குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திரபாய் படேல் அவர்களே; நவ்சாரி நாடாளுமன்ற உறுப்பினரும், எனது அமைச்சரவை சகாவுமான மத்திய அமைச்சர் சி.ஆர்.பாட்டீல்; மதிப்பிற்குரிய ஊராட்சி உறுப்பினர்கள்; மேடையில் இருக்கும் லட்சாதிபதி சகோதரிகள்; பிற மக்கள் பிரதிநிதிகள்; பெரும் எண்ணிக்கையில் இங்கு கூடியிருக்கும் அனைவருக்கும், குறிப்பாக எனது தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் மகள்கள் – உங்கள் அனைவருக்கும் எனது அன்பான வணக்கங்கள்!
சில நாட்களுக்கு முன்பு, மகா கும்பமேளாவில் அன்னை கங்கையின் ஆசீர்வாதம் எனக்கு கிடைத்தது. இன்று, இந்த மாபெரும் பெண்கள் கூட்டத்தின் ஆசீர்வாதங்களை நான் பெறுகிறேன். மகா கும்பமேளாவில் கங்கை அன்னையின் ஆசீர்வாதங்களை நான் பெற்றதைப் போலவே, இன்று, எனது தாய்மார்கள் மற்றும் சகோதரிகளாகிய உங்கள் ஆசிகளை இந்த பெண் சக்தியின் மகா கும்பமேளாவில் நான் பெறுகிறேன். மகளிர் தினத்தின் இந்தச் சிறப்பு சந்தர்ப்பத்தில், எனது பிறந்த மண்ணான குஜராத்தில், என்னைச் சூழ்ந்து இருக்கும் அனைத்து தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் மகள்கள் ஆகியோருக்கு அவர்களின் அன்பு, பாசம் மற்றும் ஆசீர்வாதங்களுக்கு நன்றியுடன் நான் தலைவணங்குகிறேன். இந்தப் புண்ணிய பூமியான குஜராத்தில் இருந்து நான் நாட்டுமக்கள் அனைவருக்கும், தேசத்தின் அனைத்துத் தாய்மார்களுக்கும், சகோதரிகளுக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த நாள் குஜராத் சஃபல் மற்றும் குஜராத் மைத்ரி ஆகிய இரண்டு குறிப்பிடத்தக்க முயற்சிகளின் தொடக்கத்தையும் குறிக்கிறது. கூடுதலாக, பல்வேறு திட்டங்களின் நிதி நேரடியாக பெண்களின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்தத் தருணத்தில் உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே,
இன்று பெண்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட நாள், அவர்களிடமிருந்து உத்வேகம் பெற, அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய நாள். இந்த நன்னாளில், எனது வாழ்த்துக்களையும் மனமார்ந்த நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இன்று, நான் உலகின் பணக்காரன் என்று பெருமையுடன் அறிவிக்க முடியும். இந்த அறிக்கையைக் கேட்டு சிலர் புருவங்களை உயர்த்தலாம்; புண்படுத்தும் செய்தியை இணையத்தில் உருவாக்கும் ட்ரோல் படையினர் செயலில் இறங்கலாம், ஆனால் நான் இன்னும் சொல்வேன் – நான் உலகின் பணக்கார நபர். கோடிக்கணக்கான தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் மகள்களின் ஆசீர்வாதங்கள் எனது வாழ்க்கை கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளன. இந்த ஆசீர்வாதங்கள் தொடர்ந்து வளர்ந்து வருகின்றன. அதனால் நான் தான் உலகத்திலேயே பெரிய பணக்காரன் என்று உறுதியாகச் சொல்கிறேன். தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் மகள்களின் அன்பும் ஆசீர்வாதமும் எனது மிகப்பெரிய உத்வேகம், எனது மிகப்பெரிய பலம், எனது மிகப்பெரிய செல்வம் மற்றும் எனது இறுதி பாதுகாப்பு கேடயம்.
