இந்தியா – ஐரோப்பிய நாடுகளின் வர்த்தகம் மற்றும் தொழில்நுட்ப குழுமத்தின் 2-வது கூட்டம் இன்று (2025 பிப்ரவரி 28-ம் தேதி) புதுதில்லியில் நடைபெற்றது. வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் தலைமையிலான இந்தியப் பிரதிநிதிகள் குழுவில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்கள் அமைச்சர் திரு பியூஷ் கோயல், மின்னணு, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். ஐரோப்பிய யூனியன் சார்பில் தொழில்நுட்ப இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் ஜனநாயகத்திற்கான நிர்வாக துணைத் தலைவர் திருமதி ஹென்னா விர்க்குனென், புத்தொழில் நிறுவனங்களுக்கான ஆணையர் திரு மரோஸ் செஃப்கோவிக், ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புக்கான ஆணையர் திருமதி எகடெரினா ஜஹாரிவா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
பிரதமர் திரு நரேந்திர மோடி, ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் திருமதி உர்சுலா வான் டெர் லேயன் ஆகியோர் 2022 ஏப்ரல் மாதத்தில் இந்திய-ஐரோப்பிய நாடுகளிடையே வர்த்தகம், தொழில்நுட்பம், பாதுகாப்பு ஆகிய துறைகளில் உள்ள சவால்களை எதிர்கொள்வதில் இணைந்து செயல்படும் வகையில் இந்தியா -ஐரோப்பிய யூனியன் வர்த்தகம் மற்றும் தொழில்நுட்ப கவுன்சிலை இருதரப்பு பேச்சு வார்த்தைக்கான தளமாக உருவாக்கினர். வெளிப்படையான சந்தைவாய்ப்புகள், பரஸ்பர பரிமாற்ற நடவடிக்கைகள் ஆகியன பன்முகத்தன்மை கொண்ட இரண்டு பெரிய ஜனநாயக அமைப்புகளுக்கு இடையே இயற்கையான நல்லுறவைக் கொண்டுள்ளன.
இருநாடுகளுக்கு இடையே பரஸ்பரம், இருதரப்பு உறவுகள் வளர்ந்து வரும் உத்திசார் நடவடிக்கைகளின் ஒருங்கிணைப்பு ஆகியவை உலக அளவிலான புவிசார் அரசியலில் உள்ள மாற்றங்களை எதிர்கொள்ளவும் நிலைத்தன்மை, பொருளாதார பாதுகாப்பு, நீடித்த வளர்ச்சி ஆகியவற்றை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளிலும் இணைந்து செயல்படும் என முடிவு செய்யப்பட்டது. சர்வதேச விதிகள், நாடுகளின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு, வெளிப்படைத்தன்மை, மோதல் போக்குகளுக்கு அமைதியான வழியில் தீர்வு காண்பது ஆகிய கொள்கைகளுக்கு இரு தரப்பினரும் மதிப்பளிப்பதை மீண்டும் வலியுறுத்தினர். வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பத்திற்கு இடையே அதிகரித்து வரும் தொடர்புகள் இருநாடுகளின் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை மேம்படுத்துவதில் இணைந்து செயல்படுவதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்யவும் முடிவு செய்யப்பட்டது. பசுமை மற்றும் தூய்மைத் தொழில்நுட்பங்களின் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வதற்கான நடவடிக்கைகளில் இருதரப்பின் கூட்டுமுயற்சிகள் குறித்தும் இதில் விவாதிக்கப்பட்டது.
இந்திய – ஐரோப்பிய நாடுகளின் முதல் கூட்டம் 2023 மே 16-ம் தேதி பிரஸ்ஸல்ஸ் நகரில் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து 2023 நவம்பர் 24 அன்று, காணொலிக் காட்சி மூலம் நடைபெற்ற கூட்டத்தில் இரு நாடுகளிடையேயான பணிக்குழுக்களால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து மதிப்பாய்வு செய்தது.
உத்திசார் தொழில்நுட்பங்கள், டிஜிட்டல் நிர்வாகம் மற்றும் டிஜிட்டல் இணைப்பு குறித்த முதலாவது பணிக்குழு.
