குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட் (TASL) வளாகத்தில் சி-295 விமானங்களை உற்பத்தி செய்வதற்கான டாடா விமான வளாகத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடியும், ஸ்பெயின் பிரதமர் திரு. பெட்ரோ சான்செஸும் இணைந்து இன்று தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட்ட கண்காட்சியை இரு பிரதமர்களும் பார்வையிட்டனர்.
கூட்டத்தினரிடையே உரையாற்றிய பிரதமர், ஸ்பெயின் பிரதமர் திரு. பெட்ரோ சான்செஸ் இந்தியாவுக்கு வருகை தருவது இதுவே முதல் முறை என்றும், இரு நாடுகளுக்கும் இடையேயான ஒத்துழைப்பு இன்று புதிய திசையை எட்டியுள்ளது என்றும் கூறினார். சி-295 விமானங்களை தயாரிப்பதற்கான டாடா விமான வளாகத்தை திறந்து வைத்ததைக் குறிப்பிட்ட பிரதமர், இது இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகளை வலுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், ‘இந்தியாவில் தயாரிப்போம், உலகத்திற்காக உற்பத்தி செய்வோம்’ என்ற இயக்கத்திற்கு உத்வேகம் அளிக்கும் என்றும் கூறினார். இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு ஏர்பஸ் மற்றும் டாடா குழுவினருக்கு திரு மோடி தமது நல்வாழ்த்துக்களை தெரிவித்தார். காலஞ்சென்ற திரு. ரத்தன் டாடாவுக்கும் பிரதமர் அஞ்சலி செலுத்தினார்.
சி-295 விமானங்களின் தொழிற்சாலை புதிய இந்தியாவின் புதிய பணிக் கலாச்சாரத்தின் பிரதிபலிப்பு என்று குறிப்பிட்ட பிரதமர், நாட்டில் எந்தவொரு திட்டத்தையும் செயல்படுத்துவதில் இந்தியாவின் வேகத்தை இங்கே காண முடிகிறது என்றார். 2022-ம் ஆண்டு அக்டோபரில் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டப்பட்டதை நினைவு கூர்ந்த பிரதமர், தற்போது இந்தத் தொழிற்சாலை C-295 விமானங்களை உற்பத்தி செய்யத் தயாராக உள்ளது என்றார். திட்டங்களை திட்டமிடுவதிலும், செயல்படுத்துவதிலும் கணக்கிட முடியாத தாமதங்களை நீக்குவதில் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய பிரதமர், குஜராத் முதலமைச்சராக இருந்தபோது வதோதராவில் பாம்பார்டியர் ரயில் பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலையை நிறுவியதை நினைவு கூர்ந்தார். இந்தத் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட மெட்ரோ ரயில் பெட்டிகள் இன்று மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இன்று திறந்து வைக்கப்பட்டுள்ள இடத்தில் தயாரிக்கப்படும் விமானங்களும் ஏற்றுமதி செய்யப்படும் என்று திரு மோடி நம்பிக்கை தெரிவித்தார்.
புகழ்பெற்ற ஸ்பெயின் கவிஞர் அண்டோனியோ மச்சாடோவை மேற்கோள் காட்டிய பிரதமர், நாம் இலக்கை நோக்கி நடக்கத் தொடங்கும் போது, இலக்கை நோக்கிய பாதை தானாகவே உருவாக்கப்படுகிறது என்று குறிப்பிட்டார். இந்தியாவின் பாதுகாப்பு உற்பத்தி சூழல் இன்று புதிய சிகரங்களை எட்டி வருவதாகக் குறிப்பிட்ட திரு மோடி, 10 ஆண்டுகளுக்கு முன்பு உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படாமல் இருந்திருந்தால், இன்று இந்த இலக்கை எட்டுவது சாத்தியமற்றதாக இருந்திருக்கும் என்றார். பத்தாண்டுகளுக்கு முன்பு, பாதுகாப்பு உற்பத்தியின் முன்னுரிமை மற்றும் அடையாளம் இறக்குமதியைப் பற்றியது என்றும், இந்தியாவில் இவ்வளவு பெரிய அளவில் பாதுகாப்பு உற்பத்தி நடைபெறும் என்று யாரும் நினைத்துப் பார்க்கவில்லை என்றும் அவர் கூறினார். இந்தியாவுக்காக புதிய இலக்குகளை நிர்ணயித்து, புதிய பாதையில் நடைபோட அரசு முடிவு செய்துள்ளது என்று குறிப்பிட்ட பிரதமர், அதன் பலன்கள் இன்றைக்கும் தெளிவாகத் தெரிகின்றன என்றார்.
