Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

குவாட் தலைவர்களின் உச்சிமாநாட்டில் (மே 23- 25, 2022) பங்கேற்பதற்காக பிரதமர் ஜப்பான் செல்ல உள்ளார்


ஜப்பான் பிரதமர் மேதகு திரு ஃப்யூமியோ கிஷிடாவின் அழைப்பை ஏற்று குவாட் தலைவர்களின் உச்சிமாநாட்டில், பிரதமர் திரு நரேந்திர மோடி மே 24, 2022 அன்று அமெரிக்க அதிபர் மேதகு திரு ஜோசப் ஆர் பைடன் மற்றும் ஆஸ்திரேலிய பிரதமருடன் கலந்து கொள்வார்.
 
மார்ச் 2021-இல் குவாட் தலைவர்களின் முதல் கூட்டம் காணொலி வாயிலாகவும், செப்டம்பர் 2021-இல் வாஷிங்டன் டி.சி.யில் இரண்டாவது உச்சிமாநாடு நேரடியாகவும், மார்ச் 2022-இல் மூன்றாவது கூட்டம் காணொலி வாயிலாகவும் நடைபெற்றது. 
 
இந்தோ-பசிபிக் பகுதியில் வளர்ச்சி நடவடிக்கைகள் மற்றும் பரஸ்பர நலனின் சர்வதேச விஷயங்கள் முதலியவற்றில் தலைவர்கள் தங்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளும் வாய்ப்பை வரவிருக்கும் உச்சிமாநாடு வழங்கும். 
 
குவாட் முன்முயற்சிகள் மற்றும் செயற்குழுக்களின் முன்னேற்றத்தை தலைவர்கள் ஆய்வு செய்வதோடு, ஒத்துழைப்புக்கான புதிய துறைகளைக் கண்டறிந்து, எதிர்கால கூட்டணிக்கான கேந்திர வழிகாட்டுதல் மற்றும் தொலைநோக்குப் பார்வையையும் அவர்கள் வழங்குவார்கள்.
 
ஜப்பான் பிரதமர் மேதகு திரு ஃப்யூமியோ கிஷிடாவுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி மே 24-ஆம் தேதி இருதரப்பு பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வார். கடந்த மார்ச் மாதம் ஜப்பான் பிரதமர் இந்தியா வந்திருந்தபோது நடைபெற்ற 14-வது இந்திய- ஜப்பான் வருடாந்திர உச்சிமாநாட்டின்போது நடைபெற்ற கலந்துரையாடலை முன்னெடுத்துச் செல்வதற்கான வாய்ப்பை இந்த சந்திப்பு இரு தலைவர்களுக்கும் அளிக்கும். இந்தப் பயணத்தின் போது ஜப்பான் நாட்டின் தொழில்துறை தலைவர்களுடன் பிரதமர் கலந்துரையாடுவதுடன், அங்கு வசிக்கும் இந்திய சமூகத்தினரையும் சந்தித்து அவர்கள் மத்தியில் உரையாற்றுவார். 
 
மே 24-ஆம் தேதி அன்று அமெரிக்க அதிபர் மேதகு திரு ஜோசப் ஆர். பைடனுடனும் இருதரப்பு பேச்சுவார்த்தையை பிரதமர் மேற்கொள்வார். அண்மையில் ஏப்ரல் 11-ஆம் தேதியன்று காணொலி வாயிலாக இரு தலைவர்களும் மேற்கொண்ட பேச்சுவார்த்தையின் தொடர்ச்சியாக இந்த நிகழ்வு அமையும். இந்திய-அமெரிக்க கேந்திர கூட்டுமுயற்சியை இரு தலைவர்களும் அப்போது ஆய்வு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
ஆஸ்திரேலியாவில் மே 21-ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருப்பதால் அதில் தேர்ந்தெடுக்கப்படும் பிரதமருடன் திரு நரேந்திர மோடி இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தக்கூடும். 

********