நண்பர்களே,
நமது சாஸ்திரங்கள் பெண்களை நாராயணி என்று போற்றுகின்றன. பெண்களை மதிப்பது ஒரு முற்போக்கான சமூகம் மற்றும் வளமான தேசத்தின் அடித்தளமாகும். அதனால்தான், வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கவும், அதன் முன்னேற்றத்தை விரைவுபடுத்தவும், நமது நாடு பெண்கள் தலைமையிலான வளர்ச்சி பாதையை ஏற்றுக்கொண்டுள்ளது. பெண்களின் கண்ணியம் மற்றும் வசதி ஆகிய இரண்டிற்கும் எங்கள் அரசு அதிக முன்னுரிமை அளிக்கிறது. கழிப்பறைகளைக் கட்டுவதன் மூலம் கோடிக்கணக்கான பெண்களின் வாழ்க்கையை நாங்கள் மேம்படுத்தியுள்ளோம், அவர்களுக்கு சுகாதாரத்தை மட்டுமல்ல, கண்ணியத்தையும் அளித்துள்ளோம். உத்தரப்பிரதேசத்தில், காசியைச் சேர்ந்த எனது சகோதரிகள் இனி அவற்றை கழிப்பறைகள் என்று குறிப்பிடுவதில்லை – அவர்கள் அவற்றை கண்ணியத்தின் வீடு என்று அழைக்கிறார்கள். கோடிக்கணக்கான பெண்களுக்கு வங்கிக் கணக்குகளைத் தொடங்கி, அவர்களை வங்கி அமைப்புடன் ஒருங்கிணைத்தோம். உஜ்வாலா சமையல் எரிவாயு சிலிண்டர்களை வழங்குவதன் மூலம் சமையலறை புகை பிரச்சினையிலிருந்து அவர்களை விடுவித்தோம். முன்னதாக, பணிபுரியும் பெண்களுக்கு 12 வாரங்கள் மட்டுமே மகப்பேறு விடுப்பு வழங்கப்பட்டது; எங்கள் அரசு அதை 26 வாரங்களாக நீட்டித்தது. முத்தலாக் முறைக்கு எதிராகச் சட்டம் இயற்ற வேண்டும் என்று நமது முஸ்லிம் சகோதரிகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். கடுமையான சட்டங்களை இயற்றுவதன் மூலம், எங்கள் அரசாங்கம் லட்சக்கணக்கான முஸ்லிம் பெண்களின் உயிரைக் காப்பாற்றியுள்ளது. காஷ்மீரில், 370 வது பிரிவு நடைமுறையில் இருந்தபோது, பெண்கள் பல அடிப்படை உரிமைகளை இழந்தனர். ஒரு பெண் மாநிலத்திற்கு வெளியில் இருந்து ஒருவரை மணந்தால், அவள் மூதாதையரின் சொத்துரிமையை இழக்கிறாள். 370 வது பிரிவு ரத்து செய்யப்பட்டதன் மூலம், ஜம்மு-காஷ்மீரில் உள்ள நமது சகோதரிகள் மற்றும் மகள்கள் இப்போது பாரதத்தில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் சமமான உரிமைகளை அனுபவிக்கின்றனர். பல ஆண்டுகளாக, நாட்டின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்தபோதிலும், அவர்களுக்கு இந்த உரிமைகள் மறுக்கப்பட்டன, அரசியலமைப்பை நிலைநிறுத்துவதாகக் கூறிக்கொண்டவர்கள் அமைதியாக இருந்தனர். பெண்களுக்கு எதிரான அநீதி அவர்களுக்குக் கவலையளிக்கவில்லை. 370 வது பிரிவை ரத்து செய்ததன் மூலம், எங்கள் அரசாங்கம் அரசியலமைப்பின் மதிப்புகளை உண்மையிலேயே நிலைநிறுத்தி, அவற்றை தேச சேவைக்கு அர்ப்பணித்துள்ளது.
நண்பர்களே,
இன்று, பெண்கள் சமூகம் முழுவதும், அரசிலும், பெரிய நிறுவனங்களிலும் அதிக வாய்ப்புகளைப் பெற்று வருகின்றனர். அரசியல், விளையாட்டு, நீதித்துறை அல்லது சட்ட அமலாக்கம் என எதுவாக இருந்தாலும், பெண்கள் நாட்டின், ஒவ்வொரு துறையிலும், ஒவ்வொரு பரிமாணத்திலும் சிறந்து விளங்குகிறார்கள். 2014 முதல், முக்கிய பதவிகளில் பெண்களின் பங்கேற்பு கணிசமாக உயர்ந்துள்ளது. 2014-ம் ஆண்டுக்குப் பிறகுதான் மத்திய அரசில் அதிக எண்ணிக்கையில் பெண்கள் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர். நாடாளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவமும் கணிசமாக அதிகரித்துள்ளது. 2019 ஆம் ஆண்டில், முதல் முறையாக, 78 பெண் எம்.பி.க்கள் நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 18வது மக்களவையில் 74 பெண் எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதேபோல், நமது நீதித்துறையில் பெண்களின் பங்களிப்பு கணிசமாக வளர்ந்துள்ளது, மாவட்ட நீதிமன்றங்களில் அவர்களின் பங்கு 35 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. பல மாநிலங்களில், சிவில் நீதிபதிகளாக புதிதாக நியமிக்கப்படுபவர்களில் 50 சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் இந்த நாட்டின் மகள்கள்.
