Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

காட்மண்டு ராஷ்டிரீய சபா கிரிகாவில் அளிக்கப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் உரை

காட்மண்டு ராஷ்டிரீய சபா கிரிகாவில் அளிக்கப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் உரை

காட்மண்டு ராஷ்டிரீய சபா கிரிகாவில் அளிக்கப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் உரை


ஷக்யாஜி, நீங்களும், உங்கள் சகாக்களும், காட்மாண்டு மாநகராட்சியும் எனக்காக இந்த வரவேற்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளீர்கள். உங்களது இந்த அன்புக்கு நான் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இதை எனக்கு அளிக்கப்பட்ட மரியாதையாக நான் கருதவில்லை. இது இந்தியா முழுமைக்கும் கிடைத்துள்ள மரியாதையாகும். நான் மட்டுமல்லாமல் 125 கோடி இந்தியர்களும் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டவர்களாவார்கள். காட்மாண்டுவுடனும், நேபாளத்துடனும் ஒவ்வொரு இந்தியருக்கும் நட்புறவும், நேசமும் உள்ளன. அந்த வகையில் இத்தகைய வரவேற்பை பெற்ற நான் பாக்கியசாலி.

நான் அரசியலில் இல்லாமல் இருந்த போதும், எப்போதெல்லாம் நேபாளத்திற்கு வந்தேனோ அப்போதெல்லாம் எனக்கு அமைதியும், வாஞ்சையும் கிடைத்த உணர்வை பெற்றிருக்கிறேன். நீங்களும் உங்களது மக்களும் எங்கள் மீது காட்டும் அன்பும், மரியாதையும், வரவேற்புமே இதற்கு காரணமாகும்

நேற்று நான் ஜனக்பூரில் இருந்தேன். அது இந்த நவீன உலகத்திற்கு மிக முக்கியமான செய்தியை தந்தது. ஜனக மன்னரின் தனித்துவம் என்ன? அவர் ஆயுதங்களை அழித்து அனைவரையும் அன்பாலும், பாசத்தாலும் ஒன்று சேர்த்தார். இந்த நிலமும் ஆயுதங்களை அழிக்க அன்பாலும், பாசத்தாலும் மிளிர்கிறது

நண்பர்களே, நான் காட்மாண்டுவை பற்றி எண்ணும் போதெல்லாம் எனக்கு ஒரு நகரத்தைப் பற்றிய கற்பனை தோன்றாது. அந்தக் கற்பனை வெறும் புவியியல் சமவெளி பற்றியது அல்ல. காட்மாண்டு எங்களது அண்டை நாடும், பிரிக்க முடியாத நட்பு நாடுமான நேபாளத்தின் தலைநகரம் மட்டுமல்ல, இது எவரெஸ்ட் சிகரம், லிலிகுராஜ் நாட்டின் தலைநகர் மட்டுமல்ல இது புத்த பகவான் அவதரித்த நாட்டின் தலைநகரம் மட்டுமல்ல. காட்மாண்டு ஓர் உலகம். அந்த உலகத்தின் வரலாறு, மிகப் பழமையான, கம்பீரமான இமயமலையைப் போன்றதாகும்.

காட்மாண்டு என்னை எப்போதும் கவரக் கூடிய நகரமாக உள்ளது. மிக வேகமாக வளரும் நகரமாகும். இமயமலையில் உள்ள ஒரு விலை மதிக்க முடியாத ஆபரணத்தைப் போன்றது காட்மாண்டு. காட்மாண்டு வெறும் மரத்தால் அமைக்கப்பட்ட விதானமல்ல. அது நமது கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைக் கொண்ட மிகப் புனிதமான நகரமாகும். இந்த நகரத்தின் பன்முகத் தன்மை, நேபாளத்தின் மிகச் சிறந்த பாரம்பரியத்தையும். பரந்த மனப்பான்மையையும் காட்டுவதாக உள்ளது. நாகார்ஜூனா வனம் சிவ்புரியின் குன்றுகள், அமைதியாக கொட்டும் அருவிகள், மட்டும் நீரோடைகள், பாகமதியின் தோற்றம், ஆயிரக்கணக்கான கோயில்களைக் கொண்ட நகரம் மஞ்சுஸ்ரீ குகைகள், பௌத்த மடங்கள் ஆகியவை உலகிலேயே ஒரு தனித்துவத்தைக் கொண்டதாக அமைந்துள்ளது.

