Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

குஜராத்தின் வதோதராவில் சி-295 விமான உற்பத்தி நிலையத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்

குஜராத்தின் வதோதராவில் சி-295 விமான உற்பத்தி நிலையத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்


பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று குஜராத்தின் வதோதராவில் சி-295 விமான உற்பத்தி நிலையத்திற்கு அடிக்கல் நாட்டினார். தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் விண்வெளித் துறையில் தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தி முன்னேற்றங்களை வெளிப்படுத்தும் கண்காட்சியையும் அவர் பார்வையிட்டார்.

கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், இந்தியாவை உலகின் உற்பத்தி மையமாக மாற்றும் திசையில் இன்று நாம் ஒரு பெரிய முயற்சியை எடுத்துள்ளோம் என்றார். பல நாடுகளில் பிரபலமான போர் விமானங்கள், டாங்கிகள், நீர்மூழ்கிக் கப்பல்கள், மருந்துகள், தடுப்பூசிகள், எலக்ட்ரானிக் கேஜெட்டுகள், மொபைல் போன்கள் மற்றும் கார்களை இந்தியா தயாரித்து வருகிறது என்றார். “இந்தியாவில் தயாரிப்போம், உலகத்துக்காக தயாரிப்போம்’’ என்ற மந்திரத்துடன் இந்தியா முன்னேறி வருவதாகவும், தற்போது இந்தியா உலக அளவில் போக்குவரத்து விமானங்களை தயாரிப்பதில் மிகப்பெரிய நாடாக மாறி வருவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். ‘இந்தியாவில் தயாரிக்கப்பட்டது’ என்ற பெருமையுடன் கூடிய பெரிய பயணிகள் விமானங்களை இந்தியா விரைவில் தயாரிக்கும் என்பதை தம்மால் எதிர்பார்க்க முடியும் என்று பிரதமர் கூறினார்.

இன்று அடிக்கல் நாட்டப்பட்ட இந்த உற்பத்தி மையம், நாட்டின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து துறையை மாற்றியமைக்கும் வல்லமை கொண்டது என்று கூறிய பிரதமர், இந்திய பாதுகாப்புத் துறையில் முதல்முறையாக இவ்வளவு பெரிய முதலீடு வந்துள்ளது என்று சுட்டிக்காட்டினார். இங்கு தயாரிக்கப்படும் போக்குவரத்து விமானங்கள், ஆயுதப்படைகளுக்கு பலம் கொடுப்பது மட்டுமின்றி, “கலாச்சார மற்றும் கல்வி மையமாகப் புகழ்பெற்ற வதோதரா, விமானத் துறை மையமாக புதிய அடையாளத்தை உருவாக்கும்”, விமானத் தயாரிப்பில் புதிய சூழலை உருவாக்க உதவும் என்று அவர் கூறினார். 100க்கும் மேற்பட்ட எம்இஎம்இ- களும் இத்திட்டத்துடன் சம்பந்தப்பட்டுள்ளது குறித்து பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார். “இந்தியாவில் தயாரிப்போம், உலகத்துக்காக தயாரிப்போம்’’ என்ற வாக்குறுதி இந்த இடத்தில் இருந்து புதிய உத்வேகத்தைப் பெறும், இந்தத் திட்டம் எதிர்காலத்தில் மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான ஆர்டர்களை எடுக்க முடியும் என்று அவர் கூறினார்.

இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் விமானப் போக்குவரத்துத் துறை குறித்து கருத்து தெரிவித்த பிரதமர், விமானப் போக்குவரத்து தொடர்பான உலகின் முதல் மூன்று நாடுகளில் நாம் நுழைய உள்ளோம் என்றார். உடான் திட்டம் பல பயணிகளை விமானப் பயணிகளாக மாற்ற உதவுகிறது, என்றார். பயணிகள் மற்றும் சரக்கு விமானங்களுக்கான தேவை அதிகரித்துள்ளதை எடுத்துரைத்த பிரதமர், அடுத்த 15 ஆண்டுகளில் இந்தியாவுக்கு 2000க்கும் மேற்பட்ட விமானங்கள் தேவைப்படும் என்று கூறினார். இந்த திசையில் இன்று ஒரு முக்கியமான படியாகும் என்றும் அதற்கான ஆயத்தங்களை இந்தியா ஏற்கனவே தொடங்கிவிட்டதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டினார். கொரோனா தொற்றுநோய் மற்றும் போரினால் சூழப்பட்ட மற்றும் விநியோகச் சங்கிலியில் ஏற்படும் இடையூறுகளால் பாதிக்கப்பட்டுள்ள உலகிற்கு இந்தியா ஒரு உலகளாவிய வாய்ப்பை வழங்குவதாகவும் திரு மோடி கூறினார். இத்தகைய கடினமான சூழ்நிலைகளிலும் இந்தியாவின் வளர்ச்சி வேகம் நிலையானதாக உள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார். இயக்க நிலைமைகள் தொடர்ந்து மேம்பட்டு வருவதாகவும், விலை போட்டித்தன்மை மற்றும் தரம் ஆகியவற்றில் இந்தியா கவனம் செலுத்துகிறது என்றும் அவர் விளக்கினார். “குறைந்த செலவில் உற்பத்தி மற்றும் அதிக உற்பத்திக்கான வாய்ப்பை இந்தியா முன்னெடுக்கிறது” என்று பிரதமர் குறிப்பிட்டார். திறமையான மனிதவளத்தைக் இந்தியா கொண்டுள்ளது என்று அவர் மேலும் கூறினார். கடந்த 8 ஆண்டுகளில் அரசு மேற்கொண்டுள்ள சீர்திருத்தங்களை விளக்கிய பிரதமர், நாட்டில் உற்பத்திக்கான முன்னெப்போதும் இல்லாத சூழலை இந்தியா உருவாக்கி வருகிறது என்றார். எளிமைப்படுத்தப்பட்ட கார்ப்பரேட் வரிக் கட்டமைப்பை உருவாக்கி, உலக அளவில் போட்டியை உருவாக்குதல், 100 சதவீத அன்னிய நேரடி முதலீடு, பாதுகாப்பு மற்றும் விண்வெளித் துறைகளை தனியார் நிறுவனங்களுக்குத் திறந்துவிடுதல், 29 மத்திய தொழிலாளர் சட்டங்களை 4 குறியீடுகளாகச் சீர்திருத்துதல், 33,000 விதிகளை ரத்து செய்தல் போன்றவற்றை பிரதமர் பட்டியலிட்டார். “இந்தியாவில் இன்று பொருளாதார சீர்திருத்தங்களின் ஒரு புதிய வரலாறு எழுதப்பட்டு வருகிறது,  உற்பத்தித் துறை இதன் மூலம் அதிக பலன்களைப் பெறுகிறது” என்று அவர் கூறினார்.

வெற்றிக்கான மனநிலையில் ஏற்பட்ட மாற்றத்தை பிரதமர் பாராட்டினார். “இன்று, இந்தியா ஒரு புதிய மனநிலையுடன், ஒரு புதிய பணிக்கலாச்சாரத்துடன் செயல்படுகிறது” என்றார் அவர். நாட்டின் திறமையையும் தனியார் துறையின் சக்தியையும் அடக்கும் மனநிலை, அரசு அனைத்தையும் அறிந்தது என்ற ஆட்சிக் கருத்து இருந்த காலத்தை அவர் நினைவு கூர்ந்தார். “இப்போது அனைவரது முயற்சியைத் தொடர்ந்து,  பொது மற்றும் தனியார் துறைக்கு சமமான முக்கியத்துவத்தை அரசு கொடுக்கத் தொடங்கியுள்ளது. மானியம் மூலம் உற்பத்தித் துறை செயல்படாமல் இருந்த முந்தைய அரசின் தற்காலிக அணுகுமுறை குறித்தும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.  மின்சாரம் அல்லது தண்ணீர் விநியோகம் போன்ற அடிப்படை வசதிகள் புறக்கணிக்கப்பட்டன. “நாங்கள் முடிவெடுக்கும் தற்காலிக அணுகுமுறையை கைவிட்டு, முதலீட்டாளர்களுக்கு பல்வேறு புதிய சலுகைகளை கொண்டு வந்துள்ளோம். உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத் திட்டத்தை நாங்கள் தொடங்கினோம், இது மாற்றத்தைக் காணக்கூடியதாக இருந்தது. இன்று நமது கொள்கைகள் நிலையானவையாகவும், யூகிக்கக்கூடியவையாகவும் எதிர்காலம் சார்ந்தவையாகவும் உள்ளன”, என்றார் அவர்.

