Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

கிரேட்டர் நொய்டாவில் சர்வதேச பால்வள கூட்டமைப்பின் உலகப் பால்வள உச்சி மாநாடு 2022-ஜ பிரதமர் தொடங்கிவைத்தார்

கிரேட்டர் நொய்டாவில் சர்வதேச பால்வள கூட்டமைப்பின் உலகப் பால்வள உச்சி மாநாடு 2022-ஜ பிரதமர் தொடங்கிவைத்தார்


 

கிரேட்டர் நொய்டாவில் இந்திய எக்ஸ்போ மையம் மற்றும் மார்ட்  ஏற்பாடு செய்துள்ள சர்வதேச பால்வள கூட்டமைப்பின் உலக பால்வள உச்சி மாநாடு 2022-ஜ பிரதமர்  திரு நரேந்திர மோடி இன்று தொடங்கிவைத்தார்.

இந்த நிகழ்வில் கூடியிருந்தோரிடையே உரையாற்றிய பிரதமர், உலக பால்வளத்துறையைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், இன்று இந்தியாவில் திரண்டிருப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். இந்த உலக பால்வள உச்சி மாநாடு சிந்தனைகள் பரிமாற்றத்திற்கு மகத்தான வழியாக விளங்கப்போகிறது என்று பிரதமர் கூறினார். “பால்வளத் துறையின் திறன் என்பது ஊரக பொருளாதாரத்திற்கு முக்கியத்துவம் அளிப்பது மட்டுமின்றி, உலக முழுவதுமுள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு மிகப்பெரும் வாழ்வாதாரமாகவும் உள்ளது.” என்று அவர் கூறினார்.

இந்தியாவின் கலாச்சார வரைப்படத்தில் பசு தானம் மற்றும் பால் தொடர்பான வணிகம், மையப்புள்ளியாக இருந்ததை பிரதமர் கோடிட்டு காட்டினார். இந்தியாவின் பால்வளத்துறை பல தனித்துவ குணாம்சங்களை பெற்றிருப்பதை இது காட்டுகிறது. உலகின் இதர வளர்ந்த நாடுகள் போல் இல்லாமல், இந்தியாவில் பால்வளத் துறையின் இயக்கு சக்தியாக சிறு விவசாயிகள் உள்ளனர் என்பதை பிரதமர் சுட்டிக்காட்டினார். “இந்திய பால்வளத் துறையின் குணாம்சம் என்பது பெருமளவு உற்பத்திஎன்பதை விட மக்களால் உற்பத்திஎன உள்ளது. ஒன்று, இரண்டு அல்லது மூன்று கால்நடைகளுடன் சிறு விவசாயிகளின் முயற்சிகள் அடிப்படையில், இந்தியா மிகப்பெரும் பால் உற்பத்தி நாடாக விளங்குகிறது. இந்த துறை நாட்டில் எட்டு கோடிக்கும் அதிகமான குடும்பங்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குகிறது என்று அவர் தெரிவித்தார்.

இந்திய பால்வளத் துறையின் இரண்டாவது தனித்துவ குணாம்சத்தை விவரித்த பிரதமர், இந்தியாவில் அவ்வளவு பெரிய பால் கூட்டுறவு வலைப்பின்னல் இருப்பதாகவும், உலகில் வேறு எங்கும் இத்தகையதொரு உதாரணத்தை ஒருவரும் கண்டறிய இயலாது என்றார்.  நாட்டில் உள்ள 2 லட்சத்திற்கும் அதிகமான கிராமங்களைச் சேர்ந்த 2 கோடி விவசாயிகளிடமிருந்து ஒவ்வொரு நாளும் 2 முறை பாலினை கொள்முதல் செய்யும் பால் கூட்டுறவுகள் அதனை வாடிக்கையாளர்களுக்கு விநியோகம் செய்கின்றன என்று திரு மோடி கூறினார். இந்த நடைமுறை முழுமையிலும் இடைத்தரகர்கள் யாரும் இல்லை என்ற உண்மையை கூறி அனைவரின் கவனத்தையும் ஈர்த்த பிரதமர், வாடிக்கையாளர்களிடமிருந்து பெறப்பட்ட பணத்தில் 70 சதவீதத்திற்கும் கூடுதலாக விவசாயிகளுக்கு நேரடியாக செல்கிறது என்றார். ஒட்டுமொத்த உலகில், வேறு எந்த நாட்டிலும் இந்த விகிதம் இல்லை என்று பிரதமர் மேலும் கூறினார். பால்வளத்துறையில் பணம் செலுத்துவதற்கான டிஜிட்டல் முறையை திறனையும், கோடிட்டு காட்டிய அவர், மற்ற நாடுகளுக்கு இது பல பாடங்களை கொண்டிருக்கிறது என்றார்.

