Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

கிர்லோஸ்கர் பிரதர்ஸ் லிமிட்டெட் நிறுவனத்தின் நூற்றாண்டு கொண்டாட்டங்களில் பிரதமர் பங்கேற்பு


புதுதில்லியில் இன்று (06.01.2020) நடைபெற்ற கிர்லோஸ்கர் பிரதர்ஸ் லிமிட்டெட் (கேபிஎல்) நிறுவனத்தின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்றார். கேபிஎல் நிறுவனத்தின் 100 ஆண்டுகள் நிறைவைக் குறிக்கும் தபால்தலை ஒன்றையும் பிரதமர் வெளியிட்டார். நிகழ்ச்சியில் “யன்திரிக் கி யாத்ரா – எந்திரங்களை உருவாக்கிய மனிதர்” என்ற தலைப்பிலான கிர்லோஸ்கர் பிரதர்ஸ் நிறுவனர் காலஞ்சென்ற திரு.லக்ஷ்மன்ராவ் கிர்லோஸ்கர் வாழ்க்கை வரலாற்றின் இந்தி மொழி நூலையும் பிரதமர் வெளியிட்டார்.

100 ஆண்டுகள் நிறைவைக் கொண்டாடும் கிர்லோஸ்கர் பிரதர்ஸ் லிமிட்டெட் நிறுவனத்திற்கு பாராட்டுத் தெரிவித்த பிரதமர், துணிச்சலுடன் செயல்படும் உணர்வு, புதிய துறைகளில் விரிவாக்கம் செய்தல் ஆகியன இன்றளவும் இந்தியாவின் ஒவ்வொரு தொழில்முனைவோரின் அடையாளமாக உள்ளது என்று கூறினார். நாட்டின் மேம்பாட்டிற்காக பொறுமையின்றி பாடுபடும் இந்திய தொழில்முனைவோர் தங்களது திறன்களையும் வெற்றிகளையும் விரிவாக்குவதிலும் விரைந்து செயல்படுகின்றனர் என்றார்.

“இன்று புத்தாண்டிலும், புதிய பத்தாண்டிலும் நுழையும் நிலையில், இந்தப் பத்தாண்டு இந்திய தொழில்முனைவோருக்கானது என்று கூறுவதில் எனக்கு எவ்விதத் தயக்கமும் இல்லை” என்று கூறினார் பிரதமர்.

இந்தியாவுக்கும், இந்தியர்களுக்கும் தொழில்துறையினருக்கும் அரசு இடையூறாக இல்லாமல் தோழனாக செயல்படும்போதுதான் நாட்டு மக்களின் ஆற்றல் முன்னணி நிலைக்கு வரும் என்று பிரதமர் கூறினார்.

‘நோக்கத்துடன் சீர்திருத்தம், நேர்மையுடன் செயல்படுங்கள், தீவிரத்துடன் மாற்றங்கள்’ என்பதுவே கடந்த சில ஆண்டுகளாக நமது அணுகுமுறையாக இருந்து வருகிறது. தொழில் ரீதியிலும், நடைமுறைகளால் இயக்கப்படுவதுமான ஆளுகையைக் கொண்டுவர நாம் முயற்சி மேற்கொண்டுள்ளோம். கடந்த 5 ஆண்டுகளில் நேர்மையுடனும் முழுமையான வெளிப்படைத்தன்மையுடனும் உழைப்பதற்கு ஏற்ற சூழ்நிலை நாட்டில் நிலவுகிறது. இதனால் பெரிய இலக்குகளை நிர்ணயிக்கவும் அவற்றை உரிய காலத்தில் அடைய முடியும் என்ற தைரியம் நாட்டுக்கு ஏற்பட்டுள்ளது.

“2018-19வது நிதியாண்டில் யுபிஐ மூலம் சுமார் 9 லட்சம் கோடி ரூபாய் பரிவத்தனை நடைபெற்றுள்ளது. இந்த நிதியாண்டில் டிசம்பர் மாதம் வரை மட்டுமே 15 லட்சம் கோடி ரூபாய் பரிவர்த்தனைகள் யுபிஐ மூலம் நடைபெற்றுள்ளன. இதிலிருந்து நாடு எவ்வளவு விரைவாக டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேற்கொண்டு வருகிறது என்பதை நாம் அனுமானிக்க இயலும். உஜாலா திட்டம் நேற்றுடன் ஐந்தாண்டுகளை நிறைவு செய்துள்ளது. நாடெங்கும் 36 கோடிக்கும் கூடுதலான எல்இடி பல்புகள் விநியோகிக்கப்பட்டுள்ளன என்பது அனைவருக்கும் மன நிறைவு அளிக்கும் விஷயம் ஆகும்” என்று பிரதமர் கூறினார்.

“இந்தியாவில் உற்பத்தி செய்வோம் இயக்கத்தின் வெற்றிக் கதைகள் நமது தொழில்துறையினரின் வலுவைக் குறிப்பவையாக உள்ளன. இந்தியத் தொழில்துறையின் ஒவ்வொரு பிரிவிலிருந்தும் இத்தகைய வெற்றி கதைகள் வரவேண்டும் என நான் விரும்புகிறேன்” என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.