Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

குஜராத் மாநிலம் நவ்சாரியில் வளர்ச்சிப் பணிகளை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்

குஜராத் மாநிலம் நவ்சாரியில் வளர்ச்சிப் பணிகளை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்


குஜராத் மாநிலம் நவ்சாரியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (08.03.2025)தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், பெரும் எண்ணிக்கையில் வந்திருந்த தாய்மார்கள், சகோதரிகள், மகள்களின் அன்பு, பாசம், ஆசீர்வாதங்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்தார். மகளிர் தினமான இந்தச் சிறப்பு நாளில் நாட்டின் அனைத்து பெண்களுக்கும் தனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார். மகா கும்பமேளாவில் கங்கை அன்னையின் ஆசீர்வாதம் தனக்கு கிடைத்தது என்றும், இன்று பெண் சக்தியின் மகா கும்பமேளாவில் தனக்கு ஆசீர்வாதம் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார். ஜி-சஃபல் (வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான அந்தியோதயா குடும்பங்களுக்கான குஜராத் அரசின் திட்டம்), ஜி-மைத்ரி (கிராமப்புற மக்களின் வருமானத்தை அதிகரிப்பற்கான குஜராத் அரசின் திட்டம்) ஆகிய இரண்டு திட்டங்கள் குஜராத்தில் இன்று தொடங்கப்பட்டுள்ளதைப் பிரதமர் எடுத்துரைத்தார். பல்வேறு திட்டங்களின் நிதி நேரடியாக பெண்களின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளதைக் குறிப்பிட்ட அவர், இந்த சாதனைக்காக அனைவரையும் வாழ்த்தினார்.

இன்றைய நாள் பெண்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்ட திரு நரேந்திர மோடி, அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டதோடு, பணத்தின் அடிப்படையில் அல்லாமல், கோடிக்கணக்கான தாய்மார்கள், சகோதரிகள், மகள்களின் ஆசீர்வாதங்களால் உலகின் பெரிய பணக்காரராக தன்னைக் கருதுவதாக பெருமையுடன் தெரிவித்தார். இந்த ஆசீர்வாதங்கள் தமது மிகப்பெரிய பலம், மூலதனம், பாதுகாப்பு கேடயம் என்று அவர் கூறினார்.

பெண்களை மதிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர், அது சமூகம், தேசத்தின் வளர்ச்சிக்கான முதல் படி என்பதால், நாட்டின் விரைவான முன்னேற்றத்திற்காக பெண்கள் தலைமையிலான வளர்ச்சியின் பாதையில் இந்தியா தற்போது நடைபோட்டு வருகிறது என்று எடுத்துரைத்தார். பெண்களின் வாழ்க்கையில் மரியாதை, வசதி ஆகிய இரண்டிற்கும் அரசு முன்னுரிமை அளிக்கிறது என்று அவர் குறிப்பிட்டார். கோடிக்கணக்கான பெண்களுக்காக கழிப்பறைகள் கட்டப்படுவது அவர்களின் கண்ணியத்தை அதிகரித்துள்ளது என்றும், கோடிக்கணக்கான பெண்களுக்கு வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டு, அவர்களை வங்கி அமைப்புடன் ஒருங்கிணைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். புகையின் கஷ்டங்களிலிருந்து பெண்களைக் காப்பாற்ற உஜ்வாலா சிலிண்டர்களை அரசு வழங்குவதையும் அவர் எடுத்துரைத்தார். பணிபுரியும் பெண்களுக்கான மகப்பேறு விடுப்பை 12 வாரங்களில் இருந்து 26 வாரங்களாக அரசு நீட்டித்துள்ளது என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார். முத்தலாக்கிற்கு எதிராக சட்டம் இயற்ற வேண்டும் என்ற முஸ்லிம் சகோதரிகளின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, லட்சக்கணக்கான முஸ்லிம் சகோதரிகளின் வாழ்க்கையைப் பாதுகாக்க அரசு கடுமையான சட்டத்தை இயற்றியுள்ளது என்று அவர் தெரிவித்தார். ஜம்மு-காஷ்மீரில் 370 வது பிரிவு நடைமுறையில் இருந்தபோது, பெண்களுக்கு பல உரிமைகள் மறுக்கப்பட்டன என்றும் அவர் குறிப்பிட்டார். அவர்கள் மாநிலத்திற்கு வெளியே யாரையாவது திருமணம் செய்து கொண்டால், அவர்கள் மூதாதையர்களின் சொத்துரிமைக்கான உரிமையை இழந்தனர், என்றும் 370 வது பிரிவு நீக்கப்பட்டதன் மூலம், ஜம்மு-காஷ்மீரில் உள்ள பெண்கள் இப்போது தங்கள் உரிமைகளைப் பெற்றுள்ளனர் என்றும் பிரதமர் கூறினார்.