உத்திசார் தொழில்நுட்பங்கள், டிஜிட்டல் நிர்வாகம் மற்றும் டிஜிட்டல் இணைப்பு குறித்த முதலாவது பணிக்குழு மேற்கொண்ட நடவடிக்கைகள் பரஸ்பரம் இரு நாடுகளாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட அம்சங்களை உறுதிப்படுத்துகின்றன. மனிதர்களை மையமாகக் கொண்ட டிஜிட்டல் மாற்றத்தை விரைவுபடுத்தவும், பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டிற்குத் தேவையான நவீன டிஜிட்டல் தொழில்நுட்பங்களான செயற்கை நுண்ணறிவு, குறைமின்கடத்திகள், உயர் செயல்திறன் கொண்ட கம்ப்யூட்டிங் மற்றும் 6-ம் தலைமுறை அலைக்கற்றை ஆகியவற்றை உருவாக்கவும் இருதரப்பினரின் வலிமையை மேம்படுத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டன. பொருளாதார பாதுகாப்பை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதே வேளையில், போட்டித்தன்மையை மேலும் மேம்படுத்தும் வகையில், ஐரோப்பிய யூனியன் -இந்தியா இடையே ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதென முடிவு செய்யப்பட்டன. இணையதளப் பாதுகாப்புமிக்க டிஜிட்டல் சூழல் அமைப்பை மேம்படுத்த வேண்டும் என்பதும் ஒப்புக்கொள்ளப்பட்டன.
வெளிப்படையான டிஜிட்டல் பொருளாதார வளர்ச்சிக்கு டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பின் முக்கியத்துவத்தை அங்கீகரித்த இருதரப்பும் மனித உரிமைகளுக்கு மதிப்பளிப்பது குறித்தும், தனிப்பட்ட தரவுகள், தனியுரிமை, அறிவுசார் சொத்துரிமைகளைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ஒப்புக் கொள்ளப்பட்டன. எல்லை தாண்டிய டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேம்படுத்தவும், பரஸ்பர பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கவும் மின்னணு கையொப்பங்களை பரஸ்பரம் அங்கீகரிக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தின.
குறைமின்கடத்தி விநியோகச் சங்கிலிகளுக்கான வாய்ப்புகளை வலுப்படுத்தவும், குறைமின்கடத்திகள் துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்தவும் இரு தரப்பினரும் வலியுறுத்தினர். சிப் வடிவமைப்பு, பலபடிநிலை ஒருங்கிணைப்பு, குறைமின்கடத்திக்கான தொழில்நுட்பங்கள், செயல்முறை வடிவமைப்பு தொகுப்பு ஆகியவற்றின் செயல்முறைகளுக்கான தொழில்நுட்ப மேம்பாடு போன்றவற்றில் கூட்டு ஆராய்ச்சியை மேற்கொள்ளவும் ஒப்புக்கொள்ளப்பட்டன. நீடித்த, பாதுகாப்பான, பன்முகப்படுத்தப்பட்ட குறைமின்கடத்தி உற்பத்தித் திறன்களை மேம்படுத்துவதன் மூலம் தொழில்நுட்ப திறன்களை மேம்படுத்தவும், விநியோகச் சங்கிலியை உறுதி செய்யவும் ஊக்குவிக்கப்படும். மேலும், மாணவர்கள் மற்றும் இளம் தொழில் வல்லுநர்களிடையே திறன் பரிமாற்றங்களை எளிதாக்கி குறைமின்கடத்தி உற்பத்திக்கான திறன்களை வளர்க்கும் ஒரு பிரத்யேகத் திட்டத்தை உருவாக்கவும் முடிவு செய்தனர்.
