Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

குஜராத் காந்தி நகரில் மகாத்மா மந்திர் மாநாடு மற்றும் கண்காட்சி மையத்தில் பாதுகாப்பு தளவாட கண்காட்சி 2022-ஐ பிரதமர் தொடங்கி வைத்தார்

குஜராத் காந்தி நகரில் மகாத்மா மந்திர் மாநாடு மற்றும் கண்காட்சி மையத்தில் பாதுகாப்பு தளவாட கண்காட்சி 2022-ஐ பிரதமர் தொடங்கி வைத்தார்


குஜராத் காந்தி நகரில் மகாத்மா மந்திர் மாநாடு மற்றும் கண்காட்சி மையத்தில் பாதுகாப்பு தளவாட கண்காட்சி 2022-ஐ பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். இந்திய அரங்கில் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் வடிவமைத்துள்ள எச்டிடி-40 பயிற்சி போர் விமானத்தை அறிமுகம் செய்தார். குஜராத்தில் தீசா விமான நிலையத்திற்கு அடிக்கல் நாட்டி பாதுகாப்பு விண்வெளி இயக்கத்தையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், தற்சார்பு இந்தியா நிகழ்ச்சிக்கு வருகை தந்துள்ள பிரதிநிதிகளை பிரதமராகவும், குஜராத் மண்ணின் மைந்தராகவும் தாம் வரவேற்பதாக கூறினார்.

பாதுகாப்பு தளவாட கண்காட்சி 2022 ஏற்பாடு குறித்து குறிப்பிட்ட பிரதமர், இது புதிய இந்தியா மற்றும் அமிர்த காலத்தின் திறனை  படம் பிடித்து காட்டுவதாக தெரிவித்தார்.  நாட்டின் வளர்ச்சி மற்றும் மாநிலங்களின் ஒத்துழைப்பை எடுத்துக்காட்டுவதாகவும் அவர் கூறினார். இது இளைஞர்களின் சக்தி மற்றும் கனவு என்று கூறிய அவர், இளைஞர்களின் திறன்கள் மற்றும் உறுதி என்று தெரிவித்தார். இது உலகிற்கும், நட்பு நாடுகளுக்கான வாய்ப்பிற்கும் நம்பிக்கை அளிப்பதாக பிரதமர் கூறினார்.

இந்தப் பாதுகாப்பு தளவாட கண்காட்சியின் தனித்துவம் குறித்து குறிப்பிட்ட பிரதமர், இந்திய நிறுவனங்கள் மட்டுமே பங்கேற்கும் முதலாவது பாதுகாப்பு தளவாட கண்காட்சி இதுவாகும் என்றும் இந்தியாவில்  உற்பத்தி செய்யப்பட்ட உபகரணங்கள் மட்டும் இடம் பெற்றுள்ளது என்றும் குறிப்பிட்டார். இரும்பு மனிதர் சர்தார் பட்டேல் மண்ணிலிருந்து இந்தியாவின் திறன்களுக்கான உதாரணங்களை உலகிற்கு காட்டுவதாக அவர் கூறினார். இந்தியப் பாதுகாப்பு தொழில்துறை மற்றும் அதனுடன் தொடர்புடைய சில கூட்டு நிறுவனங்கள், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், 100-க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உட்பட 1300-க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் இக்கண்காட்சியில் இடம் பெற்றுள்ளதாக கூறினார். இந்தியாவின் திறன் மற்றும் செயல் குறித்த பார்வையை ஒரே இடத்தில் இது அளிப்பதாக குறிப்பிட்டார். முதல் முறையாக 400-க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தியா தமது கனவுகளுக்கு வடிவம் கொடுக்கும் வேளையில் ஆப்பிரிக்காவை சேர்ந்த 53 நட்பு நாடுகள் நம்முடன் இணைந்து செயல்படுவதாக அவர் கூறினார். இந்தியா-ஆப்பிரிக்கா இடையே பாதுகாப்பு தொடர்பாக இரண்டாவது பேச்சுக்கள் நடைபெற உள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார். இந்தியா-ஆப்பிரிக்கா இடையேயான உறவு கால நம்பிக்கையின் அடிப்படையில் உள்ளதாகவும், இது மேலும் ஆழமாகவும், புதிய பரிணாமங்களை எட்டும் என்றும் பிரதமர் கூறினார். ஆப்பிரிக்கா-குஜராத் இடையிலான பழங்கால நட்புறவு குறித்து குறிப்பிட்ட பிரதமர், ஆப்பிரிக்காவில் முதலாவது ரயில் இருப்புப் பாதை பணிகளில் கட்ச் பகுதியை சேர்ந்த மக்களின் பங்களிப்பு இருந்ததாகவும் நினைவுகூர்ந்தார். ஆப்பிரிக்காவில் வசிக்கும் குஜராத் வம்சாவளியினர் நாள்தோறும் தங்களது வாழ்க்கைப் பணிகளின்போது பல வகையான குஜராத் மொழி வார்த்தைகளை பயன்படுத்துவதாக அவர் தெரிவித்தார். மகாத்மா காந்தி போன்ற சர்வதேச தலைவருக்கு குஜராத் பிறந்த இடமாக இருந்தாலும் ஆப்பிரிக்கா அவருடைய முதலாவது கர்மபூமியாக இருந்தது என்று கூறினார். ஆப்பிரிக்காவுக்கான இந்த இணைப்பு இன்றும் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைக்கு மையமாக உள்ளது என்று அவர் தெரிவித்தார். கொரோனா பெருந்தொற்று காலத்தில் தடுப்பூசி குறித்து உலக நாடுகள் கவலைப்பட்டு கொண்டிருந்த வேளையில், ஆப்பிரிக்காவில் உள்ள நமது நட்பு நாடுகளுக்கு முக்கியத்துவம் அளித்து இந்தியா தடுப்பூசிகளை விநியோகித்ததாக அவர் கூறினார்.