சமூகம், அரசு, பெரிய நிறுவனங்களின் பல்வேறு நிலைகளில் பெண்களுக்கு வாய்ப்புகள் அதிகரித்து வருவதை சுட்டிக் காட்டிய பிரதமர், அரசியல், விளையாட்டு, நீதித்துறை அல்லது காவல்துறை என ஒவ்வொரு துறையிலும் பெண்கள் சிறந்து விளங்குகின்றனர் என்று குறிப்பிட்டார். 2014-ம் ஆண்டு முதல், முக்கிய பதவிகளில் பெண்களின் பங்களிப்பு கணிசமாக அதிகரித்துள்ளது என்று குறிப்பிட்ட அவர், இப்போதைய மத்திய அரசு அதிக எண்ணிக்கையிலான பெண் அமைச்சர்களைக் கொண்டுள்ளது என்றும், நாடாளுமன்றத்தில் பெண்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.  நீதித்துறையில் பெண்களின் வளர்ந்து வரும் பங்களிப்பை எடுத்துரைத்தவர் மாவட்ட நீதிமன்றங்களில் அவர்களின் பங்களிப்பு சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது என்றார். பல மாநிலங்களில், சிவில் நீதிபதிகளாக புதிதாக நியமிக்கப்படுபவர்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் பெண்கள் என்று அவர் தெரிவித்தார். இந்தியா உலகின் மூன்றாவது பெரிய புத்தொழில் சூழல் அமைப்பு நாடாக உள்ளது எனவும் இதில் கிட்டத்தட்ட பாதி புத்தொழில் நிறுவனங்கள் தலைமைப் பொறுப்புகளில் பெண்களைக் கொண்டுள்ளன என்றும் திரு நரேந்திர மோடி எடுத்துரைத்தார். முக்கிய விண்வெளித் திட்டங்களுக்கு தலைமை தாங்கும் பெண் விஞ்ஞானிகளின் குறிப்பிடத்தக்க பங்களிப்பையும் அவர் குறிப்பிட்டார். உலகிலேயே அதிக எண்ணிக்கையில் பெண் விமானிகளை இந்தியா கொண்டுள்ளது குறித்து அவர் பெருமிதம் தெரிவித்தார். நவ்சாரியில் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்வதில் பெண்களின் பங்களிப்பை அவர் பாராட்டினார். பெண் காவல் அதிகாரிகள்  பாதுகாப்பு ஏற்பாடுகளை நிர்வகிக்கின்றனர் என அவர் தெரிவித்தார். சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்களுடன் தாம் கலந்துரையாடியதைப் பகிர்ந்து கொண்ட பிரதமர், அவர்களின் உற்சாகம், தன்னம்பிக்கை இந்திய பெண்களின் வலிமைக்கு சான்று என்று குறிப்பிட்டார். வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தீர்மானம் நிறைவேறும் என்றும், இந்த இலக்கை அடைவதில் பெண்கள் மிக முக்கியப் பங்காற்றுவார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