மனிதர்களை மையமாகக் கொண்ட, நீடித்த மற்றும் பொறுப்பான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை சர்வதேச அளவில் மேம்படுத்துவதற்கான தங்களது உறுதிப்பாட்டை இரு தரப்பினரும் மீண்டும் வலியுறுத்தினர். கூடுதலாக, செயற்கை நுண்ணறிவில் தொடர்ச்சியான தாக்கத்தை ஏற்படுத்தும் ஒத்துழைப்பை உறுதி செய்யும் வகையில், ஐரோப்பிய செயற்கை நுண்ணறிவு அலுவலகம் மற்றும் இந்திய செயற்கை நுண்ணறிவு இயக்கம் ஆகியவற்றை உருவாக்கவும் முடிவு செய்யப்பட்டன. மொழிகளில் ஒத்துழைப்பை மேம்படுத்தவும், மனித மேம்பாடு மற்றும் பொது நன்மைக்காக செயற்கை நுண்ணறிவின் திறனைப் பயன்படுத்தவும், நெறிமுறை மற்றும் பொறுப்பான செயற்கை நுண்ணறிவுக்கான கருவிகள் மற்றும் கட்டமைப்புகளை உருவாக்குவது போன்ற கூட்டுத் திட்டங்கள் உருவாக்கவும் அவர்கள் ஒப்புக் கொண்டனர். இயற்கைப் பேரிடர்கள், பருவநிலை மாற்றம், உயிரி தகவலியல் ஆகிய துறைகளில் உயர் செயல்திறன் கொண்ட கம்ப்யூட்டிங் பயன்பாடுகளில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஒத்துழைப்பின் கீழ் ஏற்பட்ட முன்னேற்றத்தின் அடிப்படையில் இவை கட்டமைக்கப்படும்.
பாரத் 6 ஜி கூட்டணி மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் 6 ஜி ஸ்மார்ட் நெட்வொர்க்குகள் மற்றும் சேவைகள் தொழில் சங்கம் இடையே ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முன்னுரிமைகளை சீரமைப்பதற்கும், பாதுகாப்பான, நம்பகமான தொலைத்தொடர்பு, நெகிழ்வு தன்மையுடன் கூடிய விநியோகச் சங்கிலிகளை உருவாக்குவதற்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதை இந்திய – ஐரோப்பிய நாடுகள் வரவேற்றுள்ளன. தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்பு தரப்படுத்தலில் ஒத்துழைப்பை இரு தரப்பும் மேம்படுத்தி, குறிப்பாக இணைந்து செயல்பட்டு உலக அளவிலான தரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும்.
டிஜிட்டல் திறன் மேம்பாட்டிற்கான இடைவெளியைக் குறைப்பதற்கும், சான்றிதழ்களைப் பரஸ்பரம் அங்கீகரிப்பதை ஆராய்வதற்கும், திறமையான நிபுணர்களை உருவாக்குவதற்கும், ஆலோசனைகளைப் பரிமாறிக்கொள்வதற்கும் இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.
2024 செப்டம்பரில் ஐ.நா பொதுச் சபையில் ஒருமித்த கருத்துடன் ஒப்புக்கொள்ளப்பட்ட உலகளாவிய டிஜிட்டல் ஒப்பந்தத்தை அமல்படுத்துவதில் ஒத்துழைக்க இருதரப்பும் ஒப்புக் கொண்டன. விரைவில் நடைபெறவுள்ள உலக உச்சிமாநாடு, இணைய ஆளுகையின் பல்வேறு பங்குதாரர்களின் மாதிரியை மேம்படுத்தவும், உலகளாவிய ஆதரவைப் பராமரிக்கவும் வேண்டியதன் அவசியத்தை அவர்கள் குறிப்பிட்டனர்.
தூய்மை மற்றும் பசுமை தொழில்நுட்பங்கள் மீதான 2-வது பணிக்குழு
இந்தியா – ஐரோப்பிய யூனியன் நாடுகள் முறையே 2070 மற்றும் 2050-க்குள் நிகர பூஜ்ஜிய உமிழ்வை அடைவதற்காக தூய்மை மற்றும் பசுமை தொழில்நுட்பங்கள் குறித்த 2-வது பணிக்குழுவின் செயல்பாடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த இலக்குகளை அடைவதில் புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் தரநிலைகளில் குறிப்பிடத்தக்க முதலீடுகளை மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டன. ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது, ஐரோப்பிய யூனியன் நாடுகள் மற்றும் இந்தியா இடையே தொழில்நுட்ப ஒத்துழைப்பு, சிறந்த நடைமுறைகளை பரிமாறிக் கொள்ளுதல் என முடிவு எடுக்கப்பட்டன. இந்திய மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளிடையே இன்குபேட்டர்கள், சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள், புத்தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு இடையேயான ஒத்துழைப்பு குறித்த செயல்திட்டங்களை உருவாக்குவோம். இதுபோன்ற தொழில்நுட்பங்களில் மனிதவளத் திறன் மேம்பாட்டை அதிகரிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டன.