இக்கண்காட்சியின்போது இந்திய கடல் பிராந்தியத்தின் இரண்டாவது மாநாடும் நடைபெற உள்ளது. இப்பிராந்திய நாடுகளுக்கு இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த விரிவான பேச்சுக்களுக்கு தலமாக அமையும். சர்வதேச வர்த்தகத்திற்கான பாதுகாப்புக்காக கடல்சார் பாதுகாப்பு உலகளவில் முக்கியத்துவம் அடைந்துள்ளதாக தெரிவித்தார். இந்த உலகமயமாக்கலில் வர்த்தக கடற்படையின் பங்கு அதிகரித்துள்ளதாக அவர் கூறினார். இந்தியாவிடமிருந்து உலக நாடுகளின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளதாக குறிப்பிட்ட அவர், அவர்களுடைய விருப்பங்களை இந்தியா நிறைவேற்றும் என்று உறுதி அளிக்கிறேன் என்று தெரிவித்தார். இந்தியா மீதான சர்வதேச நம்பிக்கைக்கு பாதுகாப்பு தளவாட கண்காட்சியும் ஒரு சின்னம் என்று அவர் கூறினார்.

வளர்ச்சி மற்றும் தொழில் திறனில் குஜராத் அடையாளம் பெற்றுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார். இந்த பாதுகாப்பு தளவாட கண்காட்சியின் மூலம் இந்த அடையாளம் மேலும் உச்சத்திற்கு எடுத்துச் செல்லப்படும் என்று அவர் தெரிவித்தார். வரும் நாட்களில் பாதுகாப்பு தொழில் துறையின் முக்கிய மையமாக குஜராத் உருவெடுக்கும் என்று அவர் கூறினார்.

குஜராத்தில் தீசா விமான நிலையத்திற்கு அடிக்கல் நாட்டிய பிரதமர், இந்த விமானப்படை தளம் நாட்டின் பாதுகாப்பு கட்டமைப்பிற்கு வலுசேர்க்கும் என்று தெரிவித்தார். தீசா விமானப்படை தளம் மூலம் மேற்கு எல்லைப்பகுதிகளில் எந்தவித அச்சுறுத்தலுக்கும் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா தயாராகி உள்ளதாக கூறினார். நாங்கள் ஆட்சிக்கு வந்தபிறகு தீசாவில் செயல்பாட்டு தளம் அமைப்பதற்கு முடிவு செய்திருந்தோம். இதையடுத்து நமது படையினரின் எதிர்பார்ப்புகள் இன்று நிறைவேறியுள்ளதாக பிரதமர் கூறினார். இப்பகுதி தற்போது நாட்டின் வலுவான பாதுகாப்பு மையமாக இருக்கிறது என்று திரு.மோடி தெரிவித்தார்.