பாதுகாப்புத் துறையில் இந்தியாவின் மாற்றம், சரியான திட்டம் மற்றும் கூட்டாண்மை எவ்வாறு வாய்ப்புகளை வளமாக மாற்றும் என்பதற்கு எடுத்துக்காட்டு என்று பிரதமர் கூறினார். கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் துடிப்பான பாதுகாப்புத் துறையின் வளர்ச்சியை உத்திசார் முடிவுகள் தூண்டியுள்ளன என்று அவர் குறிப்பிட்டார். பாதுகாப்புத் தளவாட உற்பத்தியில் தனியார் துறையின் பங்களிப்பை விரிவுபடுத்தியுள்ளோம், பொதுத்துறை நிறுவனங்களை மேலும் திறன்மிக்கதாக மாற்றியுள்ளோம், ஆயுதத் தொழிற்சாலைகளை ஏழு பெரிய நிறுவனங்களாக மறுசீரமைத்துள்ளோம், டிஆர்டிஓ மற்றும் எச்ஏஎல் ஆகியவற்றுக்கு அதிகாரம் அளித்துள்ளோம் என்று திரு மோடி கூறினார். உத்தரப்பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டில் பாதுகாப்பு வழித்தடங்களை அமைப்பது இத்துறைக்கு புதிய சக்தியை அளித்துள்ளது என்று அவர் கூறினார். ஐடெக்ஸ் (பாதுகாப்பு சிறப்புக்கான கண்டுபிடிப்பு) திட்டத்தைக் குறிப்பிட்ட பிரதமர், கடந்த ஐந்து முதல் ஆறு ஆண்டுகளில் சுமார் 1,000 பாதுகாப்பு ஸ்டார்ட் அப்களின் வளர்ச்சிக்கு இது உந்துதல் அளித்துள்ளது என்றார். கடந்த தசாப்தத்தில் இந்தியாவின் பாதுகாப்பு ஏற்றுமதி 30 மடங்கு அதிகரித்துள்ளது என்றும், நாடு இப்போது 100 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு உபகரணங்களை ஏற்றுமதி செய்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.
திறன் மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கு முக்கியத்துவம் அளித்ததாக தெரிவித்த பிரதமர், ஏர்பஸ்-டாடா தொழிற்சாலை போன்ற திட்டங்கள் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று கூறினார். இந்தத் தொழிற்சாலை 18,000 விமானப் பாகங்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கு ஆதரவளிக்கும் என்றும், இந்தியா முழுவதும் உள்ள எம்.எஸ்.எம்.இ.களுக்கு மகத்தான வாய்ப்புகளை வழங்கும் என்றும் அவர் கூறினார். இன்றும் கூட உலகின் பெரிய விமான நிறுவனங்களுக்கு உதிரிப்பாகங்களை அதிக அளவில் வழங்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது என்று குறிப்பிட்ட திரு மோடி , புதிய விமானத் தொழிற்சாலை இந்தியாவில் புதிய திறன்கள் மற்றும் புதிய தொழில்களுக்கு பெரும் ஊக்கத்தை அளிக்கும் என்று கூறினார்.