பெண்கள் தலைமையிலான வளர்ச்சிக்கு குஜராத் ஒரு சிறந்த உதாரணம் என்றும், பெண்களின் கடின உழைப்பு, வலிமையால் உருவாக்கப்பட்ட வெற்றிகரமான கூட்டுறவு மாதிரியை நாட்டிற்கு வழங்கியுள்ளது என்றும் குறிப்பிட்ட பிரதமர், அமுல் நிறுவனத்திற்கு உலக அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளதையும், குஜராத்தின் கிராமங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான பெண்கள் பால் உற்பத்தியை எவ்வாறு புரட்சியாக மாற்றியுள்ளனர் என்பதையும் சுட்டிக் காட்டினார். குஜராத்தி பெண்கள் தங்களை பொருளாதார ரீதியாக மேம்படுத்திக் கொண்டது மட்டுமின்றி, ஊரகப் பொருளாதாரத்தையும் வலுப்படுத்தியுள்ளனர் என்று அவர் கூறினார். குஜராத்தி பெண்களால் தொடங்கப்பட்ட லிஜ்ஜத் அப்பளத்தின் வெற்றியையும் அவர் எடுத்துரைத்தார். இது இப்போது நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள பிராண்டாக மாறியுள்ளது என அவர் தெரிவித்தார்.

பெண்கள், சிறுமிகளின் நலனுக்காக சிரஞ்சீவி யோஜனா, பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம் இயக்கம், கன்யா கெலவானி ரத யாத்திரை, குன்வர்பாய் நு மமேரு, சாத் பெரா சம லக்னா யோஜனா, அபயம் உதவி எண் போன்ற பல்வேறு முன்முயற்சிகளை குஜராத் அரசு செயல்படுத்துவதை நினைவு கூர்ந்த திரு நரேந்திர மோடி, சரியான கொள்கைகள் மூலம் பெண்களின் வலிமையை மேம்படுத்த முடியும் என்பதை குஜராத் மாநிலம் நாடு முழுவதற்கும் எடுத்துக்காட்டியுள்ளது என்று கூறினார். பால்பண்ணைத் தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்களின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக நிதி மாற்றப்படுவதை அவர் குறிப்பிட்டார். இந்த நடைமுறை குஜராத்தில் தொடங்கி, தற்போது நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான பயனாளிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது என்றார். நேரடி மானியத் திட்டம் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான ஊழல்களை தடுத்து ஏழைகளுக்கு உதவிகளை வழங்கியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

புஜ் பகுதியில் நிலநடுக்கத்திற்குப் பிறகு மறுகட்டுமானப் பணிகளின்போது பெண்களுக்கு அவர்களின் பெயர்களில் வீடுகளை வழங்கி அவர்களுக்கு அதிகாரம் அளிக்க அரசு மேற்கொண்ட முயற்சிகளை எடுத்துரைத்த திரு நரேந்திர மோடி, பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்திலும் இதே அணுகுமுறை பின்பற்றப்படுவதாகவும், 2014-ம் ஆண்டு முதல் சுமார் 3 கோடி பெண்கள் வீட்டு உரிமையாளர்களாக மாறியுள்ளதாகவும் தெரிவித்தார். நாடு முழுவதும் உள்ள கிராமங்களுக்கு தண்ணீர் கொண்டு வந்துள்ள ஜல் ஜீவன் இயக்கத்திற்கு உலக அளவில் அங்கீகாரம் கிடைத்திருப்பது குறித்து அவர் குறிப்பிட்டார். கடந்த ஐந்து ஆண்டுகளில், ஆயிரக்கணக்கான கிராமங்களில் 15.5 கோடி வீடுகளுக்கு குழாய் நீர் சென்றடைந்துள்ளது எனவும் இந்த இயக்கத்தின் வெற்றியில் பெண்கள் நீர் குழுக்களின் குறிப்பிடத்தக்க பங்களிப்பு உள்ளது என்றும் அவர் கூறினார்.  இந்த மாதிரி குஜராத்தில் தோன்றியது என்றும், இப்போது நாடு முழுவதும் தண்ணீர் நெருக்கடிக்கு இது தீர்வு காண்கிறது என்றும் அவர் கூறினார்.

