பிரதமர் திரு.நரேந்திர மோடி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் சுமார் ரூ.5860 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டினார். இந்திய நகர்ப்புற வீட்டு வசதி மாநாடு 2022-ஐயும் பிரதமர் தொடங்கி வைத்தார். குறைந்த செலவில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்ட 1100 வீடுகளையும் பிரதமர் அர்ப்பணித்தார். பிரதமர் அர்ப்பணித்த திட்டங்களில் குடிநீர் திட்டமும் அடங்கும்: பிராமணி-2 அணையிலிருந்து நர்மதா கால்வாய் நீரேற்று நிலையம் வரையிலான மோர்பி மொத்த குடிநீர் குழாய் இணைப்பு, மண்டல அறிவியல் மையம், மேம்பாலங்கள் உள்ளிட்ட பிற சாலை இணைப்புத் திட்டங்கள் ஆகியவற்றை பிரதமர் அர்ப்பணித்தார்.
தேசிய நெடுஞ்சாலைத் திட்டம் 27-ன்கீழ், குஜராத்தின் ராஜ்கோட்-கோண்டல்-ஜெட்பூர் பகுதியில் தற்போதுள்ள நான்கு வழிச்சாலையை ஆறுவழிச்சாலையாக மாற்றும் திட்டத்துக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார். மோர்பி, ராஜ்கோட், பொடாட் ஜாம் நகர் மற்றும் கட்ச் ஆகிய பகுதிகளில் சுமார் 2950 கோடி ரூபாய் மதிப்பிலான குஜராத் தொழில் வளர்ச்சிக் கழகம் சார்பில் கட்டப்படும் தொழிற்பேட்டைகளுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
திரண்டிருந்த மக்களிடையே உரையாற்றிய பிரதமர் புதிய தொடக்கங்களுக்காக புதிய முடிவுகள் எடுக்கப்படும் தருணத்திற்கான ஆண்டு இது என்று தெரிவித்தார். ராஜ்கோட், கத்தியவார் மேம்பாடு உள்ளிட்ட திட்டங்கள் முடிக்கப்பட்டு அர்ப்பணிக்கப்பட்டதுடன், சில புதிய திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. போக்குவரத்து, தொழிற்துறை, குடிநீர் இணைப்பு மற்றும் பொதுவசதிகள் மக்களின் வாழ்க்கையை எளிதாக்கும் என்று தெரிவித்தார்.
குறைந்த செலவில் நவீன வீடுகள் கட்டுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நாட்டிலுள்ள ஆறு இடங்களில் ராஜ்கோட் இடம்பெற்றுள்ளதாகவும், அதிநவீன தொழில்நுட்பத்துடன் கட்டி முடிக்கப்பட்ட 1144 வீடுகள் அர்ப்பணிக்கப்பட்டதாகவும் பிரதமர் கூறினார்.
கடந்த 8 ஆண்டுகளில் நாட்டின் கிராமங்கள், நகரங்களில் உள்ள ஏழை மக்களுக்கு 3 கோடிக்கும் அதிகமான பக்கா வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார். தற்போது குஜராத்திலுள்ள ஏழைகளுக்கு 10 லட்சம் வீடுகள் கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டு, ஏற்கனவே 7 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். “ஏழைகளுக்கு வீடுகள் கட்டி தரும் பணியை, பூபேந்திரபாய் படேல் மற்றும் அவரது அமைச்சரவை சிறப்பாக செய்து வருகின்றனர். மேலும் நடுத்தர வர்க்கத்தினரின் சொந்த வீடு கனவை நனவாக்க முதல் அடி எடுத்து வைத்துள்ளோம்” என்று பிரதமர் கூறினார். “குஜராத்தில் வசிக்கும் லட்சக்கணக்கான நடுத்தர வர்க்கத்தினரின் சொந்த வீடு கனவை நனவாக்க மத்திய அரசு 11 கோடி ரூபாயை வழங்கியுள்ளது. இதுமட்டுமின்றி, நீண்ட தூரம் வேலைக்கு செல்லும் தொழிலாளர்களுக்கும் குறைந்த வாடகையில் வீடு கிடைக்க வேண்டும். இந்த திட்டத்திற்கான பணிகள் விரைவாக துரிதகதியில் நடைபெற்று வருவதாக”வும் பிரதமர் தெரிவித்தார்.
“முந்தைய அரசுகளும் ஏழைகளுக்கு வீடுகளை கட்டி கொடுத்தன. ஆனால், அதனை பொறுப்பாக செய்யாமல், தங்களுக்கு ஆதரவாக திட்டத்தை செய்தனர். நாங்கள் அதனை மாற்றி அமைத்துள்ளோம்” என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
**************
KG/SM/SNE
Great to be in the vibrant city of Rajkot! Addressing a programme at launch of various projects. https://t.co/QuTNcm8XWZ
— Narendra Modi (@narendramodi) October 19, 2022