இந்தியா இன்று உலகின் மூன்றாவது பெரிய புத்தொழில் சூழல் அமைப்பாக வளர்ந்து நிற்கிறது. மேலும் இவற்றில் ஏறத்தாழ பாதி எண்ணிக்கையிலான நிறுவனங்களில் ஒரு பெண்ணை அவற்றின் இயக்குநர்களில் ஒருவராகக் கொண்டுள்ளன. விண்வெளி ஆய்வு மற்றும் அறிவியலில் நமது நாடு புதிய உச்சங்களை எட்டி வருகிறது, இதில் பெண் விஞ்ஞானிகள் பல முக்கிய இயக்கங்களுக்கு தலைமை தாங்குகிறார்கள். உலகிலேயே அதிக எண்ணிக்கையில் பெண் விமானிகளைக் கொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது என்பது பெருமைக்குரிய விஷயமாகும். நவ்சாரியில் நடந்த இந்த நிகழ்விலேயே பெண்களின் சக்தி வெளிப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யும் முழு பொறுப்பையும் பெண்களே ஏற்றுள்ளனர். கான்ஸ்டபிள்கள் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் முதல் டிஎஸ்பிக்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் வரை பாதுகாப்பு ஏற்பாடுகள் கூட முற்றிலும் பெண் காவல்துறையினரால் நிர்வகிக்கப்படுகின்றன. இது பெண்களின் வலிமையின் உண்மையான பிரதிபலிப்பு. சிறிது நேரத்திற்கு முன்பு, சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த எனது சில சகோதரிகளுடன் கலந்துரையாடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவர்கள் பகிர்ந்துகொண்ட வார்த்தைகள், அவர்கள் வெளிப்படுத்திய உற்சாகம், அவர்கள் வெளிப்படுத்திய நம்பிக்கை ஆகியவை பெண் சக்தியின் மகத்தான ஆற்றலை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன. இந்த நாட்டின் பெண்கள் அதன் முன்னேற்றத்திற்குப் பொறுப்பேற்றுள்ளனர் என்பது தெளிவாகிறது. உங்கள் அனைவரையும் நான் சந்திக்கும் போதெல்லாம், வளர்ந்த இந்தியா என்ற தொலைநோக்கு பார்வை சந்தேகத்திற்கு இடமின்றி நனவாகும் என்ற, இந்த உறுதிப்பாட்டை நிறைவேற்றுவதில் பெண்கள் முன்னின்று செயல்படுவார்கள் என்ற எனது நம்பிக்கை வலுப்பெறுகிறது.
தாய்மார்களே, சகோதரிகளே,
பெண்கள் தலைமையிலான வளர்ச்சிக்கு குஜராத் ஒரு சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது. நமது மாநிலம் ஒரு வெற்றிகரமான கூட்டுறவு மாதிரியை உருவாக்குவதில் முன்னோடியாகத் திகழ்கிறது. சுய உதவிக் குழுக்களுடன் தொடர்புடைய எனது சகோதரிகளாகிய நீங்கள் அனைவரும், குஜராத்தின் பெண்களின் அர்ப்பணிப்பு மற்றும் திறன் காரணமாக இந்த மாதிரி செழித்தோங்கியுள்ளது என்பதை நன்கு அறிவீர்கள். இன்று, அமுல் உலகளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும் குஜராத்தின் ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் லட்சக்கணக்கான பெண்கள் பால் உற்பத்தியை ஒரு புரட்சிகர இயக்கமாக மாற்றியுள்ளனர். குஜராத்தின் பெண்கள் நிதிச் சுதந்திரத்தை அடைந்தது மட்டுமின்றி, கிராமப்புற பொருளாதாரத்தையும் வலுப்படுத்தியுள்ளனர். குஜராத்திப் பெண்கள்தான் லிஜ்ஜத் அப்பளத்தை உருவாக்கினார்கள், அது இப்போது நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள பிராண்டாக வளர்ந்துள்ளது.