நீர் பற்றாக்குறை பிரச்சினைக்கு தீர்வு காணும் அதே வேளையில், நீர் சேமிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர், நாடு தழுவிய “மழை நீர் சேமிப்பு” இயக்கத்தை எடுத்துரைத்தார். மழைநீரை சேமிக்க குளங்கள், தடுப்பணைகள், ஆழ்துளை கிணறு செறிவூட்டல், சமுதாய உறிஞ்சு குழிகள் உள்ளிட்டவற்றில் 5,000-க்கும் மேற்பட்ட பணிகளை நிறைவேற்றிய நவ்சாரியில் உள்ள பெண்களின் முயற்சிகளை அவர் பாராட்டினார். கசிவுநீர்க் குழிகளை அமைக்க, நவ்சாரியில் நூற்றுக்கணக்கான நீர் சேமிப்புப் பணிகள் இன்னும் நடைபெற்று வருவதாக அவர் குறிப்பிட்டார். மழை நீர் சேமிப்பில் குஜராத்தில் முன்னணியில் உள்ள மாவட்டங்களில் ஒன்றாக நவ்சாரி மாவட்டம் திகழ்கிறது என்பதைக் குறிப்பிட்ட திரு நரேந்திர மோடி, இந்தத் துறையில் சாதனை புரிந்த நவ்சாரியின் தாய்மார்கள், சகோதரிகள், மகள்களுக்கு சிறப்பு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

குஜராத்தின் பெண்களின் வலிமை, அவர்களின் பங்களிப்பு ஆகியவை எதற்கும் குறைந்ததில்லை என்று கூறிய திரு நரேந்திர மோடி, குஜராத்தின் பஞ்சாயத்து தேர்தல்களில் 50 சதவீத இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதைக் குறிப்பிட்டார். பிரதமராக தன்னை தில்லிக்கு அனுப்பியபோது, அதே அனுபவத்தையும், அர்ப்பணிப்பையும் நாட்டிற்கு கொண்டு வந்ததாக அவர் குறிப்பிட்டார். புதிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட முதல் மசோதா பெண்களுக்கு அதிகாரமளித்தலுக்காக இருந்தது என்று குறிப்பிட்ட அவர், இந்த மசோதா பழங்குடி பின்னணியில் இருந்து வந்த குடியரசுத் தலைவரால் அங்கீகரிக்கப்பட்டதாகப் பெருமையுடன் குறிப்பிட்டார். இந்த மேடையில் கூடியிருக்கும் பெண்களும் எம்பி-யாகவோ அல்லது எம்எல்ஏ-வாகவோ ஆகி அத்தகைய மேடையில் அமர்வார்கள் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.

மகாத்மா காந்தியை மேற்கோள் காட்டிய பிரதமர், தேசத்தின் ஆன்மா கிராமப்புற இந்தியாவில் வசிக்கிறது என்று அவர் கூறியதை எடுத்துரைத்தார். “கிராமப்புற இந்தியாவின் ஆன்மா கிராமப்புற பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் உள்ளது” என்று பிரதமர் கூறினார். பெண்களின் உரிமைகள், வாய்ப்புகளுக்கு அரசு முன்னுரிமை அளித்துள்ளது என்று அவர் கூறினார். இந்தியா உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக மாறியுள்ளது என்றும், இந்த பொருளாதார முன்னேற்றத்திற்கு அடித்தளம் இங்குள்ள பெண்களைப் போன்ற லட்சக்கணக்கான பெண்களால் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த சாதனையில் கிராமப்புற பொருளாதாரம், மகளிர் சுய உதவிக் குழுக்களின் குறிப்பிடத்தக்க பங்கை அவர் எடுத்துரைத்தார். குஜராத்தில் மட்டும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட சுய உதவிக் குழுக்கள் செயல்பட்டு வருவதாகவும், நாடு முழுவதும் 10 கோடிக்கும் மேற்பட்ட பெண்கள் 90 லட்சத்துக்கும் மேற்பட்ட சுய உதவிக் குழுக்களை நடத்தி வருவதாகவும் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார். இந்த லட்சக்கணக்கான பெண்களின் வருமானத்தை அதிகரித்து, அவர்களை லட்சாதிபதி சகோதரிகள் ஆக்குவதை நோக்கமாகக் கொண்டு அரசு செயல்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார். சுமார் 1.5 கோடி பெண்கள் ஏற்கனவே லட்சாதிபதி சகோதரிகள் ஆக மாறியுள்ளனர் எனவும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் மொத்தம் 3 கோடி பெண்களை லட்சாதிபதி சகோதரிகள் ஆக்குவதை அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