இந்த விஷயத்தில், மின்சார வாகனங்களுக்கு மின்கலங்களை மறுசுழற்சி செய்தல்,கடல்சார் பிளாஸ்டிக் குப்பைகள், கழிவுகளிலிருந்து ஹைட்ரஜன் உற்பத்தி ஆகியவற்றில் கூட்டு ஆராய்ச்சி ஒத்துழைப்புக்கு இருதரப்பும் ஒப்புக் கொண்டன. மதிப்பிடப்பட்ட மொத்த கூட்டுத் திட்டம் ஐரோப்பா மற்றும் இந்திய பங்களிப்புகளிலிருந்து சுமார் 60 மில்லியன் யூரோவாக இருக்கும். மின்சார வாகனங்களுக்கான பேட்டரிகளை மறுசுழற்சி செய்யும்போது, பல்வேறு வகையான நெகிழ்வான / குறைந்த விலை / மறுசுழற்சி செய்ய எளிதான பேட்டரிகளின் மூலம் பேட்டரி சுழற்சி முறையில் கவனம் செலுத்தப்படும். கடல் பிளாஸ்டிக் குப்பைகளைக் கண்டறிதல்,பகுப்பாய்வு செய்வதற்கான தொழில்நுட்பங்களை உருவாக்குதல், கடல் சுற்றுச்சூழல் மாசுபடுவதால் ஏற்படும் ஒட்டுமொத்த தாக்கத்தை குறைப்பது ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படும். கழிவுகளில் இருந்து ஹைட்ரஜனைத் தயாரிப்பதில், உயிரியல் கழிவுகளிலிருந்து ஹைட்ரஜனை உற்பத்தி செய்வதற்கான அதிக செயல்திறன் தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தப்படும்.
எதிர்கால நடவடிக்கைகளுக்கு அடிப்படையாக அடையாளம் காணப்பட்ட துறைகளில் நிபுணர்களுக்கு இடையேயான கணிசமான பரிமாற்றங்களின் முக்கியத்துவத்தை இரு தரப்பினரும் நினைவு கூர்ந்தனர். 2024 ஜனவரியில் இத்தாலியின் இஸ்ப்ராவில் உள்ள கூட்டு ஆராய்ச்சி மையத்தில் (JRC), மின்சார வாகனங்கள் குறித்த பயிற்சி மற்றும் பரஸ்பர கற்றல் பயிற்சியில் இந்திய நிபுணர்கள் பங்கேற்றனர். மேலும், ஐரோப்பிய யூனியன் இந்திய உரையாடல் மற்றும் இந்தியாவுடனான உள்கட்டமைப்பு தரப்படுத்தல் செயல்முறைகளில் தொழில்துறையின் ஈடுபாட்டை ஆழப்படுத்துவதற்காக, மின்சார வாகன சார்ஜிங் தொழில்நுட்பங்கள் குறித்த கூட்டு பயிலரங்கம் இந்தியாவின் புனேவில் உள்ள இந்திய வாகன ஆராய்ச்சி சங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. மின்சார வாகனங்களுக்கான பேட்டரிகளை மறுசுழற்சி செய்வதற்கான தொழில்நுட்பத்தில் இந்திய, ஐரோப்பிய யூனியன் புத்தொழில் நிறுவனங்களுக்கு இடையே பரிமாற்றங்களை அடையாளம் காணவும், ஆதரிக்கவும், இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர். கடல் பிளாஸ்டிக் குப்பைகளுக்கான மதிப்பீடு, கண்காணிப்பு கருவிகள் குறித்தும் நிபுணர்கள் கூட்டாக விவாதித்தனர். கடல் பிளாஸ்டிக் மாசுபாட்டை திறம்பட நிர்வகிப்பதற்கான நடைமுறை தீர்வுகளை இணைந்து உருவாக்க ஐரோப்பிய யூனியன் – இந்தியா ஒத்துழைப்பை ஊக்குவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மின்சார வாகனப் போக்குவரத்து துறையில் அறிவு பரிமாற்றம் உள்ளிட்ட மின்சார சார்ஜிங் உள்கட்டமைப்புக்கான தரநிலைகளில் ஒத்துழைப்பை ஆராய இருதரப்பும் ஒப்புக் கொண்டன. ஹைட்ரஜன் தொடர்பான பாதுகாப்பு தரநிலைகள், கழிவுநீர் சுத்திகரிப்பு தொழில்நுட்பங்கள் ஆகியவற்றில் ஒத்துழைப்பை எவ்வாறு மேம்படுத்துவது என்பதை ஆராயவும் அவர்கள் ஒப்புக் கொண்டனர்.