பிரதமரின் கருத்துப்படி மற்றொரு தனித்துவ அம்சம் என்பது அனைத்து விதமான மாறுபட்ட சூழ்நிலைகளிலும் தாக்குப்பிடிக்கும் உள்நாட்டு கால்நடை இனங்கள். குஜராத்தின் கட்ச் பகுதியில் உள்ள வலிமை மிக்க  பன்னி எருமைகள் இனம் இதற்கு உதாரணமாகும். முர்ரா, மெஹ்சானா, ஜஃப்ராபாதி, நீலி ரவி, பந்தர்பூரி போன்ற எருமை இனங்கள் பற்றியும் பேசிய அவர், பசு இனங்களில் கீர், சாஹிவால், ரதி, காங்க்ரெஜ், தர்பார்க்கர், ஹர்யானா போன்றவற்றை குறிப்பிட்டார்.

மற்றொரு தனித்துவ குணாம்சமாக பால்வளத்துறையில் பெண்களின் திறனை பிரதமர் எடுத்துரைத்தார். இந்திய பால்வளத்துறை தொழிலாளர்களில் 70 சதவீதம் பேர் பெண்களாக உள்ளனர் என்பதை பிரதமர் சுட்டிக்காட்டினார். “இந்திய பால்வளத்துறையின் உண்மையான தலைவர்களாக பெண்கள் உள்ளனர். அதுமட்டுமின்றி, இந்திய பால் கூட்டுறவுகளின் உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானவர்கள் பெண்கள்” என்று அவர் மேலும் கூறினார். எட்டரை லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள பால்வளத் துறையின் உற்பத்தி, கோதுமை மற்றும் அரிசி உற்பத்தியின் இணைந்த மதிப்பை விட அதிகமாகும் என்று அவர் தெரிவித்தார். இவை அனைத்தையும் இயக்குவது இந்திய பெண்கள் சக்தியாகும்.

இந்திய பால்வளத்துறையின் திறனை விரிவுப்படுத்த 2014 முதல் அரசு இடைவிடாமல், பணியாற்றி வருவதை பிரதமர் கோடிட்டு காட்டினார். இது பால் உற்பத்தியை அதிகரிக்க வழிவகுத்துள்ளது. இதன் மூலம் விவசாயிகளின் வருமான அதிகரிப்புக்கும் வழி ஏற்பட்டுள்ளது. “இந்தியா, 2014-ல் 146 மில்லியன் டன் பால் உற்பத்தி செய்துள்ளது. இது தற்போது 210 மில்லியன் டன்னாக அதிகரித்துள்ளது. அதாவது சுமார் 44 சதவீதம் அதிகரிப்பு” என்பதை பிரதமர் சுட்டிகாட்டினார். உலக அளவிலான வளர்ச்சி 2 சதவீதமாக உள்ளதற்கு மாறாக, இந்திய பால் உற்பத்தியின் அதிகரிப்பு விகிதம் 6 சதவீதமாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

உற்பத்தி அதிகரிப்பில் கவனம் செலுத்துவதோடு இந்தத் துறையின் சவால்களை  எதிர்கொள்ளும் வகையில், சமச்சீரான நடைமுறையை உருவாக்க அரசு பணியாற்றி வருகிறது என்று பிரதமர் கூறினார். இந்த நடைமுறையில், விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய், ஏழைகளுக்கு அதிகாரமளித்தல், தூய்மை, ரசாயனம் இல்லாத வேளாண்மை, தூய்மை எரிசக்தி, கால்நடை பராமரிப்பு ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.  கிராமங்களில் பசுமை மற்றும் நீடித்த வளர்ச்சியின் ஆற்றல்மிக்க வழிமுறையாக கால்நடை பராமரிப்பும், பால்வளமும் மேம்படுத்தப்படுவதை அவர் வலியுறுத்தினார். தேசிய கோகுல இயக்கம், கோபர்தான் திட்டம், பால்வளத்துறையை டிஜிட்டல் மயமாக்குதல், கால்நடைகள் அனைத்திற்கும் தடுப்பூசி செலுத்துதல் ஆகியவற்றுடன் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்தல் போன்றவை இந்த திசையில் எடுக்கப்படும் நடவடிக்கைகளாகும்.

