Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

கார் நிகோபாரில் பிரதமர்:

கார் நிகோபாரில் பிரதமர்:

கார் நிகோபாரில் பிரதமர்:

கார் நிகோபாரில் பிரதமர்:


பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று (30.12-2018) கார் நிக்கோபாரில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.

சுனாமி நினைவுச்சின்னத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய அவர், உயிரிழந்தோரின் நினைவாக மெழுகுவர்த்தியையும் ஏற்றிவைத்தார்.

அந்தத் தீவில் உள்ள பழங்குடியினத் தலைவர்கள் மற்றும் தலைசிறந்த விளையாட்டு வீரர்-வீராங்கனைகளுடன் அவர் கலந்துரையாடினார்.

அங்கு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில், ஆராங் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தொழிற்பயிற்சி நிறுவனத்தையும், நவீன விளையாட்டு வளாகத்தையும் அவர் திறந்துவைத்தார்.

மூஸ் பகுதியில் உள்ள படகுத்துறையின் கடல் அரிப்புத் தடுப்பு பணிகளுக்கும், கேம்ப்பெல் பே படகுதுறை விரிவாக்கப் பணிகளுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், கார் நிக்கோபார் தீவின் இயற்கை எழில், கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் கலைநுட்பத்தை வெகுவாக புகழ்ந்துரைத்தார். இத்தீவில் உள்ள மக்கள், குடும்பம் மற்றும் கூட்டுப் பாரம்பரிய முறைகளை பின்பற்றி வருவதை சுட்டிக்காட்டிய அவர், இதுதான் பன்னெடுங்காலமாக இந்திய சமூகத்தின் மாபெரும் வலிமையாகத் திகழ்கிறது என்றார்.

இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பாக, சுனாமி நினைவுச் சின்னம் மற்றும் உயிரிழந்தோர் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுச் சின்னத்தை பார்வையிட்டதையும் பிரதமர் சுட்டிக்காட்டினார். சுனாமியால் உருக்குலைந்த நிக்கோபார் தீவை புனரமைப்பதில், இந்தத் தீவு மக்கள் காட்டிய அக்கறை மற்றும் கடின உழைப்பையும் அவர் வெகுவாகப் பாராட்டினார்.

கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, திறன்மேம்பாடு, போக்குவரத்து, எரிசக்தி, விளையாட்டு மற்றும் சுற்றுலாத் துறைகளை மேம்படுத்த, இன்று (30.12.2018) தொடங்கிவைக்கப்பட்ட திட்டங்கள் நீண்ட காலத்திற்கு பலன் அளிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

வளர்ச்சியை நோக்கிய பீடு நடையிலிருந்து, நாட்டின் எந்தப் பகுதியோ அல்லது எந்தவொரு நபரோ பின்தங்கியிருக்கக் கூடாது என்பதில் அரசு உறுதியுடன் உள்ளதாகவும் பிரதமர் திட்டவட்டமாகத் தெரிவித்தார். தொலைவுகளைக் குறைத்து, உள்ளங்களுக்கு அருகில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துவதே அரசின் நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கடல் அரிப்புத் தடுப்புச் சுவர் பணிகள் நிறைவடையும் போது, கார் நிக்கோபார் தீவை பாதுகாக்க உதவிகரமாக இருக்கும் என்றும் அவர் கூறினார். இங்கு அமைக்கப்படும் தொழிற்பயிற்சி நிறுவனம், இந்தத் தீவில் வசிக்கும் இளைஞர்களுக்கு அதிகாரமளித்து, அவர்களை திறன் பயிற்சி பெற்றவர்களாக மாற்ற உதவும் என்றும் தெரிவித்தார். நிக்கோபார் தீவில் உள்ள இளைய தலைமுறையினரின் விளையாட்டுத் திறமைகளை பாராட்டிய பிரதமர், இங்கு அமைக்கப்படும் நவீன விளையாட்டு வளாகம், அவர்களது திறமையை மேம்படுத்த உதவும் என்றும் தெரிவித்தார். எதிர்காலத்தில் விளையாட்டுக்கான மேலும் பல கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் வசிக்கும் மக்களின் வாழ்க்கையை எளிமையாக்குவதை மேம்படுத்த, மத்திய அரசு பாடுபட்டு வருவதாக பிரதமர் தெரிவித்தார். இந்தத் தீவுகளில் சுகாதார வசதிகளை விரிவுபடுத்த வேண்டியது அவசியம் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

சுற்றுச்சூழலையும், உள்ளூர் கலாச்சாரத்தையும் பாதுகாக்கும் அதே வேளையில், வளர்ச்சிப்பணிகளை மேற்கொள்வதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

வேளாண் துறை பற்றி குறிப்பிட்ட பிரதமர், கொப்பரை தேங்காய்க்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்த்தப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டினார். மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருவதாக அவர் கூறினார். நாட்டில் மீன்வளத்துறையை லாபகரமான தொழிலாக மாற்ற, ரூ. 7 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டத்திற்கு அண்மையில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். நாட்டிலுள்ள கடற்கரைகளை ஒட்டிய பகுதிகள், நீலப்புரட்சியின் ஒரு அங்கமாக மாற்றப்படும் என்றும் அவர் கூறினார். கடல்பாசி வளர்ப்பு ஊக்குவிக்கப்படுவதாகக் கூறிய அவர், மீனவர்கள் நவீன படகுகளை வாங்குவதற்கு நிதியுதவி அளிக்கப்படுவதாகவும் தெரிவித்தார். சூரிய ஒளி மின்சக்தியை அதிக அளவில் பயன்படுத்துவதற்கான ஒருங்கிணைந்த முயற்சிகளை இந்தியா மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார். இதன் ஒரு பகுதியாகவே சர்வதேச சூரிய சக்தி கூட்டமைப்பில் இந்தியா இணைந்திருப்பதாகவும், அவர் தெரிவித்தார். கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் புதுப்பிக்கத்தக்க மின்சார உற்பத்திக்கு பெரும் வாய்ப்புகள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். கார் நிக்கோபார் தீவுகளில், இதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நிக்கோபார் தீவின் ஒட்டுமொத்த பகுதியும் அதன் அருகில் உள்ள மலாகா ஜலசந்தியும், வளம் மற்றும் பாதுகாப்பு கண்ணோட்டத்திலும் முக்கியமான பகுதிகளாக திகழ்கின்றன என்று பிரதமர் குறிப்பிட்டார். இதை மனதிற்கொண்டு, தேவையான போக்குவரத்து கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். கேம்ப்பெல் பே மற்றும் மூஸ் படகுதுறைகளில் மேம்பாட்டுப் பணி நடைபெற்று வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

தீவுகளின் வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள தமது அரசு உறுதிபூண்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

***

எம்எம் / உமா