மரியாதைக்குரிய தலைவர் அவர்களே,
பொதுச் சேவையில் நீண்ட காலம் இருந்த நீங்கள், உங்கள் உடலை கட்டுக்கோப்புடன் வைத்துக் கொண்டிருப்பதால் இன்றும் புதிய துறையில் தடம் பதித்து பணியாற்றத் தொடங்குவீர்கள் என நான் நம்புகிறேன். அரசியலுடன் தொடர்புடைய வரலாறு கொண்ட குடும்பப் பாரம்பரியம் உங்களுக்கு உள்ளது. உங்கள் பாட்டனார் தேசியக் கட்சி ஒன்றின் தலைவராக இருந்ததுடன், அரசியல் நிர்ணய சபையில் அங்கம் வகித்துள்ளார். ஒருவகையில் உங்களது முன்னோர்கள் பொது வாழ்க்கையில் பெரும் பங்கேற்றியதுடன், குறிப்பாக காங்கிரஸ் கட்சியில் தொடர்பு வைத்திருந்ததுடன் கிலாஃபத் இயக்கத்திலும் தொடர்பு வைத்திருந்த குடும்பத்தைச் சேர்ந்தவர் நீங்கள்.
தொழில்முறை தூதுவராக நீங்கள் பணியாற்றியுள்ளீர்கள். இப்போது அப்படி யாரையேனும் அடையாளம் காட்ட முடியுமா? இதை நான் பிரதமரான பின்னர்தான் புரிந்து கொண்டேன். ஒருவர் புன்னகைக்கும் போதும், கைகுலுக்கும் போதும் அதன் பொருள் என்ன என்பதை யாராலும் எளிதாகப் புரிந்து கொள்ள முடியாது. ஏனெனில், இந்த உடல்மொழிக்கு அவர்கள் கடந்த 10 ஆண்டுகளாக பயிற்றுவிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதன் காரணமாக இந்த அவைக்கு நிச்சயமாக பலனும் கிட்டியுள்ளது.
ஒரு தொழில்முறை தூதராக உங்களது வாழ்க்கையின் பெரும்பகுதி மேற்கு ஆசியாவிலேயே கழிந்தது. பல ஆண்டுகளாக ஒரே பகுதியில் ஒரே சூழல், ஒரே விதமான சிந்தனை மற்றும் ஒத்த கருத்துடைய மக்களுடன் ஒரே மாதிரியான கலந்துரையாடலில் உங்களது பொது வாழ்வின் பெரும் பகுதியை கழித்திருக்கிறீர்கள். ஓய்வு பெற்ற பின்னரும் உங்களது பெரும்பான்மையான பணிகள் அதே போல அமைந்திருந்த்து. அது சிறுபான்மை ஆணையமாக இருந்தாலும் சரி, அல்லது அலிகார் பல்கலைக்கழகப் பணியாக இருந்தாலும் சரி. ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக இந்த பொறுப்பு முற்றிலும் மாறுபட்டதாக உங்களுக்கு அமைந்திருந்தது. அதற்கு நீங்கள் அரசியல் சட்டத்தின் கட்டமைப்புக்கு உட்பட்டு பணியாற்றியதும், அதை சிறப்பாக மேற்கொள்ள கடுமையாக உழைத்ததும் குறிப்பிடத்தக்கது.
உங்களது நடவடிக்கைகளால் அவையில் சிலர் அசவுகரியமாக உணர்ந்திருக்கக் கூடும். ஆனால், இன்று அத்தகைய சூழல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. நீங்கள் இந்த சுதந்திரத்தை அனுபவிப்பதோடு, உங்களது தனிப்பட்ட எண்ண ஓட்டத்தின் அடிப்படையில் இனி நீங்கள் பணிபுரிய இயலும்.
நாம் கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகம் இல்லை என்றபோதிலும், நாம் எப்போது சந்தித்தாலும் உங்களிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்ள முடிந்தது. வெளிநாட்டு பயணம் செல்லும் முன் அல்லது சென்று திரும்பிய பின்னர் உங்களுடன் பேசுவதற்கான வாய்ப்பு எனக்கு கிடைத்த போதெல்லாம், உங்களது நுண்ணறிவை நான் உணர்ந்து கொண்டேன். எனது புரிதலை விரிவுபடுத்திக் கொள்ள அது உதவியது என்பதால், நான் உங்களுக்கு நன்றிக்கடன் பட்டவனாக இருப்பேன். உங்களுக்கு எனது மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த நாட்டின் குடியரசுத் துணைத் தலைவராக உங்களின் சேவைகளுக்கு இரு அவைகள் மற்றும் நாட்டு மக்களின் சார்பில் நன்றிகளை உரித்தாக்கிக் கொள்கிறேன். உங்கள் சாதனைகள், அனுபவம் மற்றும் ஓய்வுக்குப் பிந்தைய நிலை பெரிதும் குறிப்பிடத்தக்கது. அரசியல் சட்டத்தைப் பின்பற்றி உஙகள் நேரம் மற்றும் ஆற்றல் இந்த நாட்டுக்கு வழிகாட்டும் என நான் நம்புகிறேன்.
நன்றிகள் பல
***