கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு உதவும் வகையில் கோமாரி நோய் மற்றும் புருசெல்லா நோயைக் கட்டுப்படுத்தும் புதிய திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
31 May, 2019
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று (31.05.2019) நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன் மூலம் கோடிக்கணக்கான விவசாயிகள் பயனடைவதோடு, கால்நடைகளின் சுகாதாரமும் மேம்பாடு அடையும்.
கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு உதவும் வகையில், கோமாரி நோய் மற்றும் புருசெல்லா நோயைக் கட்டுப்படுத்துவதற்கானது இந்த முன்முயற்சி. அடுத்த ஐந்தாண்டுகளில் நாட்டில் உள்ள கால்நடைகளுக்கு இத்தகைய நோய்கள் வராமல் முழுமையாக கட்டுப்படுத்தவும், அதைத் தொடர்ந்து இவற்றை முற்றிலுமாக ஒழிக்கவும் மத்திய அமைச்சரவை ரூ.13,343 கோடி நிதி ஒதுக்க ஒப்புதல் அளித்தது.
நமது புவிக்கோளின் மதிப்புமிக்க பகுதியாகவும், ஆனால் வாய்பேச முடியாமலும் உள்ள கால்நடைகள் மீதான கருணை உணர்வைக் காட்டுவதாக இந்த முடிவு அமைந்துள்ளது.
இதுவரை இந்தத் திட்டத்திற்கான செலவை மத்திய – மாநில அரசுகள் பகிர்ந்து கொண்டன. தற்போது, இந்த நோய்கள் முற்றாக ஒழிக்கப்படுவதையும் கால்நடைகளை வளர்க்கும் விவசாயிகள் அனைவருக்கும் சிறந்த வாழ்க்கை வாய்ப்புகளை அளிப்பதையும் உறுதி செய்யும் நோக்குடன் இந்தத் திட்டத்திற்கான ஒட்டுமொத்த செலவையும் மத்திய அரசே ஏற்பது என முடிவு செய்துள்ளது.