குஜராத் மாநிலம், நவ்சாரி மாவட்டம், தண்டியில் தேசிய உப்பு சத்தியாக்கிரக நினைவிடத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி, மகாத்மா காந்தியடிகளின் நினைவு நாளான இன்று (30.01.2019) நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
நினைவிட வளாகத்தில் பிரதமர், மகாத்மா காந்தி மற்றும் அவருடன் 1930-ல் தண்டி உப்பு யாத்திரை சென்ற 80 சத்தியாக்கிரகிகளின் சிலைகளையும் அவர் திறந்து வைத்தார். இந்த நினைவிடத்தில் 1930-ஆம் ஆண்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க உப்பு யாத்திரையின் பல்வேறு நிகழ்வுகளை சித்தரிக்கும் 24 சுவர் ஓவியங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த நினைவக வளாகத்திற்குத் தேவையான மின்சாரத்தை சூரிய சக்தி அமைப்புகள் வழங்கவுள்ளன. பிரதமர் இந்த நினைவிடத்தின் பல்வேறு பகுதிகளைப் பார்வையிட்டார்.
நிகழ்ச்சி தொடர்பான பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர், இந்த நினைவிடம் அமைவதற்கு பாடுபட்ட ஒவ்வொருவரையும் பாராட்டுவதாகத் தெரிவித்தார். “நாடு சுதந்திரம் பெற வேண்டும் என்பதற்காக நாட்டு மக்கள் ஆற்றிய மாபெரும் தியாகங்களை நினைவு கூர்வதற்காக இந்த நினைவகம் அமைந்துள்ளது” என்று அவர் கூறினார். மகாத்மா காந்தியின் கொள்கைகளான சுதேசி, ஸ்வச்சாகிர மற்றும் சத்தியாக்கிரகா ஆகியவற்றை இந்த நினைவகம் உள்ளடக்கியிருக்கிறது என்று கூறினார். வரும் நாட்களில் இந்த இடம் சுற்றுலாப் பயணிகளுக்கு முக்கியமான இடமாக மாறும் என்று அவர் கூறினார்.
“மகாத்மா காந்தியின் மரபுகளை முன்னெடுத்துச் செல்லும் முயற்சியாக நமது அரசு காதி சம்பந்தப்பட்ட 2000-க்கும் மேற்பட்ட நிறுவனங்களை நவீனமயமாக்கியுள்ளது. லட்சக்கணக்கான கைவினைஞர்கள் மற்றும் பணியாளர்களுக்கு இது, பயன்பட்டுள்ளது. காதி தற்போது நவீன உடை மட்டுமின்றி, மகளிர் அதிகாரம் பெறுவதன் சின்னமாகவும் உள்ளது” என்று பிரதமர் கூறினார். சுதந்திரப் போராட்டத்தில் சுதேசி பெரிய பங்கினை ஆற்றியுள்ளது, அதேபோல, கைத்தறியும் ஏழ்மையை அகற்றுவதில் முக்கியப் பங்காற்றியுள்ளது என்றார் அவர். அரசு ஆகஸ்ட் மாதம் 7-ஆம் தேதியை கைத்தறி தினமாக கொண்டாட அறிவிக்கை வெளியிட்டுள்ளது. இதனையடுத்து, கைத்தறி மேம்பாடு அடையும் என்று பிரதமர் கூறினார்.
காந்தியடிகள் தூய்மைக்கு அளித்த முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர், அவரது இந்த தூய்மைக் கருத்துக்களை தூய்மை இந்தியா திட்டத்தில் இணைத்துள்ளோம் என்று கூறினார். தூய்மை இந்தியா இயக்கத்தின் தாக்கம் காரணமாக, கிராமப் பகுதிகளில் தூய்மை நிலைமை 2017-ல் 38 சதவீதமாக இருந்தது, தற்போது தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக் காலத்தில் 98 சதவீதமாக உயர்ந்துள்ளது என்றார்.
கிராமங்களுக்கு மாசுபடுத்தாத சமையல் எரிவாயு, மின்சாரம், சுகாதாரம், நிதிச் சேவைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவது தமது நோக்கம் என்று வலியுறுத்திய பிரதமர், இந்தக் கருத்தின் அடிப்படையிலேயே “கிராம எழுச்சியிலிருந்து பாரத எழுச்சி” என்ற கொள்கை பிறந்துள்ளது என்று கூறினார்.
பிரதமர் குஜராத்தில் ஒருநாள் பயணத்தை மேற்கொண்டார். முன்னதாக, பிரதமர் சூரத் விமான நிலைய முனையக் கட்டிட விரிவாக்கப் பணிக்கு அடிக்கல் நாட்டினார். சூரத்தில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகளையும் அவர் தொடங்கி வைத்தார். சூரத்தில் உள்ள அதிநவீன ரசிலாபென் செவந்திலால் மருத்துவமனையை நாட்டிற்கு அவர் அர்ப்பணித்தார். சூரத்தில் நடைபெற்ற புதிய இந்தியா இளைஞர் மாநாட்டிலும் பிரதமர் உரையாற்றினார்.
***
விகீ/சிஜே/மாகசா