் கடன் சங்கங்களை வலுப்படுத்தும் நடவடிக்கைகளும் அடங்கும். கூடுதலாக, கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் செயல்திறன் மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்துவதில் அமைச்சகம் உரிய கவனம் செலுத்தி வருகிறது.

 

கூட்டுறவு தொடக்க வேளாண் கடன் சங்கங்களின் நிலையில் 10- க்கும் மேற்பட்ட அமைச்சகங்களிலிருந்து 15-க்கும் மேற்பட்ட திட்டங்களை ஒருங்கிணைத்து, அரசின்  முழுமையான அணுகுமுறை வாயிலாக கூட்டுறவு சங்கங்களுக்கான பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தியுள்ளது. இதன் விளைவாக, கூட்டுறவுத்துறையின்  வர்த்தக நடைமுறைகளில் பன்முகத்தன்மை, கூடுதல் வருவாய்க்கான வாய்ப்புகள், கூட்டுறவு அமைப்புகளை அதிகரிப்பது மற்றும் கிராமப்புறங்களில் மத்திய அரசு திட்டங்களின் பயன்களை பெறுவதற்கான  அணுகுமுறை போன்றவைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த கூட்டுறவு சங்கங்களை உருவாக்குவதற்கான கால அவகாசத்துடன்  கூடிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூட்டுறவுத்துறையில் கல்வி, பயிற்சி, மற்றும் ஆராய்ச்சியை மேம்படுத்தவும், திறமையான நிபுணர்களை உருவாக்கவும், குஜராத் மாநிலம் ஆனந்த் நகரில் உள்ள கூட்டுறவு மேலாண்மை  நிறுவனத்தை திரிபுவன் கூட்டுறவு பல்கலைக்கழகமாக மாற்றவும், அதனை  தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாக தரம் உயர்த்துவதற்குமான மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பல்வேறு துறைகளில் கூட்டுறவு சங்கங்களின் வளர்ச்சி, அதன் முக்கிய பங்களிப்புக் குறித்து பிரதமரிடம் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. நாட்டின் பொருளாதாரத்தில், குறிப்பாக விவசாயம், கிராமப்புற மேம்பாடு, பொருளாதார உள்ளடக்கம் ஆகியவற்றில் கூட்டுறவுத் துறையின் பங்களிப்பு குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் தற்போது, நாட்டின் மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பங்கு கூட்டுறவுத் துறையுடன் தொடர்புடையது என்றும், இதில் 30-க்கும் மேற்பட்ட துறைகளில் 8.2 லட்சத்துக்கும் மேற்பட்ட கூட்டுறவு நிறுவனங்கள் உள்ளன என்றும், 30 கோடிக்கும் அதிகமான தனிநபர்கள் இவற்றில் உறுப்பினர்களாக உள்ளனர் என்றும் எடுத்துரைக்கப்பட்டது. பொருளாதாரத்தின் பல்வேறு பகுதிகளில் கூட்டுறவுத்துறை முக்கியப் பங்கு வகிக்கிறது.

இந்தக் கூட்டத்தில் உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் திரு அமித் ஷா, கூட்டுறவுத்துறை அமைச்சகத்தின் செயலாளர் டாக்டர் ஆஷிஷ் குமார் பூதானி, பிரதமரின் முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.கே.மிஸ்ரா, பிரதமரின் முதன்மைச் செயலாளர்-2 திரு சக்திகாந்த தாஸ், பிரதமரின் ஆலோசகர் திரு அமித் கரே மற்றும் பிற மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

—-

TS/SV/KPG/DL