Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

குஜராத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை விமானம் மூலம் பார்வையிட்டார் பிரதமர்; அகமதாபாத் விமான நிலையத்தில் நடைபெற்ற உயர்நிலைக் கூட்டத்தில் வெள்ள நிவாரண நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார்

குஜராத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை விமானம் மூலம் பார்வையிட்டார் பிரதமர்; அகமதாபாத் விமான நிலையத்தில் நடைபெற்ற உயர்நிலைக் கூட்டத்தில் வெள்ள நிவாரண நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார்


குஜராத் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று விமானத்தில் சென்று பார்வையிட்டார்.

அகமதாபாத் விமான நிலையத்தில் நடைபெற்ற உயர்நிலைக் கூட்டத்தில், வெள்ள நிவாரண நடவடிக்கைகள் குறித்து அவர் ஆய்வு செய்தார். அந்தக் கூட்டத்தில் முதல்வர் விஜய் ரூபானி, மூத்த அமைச்சர்கள் மற்றும் மாநில அரசின் உயரதிகாரிகள், பேரழிவு மீட்பு முகமைகளின் நிர்வாகிகள் மற்றும் பிரதமர் அலுவலக அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

வெள்ளத்தால் ஏற்பட்ட சேதாரங்கள், மேற்கொள்ளப்பட்டுள்ள நிவாரண நடவடிக்கைகள் குறித்து  பிரதமருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக மீட்பது மற்றும் நிவாரண உதவி வழங்குவதில் மிகச் சிறந்த உதவிகளைச் செய்யுமாறு இந்திய விமானப் படை உள்பட, நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அனைத்து அமைப்புகளுக்கும் பிரதமர் அறிவுறுத்தினார். சுத்தம்,  தூய்மை, ஆரோக்கியம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.  இந்த விஷயங்களுக்கு உயர் முன்னுரிமை அளிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

சொத்துகள், பயிர்களின் பாதிப்புகளை விரைவாக மதிப்பீடு செய்து, இழப்பீடுகளை விரைவாக பட்டுவாடா செய்ய வேண்டும் என , பயிர்க் காப்பீட்டை கையாளும் காப்பீட்டு நிறுவனங்கள் உள்ளிட்ட மற்ற காப்பீட்டு நிறுவனங்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று பிரதமர் கூறினார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும் வகையில் இதைச் செய்ய வேண்டும் என குறிப்பிட்டார்.

குடிநீர் வழங்கல், மின்சார விநியோகம் மற்றும் தகவல் தொடர்புகளை உடனடியாக சீர் செய்ய வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார்.

சேதமடைந்த சாலைகளை சரி செய்வதற்கும், மின்சார கட்டமைப்புகளை சீரமைக்கவும், சுகாதாரம் தொடர்பான உதவிகளை அளிக்கவும் சிறப்புக் குழுக்களை அமைக்குமாறு பிரதமர் யோசனை தெரிவித்தார்.

அகமதாபாத் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர், கடந்த வாரத்தில் குஜராத்தில் கனமழை பெய்திருப்பதாகத் தெரிவித்தார். மீட்புப் பணிகளில் நாளையில் இருந்து அதிக அளவில் ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்படும் என்றும் குறிப்பிட்டார். நிவாரணப் பணிகள் இன்னும் விரைவுபடுத்தப்படும் என்றும் உறுதியளித்தார். கிராம மற்றும் நகர்ப்புறங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மதிப்பீடு செய்யப்பட்டு, குறுகிய கால மற்றும் நீண்டகால அடிப்படையிலான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அவர் கூறினார். வெள்ள நிலைமையை சமாளிக்க மாநில அரசும், மற்ற அமைப்புகளும் இதுவரையில் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்தார்.

வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் ரூபாயும், பலத்த காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் கருணைத் தொகையாக வழங்குவதாக பிரதமர் அறிவித்துள்ளார். மாநில பேரிடர் நிவாரண நிதியின் கீழ் உடனடி கூடுதல் உதவியாக ரூ.500 கோடி ஒதுக்குவதாகவும் அவர் அறிவித்தார். குஜராத் மக்களும், மாநிலமும் இன்னும் வலிமையாக எழுந்து, வெள்ளத்தால் ஏற்பட்ட சவால்களை வெற்றிகரமாக முறியடிப்பார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். இந்த கடினமான நேரத்தில் குஜராத் மக்களுடன்  மத்திய அரசு தோளோடு தோள் நிற்பதாகவும் அவர் உறுதியளித்தார்.