கொவிட்-19 காரணமாக பெற்றோரை இழந்துள்ள குழந்தைகளுக்கு ஆதரவளிப்பதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதித்து முடிவெடுப்பதற்கான முக்கிய கூட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமை தாங்கினார். தற்போதைய கொவிட் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை பிரதமர் அறிவித்தார்.
இவற்றை அறிவிக்கும் போது பேசிய பிரதமர், நாட்டின் எதிர்காலத்தை குழந்தைகள் பிரதிநிதித்துவப் படுத்துகிறார்கள் என்றும் வலிமை மிக்க குடிமக்களாக குழந்தைகள் உருவாவதற்கும், ஒளிமயமான எதிர்காலம் அவர்களுக்கு கிடைப்பதற்கும் ஆதரவளித்து, அவர்களை பாதுகாக்க தேவையான அனைத்தையும் நாங்கள் செய்வோம் என்றும் கூறினார்.
இந்த கடினமான நேரத்தில், நமது குழந்தைகளை பார்த்துக் கொள்வதும், ஒளிமயமான எதிர்காலத்திற்கான நம்பிக்கையை விதைப்பதும் ஒரு சமூகமாக நமது கடமையாகும் என்று பிரதமர் தெரிவித்தார்.
கொவிட் காரணமாக பெற்றோரில் ஒருவர் அல்லது இருவரையும் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர்/தத்து பெற்றோரை இழந்துள்ள குழந்தைகளுக்கு, குழந்தைகளுக்கான பிஎம் கேர்ஸ் மூலம் ஆதரவளிக்கப்படும். கொவிட்-19-க்கு எதிரான இந்தியாவின் போருக்கு ஆதரவளிக்கும் பிஎம் கேர்ஸ் நிதியத்திற்கு தாராளமாக வழங்கப்பட்டுள்ள நன்கொடைகளின் காரணமாகவே இந்த நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
* குழந்தையின் பெயரில் நிரந்தர வைப்புத் தொகை
குழந்தைக்கு 18 வயதாகும் போது பயன்படும் வகையில் ரூ 10 லட்சம் வைப்புத்தொகையை பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட திட்டத்தின் மூலம் பிஎம் கேர்ஸ் அளிக்கும். இந்த தொகை:
18 வயதில் இருந்து அடுத்த ஐந்து வருடங்களுக்கு உயர் கல்வியின் போது தனிப்பட்ட தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கான உதவித் தொகையை வழங்குவதற்காக பயன்படுத்தப்படும், மற்றும்
23 வயதானவுடன், தனிப்பட்ட மற்றும் தொழில் சார்ந்த பயன்பாட்டிற்காக மொத்த பணமும் பயனாளிக்கு வழங்கப்படும்.
* பள்ளி கல்வி: 10 வயதுக்கு கீழுள்ள குழந்தைகளுக்கு :
அருகிலுள்ள கேந்திரிய வித்யாலயாவிலோ அல்லது தனியார் பள்ளியிலோ குழந்தைக்கு சேர்க்கை வழங்கப்படும்.
குழந்தை தனியார் பள்ளியில் சேர்க்கப்பட்டால், கல்வி உரிமை சட்டத்தின் படி பிஎம் கேர்ஸில் இருந்து கட்டணம் செலுத்தப்படும்.
சீருடை, பாடப்புத்தகங்கள் மற்றும் நோட்டுப் புத்தகங்களுக்கான செலவையும் பிஎம் கேர்ஸ் ஏற்கும்.
* பள்ளி கல்வி: 11-18 வயதுடைய குழந்தைகளுக்கு
சைனிக் பள்ளி, நவோதயா பள்ளி போன்ற உண்டி–உறைவிட மத்திய அரசு பள்ளிகளில் குழந்தைக்கு சேர்க்கை வழங்கப்படும்.
குழந்தை ஒரு வேளை பாதுகாவலர்/தாத்தா–பாட்டி/உறவினரின் பராமரிப்பில் இருந்தால், அருகிலுள்ள கேந்திரிய வித்யாலயாவிலோ அல்லது தனியார் பள்ளியிலோ சேர்க்கை வழங்கப்படும்.
குழந்தை தனியார் பள்ளியில் சேர்க்கப்பட்டால், கல்வி உரிமை சட்டத்தின் படி பிஎம் கேர்ஸில் இருந்து கட்டணம் செலுத்தப்படும்.
சீருடை, பாடப்புத்தகங்கள் மற்றும் நோட்டுப் புத்தகங்களுக்கான செலவையும் பிஎம் கேர்ஸ் ஏற்கும்.
* உயர்கல்விக்கான ஆதரவு
ஏற்கனவே உள்ள கல்விக் கடன் விதிகளின் படி, இந்தியாவில் தொழில் கல்வி/ உயர் கல்வி படிப்பதற்கான கல்விக் கடன் பெறுவதற்கு குழந்தைக்கு ஆதரவு வழங்கப்படும். இதற்கான வட்டியை பிஎம் கேர்ஸ் செலுத்தும்.
இளநிலை/தொழில் கல்விக்கான கட்டணத்திற்கு சமமான உதவித் தொகை மத்திய அல்லது மாநில அரசு திட்டங்களின் கீழ் குழந்தைகளுக்கு வழங்கப்படும். ஏற்கனவே உள்ள உதவித் தொகை திட்டங்களுக்கு குழந்தை தகுதியாக இல்லையெனில், அதற்கு சமமான ஊக்கத்தொகையை பிஎம் கேர்ஸ் வழங்கும்.
* மருத்துவ காப்பீடு
ரூ 5 லட்சம் மருத்துவ காப்பீட்டுடன் கூடிய ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் (பிஎம்–ஜே) பயனாளிகளாக அனைத்து குழந்தைகளும் சேர்க்கப்படுவர்.
குழந்தைகளுக்கு 18 வயதாகும் வரை பிரீமியம் தொகையை பிஎம் கேர்ஸ் செலுத்தும்.
—–
Supporting our nation’s future!
— Narendra Modi (@narendramodi) May 29, 2021
Several children lost their parents due to COVID-19. The Government will care for these children, ensure a life of dignity & opportunity for them. PM-CARES for Children will ensure education & other assistance to children. https://t.co/V3LsG3wcus