ஒரு சகோதரி லட்சாதிபதியாக மாறும்போது, ஒட்டுமொத்த குடும்பத்தின் எதிர்காலமும் மாறுகிறது என்று குறிப்பிட்ட திரு நரேந்திர மோடி, பெண்கள் மற்ற கிராமப் பெண்களை தங்கள் வேலைகளில் ஈடுபடுத்துவதாகவும், படிப்படியாக வீட்டிலிருந்தே செய்யும் வேலை, பொருளாதார இயக்கமாக மாற்றுவதாகவும் குறிப்பிட்டார். சுய உதவிக் குழுக்களின் திறனை மேம்படுத்த, கடந்த பத்து ஆண்டுகளில் அரசு நிதி ஒதுக்கீட்டை ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது என்று அவர் கூறினார். இந்த சுய உதவிக் குழுக்களுக்கு 20 லட்சம் ரூபாய் வரை பிணையற்ற கடன்கள் வழங்கப்படுவதாக பிரதமர் தெரிவித்தார். கூடுதலாக, சுய உதவிக் குழுக்களில் உள்ள பெண்கள் புதிய திறன்களைப் பெறுவதற்கும் புதிய தொழில்நுட்பங்களைத் தெரிந்து கொள்ளவும் வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன என்று அவர் கூறினார்.

ஒவ்வொரு சந்தேகத்தையும், அச்சத்தையும் சமாளித்து நாட்டின் பெண்கள் முன்னேறி வருவதை சுட்டிக்காட்டிய பிரதமர், “ட்ரோன் தீதி” திட்டம் தொடங்கப்பட்ட போது, ட்ரோன்கள் போன்ற நவீன தொழில்நுட்பம் கிராமப்புற பெண்களுக்குப் பொருந்துமா என்பது குறித்து பலருக்கு சந்தேகம் இருந்தது என்றார். இருப்பினும், சகோதரிகள், மகள்களின் திறமை, அர்ப்பணிப்பில் முழு நம்பிக்கையுடன் அரசு திட்டத்தை செயல்படுத்துவதாக அவர் கூறினார். இப்போது, “நமோ ட்ரோன் தீதி” இயக்கம், விவசாயம், கிராமப்புற பொருளாதாரத்தில் ஒரு புதிய புரட்சியைக் கொண்டு வருகிறது எனவும், இந்த மாற்றத்திற்கு வழிவகுக்கும் பெண்களுக்கு குறிப்பிடத்தக்க வருமானத்திற்கு வழிவகுக்கிறது என்றும் அவர் கூறினார். “வங்கி சகி”, “பீமா சகி” போன்ற திட்டங்கள் கிராமங்களில் பெண்களுக்கு புதிய வாய்ப்புகளை வழங்கியுள்ளன என்றும் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார். கிராமப்புற பெண்களுக்கு அதிகாரம் அளிக்க, “கிருஷி சகி”, “பசு சகி” போன்ற இயக்கங்கள் தொடங்கப்பட்டுள்ளன எனவும் இதன் மூலம் லட்சக்கணக்கான பெண்களை இணைத்து, அவர்களின் வருமானத்தை அதிகரிக்க முடிகிறது என்றும் அவர் தெரிவித்தார். அரசின் முயற்சிகள் குஜராத்தில் உள்ள பெண்களுக்கு அதிகம் பயனளிக்கிறது என்று கூறிய அவர், மேலும் 10 லட்சம் பெண்களை லட்சாதிபதி சகோதரிகள் ஆக்குவதற்கான இயக்கத்தைத் தொடங்கியதற்காக முதலமைச்சர் திரு பூபேந்திரபாய் படேலையும் குஜராத் அரசையும் வாழ்த்தினார்.

