Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

குஜராத்தின் டஹோடில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களின் தொடக்க விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

குஜராத்தின் டஹோடில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களின்  தொடக்க விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்


பாரத் மாதா கி ஜே, பாரத் மாதா கி ஜே

முதலில் டஹோட் மக்களிடம் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். ஆரம்பத்தில் கொஞ்ச நேரம் ஹிந்தியில் பேசுவேன், அதன் பிறகு எனது தாய்மொழியில் பேசுவேன்.

மென்மையான பேச்சுக்கு பெயர்பெற்ற குஜராத் முதலமைச்சர் திரு. பூபேந்திரபாய் படேல் அவர்களே, மத்திய அமைச்சரவையில் எனது சகாவும் ரயில்வே அமைச்சருமான திரு.அஸ்வினி வைஷ்ணவ் அவர்களே, அமைச்சர்கள் குழுவில் எனது சகாவான தர்ஷனாபென் ஜர்தோஷ் அவர்களே, நாடாளுமன்றத்தில் எனது மூத்த சகாவும் குஜராத் மாநில பாரதிய ஜனதா கட்சியின் தலைவருமான திரு. சி.ஆர்.பாட்டில் அவர்களே, குஜராத் மாநில அமைச்சர்களே நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களே மற்றும் இங்கு அதிக அளவில் வந்துள்ள எனது அன்பான பழங்குடியின சகோதர சகோதரிகளே.

இன்று, பழங்குடியின பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான சகோதர சகோதரிகள் நம்மை ஆசீர்வதிக்க வந்துள்ளனர். நாம் வாழும் இடம் மற்றும் சூழல் நம் வாழ்க்கையை பாதிக்கிறது என்று நம்பப்படுகிறது. எனது பொது வாழ்க்கையின் ஆரம்ப காலத்தில், உமர் கிராமம் முதல் அம்பாஜி வரையிலான கிழக்கு குஜராத்தின், பழங்குடிப் பகுதிளில் தான் பணியாற்றினேன். பழங்குடி சமூகத்தில் தங்கி, அவர்களுடன் வாழ்க்கையைக் கழிப்பது மற்றும் அவர்களைப் புரிந்துகொள்வது எனது ஆரம்ப கால வாழ்க்கையின் ஒரு பகுதியாகும். இந்தப் பழங்குடி தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் சகோதரர்கள் எனக்கு வழிகாட்டினார்கள், எனக்கு நிறைய கற்றுக் கொடுத்தார்கள், அதுதான் இன்று நான் உங்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஊக்கத்தை அளிக்கிறது.

பழங்குடியினரின் வாழ்க்கை முறையை நான் மிக நெருக்கமாகப் பார்த்திருக்கிறேன். குஜராத், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் அல்லது இந்தியாவின் எந்தப் பழங்குடிப் பிரதேசமாக இருந்தாலும், எனது பழங்குடி சகோதர சகோதரிகளின் வாழ்க்கை தண்ணீரைப் போல தூய்மையானது, மொட்டுகள் போல மென்மையானது என்று என்னால் மரியாதையுடன் சொல்ல முடியும். இந்த பிராந்தியத்தில் உள்ள டஹோடின் பல குடும்பங்களுடன் நான் மிக நீண்ட காலம் செலவிட்டிருக்கேன். இன்று உங்கள் அனைவரையும் சந்திக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்துள்ளது.

சகோதர சகோதரிகளே,

ரூ.20,000 கோடி செலவில், 9,000 குதிரைத் திறன் உள்ள மின்சார எஞ்சின்கள் உற்பத்திக்கு அடிக்கல் நாட்டப்பட்டு இருப்பதன் மூலம் இந்தியாவில் உற்பத்தி இயக்கத்திற்கு டஹோட் பெரும் பங்களிக்கும்.

சகோதர சகோதரிகளே, ஒன்று முக்கியம், இந்த முன்னேற்ற பாதையில் நம் தாய் மற்றும் சகோதரிகள் பின் தங்கி விடக்கூடாது. இந்த முன்னேற்றத்தில் அவர்களும் முன்னேற வேண்டும், எனவே, முன்னேற்றத்தில் இருக்கும் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் நலன் மற்றும் பங்கேற்பு எப்போதும் எனது திட்டங்களில் முக்கியமாக இருக்கும்.

தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டால், தாய்மார்கள் மற்றும் சகோதரிகள் அதிகபட்ச பிரச்சனையை சந்திக்க வேண்டியிருக்கும். எனவே, குழாய் நீர் வழங்குவதை உறுதி செய்ய தீர்மானித்துள்ளேன். உங்கள் வீடுகளுக்கே தண்ணீர் வழங்கும் வசதியை ஏற்படுத்தப் போகிறேன். கடந்த இரண்டரை ஆண்டுகளில் ஆறு கோடிக்கும் அதிகமான குடும்பங்களுக்குக் குழாய் மூலம் தண்ணீர் வழங்குவதில் வெற்றி பெற்றுள்ளோம். குஜராத்திலும், ஐந்து லட்சம் பழங்குடியின குடும்பங்களுக்குக் குழாய் நீரை உறுதி செய்துள்ளோம், இந்தத் திட்டம் எதிர்காலத்தில் இன்னும் வேகமெடுத்து இன்னும் பல லட்சம் குடும்பங்களுக்குத் தண்ணீர் வழங்கப்படும்.

நண்பர்களே,

சுதந்திரத்தின் 75 ஆவது ஆண்டுப் பெருவிழா சூழலில் ஜாலியன் வாலாபாக் படுகொலைப் போன்ற டஹோட் படுகொலை பற்றியும், உள்ளூர் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற சம்பவங்கள் பற்றி புதிய தலைமுறைகள் அறிந்து கொள்ள முடியும்.

நண்பர்களே,

ஒரேஒரு அறிவியல் பள்ளி கூட இல்லாதிருந்த இந்த பிராந்தியத்தில் தற்போது மருத்துவ மற்றும் செவிலியர் கல்லூரிகள் அமைகின்றன, படிப்பதற்கு இளைஞர்கள் வெளிநாடு செல்கின்றனர். ஏகலைவா மாதிரிப் பள்ளிகள் நிறுவப்படுகின்றன. பழங்குடியினர் ஆராய்ச்சி நிறுவனங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கிறது. இவை இந்த பிராந்தியத்தின் வளர்ச்சியையும் நாட்டின் வளர்ச்சியையும் உறுதி செய்கிறது.

நண்பர்களே,

இந்தியா தனது 100வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் போது, அது ஒட்டுமொத்த நாட்டுக்கும் முக்கியமான தருணமாக இருக்க வேண்டும்

சுதந்திரத்தின் 75 ஆவது ஆண்டுப் பெருவிழாவையொட்டி இம்மாவட்டத்தில் 75 குளங்களுக்கான தமது வேண்டுகோளை அவர் வலியுறுத்தினார். இன்று 18-20 வயதில் உள்ள இளைஞர்கள் நாட்டை வழிநடத்தும் தருணத்தில் நாடு மிகப்பெரிய உயரத்தை எட்டி இருக்க வேண்டும். எனது பழங்குடியின சகோதர சகோதரிகளும் குஜராத்தும் இதற்கான பணியில் பின்தங்க மாட்டார்கள் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.

நீங்கள் பெருமளவில் வந்து, என்னை ஆசீர்வதித்து, எனக்கு மிகுந்த மரியாதை கொடுத்திருக்கீர்கள். நான் உங்களில் ஒருவன், உங்களிடையே வளர்ந்தவன். உங்களிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டு வாழ்க்கையில் முன்னேறியிருப்பவன். நான் உங்களுக்குக் கடமைப்பட்டிருக்கிறேன், எனவே, எனது நன்றிக்கடனை செலுத்தும் வாய்ப்பை நான் தவறவிடமாட்டேன். மீண்டும் ஒருமுறை, பழங்குடி சமுதாயத்தின் அனைத்து சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கும் மரியாதையுடன் அஞ்சலி செலுத்தி அவர்களுக்குத் தலைவணங்குகிறேன். வருங்கால சந்ததியினர் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல வாழ்த்துகிறேன்.

என்னுடன் இணைந்து சொல்லுங்கள்

பாரத் மாதா கி ஜே

பாரத் மாதா கி ஜே

பாரத் மாதா கி ஜே

மிக்க நன்றி!

பொறுப்புத் துறப்பு: இது பிரதமர் உரையின் மொழிபெயர்ப்பு. மூல உரை இந்தி மற்றும் குஜராத்தி மொழிகளில் உள்ளது.

*****

 

(Release ID: 1818517)