இங்கே உள்ள கட்டடங்களின் உச்சியிலிருந்து பார்த்தால் ஒரு பக்கம் தவளகிரி, அன்னப்பூர்ணா ஆகியவை தெரியும். மறுபுறம் சாகர்மாதாவை பார்க்கலாம். இவற்றை எவரெஸ்ட், கஞ்சன்ஜங்கா என்று உலகம் கூறுகிறது. வேறெங்கும் இத்தகைய காட்சியை பார்க்க இயலாது. இப்படியொரு காட்சியை காண வேண்டுமானால் அதை காட்மாண்டுவில் மட்டும்தான் பார்க்க முடியும்.

பசந்த்பூரின் முறைகள், பட்டானின் புகழ், பரத்பூரின் பிரம்மாண்டம், கீர்த்திப்பூரின் கலை. லலித்பூரின் நேர்த்தி என இவை அனைத்தையும் வானவில்லின் வண்ணங்களைப் போல காட்மாண்டு தன்னகத்தே கொண்டுள்ளது. சந்தனத்துடன் நறுமணம் கலந்தது போல காட்மாண்டுவின் காற்றில் பல்வேறு பாரம்பரியங்கள் கலந்துள்ளன. பசுபதிநாதர் ஆலயத்தில் பக்தர்கள் திரண்டு செய்யும் பிரார்த்தனை, அவர்கள் முழங்கும் வேத கோஷங்கள் ஒவ்வொரு இடத்திலும் பிரதிபலிப்பதைப் போல புத்த பகவானின் பக்தர்கள் செய்யும் வழிபாடுகளையும் காணலாம். இவை அனைத்தும் இசையின் ஸ்வரங்களைப் போல ஒன்றொடொன்று பின்னிப் பிணைந்தவையாகும்.

இங்குள்ள நெவரி சமுதாயத்தினரின் திருவிழாக்கள் பௌத்தம் மற்றும் இந்துமத நம்பிக்கைகள் மற்றும் நடைமுறைகளின் சங்கமமாக திகழ்வது வேறெங்கும் காண முடியாததாகும். பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் உருவாக்கியுள்ள காட்மாண்டுவில் கலைஞர்கள் மற்றும் கலைவினைஞர்கள் ஈடு இணையற்றவர்களாவார்கள். கையால் செய்யப்படும் காகிதம், தாராபுத்தர் சிலைகள், பாரத்பூரின் களிமண்ணால் செய்யப்படும் பாத்திரங்கள், பட்டானின் கல், மரம், உலோகத்தால் செய்யப்பட்ட பொருட்கள் என காட்மாண்டு அனைத்தின் கலவையாக உள்ளது. இது நேபாளத்தின் கலை மற்றும் கைத்திறனின் தனித்துவமாகும். நேபாளத்தின் புதிய தலைமுறையினர் இந்தப் பாரம்பரியத்தை வழுவாமல் பின்பற்றி வருவதை அறிந்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் இது இளைஞர்களுக்கு ஏற்ற வகையில் மாற்றப்பட்டு புதியவையாக பரிணமிக்கின்றன.

