Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

குஜராத்தின் காந்திநகரில் நடைபெற்ற இந்தியாவில் சுசூகியின் 40 ஆண்டுகளை நினைவுகூரும் விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

குஜராத்தின் காந்திநகரில் நடைபெற்ற இந்தியாவில் சுசூகியின் 40 ஆண்டுகளை நினைவுகூரும் விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்


மக்கள் செல்வாக்குமிக்க குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர பாய் படேல் அவர்களே, ஹரியானா முதலமைச்சர் திரு மனோகர்லால் அவர்களே, துணை முதலமைச்சர் திரு கிருஷ்ண சௌத்தாலா அவர்களே, நாடாளுமன்றத்தின் எனது சகாவான  திரு சி ஆர் பாட்டில் அவர்களே, சுசூகி மோட்டார் நிறுவனத்தின் மூத்த அதிகாரிகளே, இந்தியாவுக்கான ஜப்பான் தூதர் அவர்களே, மாருதி-சுசூகியின் மூத்த அதிகாரிகளே, மற்ற பிரமுகர்களே, பெரியோர்களே, தாய்மார்களே!

     முதலில் சுசூகி மற்றும் சுசூகி குடும்பத்துடன் தொடர்புடைய அனைவருக்கும் நான் வாழ்த்து சொல்ல விரும்புகிறேன்.

     சுசூகி குடும்பத்துடன் இந்தியாவுக்கும், இந்திய மக்களுக்குமான உறவுக்கு தற்போது 40 வயதாகிறது. மின்சார வாகன மின்கலங்கள் உற்பத்தி தொழிற்சாலைக்கு குஜராத்தில் இன்று அடிக்கல் நாட்டப்படுவதோடு, புதிய கார் உற்பத்தி தொழிற்சாலை ஹரியானாவில் உற்பத்தியை தொடங்குகிறது. 

     இந்த விரிவாக்கம் சுசூகி நிறுவனத்தின் மகத்தான எதிர்கால திறனுக்கு அடிப்படையை உருவாக்கும் என்று நான் நம்புகிறேன்.  சுசூகி மோட்டார் குடும்பத்தினருக்கு குறிப்பாக திரு ஒசாமு சுசூகி, திரு தோஷிஹிரோ சுசூகி ஆகியோருக்கு நான் வாழ்த்துரைக்க விரும்புகிறேன். நீங்கள் என்னை சந்திக்கும் போதெல்லாம் இந்தியாவில் சுசூகி-யின் புதிய தொலைநோக்கை அளித்திருக்கிறீர்கள்.  இந்த ஆண்டு மே மாதத்தில் திரு ஒசாமு சுசூகியை நான் சந்தித்தேன்.  அப்போது இந்தியாவில் சுசூகியின் 40 ஆண்டுகள் விழாவில் பங்கேற்குமாறு அவர் என்னை கேட்டுக்கொண்டார்.  இத்தகைய சிறப்பான முன்முயற்சிகளை காண்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.

நண்பர்களே,

     மாருதி – சுசூகியின்  வெற்றி, இந்தியா-ஜப்பான் இடையே வலுவான நட்புறவை குறிக்கிறது. கடந்த எட்டு ஆண்டுகளில் இருநாடுகளின் உறவுகள் புதிய உச்சங்களை தொட்டுள்ளது.  தற்போது குஜராத் – மகாராஷ்டிரா இடையேயான புல்லட் ரயில், உத்தரப்பிரதேசத்தின் வாரணாசியில் ருத்ராக்ஷ மையம் போன்ற பல மேம்பாட்டுத் திட்டங்கள் இந்தியா-ஜப்பான் நட்புறவுக்கு உதாரணங்களாக விளங்குகின்றன. நமது நட்புறவில் ஒவ்வொரு இந்தியரும் ஜப்பானின் மறைந்த முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயை நினைவில் வைத்துள்ளனர். தற்போது நமது நாடுகளை நெருக்கமாகக் கொண்டுவர ஷின்சோ அபேயின் முயற்சிகளை தற்போதை பிரதமர் கிஷிடா முன்னெடுத்து வருகிறார்.

