Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

குஜராத்தின் பனாஸ்காந்தாவில், தராட்டில் பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி உரையாற்றினார்

குஜராத்தின் பனாஸ்காந்தாவில், தராட்டில் பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி உரையாற்றினார்


வணக்கம்.

இன்று சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்தநாள். என்னுடைய சகோதர சகோதரிகளே, குஜராத்தின் மோர்பியில் நேற்று நிகழ்ந்த கோர விபத்தில், நம்முடைய பல உறவினர்கள் மற்றும் சிறு குழந்தைகள் தங்கள் உயிரை இழந்துள்ளனர் என்பது, என்னை நிலைகுலையச் செய்துள்ளது. இந்த இக்கட்டான  நேரத்தில், நாம் அனைவரும் பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் நிற்கிறோம் என்று பிரதமர் தெரிவித்தார்.

பனாஸ்காந்தா மற்றும் வடக்கு குஜராத்திற்கு 8 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நீர்வளத் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. இந்தத்திட்டங்களின் மூலம், பனாஸ்காந்தா, மெஹ்சேனா உள்ளிட்ட  கிராமங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களில், 2 லட்சம் ஹெக்டேர் நிலம் பாசன வசதிபெறும் என பிரதமர் கூறினார்.

எத்தனை பிரச்சனைகளை எதிர்கொள்ள நேர்ந்தாலும், இருக்கின்ற இயற்கை வளங்களைப் பயன்படுத்தி, குஜராத் மக்கள் உழைக்கத் தயாராகி விடுவார்களே தவிர, ஒருபோதும் ஓய்வில் இருக்க மாட்டார்கள். ஓய்வின்றி உழைப்பார்கள் என்பதற்கு பனாஸ்காந்தாவே மிகப் பெரிய உதாரணம் என்றார் அவர்.

கடந்த 25 ஆண்டுகளுக்கு முந்தைய குஜராத்தை எண்ணிப்பார்க்கும்போது, தற்போது ஏற்பட்டிருக்கின்ற ஒட்டுமொத்த வளர்ச்சியே நம் முன் நிற்கிறது. நாம் அனைவரும் ஒன்றுபட்டு உழைத்தால், அதற்கான வெற்றி நிச்சயம் கிடைக்கும் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது என்று பிரதமர் தெரிவித்தார்.

நான் குஜராத் முதலமைச்சராக இருந்த 20 ஆண்டுகளில், கட்ச்சில் ஆழமான போர் வெல் மூலம் நிலத்தடி நீரை எடுக்க வேண்டும் என்ற நிலை உருவானது. ஆனால் நானோ, இருக்கின்ற நீரைச் சேமிக்கும் வழிகளில் கவனத்தைச் செலுத்தினேன். சுஜலாம் சுஃபலாம் திட்டத்தின் கீழ், தடுப்பணைகளைக் கட்டி, நீர்நிலைகளை ஆழப்படுத்தியதால், நீர் கடலுக்குச் சென்று வீணாவது தடுக்கப்பட்டது என்று பிரதமர் கூறினார்.

விவசாயிகளுக்கு உதவும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட பிரதம மந்திரி சம்மான் கிசான் நிதித்திட்டத்தின் மூலம், விவசாயிகளுக்கு தலா 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவதை பிரதமர் சுட்டிக்காட்டினார். யூரியா உரங்களைப் பெறுவதில் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்னைகளைத் தீர்ப்பதற்காக பாரத் உரம் என்ற பெயரில், 2 ஆயிரம் ரூபாய்க்கு இறக்குமதி செய்யும் ஒரு சாக்கு மூட்டை யூரியா உரத்தை, மத்திய அரசு விவசாயிகளுக்கு வெறும் 260 ரூபாய்க்கு வழங்குவதையும் பிரதமர் நினைவுகூர்ந்தார்.

பாலைத்தவிர, மாட்டுச் சாணத்தைக்கொண்டும் பணம் சம்பாதிக்க முடியும் என்பதை விவசாயிகளுக்கு அரசு உணர்த்தி வருகிறது. அதேபோல், ரசாயனம் இல்லா இயற்கை விவசாயத்திற்கு, விலங்குகளின் கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படும் உரங்களைப் பயன்படுத்தி, மண்வளத்தை உறுதி செய்யவும் அரசு முனைப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதையும் பிரதமர் குறிப்பிட்டார். வளர்ச்சியை இலக்காகக் கொண்டு உழைப்பதால், ஒருகாலத்தில் சைக்கிள் தயாரிக்ககூட இயலாத நிலையில் இருந்த குஜராத்தில், தற்போது விமான உற்பத்தி ஆலைக்கு அடிக்கல் நாட்டப்பட்டிருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்தார்.

*****

 

SM/ES/IDS