தாய்மார்களே, சகோதரிகளே,
நான் முதலமைச்சராக இருந்த காலத்தில், பெண்கள் மற்றும் மகள்களின் நலனை மனதில் கொண்டு எங்கள் அரசு பல்வேறு முன்முயற்சிகளை அறிமுகப்படுத்தியது என்பதை நான் இப்போது நினைவு கூர்கிறேன். சிரஞ்சீவி யோஜனா, பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம் இயக்கம், அபயம் ஹெல்ப்லைன் உள்ளிட்டவை இதில் அடங்கும். சரியான கொள்கைகள் பெண்களுக்கு எவ்வாறு அதிகாரம் அளிக்க முடியும் என்பதை குஜராத் ஒட்டுமொத்த தேசத்திற்கும் நிரூபித்துள்ளது. உதாரணமாக, நான் முன்பு குறிப்பிட்ட பால் கூட்டுறவுச் சங்கங்களை எடுத்துக் கொள்வோம். பால் வேலைக்கான பணம் நேரடியாக பெண்களின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்படுவதை குஜராத் முதன்முதலில் உறுதி செய்தது. முன்பு, பணமாக வழங்கப்பட்டது அல்லது பால்காரர்களால் எடுத்துச் செல்லப்பட்டது. பால் பண்ணை மூலம் கிடைக்கும் வருமானத்தை நேரடியாக எங்கள் சகோதரிகளின் வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும் என்றும், மற்றவர்கள் ஒரு பைசா கூட எடுத்துச் செல்ல முடியாதபடி இருக்க வேண்டும் என்றும் முடிவு செய்தோம். இந்த அணுகுமுறை இப்போது நாடு தழுவிய நடைமுறைக்கு அடித்தளம் அமைத்தது – பல்வேறு அரசு திட்டங்களின் கீழ் நேரடி நிதி பரிமாற்றம். இன்று, நேரடி பலன் பரிமாற்றம் மூலம், இந்தியா முழுவதும் உள்ள கோடிக்கணக்கான பயனாளிகளின் கணக்குகளுக்கு நிதி சென்றடைகிறது. ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள மோசடிகள் தடுக்கப்படுகின்றன. ஏழைகளுக்கு பலன்கள் சென்றடைவதை உறுதி செய்கிறது.
நண்பர்களே,
இங்கே குஜராத்தில், பேரழிவை ஏற்படுத்திய பூஜ் பூகம்பத்திற்குப் பிறகு, வீடுகள் மீண்டும் கட்டப்பட்டபோது, இந்த வீடுகளை பெண்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று எங்கள் அரசு ஒரு குறிப்பிடத்தக்க முடிவை எடுத்தது. இந்தக் கொள்கையானது அரசால் கட்டப்பட்ட வீடுகள் சகோதரிகளின் பெயர்களில் மட்டுமே பதிவு செய்யப்படும் என்ற பாரம்பரியத்தின் தொடக்கத்தைக் குறித்தது. இன்று, இந்தக் கோட்பாடு பிரதம மந்திரி வீட்டுவசதித் திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், கடந்த காலங்களில், குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்கும்போது, அவர்களின் தந்தையின் பெயர் மட்டுமே பதிவு செய்யப்பட்டது. ஒரு குழந்தையின் வாழ்க்கையில் தாயின் சமமான முக்கியத்துவத்தை அங்கீகரித்து, தாயின் பெயரையும் சேர்க்க வேண்டும் என்று முடிவு செய்தேன். 2014 முதல், சுமார் மூன்று கோடி பெண்கள் வீட்டு உரிமையாளர்களாக மாறியுள்ளனர்.
