குஜராத்தின் அடலாஜில் உள்ள ஸ்ரீ அன்னபூர்ணாதாம் அறக்கட்டளையின் கல்வி வளாகத்தையும், விடுதியையும் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கிவைத்தார். இந்த நிகழ்வின் போது, ஜன்சஹாயக் அறக்கட்டளையின் ஹிராமணி ஆரோக்கியதாமுக்கான பூமி பூஜையையும் அவர் செய்துவைத்தார். குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திரபாய் படேல் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், நீண்ட காலமாக ஸ்ரீ அன்னபூர்ணாதாமின் தெய்வீக, ஆன்மீக, சமூக பணிகளுடன், இணைந்திருந்தது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். சுகாதாரம், கல்வி, ஊட்டச்சத்து ஆகிய துறைகளில் பங்களிப்பு செய்வது குஜராத்தின் இயற்கைக் குணம் என்று அவர் குறிப்பிட்டார். அனைத்து சமூகங்களும் தங்களின் திறனுக்கு ஏற்ப செயல்படுகின்றன; சமூகத்திற்கான தங்களின் பங்களிப்பை நிறைவேற்றுவதில் நிலவுடைமை சமூகம் ஒருபோதும் பின்தங்கிவிடக் கூடாது.
வளத்தின் தெய்வமான அன்னை அன்னபூர்ணா அனைவராலும் குறிப்பாக நிலவுடைமை சமூகத்தால் போற்றி வணங்கப்படுவதாகும். இந்த சமூகம் அன்றாட வாழ்க்கையின் எதார்த்தங்களோடு இணைந்ததாகும். அன்னை அன்னபூர்ணாவின் சிலை அண்மையில் கனடாவிலிருந்து காசிக்கு மீட்டுக் கொண்டுவரப்பட்டது என்று பிரதமர் கூறினார். “கடந்த சில ஆண்டுகளில் வெளிநாடுகளிலிருந்து இது போன்ற டசன் கணக்கான நமது கலாச்சாரத்தின் அடையாளங்கள் மீட்டுக் கொண்டுவரப்பட்டுள்ளன” என்று அவர் கூறினார்.
நமது கலாச்சாரத்தில் உணவு, சுகாதாரம், கல்வி ஆகியவற்றுக்கு எப்போதும் மகத்தான முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது என்று கூறிய பிரதமர், இன்று ஸ்ரீ அன்னபூர்ணாதாம் இவற்றை விரிவுபடுத்தியுள்ளது என்றார். தற்போது வந்துள்ள புதிய வசதிகள், குஜராத்தின் சாமான்ய மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குறிப்பாக ஒரே நேரத்தில் 14 பேருக்கு டயாலிசிஸ் செய்யும் வசதி 24 மணி நேரமும், ரத்தம் வழங்கும் ரத்த வங்கி, ஆகியவை மாபெரும் தேவையைப் பூர்த்தி செய்யும். மாவட்ட மருத்துவமனைகளில் கட்டணமின்றி டயாலிசிஸ் செய்யும் வசதியை மத்திய அரசு தொடங்கியிருப்பதாக பிரதமர் கூறினார்.
குஜராத்தி மக்கள் பக்கம் கவனத்தைத் திருப்பிய பிரதமர், நல்லப் பணிக்காக அறக்கட்டளையையும், அதன் தலைமைத்துவத்தையும், பாராட்டினார். இந்த பிரமுகர்களின் சிறந்த பண்பு ஆக்கப்பூர்வமான பணியுடன் இயக்கம் கலந்துள்ளது என்று அவர் தெரிவித்தார். ‘மென்மையான ஆனால் உறுதியான’ முதலமைச்சரின் தலைமைத்துவத்தை பாராட்டிய அவர், இயற்கை வேளாண்மையை, வலியுறுத்தினார். எங்கெல்லாம் சாத்தியமோ, அங்கெல்லாம் இயற்கை வேளாண்மையை ஊக்கப்படுத்துமாறு கூடியிருந்தோரைப் பிரதமர் கேட்டுக் கொண்டார். குஜராத்தில் வளர்ச்சியின் வளமான பாரம்பரியம் பற்றி குறிப்பிட்ட பிரதமர், இங்கு வளர்ச்சியின் புதிய தரங்கள், உருவாகின்றன. வளர்ச்சியின் இந்த பாரம்பரியம், முதலமைச்சரால் முன்னெடுத்துச் செல்லப்படுகிறது என்று அவர் கூறினார்.
ஒற்றுமையின் சிலையை சர்தார் படேலுக்கு இந்தியா மகத்தான அஞ்சலியை செலுத்துகிறது என்றும், இவரது பெயர் உலகம் முழுவதும் பரவியிருக்கிறது என்றும் பிரதமர் கூறினார்.