நண்பர்களே. நேபாளத்திற்கு நான் மேற்கொண்ட இரண்டு பயணங்களின் போதும் பசுபதிநாதர் ஆலயத்திற்கு செல்லும் பாக்கியத்தைப் பெற்றேன். இந்தப் பயணத்தின் போது பசுபதிநாத்துடன் ஜனக்பூர், முக்திநாத் ஆகிய இடங்களில் உள்ள 3புனித தலங்களுக்கு செல்லும் அதிர்ஷ்டம் எனக்கு கிட்டியது. இந்த 3 புண்ணியத் தலங்களும் முக்கியமான ஆன்மீக மையங்கள் மட்டுமல்லாமல் அவை எவரெஸ்ட் சிகரத்தைப் போல, இந்தியா மற்றும் நேபாளத்தின் அசைக்க முடியாத, உடைக்க முடியாத உறவு போன்றவையாகும். வருங்காலத்தில் நேபாளத்திற்கு வரும் வாய்ப்பை நான் பெற்றால் புத்த பகவானின் அவதார தலமான லும்பினிக்கு நிச்சயம் செல்வேன்.

நண்பர்களே, அமைதி இயற்கையுடன் சமன்பாடான நிலை, இரு நாடுகளின் மதிப்புமிகு அமைப்புகள் ஆகியவை ஆன்மீக மாண்புகளால் நிறைந்தவையாகும். இந்த மரபுகள் அனைத்து மனித குலத்திற்கும், ஒட்டு மொத்த உலகத்திற்கும் உதாரணமாக திகழ்கின்றன. இதனால் உலகம் முழுவதிலுமிருந்தும் மக்கள் அமைதியைத் தேடி இந்த இரு நாடுகளுக்கும் வருவதில் வியப்பு ஏதுமில்லை.

சிலர் வாரணாசிக்கு செல்கிறார்கள், வேறு சிலர் புத்த கயாவுக்கு செல்வார்கள். சிலர் இமயமலைக்குச் சென்று தங்குவார்கள். வேறு ஒரு பகுதியினர் புத்த மடாலயங்களி்ல் தங்கி ஆன்மீகத்தை நோக்கி தவம் இருப்பார்கள். ஆனால் அவர்களது தாகம் அனைத்தும் ஒன்றே. இந்தியா மற்றும் நேபாளத்தின் மாண்புகள் நவீன வாழ்க்கை முறையால் சோர்வடைந்து மக்களுக்கு தீர்வு அளிக்கக் கூடியவையாகும்.

நண்பர்களே, பசுபதிநாதர் காட்மாண்டுவில் பாகமதி ஆற்றின் கரையில் வீற்றிருக்கிறார். காசி விஸ்வநாதரோ கங்கை நதிக்கரையில் அமர்ந்திருக்கிறார். புத்தரின் பிறந்த இடம் லும்பினி, அவர் ஞானம் பெற்றதோ புத்த கயாவில். சாரநாத் போதனைகள் பிறந்த இடம்.

நண்பர்களே, நாம் அனைவரும் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான பொதுவான செழுமையான பாரம்பரியத்தைக் கொண்டவர்கள். நாம் பகிர்ந்துக் கொண்டுள்ள பாரம்பரியம் இரு நாடுகளி்ன் இளைஞர்களுக்கு சொத்தாக அமைந்துள்ளது. இது கடந்த காலத்தின் வேர்களாகவும், நிகழ்காலத்தின் விதைகளாகவும், எதிர்காலத்தின் தளிர்களாகவும் இருக்கும்.

நண்பர்களே, உலகம் முழுவதும் பல்வேறு விதமான மாற்றங்களைக் கொண்ட யுகத்தை கடந்து வருகிறது. உலகத்தின் சூழல் பல்வேறு ஏற்ற இறக்கங்களையும். நிலையற்றத் தன்மையையும் கொண்டிருக்கிறது.