நண்பர்களே,
இன்று, ஜல் ஜீவன் இயக்கம் உலகம் முழுவதும் பரவலாக விவாதிக்கப்படுகிறது. இந்த முயற்சியின் மூலம், நாட்டின் ஒவ்வொரு கிராமத்திற்கும் தண்ணீர் சென்றடைந்து வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில், லட்சக்கணக்கான கிராமங்களில் 15.5 கோடி வீடுகளுக்கு குழாய் நீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இத்தகைய மாபெரும் இயக்கத்தின் வெற்றியை உறுதி செய்வதற்காக, குஜராத்தில் பெண்கள் தலைமையிலான தண்ணீர் குழுக்களை அறிமுகப்படுத்தினோம். இப்போது, இந்த மாதிரி நாடு முழுவதும் செயல்படுத்தப்படுகிறது. குஜராத்தான் இந்த முன்மாதிரியை நாட்டிற்கு வழங்கியுள்ளது. இன்று, இந்த முயற்சி இந்தியா முழுவதும் தண்ணீர் பிரச்சினையை தீர்க்க உதவுகிறது.
நண்பர்களே,
நீர் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பது பற்றி நாம் பேசும்போது, அணுகல் போலவே பாதுகாப்பும் முக்கியமானது. நாடு தழுவிய பிரச்சாரம் நடந்து வருகிறது – மழையைப் பிடிப்போம்! ஒவ்வொரு சொட்டு மழை நீரையும் பிடித்து, அது எங்கு விழுந்தாலும், அது வீணாகாமல் இருப்பதை உறுதி செய்வதே குறிக்கோள். யோசனை எளிதானது: ஒரு கிராமத்திற்குள் விழும் மழைநீர் கிராமத்திற்குள் இருக்க வேண்டும், மேலும் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் வரும் நீர் அந்த வீட்டிற்குள் பாதுகாக்கப்பட வேண்டும். நமது நவ்சாரி நாடாளுமன்ற உறுப்பினர் சி.ஆர்.பாட்டீல் அவர்களின் தலைமையின் கீழ் நாடு முழுவதும் இந்த இயக்கம் முன்னேறி வருவதைக் கண்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த முயற்சியில் நவ்சாரியின் பெண்களின் பங்களிப்பு மகத்தானது என்றும் எனக்குத் தெரிவிக்கப்பட்டது. நவ்சாரியில் மட்டும், குளங்கள், தடுப்பணைகள், ஆழ்துளை கிணறு அமைப்புகள் மற்றும் சமூக உறிஞ்சு குழிகள் போன்ற 5,000-க்கும் மேற்பட்ட கட்டமைப்புகள் மழைநீரைப் பாதுகாக்க கட்டப்பட்டுள்ளன. இது ஒரு மாவட்டத்தின் குறிப்பிடத்தக்க சாதனையாகும். இப்போதும் கூட நவ்சாரியில் நூற்றுக்கணக்கான நீர் சேமிப்புத் திட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. கடந்த இரண்டு, மூன்று நாட்களில் கூடுதலாக 1,100 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருப்பதாக சி.ஆர்.பாட்டீல் என்னிடம் தெரிவித்தார். உண்மையில், இன்று மட்டும், ஒரே நாளில், 1,000 கசிவுநீர் குழிகள் கட்டப்படுகின்றன. மழைநீர் சேகரிப்பு மற்றும் நீர் சேமிப்பில் குஜராத்தின் முன்னணி மாவட்டங்களில் ஒன்றாக நவ்சாரி உருவெடுத்துள்ளது. அசாதாரண முயற்சிகளுக்காக நவ்சாரியின் தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் மகள்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நண்பர்களே,
குஜராத்தின் பெண்களின் வலிமையும், அரசு முன்வைத்துள்ள உதாரணங்களும் எந்தவொரு தனித் துறையுடனும் நின்றுவிடவில்லை. இங்கு பஞ்சாயத்து தேர்தலில் 50 சதவீத இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. நீங்கள் என்னை தில்லிக்கு பிரதம சேவகராக அனுப்பியபோது, இந்த அனுபவத்தையும், உறுதிப்பாட்டையும் தேசிய அளவில் என்னுடன் எடுத்துச் சென்றேன். நமது நாடு அதன் புதிய நாடாளுமன்றத்தைத் தொடங்கியபோது, நாம் நிறைவேற்றிய முதல் மசோதாவே பெண் சக்திக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் எடுக்கப்பட்ட முதல் நடவடிக்கை நமது சகோதரிகளுக்காக எடுக்கப்பட்டது, இது தாய்மார்கள் மற்றும் சகோதரிகளுக்கு மோடியின் அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும்.