போக்குவரத்து விமான உற்பத்தியைத் தாண்டி இன்றைய திட்டம் குறித்து தாம் கவனம் செலுத்துவதாக பிரதமர் கோடிட்டுக் காட்டினார். கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் விமானப் போக்குவரத்துத் துறையில் ஏற்பட்டுள்ள முன்னெப்போதும் இல்லாத வளர்ச்சி மற்றும் மாற்றத்தை எடுத்துரைத்த திரு மோடி, நாட்டில் உள்ள நூற்றுக்கணக்கான சிறிய நகரங்களுக்கு விமானப் போக்குவரத்தை இந்தியா வழங்கி வருவதாகவும், அதே நேரத்தில் இந்தியாவை விமானப் போக்குவரத்து மற்றும் எம்.ஆர்.ஓ களமாக மாற்றவும் பணியாற்றி வருவதாகவும் குறிப்பிட்டார். இந்தச் சூழல் அமைப்பு எதிர்காலத்தில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சிவில் விமானப் போக்குவரத்துக்கு வழிவகுக்கும் என்றும் அவர் கூறினார். பல்வேறு இந்திய விமான நிறுவனங்கள் 1200 புதிய விமானங்களுக்கு ஆர்டர் கொடுத்துள்ளதை சுட்டிக்காட்டிய திரு மோடி, எதிர்காலத்தில் இந்தியா மற்றும் உலகின் தேவைகளை எதிர்கொள்ளும் வகையில் வடிவமைப்பு முதல் பயணிகள் விமானங்களை உற்பத்தி செய்வது வரை புதிதாக தொடங்கப்பட்ட தொழிற்சாலை முக்கிய பங்கு வகிக்கும் என்று கூறினார்.
வதோதரா நகரம் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் கோட்டையாகத் திகழ்கிறது என்று குறிப்பிட்ட திரு மோடி, இந்தியாவின் இந்த முயற்சிகளுக்கு இந்த நகரம் ஒரு கிரியா ஊக்கியாக செயல்படும் என்று குறிப்பிட்டார். இந்த நகரத்தில் விரைவுசக்தி பல்கலைக்கழகமும் உள்ளது என்றும், அது இந்தியாவின் பல்வேறு துறைகளுக்கு நிபுணர்களை தயார்படுத்தி வருவதாகவும் அவர் கூறினார். வதோதராவில் மருந்துத் துறை, பொறியியல் மற்றும் கனரக இயந்திரங்கள், ரசாயனம் மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ், மின்சாரம் மற்றும் எரிசக்தி உபகரணங்கள் போன்ற பல்வேறு துறைகளுடன் தொடர்புடைய பல நிறுவனங்கள் உள்ளன என்றும் பிரதமர் குறிப்பிட்டார். தற்போது இந்தப் பிராந்தியம் முழுவதும் இந்தியாவின் விமான உற்பத்திக்கான முக்கிய மையமாக மாறப் போகிறது என்றும் அவர் கூறினார். குஜராத் அரசையும், அதன் முதலமைச்சர் பூபேந்திர படேல் மற்றும் அவரது குழுவினரையும் அவர்களின் நவீன தொழில் கொள்கைகள் மற்றும் முடிவுகளுக்காக திரு மோடி பாராட்டினார்.
வதோதரா இந்தியாவின் முக்கியமான கலாச்சார நகரம் என்று குறிப்பிட்ட திரு மோடி, ஸ்பெயினில் இருந்து வரும் அனைத்து நண்பர்களையும் வரவேற்பதில் மகிழ்ச்சி அடைவதாகக் கூறினார். இந்தியா மற்றும் ஸ்பெயின் இடையேயான கலாச்சார இணைப்பு அதன் சொந்த முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது” என்று பிரதமர் குறிப்பிட்டார். அருட்தந்தை கார்லோஸ் வாலே ஸ்பெயினிலிருந்து வந்து குஜராத்தில் குடியேறி தனது வாழ்வின் ஐம்பது ஆண்டுகளைக் கழித்தார் என்று அவர் குறிப்பிட்டார். அருட்தந்தை வாலே தமது சிந்தனைகள் மற்றும் எழுத்துக்களால் கலாச்சாரத்தை வளப்படுத்தியுள்ளார் என்று அவர் மேலும் கூறினார். அருட்தந்தை வாலே அவர்களை சந்திக்கும் நல்வாய்ப்பு தனக்குக் கிடைத்ததாகவும், அவரது சிறந்த பங்களிப்புக்காக இந்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கிக் கௌரவித்ததாகவும் திரு மோடி கூறினார்.