நண்பர்களே,

     நாட்டில் தொழில் வளர்ச்சிக்கும், இந்தியாவில் உற்பத்தி என்பதற்கும் தொடர்ந்து உத்வேகம் அளித்து வரும் குஜராத் மற்றும் ஹரியானா மக்களுக்கு இந்த சந்தர்ப்பத்தில் எனது வாழ்த்துக்களை நான் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த இரு மாநில அரசுகளின் வளர்ச்சி மற்றும் தொழில்துறை சார்ந்த கொள்கைகள், எளிதாக வணிகம் செய்வதை நோக்கிய முயற்சிகள் கோடிக்கணக்கான மக்களுக்கு குறிப்பாக இளைஞர்களுக்கு பயனளிக்கின்றன.

நண்பர்களே,

     இந்த சிறப்பான நிகழ்வின் போது, மிகப் பழைய விஷயம் என் நினைவுக்கு வருகிறது.  அது இயற்கையும் கூட. 13 ஆண்டுகளுக்கு முன், சுசூகி அதன் உற்பத்தி பிரிவை குஜராத்தில் தொடங்கியதை நான் நினைத்துப் பார்க்கிறேன்.  இந்த நிறுவனம் குஜராத்துக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றியிருப்பது குறித்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். தற்போது குஜராத் இந்த நாட்டில் மட்டுமின்றி, உலகிலேயே மோட்டார் வாகன உற்பத்தியில் முதன்மையானதாக உருவாகியுள்ளது.

நண்பர்களே,

     ஜப்பான் மீதான நமது முயற்சிகளும், நட்பும் எப்போதும் தீவிரமானவை.  இதன் விளைவாக சுசூகி உட்பட 125-க்கும் அதிகமான ஜப்பானிய நிறுவனங்கள் குஜராத்தில் செயல்படுகின்றன. இந்த நிறுவனங்கள் மோட்டார் வாகனங்களிலிருந்து உயிரி எரிபொருள் வரை விரிவடைந்துள்ளன.  உற்பத்தி சார்ந்த இரண்டு ஜப்பான் – இந்தியா நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கின்றன.  ஜப்பான் நிறுவனங்கள் பல குஜராத்தில் உள்ள தொழில்நுட்ப பல்கலைக்கழகங்கள் மற்றும் ஐடிஐ-களுடன் உடன்பாடு செய்து கொண்டுள்ளன.

நண்பர்களே,

     இந்தியாவில் இன்று அதிகரித்து வரும் மின்சார வாகன சந்தையைப்பற்றி சில ஆண்டுகளுக்கு முன் ஒருவரும் கற்பனை செய்திருக்க முடியாது.  மின்சார வாகனங்களின் சிறப்பம்சங்களில் ஒன்று அமைதியாக இருக்கும்.  இருசக்கர அல்லது நான்கு சக்கர வாகனங்களாக இருப்பினும் அவை ஒலி எழுப்பாது. இந்த அமைதி என்பது அதன் பொறியியல் அம்சம் மட்டுமல்ல, நாட்டின் அமைதியான புரட்சியின் தொடக்கமும் ஆகும்.  மக்கள் தற்போது மின்சார வாகனத்தை மற்றொரு வாகனம் போல கருதவில்லை, மாபெரும் போக்குவரத்து பயன்பாட்டுக்கானதாக கருதுகிறார்கள்.

நண்பர்களே,

     மின்சார வாகனங்கள் போன்ற விஷயங்கள் பற்றி இங்கு நாம் பேசும் போது, நமது நாட்டின் பருவநிலை மாற்றத்திற்கான உறுதிப்பாட்டையும், இலக்கையும் மனதில் கொள்வது மிகவும் அவசியமானதாகும்.       2030-க்குள் படிமம் அல்லாத எரிபொருள் வடிவத்தில் 50% மின்சாரத்தை நிறுவுவது என சி.ஓ.பி-26-ல் இந்தியா அறிவித்துள்ளது.  2070-க்குள் கரியமில வாயு வெளியேற்றத்தை முற்றிலுமாக நிறுத்துவது என்றும் நாம் இலக்கு நிர்ணயித்துள்ளோம்.

     உங்களின் ஒத்துழைப்புடன் இந்த இலக்குகளை நிச்சயமாக நிறைவேற்றுவோம் என்று நான் நம்புகிறேன்.  இன்றைய நமது விரைவுப்பாதைகள் செல்லும் அதே வேகத்தில் வளர்ச்சி மற்றும் வளத்தின் இலக்கை நாம் எட்டுவோம்.  இந்த உணர்வோடு உங்கள் அனைவருக்கும் நான் நன்றி தெரிவிக்கிறேன்.  சுசூகி குடும்பத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

மிக்க நன்றி!

***************

(Release ID: 1855079)