நாட்டின் எதிர்காலம் எவ்வாறு இருக்கும் என்பதற்கு விண்வெளி தொழில்நுட்பம் ஒரு உதாரணமாகும் என்று கூறினார். இத்துறையில் பல்வேறு சவால்கள் மறுஆய்வு செய்யப்பட்டு முப்படையினர் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதனை களைவதற்கு விரைவாக செயல்பட வேண்டும் என்று அவர் கூறினார். பாதுகாப்பு விண்வெளி இயக்கம் குறித்து கலந்து பேசிய அவர், புதுமை கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதோடு நமது படையினரின் திறனையும் வலுப்படுத்துவதாகவும் தெரிவித்தார். அத்துடன் புதிய மற்றும் புதுமை கண்டுபிடிப்புகள் தீர்வுகளையும் அது அளிப்பதாக கூறினார். இந்தியாவின் விண்வெளிக் கொள்கையில் புதிய இலக்கணத்தை விண்வெளி தொழில்நுட்பம் வடிவமைப்பதாக பிரதமர் சுட்டிக்காட்டினார். இதன் மூலம் பல்வேறு ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் சிறிய நாடுகள் பயனடைந்து வருவதாக அவர் தெரிவித்தார். இந்த விண்வெளி அறிவியலை இந்தியா, 60-க்கும் மேற்பட்ட வளரும் நாடுகளுடன் பகிர்ந்து கொள்வதாக பிரதமர் தெரிவித்தார். தெற்காசிய செயற்கைக்கோள் இதற்கு சிறந்த உதாரணம் என்று அவர் கூறினார். அடுத்த ஆண்டுக்குள் 10 ஆசிய நாடுகள் இந்தியாவில் செயற்கைக்கோள் தரவை பெறும் என்றும் தெரிவித்தார். ஐரோப்பா மற்றும் அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள் கூட நமது செயற்கைக்கோள் தரவை பயன்படுத்துவதாக அவர் கூறினார். பாதுகாப்புத் துறையில் நோக்கம், புதிய கண்டுபிடிப்பு மற்றும் அமலாக்கம் என்ற மந்திரத்துடன் புதிய இந்தியா முன்னேறுவதாக பிரதமர் தெரிவித்தார். 8 வருடங்களுக்கு முன்பு வரை உலகில் மிகப் பெரிய பாதுகாப்பு தளவாட இறக்குமதி நாடாக இந்தியா இருந்ததாக அவர் தெரிவித்தார். ஆனால் பாதுகாப்பு துறையில் இன்று மேக் இன் இந்தியாவின் வெற்றி புதிய இந்தியாவின் நோக்கத்தை எடுத்துக்காட்டியுள்ளதாக கூறினார். கடந்த 5 வருடங்களில் நமது பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி 8 மடங்கு அதிகரித்துள்ளதாக அவர் கூறினார். உலகில் 75-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு நமது பாதுகாப்பு தளவாட பொருட்கள் மற்றும் உபகரணங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருவதாக குறிப்பிட்டார். கடந்த 2021-22 ஆம் ஆண்டில் இந்தியாவின் பாதுகாப்பு தளவாட பொருட்களின் ஏற்றுமதி 1.59 பில்லியன் டாலராக இருந்தது என்று அவர் கூறினார். அதாவது சுமார் 13,000 கோடி ரூபாயாகும். வருங்காலங்களில் 5 பில்லியன் டாலர் அளவிற்கு அதாவது 40,000 கோடி ரூபாய் மதிப்பிலான பாதுகாப்பு தளவாட பொருட்களை ஏற்றுமதி செய்ய நாம் இலக்கு நிர்ணயித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்தியாவின் தொழில்நுட்பத்தை உலக நாடுகள் இன்று உணர்ந்துள்ளதாகவும், இந்திய ராணுவம் அதன் திறனை நிரூபித்துள்ளதாகவும் அவர் கூறினார். ஐஎன்எஸ் விக்ராந்த் போன்ற இதுவரை இல்லாத வகையிலான விமான தாங்கி கப்பலை இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். உள்நாட்டு தொழில்நுட்பத்துடன் கொச்சி கப்பல் கட்டும் நிறுவனம் மூலம் இது உருவாக்கப்பட்டதாக கூறினார். இந்திய விமானப்படையின் மூலம் மேக் இன் இந்தியா முன்னெடுப்பின் கீழ் உருவாக்கப்பட்ட பிரசாந்த் இலகு ரக ஹெலிகாப்டர் இந்தியாவின் பாதுகாப்பு திறனுக்கு சிறந்த உதாரணம் என்று அவர் தெரிவித்தார்.