ஸ்பெயினிலும் யோகா மிகவும் பிரபலமாக உள்ளது என்றும், இந்தியாவில் ஸ்பானிஷ் கால்பந்தும் விரும்பப்படுகிறது என்றும் திரு மோடி குறிப்பிட்டார். ரியல் மாட்ரிட் மற்றும் பார்சிலோனா கிளப்புகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற கால்பந்து போட்டி குறித்து குறிப்பிட்ட திரு மோடி, பார்சிலோனாவின் மகத்தான வெற்றி இந்தியாவிலும் விவாதப் பொருளாக இருந்தது என்றும், இரு கிளப்புகளின் ரசிகர்களின் உற்சாகம் ஸ்பெயினைப் போலவே இந்தியாவிலும் ஒரே மாதிரியாக இருந்தது என்றும் கூறினார். இந்தியா மற்றும் ஸ்பெயினின் பன்முக கூட்டாண்மை பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், “உணவு, திரைப்படம் அல்லது கால்பந்து என எதுவாக இருந்தாலும், நமது வலுவான மக்களுக்கு இடையேயான இணைப்பு எப்போதும் நமது உறவுகளை வலுப்படுத்தியுள்ளது” என்றார். 2026-ம் ஆண்டை இந்தியா-ஸ்பெயின் கலாச்சாரம், சுற்றுலா மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆண்டாகக் கொண்டாட இந்தியாவும் ஸ்பெயினும் முடிவு செய்திருப்பது குறித்து திரு மோடி மகிழ்ச்சி தெரிவித்தார்.
இன்றைய நிகழ்ச்சி இந்தியா மற்றும் ஸ்பெயின் இடையே பல புதிய கூட்டு ஒத்துழைப்புத் திட்டங்களுக்கு உத்வேகம் அளிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். ஸ்பெயின் தொழில் துறையினருக்கும், புதிய கண்டுபிடிப்பாளர்களுக்கும் அழைப்பு விடுத்த அவர், இந்தியாவுக்கு வந்து நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் பங்குதாரர்களாக மாறுமாறு அவர்களை ஊக்குவித்தார். இத்துடன் தமது உரையை பிரதமர் நிறைவு செய்தார்.
குஜராத் ஆளுநர் திரு. ஆச்சார்ய தேவ்ரத், குஜராத் முதலமைச்சர் திரு. பூபேந்திர படேல், பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங், வெளியுறவுத் துறை அமைச்சர் திரு. எஸ். ஜெய்சங்கர் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
பின்னணி
சி-295 திட்டத்தின் கீழ், மொத்தம் 56 விமானங்கள் வழங்கப்பட உள்ளன, அவற்றில் 16 விமானங்கள் ஸ்பெயினில் இருந்து ஏர்பஸ் மூலம் நேரடியாக வழங்கப்படுகின்றன, மீதமுள்ள 40 இந்தியாவில் தயாரிக்கப்பட உள்ளன.
டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட் இந்த 40 விமானங்களை இந்தியாவில் தயாரிக்கும் பொறுப்பில் உள்ளது. இந்த வசதி இந்தியாவில் ராணுவ விமானங்களுக்கான முதல் தனியார் துறை இறுதி அசெம்பிளி லைன் ஆகும். இது உற்பத்தி முதல் அசெம்பிளி வரை, சோதனை மற்றும் தகுதி வரை, விமானத்தின் முழு வாழ்க்கைச் சுழற்சியின் விநியோகம் மற்றும் பராமரிப்பு வரை ஒரு முழுமையான சுற்றுச்சூழல் அமைப்பின் முழு வளர்ச்சியை உள்ளடக்கியிருக்கும்.
டாடா தவிர, பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் மற்றும் பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் போன்ற முன்னணி பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்களும், தனியார் மைக்ரோ, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களும் இந்த திட்டத்தில் பங்களிக்கும். முன்னதாக 2022 அக்டோபரில், வதோதரா இறுதி அசெம்பிளி லைன் திட்டத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
***
TS/PKV/RR/KV
Speaking at the inauguration of the C-295 Aircraft facility in Vadodara. It reinforces India's position as a trusted partner in global aerospace manufacturing.https://t.co/VvuC5izfPM
— Narendra Modi (@narendramodi) October 28, 2024
Make in India, Make for the World. pic.twitter.com/xTFkpX1wFh
— PMO India (@PMOIndia) October 28, 2024
The C-295 aircraft factory reflects the new work culture of a New India. pic.twitter.com/hJi0nCMyaF
— PMO India (@PMOIndia) October 28, 2024
India's defence manufacturing ecosystem is reaching new heights. pic.twitter.com/CIRLEQiiP0
— PMO India (@PMOIndia) October 28, 2024