நண்பர்களே,
இந்தியாவின் ஆத்மா அதன் கிராமங்களில் வசிக்கிறது என்று காந்தியடிகள் ஒருமுறை கூறினார். இன்று, கிராமப்புற இந்தியாவின் ஆன்மா கிராமப்புறப் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் உள்ளது என்பதை நான் சேர்க்க விரும்புகிறேன். இதனால்தான் எங்கள் அரசு பெண்களின் உரிமைகளுக்கு முன்னுரிமை அளித்து அவர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்குகிறது. இன்று, நாடு உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக உள்ளது, இந்த முன்னேற்றம் உங்களைப் போன்ற கோடிக்கணக்கான பெண்களின் கடின உழைப்பால் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தில் கிராமப்புற பொருளாதாரமும், பெண்கள் தலைமையிலான சுய உதவிக் குழுக்களும் முக்கிய பங்காற்றியுள்ளன. தற்போது, நாடு முழுவதும் 10 கோடிக்கும் அதிகமான பெண்கள் 90 லட்சத்துக்கும் மேற்பட்ட சுய உதவிக் குழுக்களை நிர்வகித்து வருகின்றனர். இவற்றில் குஜராத்தில் மட்டும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட சுய உதவிக் குழுக்கள் உள்ளன. பொருளாதார முன்னேற்றத்தை மேலும் முன்னெடுத்துச் செல்ல, இந்த கோடிக்கணக்கான பெண்களின் வருமானத்தை அதிகரிக்க நாங்கள் உறுதி பூண்டுள்ளோம். அவர்கள் லட்சாதிபதி சகோதரிகளாக மாறுவதற்கு நாங்கள் அதிகாரம் அளித்து வருகிறோம். ஏற்கனவே, 1.5 கோடி பெண்கள் இந்த மைல்கல்லை எட்டியுள்ளனர். அடுத்த ஐந்து ஆண்டுகளில், 3 கோடி பெண்களை லட்சாதிபதி சகோதரிகளாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். நமது சகோதரிகள் எவ்வளவு வேகத்துடனும் உறுதியுடனும் பணியாற்றுகிறார்கள் என்பதைப் பார்க்கும்போது, இந்த இலக்கு இன்னும் விரைவில் அடையப்படும் என்று நான் நம்புகிறேன்.
தாய்மார்களே, சகோதரிகளே,
எங்கள் சகோதரிகளில் ஒருவர் லட்சாதிபதி சகோதரிகளாக மாறும்போது, முழு குடும்பத்தின் தலைவிதியும் மேம்படுகிறது. பெண்கள் தங்கள் கிராமத்தில் உள்ள மற்றவர்களையும் உயர்த்துகிறார்கள்.
சுய உதவிக் குழுக்களின் திறனை ஆதரிப்பதற்காக, எங்கள் அரசு கடந்த பத்தாண்டுகளில் அவர்களின் பட்ஜெட்டை ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது. இந்த குழுக்கள் இப்போது ரூ .20 லட்சம் வரை பிணையம் இல்லாத கடன்களுக்கு தகுதியுடையவர்கள் – எந்த உத்தரவாதமும் தேவைப்படாத நிதி. கூடுதலாக, சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு புதிய திறன்களைக் கற்றுக்கொள்வதற்கும் அவர்களின் பணியை மேம்படுத்த நவீன தொழில்நுட்பத்தைப் பின்பற்றுவதற்கும் வாய்ப்புகளை வழங்குகிறோம்.