வர்த்தகம், முதலீடு, மதிப்புச் சங்கிலிகள் குறித்த பணிக்குழு :
இந்தியாவிற்கும் ஐரோப்பிய யூனியனுக்கும் இடையே நெருங்கிய பொருளாதார ஒத்துழைப்பை உருவாக்கும் நோக்கில் வர்த்தகம், முதலீடு மதிப்புச் சங்கிலிகள் குறித்த பணிக்குழு 3-ன் கீழ் ஆக்கப்பூர்வமான விவாதங்களை இந்தியாவும் ஐரோப்பிய யூனியனும் மேற்கொண்டன. அதிகரித்து வரும் சவாலான புவிசார் அரசியல் சூழலில், இரு தரப்பினரும் செல்வத்தை உருவாக்குவதற்கும் செழிப்பைப் பகிர்வதற்கும் ஒன்றிணைந்து செயல்பட உறுதியளித்தனர். தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (எஃப்.டி.ஏ), முதலீட்டு பாதுகாப்பு ஒப்பந்தம் (ஐ.பி.ஏ), புவியியல் குறியீடுகள் ஒப்பந்தம் ஆகியவற்றில் தற்போது நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகளை பணிக்குழு 3-ன் கீழ் நிறைவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
வெளிப்படைத்தன்மை, முன்கணிப்பு, பன்முகப்படுத்தல், பாதுகாப்பு, நிலைத்தன்மை ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம் எதிர்காலத்திற்கு தயாராக உள்ள மதிப்புச் சங்கிலிகளை வளர்க்க இருதரப்பும் உறுதிபூண்டன. வேளாண்-உணவு, தீவிர மருந்து பொருட்கள் (ஏபிஐ), தூய்மையான தொழில்நுட்பங்கள் துறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து இரு தரப்பினரும் திருப்தி தெரிவித்தனர். மேலும் உலகளாவிய சவால்களை எதிர்கொள்ளக்கூடிய மதிப்புச் சங்கிலிகளை மேம்படுத்தும் நோக்கத்துடன் இந்த மூன்று துறைகளிலும் செயல் திட்டங்களை வகுக்கவும் ஒப்புக் கொண்டனர்.