நவீன தொழில்நுட்ப பயன்பாட்டை வலியுறுத்திய பிரதமர், பால் தரும் விலங்குகள் மற்றும் பால் வளத்துறையுடன் தொடர்புடைய அனைத்து விலங்குகளின் மிகப்பெரிய புள்ளி விவர தகவலை இந்தியா கட்டமைத்து வருகிறது என்றார். “கால்நடைகளின்  பயோமெட்ரிக் அடையாளத்தை எடுத்து வருவதாகவும் இதற்கு பசு ஆதார் என பெயரிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

வேளாண் உற்பத்தியாளர்கள் சங்கம், மகளிர் சுயஉதவிக் குழுக்கள், புதிய தொழில்கள் போன்ற தொழில் முறை கட்டமைப்புகளின் வளர்ச்சியை திரு மோடி வலியுறுத்தினார். இந்தத் துறையில் அண்மைக் காலத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான புதிய தொழில்கள் காணப்படுவதாக அவர் கூறினார்.  கோபர்தன் திட்டத்தின் முன்னேற்றம் குறித்தும் பேசிய அவர், பசுவின் சாணத்திலிருந்து பால் பண்ணைகள் தங்களுக்கான மின்சாரத்தை உற்பத்தி செய்யும் சூழ்நிலையை எட்டுவது இதன் நோக்கம் என்றார். இதிலிருந்து கிடைக்கும் உரம் விவசாயிகளுக்கும் உதவும்.

வேளாண் தொழிலுக்கு ஒப்பானது பற்றி கருத்து தெரிவித்த பிரதமர், கால்நடை பராமரிப்புக்கும், வேளாண்மைக்கும் பன்முகத் தன்மை தேவைப்படுகிறது என்றும், ஒரே மாதிரியான நடைமுறை தீர்வாக இருக்கமுடியாது என்றும் கூறினார். இந்தியா இன்று உள்நாட்டு இனங்கள் மற்றும் வீரிய இனங்கள் என இரண்டிலும் சமமான கவனத்தை செலுத்துவதாக பிரதமர் கூறினார். பருவ நிலை மாற்றத்தால் ஏற்படும் சேதங்களை இது குறைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

விவசாயிகளின் வருவாயை பாதிப்பதில் மற்றொரு பெரும் பிரச்சனையான கால்நடை நோய்கள் பற்றியும் பிரதமர் எடுத்துரைத்தார். “கால்நடை நோயால் பாதிக்கப்படும் போது அது விவசாயியின் வாழ்க்கையை, அவரது வருவாயை பாதிக்கிறது. இது கால்நடையின் திறனை பாதிப்பதோடு, பாலின் தரம் மற்றும் தொடர்புடைய பொருட்களையும் பாதிக்கிறது” என்று அவர் மேலும் கூறினார்.  இந்த திசையில் அனைத்து கால்நடைகளுக்கும் தடுப்பூசி செலுத்துதலை நோக்கி இந்தியா செயல்பட்டு வருகிறது என்று பிரதமர் கூறினார்.  “2025-க்குள்  100 சதவீத கால்நடைகளுக்கு கோமாரி மற்றும் புருசெலோசீஸ் தடுப்பூசி செலுத்த நாங்கள் தீர்மானித்துள்ளோம். இந்த தசாப்தத்தின் இறுதி வாக்கில் இந்த நோய்களிலிருந்து முழுமையாக விடுதலை பெற நாங்கள் இலக்கு நிர்ணயித்துள்ளோம்” என்று பிரதமர் குறிப்பிட்டார்.

அண்மைக் காலத்தில் லும்பி எனப்படும் நோய் காரணமாக இந்தியாவின் பல மாநிலங்களில் கால்நடைகளின் இழப்பு ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது என்ற பிரதமர், பல்வேறு மாநில அரசுகளுடன் இணைந்து இதனை தடுக்க, தம்மால் இயன்ற அளவுக்கு முயற்சிகள் செய்ய அனைவருக்கும் மத்திய அரசு உறுதியளிக்கிறது என்றார். “நமது விஞ்ஞானிகள் லும்பி எனும் தோல் கட்டி நோய்க்கும் உள்நாட்டிலேயே தடுப்பூசி தயாரித்துள்ளனர்” என்று பிரதமர் மேலும் கூறினார். நோய் பரவலை கட்டுப்படுத்த கால்நடைகளின் நடமாட்டத்தை கண்டறிவதற்கான, நடைமுறையை உருவாக்கும் முயற்சிகளும் செய்யப்படுவதை பிரதமர் சுட்டிக்காட்டினார். கால்நடைகளுக்கு தடுப்பூசி என்றாலும், இதர, நவீன தொழில்நுட்பம் என்றாலும், பால்வளத்துறைக்கு பங்களிப்பு செய்ய இந்தியா எப்போது ஆர்வத்துடன் உள்ளதாக பிரதமர் கூறினார். மேலும் அதன் நட்பு நாடுகளிடமிருந்து கற்றுக்கொள்ளவும் இந்தியா முனைகிறது என்றார். “இந்தியா தனது உணவு பாதுகாப்பு நிலைகளில் வேகமாக செயல்படுவதாக” திரு மோடி கூறினார்.