உற்பத்தி என்பது அடைய முடியாததாகக் கருதப்பட்டதால், சேவைத் துறையில் கவனம் செலுத்துவதே மேலாதிக்க சிந்தனையாக இருந்த காலத்தையும் பிரதமர் நினைவு கூர்ந்தார். “இன்று நாங்கள் சேவைகள், உற்பத்தித் துறைகள் ஆகிய இரண்டையும் மேம்படுத்துகிறோம்,” என்று அவர் கூறினார். உற்பத்தி மற்றும் சேவைத் துறை இரண்டிலும் கவனம் செலுத்தும் ஒரு முழுமையான அணுகுமுறையின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். “இன்று இந்தியா உற்பத்தியில் அனைவரையும் விட முன்னேறத் தயாராகி வருகிறது” என்று அவர் கூறினார். “கடந்த 8 ஆண்டுகளில் திறன் மேம்பாட்டில் நாம் கவனம் செலுத்தி அதற்கான சூழலை உருவாக்கியதால் இது சாத்தியமானது. இந்த மாற்றங்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்ததன் மூலம், இன்று இந்தியாவின் உற்பத்தித் துறையில் வளர்ச்சிப் பயணம் இந்த நிலையை எட்டியுள்ளது” என்று பிரதமர் சுட்டிக்காட்டினார்.

அரசின் முதலீட்டுக்கு உகந்த கொள்கைகளை விளக்கிய பிரதமர், அதன் பலன்கள் அந்நிய நேரடி முதலீட்டில் தெளிவாகத் தெரியும் என்று குறிப்பிட்டார். கடந்த எட்டு ஆண்டுகளில், 160க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்துள்ளன. இதுபோன்ற வெளிநாட்டு முதலீடுகள் குறிப்பிட்ட தொழில்களுக்கு மட்டும் அல்லாமல், பொருளாதாரத்தின் 61 துறைகளில் பரவி, இந்தியாவின் 31 மாநிலங்களை உள்ளடக்கியதாக அவர் மேலும் விவரித்தார். விண்வெளித் துறையில் மட்டும் 3 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார். 2014க்குப் பிறகு, இந்தத் துறையில் முதலீடு 2000 முதல் 2014 வரை முதலீடு செய்யப்பட்டதை விட 5 மடங்கு வளர்ச்சியடைந்துள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார். வரும் ஆண்டுகளில், பாதுகாப்பு மற்றும் விண்வெளித் துறைகள் தற்சார்பின் முக்கியமான தூண்களாக இருக்கப் போகின்றன என்பதை திரு மோடி உறுதிபட தெரிவித்தார்.  “2025 ஆம் ஆண்டிற்குள் நமது பாதுகாப்பு உற்பத்தியை 25 பில்லியன் டாலருக்கு அப்பால் உயர்த்த இலக்கு வைத்துள்ளோம். நமது பாதுகாப்பு ஏற்றுமதியும் 5 பில்லியன் டாலர்களை தாண்டும்” என்று அவர் மேலும் கூறினார். உத்தரப்பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டு வரும் பாதுகாப்பு வழித்தடங்கள் இந்தத் துறையை மேம்படுத்த பெரிதும் உதவும் என்று பிரதமர் சுட்டிக்காட்டினார். காந்திநகரில் இதுவரை இல்லாத வகையில் மிகப்பெரிய பாதுகாப்பு கண்காட்சியை ஏற்பாடு செய்ததற்காக பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் குஜராத் அரசை திரு மோடி பாராட்டினார். பாதுகாப்பு கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள அனைத்து உபகரணங்களும் தொழில்நுட்பங்களும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை என்று அவர் சுட்டிக் காட்டினார். “செயல்திட்டம் C-295-ன் பிரதிபலிப்பு வரும் ஆண்டுகளில் நடைபெறும் பாதுகாப்பு கண்காட்சியில் நமக்குத் தெரியும்” என்று பிரதமர் கூறினார்.

இந்த நேரத்தில் நாட்டில் முன்னெப்போதும் இல்லாத முதலீட்டு நம்பிக்கையைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு தொழில்துறையுடன் தொடர்புடைய அனைவரையும் பிரதமர் கேட்டுக் கொண்டார். நாட்டின் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் முன்னேறுவதற்கு உதவுவது குறித்து மேலும் சிந்திக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். ஆராய்ச்சித் துறையில் தனியார் துறையின் பங்களிப்பு அதிகரிப்பது குறித்தும் பிரதமர் பேசினார். “இந்த திசையில் நாம் முன்னேறினால், கண்டுபிடிப்பு மற்றும் உற்பத்தியின் மிகவும் வலுவான சூழல் அமைப்பை உருவாக்க முடியும். அனைவரது முயற்சி என்னும்  மந்திரத்தை நீங்கள் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்” என்று கூறி பிரதமர் தமது உரையை நிறைவு செய்தார்.

குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர படேல், ஆளுநர் திரு ஆச்சார்ய தேவ்விரத், பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா, டாடா சன்ஸ் தலைவர் திரு என் சந்திரசேகரன் மற்றும் ஏர்பஸ் தலைமை வர்த்தக அதிகாரி திரு கிறிஸ்டியன் ஷெரர் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

 

*************