சகோதரிகளே, மகள்களே,
இந்த அரசாங்க முயற்சிகளிலிருந்து குஜராத்தின் பெண்கள் அதிகபட்ச பலனைப் பெறுவதை உறுதி செய்வதற்காக, குஜராத் அரசு மேலும் 10 லட்சம் பெண்களுக்கு லட்சாதிபதி சகோதரிகளாக அதிகாரம் அளிக்கும் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது. இந்த பாராட்டத்தக்க முயற்சிக்காக பூபேந்திர பாய்க்கும், குஜராத் அரசுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், மிகவும் பொறுப்பான சமூகத்தை உருவாக்குவதற்கும் மனநிலையில் மாற்றம் தேவை. கடந்த பத்தாண்டுகளாக, பெண்களின் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கு நாங்கள் அதிக முன்னுரிமை அளித்துள்ளோம். பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், விரைவாக நீதி வழங்கப்படுவதை உறுதி செய்யவும் கடுமையான சட்டங்களை நாங்கள் அறிமுகப்படுத்தியுள்ளோம். பெண்களுக்கு எதிரான கடுமையான குற்றங்களின் விசாரணையை விரைவுபடுத்தவும், குற்றவாளிகளுக்கு விரைவான தண்டனையை உறுதி செய்யவும் விரைவு நீதிமன்றங்கள் நிறுவப்பட்டுள்ளன. இதுவரை, நாடு முழுவதும் இதுபோன்ற சுமார் 800 நீதிமன்றங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது, பெரும்பாலானவை ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளன. பாலியல் பலாத்காரம் மற்றும் போக்சோ தொடர்பான சுமார் 3 லட்சம் வழக்குகளுக்கு இந்த நீதிமன்றங்கள் விரைவாக தீர்வு கண்டு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு உரிய நேரத்தில் நீதி வழங்கியுள்ளன. கொடூரமான குற்றங்களில் ஈடுபடும் பாலியல் பலாத்கார குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனையான மரண தண்டனையை உறுதி செய்வதற்காக சட்டத்தை திருத்தியது எங்கள் அரசு. நாங்கள் பெண்கள் உதவி எண்ணை வலுப்படுத்தினோம், அதை 24 மணி நேரமும், வருடத்தில் 365 நாட்களும் அணுகக்கூடியதாக மாற்றினோம். கூடுதலாக, துன்பத்தில் உள்ள பெண்களுக்கு உடனடி ஆதரவை வழங்குவதற்காக நாடு முழுவதும் ஒற்றைச் சாளர உதவி மையங்களை நாங்கள் தொடங்கினோம். 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பயனடையும் வகையில் சுமார் 800 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தாய்மார்களே, சகோதரிகளே,
அரசின் தலைவர் என்ற முறையிலும், உங்கள் தாழ்மையான சேவகன் என்ற முறையிலும், உங்கள் கனவுகளின் வழியில் எதுவும் நிற்காது என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். ஒரு மகன் தனது தாய்க்கு பக்தியுடன் சேவை செய்வதைப் போல, நான் பாரத மாதாவுக்கும், எனது தாய்மார்கள் மற்றும் சகோதரிகளாகிய உங்கள் அனைவருக்கும், அதே அர்ப்பணிப்புடன் சேவை செய்கிறேன். நமது ஒருங்கிணைந்த முயற்சிகள், கடின உழைப்பு மற்றும் உங்கள் ஆசீர்வாதங்களால், 2047 ஆம் ஆண்டுக்குள், அதாவது பாரதம் சுதந்திரத்தின் 100ஆவது ஆண்டைக் குறிக்கும் போது, வளர்ச்சியடைந்த இந்தியா குறித்த நமது கனவு நனவாகும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இந்த உறுதிப்பாட்டுடன், மகளிர் தினத்தின் இந்த சிறப்பான தருணத்தில், உங்கள் அனைவருக்கும், நாட்டின் ஒவ்வொரு தாய், சகோதரி, மகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
இந்திய அன்னைக்கு வாழ்த்து!
இந்திய அன்னைக்கு வாழ்த்து!
வந்தே மாதரம்.
வந்தே மாதரம்.
வந்தே மாதரம்.
மிகவும் நன்றி.
***
(Release ID: 2109453)
TS/PKV/AG/KR
Humbled to receive the blessings of our Nari Shakti in Navsari. Speaking at a programme during the launch of various initiatives. Do watch. https://t.co/zvrMBnB67J
— Narendra Modi (@narendramodi) March 8, 2025
Women’s blessings are my strength, wealth and shield, says PM @narendramodi. pic.twitter.com/SB6tSism8V
— PMO India (@PMOIndia) March 8, 2025
India is now walking the path of women-led development. pic.twitter.com/aCNi9pVF9c
— PMO India (@PMOIndia) March 8, 2025
Our government places utmost importance on 'Samman' and 'Suvidha' for women. pic.twitter.com/ChzQ7n3JfR
— PMO India (@PMOIndia) March 8, 2025
The soul of rural India resides in the empowerment of rural women. pic.twitter.com/qZ6EjxBAsR
— PMO India (@PMOIndia) March 8, 2025
Nari Shakti is rising, surpassing every fear and doubt. pic.twitter.com/wy0VXlj94I
— PMO India (@PMOIndia) March 8, 2025
In the past decade, we have given women's safety the highest priority. pic.twitter.com/8CESftFlTj
— PMO India (@PMOIndia) March 8, 2025