கால்நடை பராமரிப்புத் துறையில் செயல்பாடுகளை முழுமையாக கண்டறியும் டிஜிட்டல் முறையை உருவாக்க இந்தியா பணியாற்றி வருகிறது என்பதை பிரதமர் வலியுறுத்தினார்.  இது இந்த துறையை மேம்படுத்த தேவைப்படும்   துல்லியமான தகவலை வழங்கும். இதுபோன்ற பல தொழில்நுட்பங்கள் சம்பந்தமாக உலகம் முழுவதும் மேற்கொள்ளப்படும்  பணி குறித்து இந்த உச்சிமாநாடு முன்வைக்கும்.  இந்த துறை சார்ந்த நிபுணத்துவத்தை பகிர்ந்து கொள்வதற்கான, வழிவகைகளை அனைவரும் கூறவேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். “இந்திய பால்வளத்துறைக்கு அதிகாரமளிக்கும் இயக்கத்தில் இணையுமாறு, பால்வள தொழில் துறையின்  உலகளாவிய தலைவர்களுக்கு நான் அழைப்பு விடுக்கிறேன். சர்வதேச பால்வள கூட்டமைப்பின் மிகச்சிறந்த பணி மற்றும் பங்களிப்பை நான் பாராட்டுகிறேன்” என்று கூறி பிரதமர் உரையை நிறைவு செய்தார்.

உத்தரப்பிரதேச  முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன், மத்திய வேளாண் மற்றும் உணவு பதனத் துறை இணையமைச்சர் திரு சஞ்சீவ் குமார் பல்யான், நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு சுரேந்திர சிங் நாகர், டாக்டர் மகேஷ் சர்மா, சர்வதேச பால்வள கூட்டமைப்பு தலைவர் திரு பி பிரஸ்ஸாலே, சர்வதேச பால்வள கூட்டமைப்பு தலைமை இயக்குனர் திருமதி கரோலின் எமோண்ட் உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். 75 லட்சம் விவசாயிகள் தொழில்நுட்பம் மூலம் இந்த நிகழ்வில் இணைப்பைப் பெற்றிருந்தனர்.

பின்புலம்

‘ஊட்டச்சத்து மற்றும் வாழ்வாதாரத்திற்கு பால்வளம்’ என்ற மையப்பொருளில் தொழில் துறை தலைவர்கள், நிபுணர்கள், விவசாயிகள், கொள்கை வகுப்போர் உட்பட உலகளாவிய மற்றும் இந்திய பால்வளத்துறை சம்பந்தப்பட்டவர்கள் ஒருங்கிணைந்ததாக செப்டம்பர் -12 முதல் 15 வரை சர்வதேச பால்வள கூட்டமைப்பின்  நான்கு நாள் உலக பால்வள உச்சிமாநாடு 2022 நடைபெறுகிறது. இதில் 50 நாடுகளைச் சேர்ந்த சுமார் 1500 பிரதிநிதிகள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகையை உச்சிமாநாடு, அரை நூற்றாண்டுக்கு முன்னதாக, 1974-ல் இந்தியாவில் நடைபெற்றது.

இந்திய பால்வளத் தொழில் துறை தனித்துவமானது. ஏனெனில், இது சிறு மற்றும் நடுத்தர பால்பண்ணை விவசாயிகளுக்கு குறிப்பாக, பெண்களுக்கு அதிகாரமளிக்கும் கூட்டுறவை அடிப்படையாக கொண்டது. பிரதமரின் தொலை நோக்கு பார்வையால் இயக்கப்பட்டு பால்வளத்துறையை மேம்படுத்துவதற்காக, அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக, கடந்த எட்டு ஆண்டுகளில் பால்உற்பத்தி 44 சதவீதத்திற்கு மேல் அதிகரித்துள்ளது. உலகளாவிய பால் உற்பத்தியில் 23 சதவீதம் என்ற கணக்குடன், இந்திய பால்வளத் தொழில் துறையின் வெற்றிக்கதை ஆண்டுக்கு 210 மில்லியன் டன் உற்பத்தி என்பதாக உள்ளது. இந்தியாவில் எட்டு கோடிக்கும் அதிகமான விவசாயிகளுக்கு அதிகாரமளிக்கிறது என்பது இந்த உச்சிமாநாட்டில் தெரிவிக்கப்படும். உலகளாவிய சிறந்த நடைமுறைகளை இந்திய பால் பண்ணை விவசாயிகள் அறிந்துகொள்ளவும், இந்த உச்சிமாநாடு உதவும்.

******