வேளாண் துறையில், இந்தியாவும், ஐரோப்பிய யூனியனும் உணவுப் பாதுகாப்புக்கான தற்செயல் திட்டமிடலில் ஒத்துழைக்க விரும்புவதுடன், ஜி20 கட்டமைப்பின் மூலம் தேவைகளைப் பகிர்ந்து கொள்வதற்கான பொதுவான முயற்சிகளை வரவேற்றன. மருந்துத் துறையில், நிலையான உற்பத்தியை ஊக்குவிப்பதன் மூலம், இடையூறுகளைத் தடுக்க ஆய்வு அமைப்புகளை நிறுவுவதை இரு தரப்பினரும் நோக்கமாகக் கொண்டுள்ளனர். சூரிய மின்சக்தி, ஹைட்ரஜன் ஆகியவற்றிற்கான விநியோகச் சங்கிலிகளை வலுப்படுத்துவதில் தூய்மையான தொழில்நுட்ப ஒத்துழைப்பு மையங்களில் இந்தியாவும் ஐரோப்பிய யூனியனும் முதலீட்டை அதிகரிப்பதற்கும், சிறந்த நடைமுறைகளைப் பரிமாறிக்கொள்வதற்கும், தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. வர்த்தகம் மற்றும் தொழில்நுட்ப கவுன்சில்
(டிடிசி) கட்டமைப்பிற்குள் ஒத்துழைப்பு மூலம் தொடர்புடைய முன்னுரிமை சந்தை அணுகல் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வருவதை இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டனர். ஐரோப்பிய யூனியனின் பல்வேறு தாவரப் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கான இந்தியாவின் முன்முயற்சிகளை ஐரோப்பிய யூனியன் தரப்பு பாராட்டியது. அதே வேளையில், ஐரோப்பிய யூனியன் இந்திய வேளாண் கரிம பொருட்களை ஊக்குவிப்பதை இந்திய தரப்பு பாராட்டியது. டிடிசி மறுஆய்வு செயல்முறையின் கீழ், ஈடுபாட்டைத் தொடர இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.
பொருளாதாரப் பாதுகாப்பை மேம்படுத்துவதில் வளர்ந்து வரும் முக்கியத்துவம் வாய்ந்த துறையான அந்நிய நேரடி முதலீடுகளை கண்டறிவதில் சிறந்த நடைமுறைகள் குறித்த பரிமாற்றங்களை இரு தரப்பும் கவனத்தில் கொண்டுள்ளன.
தற்போதைய சவாலான புவிசார் அரசியல் சூழலில் பலதரப்பு வர்த்தக முறைக்கான தங்கள் உறுதிப்பாட்டை இந்தியாவும் ஐரோப்பிய யூனியனும் வலுப்படுத்தியுள்ளன. அதே நேரத்தில், உலக வர்த்தக அமைப்பில் தேவையான சீர்திருத்தங்களைக் கொண்டுவர வேண்டியதன் அவசியத்தை அவர்கள் வலியுறுத்தினர்.
இரு தரப்பினரும் பல இருதரப்பு அமைப்புகள் மூலம் வர்த்தகம் மற்றும் கார்பன் நீக்கம் குறித்து ஆழமான கலந்துரையாடல்களை நடத்தியுள்ளனர். குறிப்பாக ஐரோப்பிய யூனியனின் கார்பன் வரம்பு செயல்முறையை (சிபிஏஎம்) செயல்படுத்துவதில் கனஎழும் சவால்கள் குறித்து இரு தரப்பினரும் விவாதித்தனர், மேலும் அவற்றை தொடர்ந்து நிவர்த்தி செய்ய ஒப்புக்கொண்டனர்.
டிடிசி-ன் கீழ் தங்கள் ஈடுபாட்டை விரிவுபடுத்துவதற்கும் ஆழப்படுத்துவதற்கும், இலக்குகளை நிறைவேற்றவும் ஒன்றிணைந்து பணியாற்றுவதற்கும் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தின.
*****
TS/SV/PLM/KPG/RJ/DL
India is delighted to welcome the President of the @EU_Commission, Ursula von der Leyen and other distinguished members of the College of Commissioners. This level of engagement is both historic and unparalleled. India-EU friendship is both natural as well as organic. Our talks… pic.twitter.com/1NjYIVIEGD
— Narendra Modi (@narendramodi) February 28, 2025
The sectors our talks covered included trade, technology, innovation, skill development, mobility and more. We also seek to deepen investment linkages. At the same time, our commitment to sustainability remains paramount, reflecting in the discussions around green hydrogen,… pic.twitter.com/ao42PwgAeJ
— Narendra Modi (@narendramodi) February 28, 2025
India and Europe share a strong partnership built on shared values, innovation and sustainability. Our close collaboration is shaping a better future for our planet. Together, we will work towards a prosperous world. https://t.co/6iVP4UGv69
— Narendra Modi (@narendramodi) February 28, 2025