பிரதமராக செங்கோட்டையிலிருந்து தமது முதல் உரையை நினைவுபடுத்திய திரு நரேந்திர மோடி, பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்து சிறந்த சமுதாயத்தை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். கடந்த பத்து ஆண்டுகளில் அரசு, பெண்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்துள்ளது என்று அவர் கூறினார். அவர்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க சட்டங்களை கடுமையாக்கியுள்ளது, என்று அவர் கூறினார். பெண்களுக்கு எதிரான கடுமையான குற்றங்களுக்கு விரைவான நீதியை உறுதி செய்வதற்காக விரைவு நீதிமன்றங்களை நிறுவுவதை அவர் எடுத்துரைத்தார். நாடு முழுவதும் சுமார் 800 நீதிமன்றங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன எனவும் அவற்றில் பெரும்பாலானவை இப்போது செயல்பாட்டில் உள்ளன எனவும் அவர் தெரிவித்தார். இந்த நீதிமன்றங்கள் பாலியல் பலாத்காரம், போக்சோ தொடர்பான சுமார் மூன்று லட்சம் வழக்குகளுக்கு தீர்வு காண்பதை விரைவுபடுத்தியுள்ளன என அவர் கூறினார். பாலியல் பலாத்காரம் போன்ற கொடூரமான குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டத்தை அரசு அறிமுகப்படுத்தியுள்ளதாக திரு நரேந்திர மோடி கூறினார். 24 மணி நேரமும் செயல்படும் மகளிர் உதவி மையத்தை வலுப்படுத்தியதையும், 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்களுக்கு உதவி வழங்கும் வகையில் நாடு முழுவதும் தற்போது செயல்படும் 800 மையங்களுடன் பெண்களுக்கான ஒரு குடை மையங்களை நிறுவியதையும் அவர் எடுத்துரைத்தார்.

“புதிதாக அமல்படுத்தப்பட்ட இந்திய நியாயச் சட்டம் ( பாரதிய நியாய் சன்ஹிதா – பிஎன்எஸ்), காலனித்துவ சட்டங்களை அழித்து, பெண்களின் பாதுகாப்பு தொடர்பான விதிகளை மேலும் வலுப்படுத்தியுள்ளது என்று கூறிய பிரதமர், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு தீர்வு காண ஒரு தனி பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது என்றும் கூறினார். பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் நீதி கிடைப்பதில் தாமதத்தை எதிர்கொள்கின்றனர் என்ற பொதுவான மனக்குறையை அவர் சுட்டிக் காட்டினார். இதை நிவர்த்தி செய்ய, சட்டம் இப்போது பாலியல் பலாத்காரம் போன்ற கொடூரமான குற்றங்கள் தொடர்பான புகார்களை விரைந்து விசாரித்து தீர்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறது என அவர் குறிப்பிட்டார். புதிய சட்டங்கள் எங்கிருந்தும் மின்னணு தகவல் அறிக்கைகளை பதிவு செய்ய அனுமதிக்கின்றன என்று திரு நரேந்திர மோடி கூறினார். இது காவல்துறைக்கு உடனடி நடவடிக்கை எடுப்பதை எளிதாக்குகிறது எனவும், ஜீரோ எஃப்ஐஆர் பிரிவின் கீழ், எந்தவொரு பெண்ணும் வன்கொடுமைகளை எதிர்கொண்டால் எந்த காவல் நிலையத்திலும் எஃப்ஐஆர் பதிவு செய்யலாம் எனவும் அவர் தெரிவித்தார்.   மருத்துவர்கள் மருத்துவ அறிக்கைகளை வழங்குவதற்கான காலம் 7 நாட்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது எனவும் இது பாதிக்கப்பட்டவர்களுக்கு குறிப்பிடத்தக்க உதவியை வழங்குகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