அன்னை அன்னப்பூர்ணாவின் பூமியான குஜராத்தில் ஊட்டச்சத்துக் குறைபாட்டிற்கு இடமிருக்கக் கூடாது என்று பிரதமர் தெரிவித்தார். ஊட்டச்சத்துக் குறைபாடு என்பதும் அறியாமையால் வருவது என்று அவர் குறிப்பிட்டார். சமச்சீரான உணவு பற்றிய விழிப்புணர்வை பரவலாக்குவதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். சுகாதாரத்தின் பாதையில், முதல் அடி உணவு என்று குறிப்பிட்ட பிரதமர், ஊட்டச்சத்து குறைபாடு என்பது உணவுப் பற்றாக்குறையால் என்பதைவிட, உணவுப் பற்றிய அறிவுப்பற்றாக்குறையால் ஏற்படுகிறது என்றார். பெருந்தொற்றுக் காலத்தில் 80 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு விலையின்றி உணவு தானியங்களை அரசு உறுதி செய்தது பற்றி பிரதமர் குறிப்பிட்டார். நேற்றிரவு அமெரிக்க அதிபருடன் தாம் பேசியதை சுட்டிக்காட்டிய திரு மோடி, அனுமதிக்கான விதிகளை உலக சுகாதார நிறுவனம் தளர்த்தினால், மற்ற நாடுகளுக்கு உணவு தானியங்களை அனுப்பி வைக்க இந்தியா முன்வரும் என்று அமெரிக்க அதிபரிடம் தாம் கூறியதாகத் தெரிவித்தார். அன்னை அன்னபூர்ணாவின் கருணையால் இந்திய விவசாயிகள் ஏற்கனவே உலகத்தின் மீது அக்கறை கொண்டிருக்கிறார்கள் என்று பிரதமர் கூறினார்.
குஜராத்தில் தடுப்பூசி இயக்கத்தைச் சிறப்பாக செயல்படுத்தியதைப் பிரதமர் பாராட்டினார். தொழிற்சாலை வளர்ச்சியின் புதிய போக்குகளின் தேவைக்கு ஏற்ப திறன் மேம்பாட்டை அதிகப்படுத்துவதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். ஃபார்மசி கல்லூரி தொடங்குவதில் முக்கியத்துவம் அளித்தது பற்றி குறிப்பிட்ட அவர், இது மாநிலத்தின் மருந்துப் பொருட்கள் உற்பத்தி தொழில்துறைக்கு முன்னோட்டமாக இருந்ததாகக் கூறினார். சமூகம் மற்றும் அரசின் முயற்சிகள், திறன் வளர்ச்சியை பன்முகத் தாக்கத்தை ஏற்படுத்துவதாக அவர் குறிப்பிட்டார். குஜராத் மாநிலம் திறமையையும், ஆர்வத்தையும், கொண்டிருப்பதால் தொழில்துறையின் 4.0-வின் தரங்களை எட்டுவதில் நாட்டுக்கு தலைமை வகிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
டயாலிசிஸ் நோயாளிகளின் நிதிநிலை எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்துவதாக குறிப்பிட்ட பிரதமர், நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும், கட்டணமில்லாத டயாலிசிஸ் வசதியை பரவலாக்குவதை வலியுறுத்தினார். அதே போல், குறைந்த செலவில், மருந்து வழங்குவதன் மூலம் மக்கள் மருந்தக மையம் நோயாளிகளின் செலவைக் குறைப்பதாகத் தெரிவித்தார். தூய்மை, போஷான், மக்கள் மருந்தகம், டயாலிசிஸ் இயக்கம், ஸ்டென்ட் மற்றும் முழங்கால் மாற்று உபகரண விலைக் குறைப்பு போன்ற நடவடிக்கைகள் சாமானிய மக்களின் சுமையைக் குறைத்துள்ளது. அதே போல் ஆயுஷ்மான் பாரத் திட்டம், ஏழை மற்றும் நடுத்தரப் பிரிவு நோயாளிகளுக்கு குறிப்பாக பெண்களுக்கு உதவி செய்துள்ளது என்று பிரதமர் மேலும் தெரிவித்தார்.
விடுதி மற்றும் கல்வி வளாகம் 600 மாணவர்களுக்கான 150 அறைகளுடன் உண்டு, உறைவிட வசதியைக் கொண்டுள்ளது. ஜிபிஎஸ்சி, யுபிஎஸ்சி தேர்வுகளுக்கான பயிற்சி மையங்கள், இ-நூலகம், கருத்தரங்கக் கூடம், விளையாட்டு உபகரணங்கள் அறை, தொலைக்காட்சி அறை, ஆரம்ப சுகாதாரம் போன்ற இதர வசதிகளும் மாணவர்களுக்கு செய்யப்பட்டுள்ளன.
ஜன்சஹாயக் அறக்கட்டளை ஹிராமணி ஆரோக்கியதாமை மேம்படுத்தும். ஒரே நேரத்தில் 14 பேருக்கு டயாலிசிஸ் செய்யும் வசதி, 24 மணி நேரமும் ரத்தம் வழங்கும் ரத்த வங்கி, 24 மணி நேரமும் செயல்படும் மருந்தகம், நவீன நோயியல் சோதனைக் கூடம், சுகாதார பரிசோதனைகளுக்கான உயர்தர சாதனம் உள்ளிட்ட நவீன மருத்துவ வசதிகளையும் இது கொண்டிருக்கும். ஆயுர்வேதம், ஹோமியோபதி, அக்குபஞ்சர், யோகா சிகிச்சை ஆகியவற்றுக்கான நவீன வசதிகளுடன் பகல் நேர கவனிப்பு மையமாகவும், இது இருக்கும். முதலுதவிப் பயிற்சி, தொழில்நுட்பாளர் பயிற்சி, மருத்துவப் பயிற்சி ஆகிய வசதிகளையும் இது கொண்டிருக்கும்.
************
Blessed to take part in a programme at Shree Annapurna Dham in Adalaj, Gujarat. https://t.co/DCCzCkT0dB
— Narendra Modi (@narendramodi) April 12, 2022