இந்தியாவின் பாதுகாப்பு துறையை தற்சார்புடையதாக மாற்றுவது குறித்து கூறிய பிரதமர், உள்நாட்டிலேயே கொள்முதல் செய்யப்படக் கூடிய உபகரணங்கள் குறித்த இரண்டு பட்டியல்களை ராணுவம் இறுதி செய்துள்ளதாக தெரிவித்தார். 101 உபகரணங்கள் அடங்கிய இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டதாக குறிப்பிட்டார். இந்த முடிவு தற்சார்பு இந்தியாவின் திறனை வெளிப்படுத்துவதாகவும் அவர் கூறினார். இதன் மூலம் பாதுகாப்புத் துறையின் 49 உபகரணங்கள் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் கொள்முதல் செய்யப்படும் என்று அவர் தெரிவித்தார். இந்த பெருமளவிலான நிதி இந்திய நிறுவனங்களின் அடிப்படை கட்டமைப்பை வலுப்படுத்துவதுடன் அதனை புதிய உச்சத்திற்கு எடுத்துச் செல்லும் என்று பிரதமர் கூறினார். இது இளைஞர்களின் நாடு என்றும் இதன் மூலம் அவர்கள் பெரும் பயனடைவார்கள் என்றும் குறிப்பிட்டார்.

பாதுகாப்பு விநியோகத் துறையில் சில நிறுவனங்கள் உருவாக்கியுள்ள முற்றுரிமைக்குப் பதில் நம்பகமான விருப்பங்கள் இப்போது காளான்களாக வளர்ந்து வருகின்றன என்பதை பிரதமர் எடுத்துரைத்தார். “பாதுகாப்புத் துறையில் இந்த ஏகபோகத்தை முறியடிக்கும் சக்தியை இந்திய இளைஞர்கள் வெளிப்படுத்தியுள்ளனர், மேலும் நமது இளைஞர்களின் இந்த முயற்சி உலக நலனுக்கானது” என்று திரு மோடி கூறினார். வளப்பற்றாக்குறையால் பாதுகாப்பில் பின்தங்கியுள்ள உலகின் சிறிய நாடுகள் இப்போது இதன் மூலம் பெரும் பலன்களைப் பெறும் என்று அவர் கோடிட்டுக் காட்டினார்.

பாதுகாப்புத் துறையில் ஏராளமான வாய்ப்புகள் இருப்பதை இந்தியா காண்கிறது என்று பிரதமர் சுட்டிக்காட்டினார். பாதுகாப்புத் துறையில் உள்ள முதலீட்டு வாய்ப்புகள் குறித்து பேசிய பிரதமர், உத்தரப்பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டில் இரண்டு பாதுகாப்பு தளவாட உற்பத்தி முனையங்களை இந்தியா கட்டமைத்து வருவதாக தெரிவித்தார். உலகின் மிகப் பெரிய நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்து வருவதாகவும் அவர் கூறினார். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் மூலம் இந்த பெரிய நிறுவனங்கள் மிகப் பெரிய விநியோக கட்டமைப்பை உருவாக்கி வருவதாக தெரிவித்தார். இத்துறையில் பெரிய வேலைவாய்ப்பு முன்னெப்போதும் இல்லாத வகையில் தற்போது இளைஞர்களுக்கு கிடைப்பதாகவும் பிரதமர் கூறினார்.

இந்த வாய்ப்புகளுக்கு வடிவம் கொடுத்து இந்தியாவை எதிர்கால மையமாக உருவாக்குமாறு பாதுகாப்பு தளவாட கண்காட்சியில் பங்கேற்ற நிறுவனங்களை பிரதமர் கேட்டுக் கொண்டார். உங்களது புதுமை கண்டுபிடிப்புகள் உலகின் சிறந்தது என்று உறுதிமொழி எடுத்து வலிமையான வளர்ச்சியடைந்த இந்தியா என்ற கனவுக்கு வடிவம் அளிக்குமாறு தெரிவித்தார். உங்களுக்கு ஆதரவாக நான் எப்போதும் இருப்பேன் என்று தமது உரையை நிறைவு செய்தார்.

இந்நிகழ்ச்சியில் குஜராத் முதலமைச்சர் திரு.பூபேந்திர பட்டேல், குஜராத் ஆளுநர் திரு.ஆச்சாரியா தேவ்ரத், பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங், முப்படை தளபதி ஜெனரல் அனில் சவுகான், ராணுவ தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே, விமானப்படை தளபதி ஏர்ஷிப் மார்ஷல் வி.ஆர்.சௌத்ரி, கடற்படை தளபதி அட்மிரல் ஆர்.ஹரிகுமார், பாதுகாப்புத் துறை செயலாளர் டாக்டர் அஜய் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

**************