பிஎன்எஸ் அமைப்பில் உள்ள புதிய விதிகள் ஏற்கெனவே பலன்களைத் தருகின்றன என்று குறிப்பிட்ட திரு நரேந்திர மோடி, கடந்த அக்டோபரில் சூரத் மாவட்டத்தில் நடந்த ஒரு துயர சம்பவத்தை நினைவு கூர்ந்தார். அங்கு ஒரு கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் 15 நாட்களுக்குள் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு, குற்றவாளிகளுக்கு சில வாரங்களுக்குள் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதை அவர் குறிப்பிட்டார். பிஎன்எஸ் அமலாக்கம் நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிப்பதை விரைவுபடுத்தியுள்ளது என்று அவர் கூறினார். உத்தரபிரதேசத்தின் அலிகாரில், ஒரு நீதிமன்றம் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது எனவும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த 30 நாட்களுக்குள் பிஎன்எஸ்-ன் கீழ் தண்டனை விதிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். கொல்கத்தாவில், ஏழு மாத குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது எனவும் குற்றம் நடந்த 80 நாட்களுக்குள் தீர்ப்பு வழங்கப்பட்டது என்றும் அவர் கூறினார். பிஎன்எஸ் போன்ற பிற அரசின் முடிவுகள் பெண்களின் பாதுகாப்பை எவ்வாறு மேம்படுத்தியுள்ளன என்பதையும் விரைவான நீதியை உறுதி செய்துள்ளன என்பதையும் நிரூபிக்க பல்வேறு மாநிலங்களில் இருந்து இந்த எடுத்துக்காட்டுகளை பிரதமர் எடுத்துரைத்தார்.

ஒரு மகன் தனது தாய்க்கு சேவை செய்வதைப் போல, பாரத தாய்க்கும், இந்தியாவின் தாய்மார்கள், மகள்களுக்கும் தாம் சேவை செய்து வருவதாக அவர் கூறினார். மக்களின் கடின உழைப்பு, அர்ப்பணிப்பு, ஆசீர்வாதங்கள் ஆகியவை 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற இலக்கை அடைய உதவும் என்று தமது உறுதியான நம்பிக்கையை வெளிப்படுத்திய அவர், நாட்டில் உள்ள ஒவ்வொரு தாய், சகோதரி, மகளுக்கும் மகளிர் தினத்திற்கான தமது இதயப்பூர்வமான வாழ்த்துகளை மீண்டும் தெரிவித்தார்.

குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திரபாய் படேல், மத்திய ஜல் சக்தி துறை அமைச்சர் திரு சி.ஆர். பாட்டீல் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

பின்னணி

பெண்களுக்கு அதிகாரமளித்தல் என்பது அரசால் மேற்கொள்ளப்படும் பணிகளில் ஒரு மைல்கல்லாக உள்ளது. பிரதமரின் தொலைநோக்குப் பார்வையின் வழிகாட்டுதலின்படி, அவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியை நோக்கிய நடவடிக்கைகளை எடுக்க அரசு உறுதிபூண்டுள்ளது. இதையொட்டி, மார்ச் 8 அன்று, சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, நவ்சாரி மாவட்டம் வன்சி போர்சி கிராமத்தில் நடைபெற்ற லட்சாதிபதி சகோதரிகள் நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்று, லட்சாதிபதி சகோதரிகளுடன் கலந்துரையாடினார். 5 லட்சாதிபதி சகோதரிகளுக்கு சான்றிதழ்களையும் அவர் வழங்கினார்.

கிராமப்புற வாழ்வாதாரத்திற்கு உகந்த சூழலை உருவாக்குவதற்காக செயல்படும் புத்தொழில் நிறுவனங்களுக்கு ஜி-மைத்ரி திட்டம், நிதி உதவி, வழிகாட்டுதல் ஆதரவு ஆகியவற்றை வழங்கும்.

குஜராத்தின் இரண்டு முன்னேற விரும்பும் மாவட்டங்கள், 13 முன்னேற விரும்பும் வட்டங்களில் உள்ள அந்தியோதயா குடும்பங்களைச் சேர்ந்த சுய உதவிக் குழு பெண்களுக்கு நிதி உதவி, தொழில் முனைவோர் பயிற்சி ஆகியவற்றை ஜி-சஃபல் திட்டம் வழங்கும்.

*****

PLM /DL