நண்பர்களே, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உலகம் முழுவதும் ஒரே குடும்பம் என்ற தத்துவத்தில் இந்தியா நம்பிக்கைக் கொண்டுள்ளது. நமது வெளிநாட்டு ஒத்துழைப்புக் கொள்கையில், அனைவருடனும் சேர்ந்து, அனைவருக்குமான மேம்பாடு என்ற தத்துவத்தை முன்னெடுத்துச் செல்கிறோம். அனைவரும் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் ஒருவருக்கொருவர் நலம் நாடுபவர்களாகவும் இருந்தால் யாரும் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று இந்தியாவில் ஒரு பிரார்த்தனை உள்ளது. இந்தக் கனவை இந்தியாவின் ஆன்மீகவாதிகள் கண்டு வருகின்றனர். இந்த இலக்கை அடைய அனைவரையும் நம்முடன் இணைத்துச் செல்லும் வெளியுறவுக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டிருக்கிறோம். இதன் மூலம் நமது அனுபவங்கள் மற்றும் வாய்ப்புகளை அண்டை நாடுகளுடன் பகிர்ந்துக் கொள்ள விழைகிறோம். நமது கலாச்சாரத்தில் உள்ள பக்கத்தில் உள்ளவர்களுக்கு முதலில் என்ற பண்பை, வெறும் வெளியுறவுக் கொள்கையாக மட்டுமல்லாமல் வாழ்க்கை முறையாகவும் வைத்திருக்கிறோம். இதற்கு பல உதாரணங்கள் உள்ளன. வளர்ந்து வரும் நாடாக உள்ள இந்தியா 50 ஆண்டுகளுக்கும் மேலாக 160-க்கும் மேற்பட்ட நாடுகளுடன் தகுதி கட்டமைப்பின் மூலம் தொழில்நுட்ப பொருளாதார ஒத்துழைப்பை அளித்து வருகிறது. இந்த நாடுகளின் தேவைக்கேற்ப நமது ஒத்துழைப்பை நாம் வழங்கி வருகிறோம்.

கடந்த ஆண்டு தெற்காசியாவின் செயற்கைக்கோளை இந்தியா விண்ணில் செலுத்தியது. இதன் பயனாக நமது அண்டை நாடுகள் அதன் சேவையை நமது விண்வெளித் திறமையின் மூலம் நன்கொடையாக பெற்று வருகின்றன. சார்க் உச்சி மாநாட்டிற்காக இதே தளத்திற்கு நான் வந்தபோது இதை அப்போதே அறிவித்தேன். அதே சமயம் எந்தவொரு நாடும் தனியாகக் கையாள முடியாத நவீன உலகத்தின் முக்கிய சவால்களை சர்வதேச ஒத்துழைப்பு மூலம் எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்து நாம் கவனம் செலுத்தலாம். எடுத்துக்காட்டாக 2016 ஆம் ஆண்டு இந்தியாவும். பிரான்சும் சேர்ந்து புதிய பருவ நிலை மாற்றம் தொடர்பான சர்வதேச உடன்படிக்கை ஒன்றை உருவாக்கின. இந்தப் புரட்சிகரமான நடவடிக்கை தற்போது வெற்றிகரமான சோதனையாக மாற்றப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு மார்ச் மாதம் பிரான்ஸ் அதிபர் மேக்ரோன் மற்றும் சுமார் 50 நாடுகளின் தலைவர்கள் தில்லியில் நடைபெற்ற சர்வதேச சூரிய சக்தி கூட்டணியின் முதலாவது உச்சி மாநாட்டில் கலந்துக் கொண்டனர். பருவ நிலை மாற்றம் தொடர்பான சவால்களை எதிர்க் கொள்ள தொழில்நுட்ப மற்றும் பொருளாதார கூட்டாண்மைக்கு இத்தகைய முயற்சிகள் பெரிதும் உதவும். சிறிய வளரும் நாடுகளின் தேவைகளை நிறைவு செய்ய இது பெரிதும் உதவும் என்று நான் நம்பிக்கையுடன் உள்ளேன்.

நண்பர்களே, இந்தியர்கள் நேபாளை பார்க்கும் போது, அந்த நாட்டின் மக்கள் மற்றும் அங்குள்ள சூழலைக் கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள். நேபாளத்தில் நிலவும் சூழல், நம்பிக்கையையும். பிரகாசமான எதிர்காலத்தையும் அடிப்படையாக கொண்டதுடன், ஜனநாயகத்தை வலுப்படுத்தும், முன்னேறும் நேபாளம், மகிழ்ச்சியான நேபாளம் என்ற தொலைநோக்கை கொண்டதாகும். இந்தச் சூழலை உருவாக்க நீங்கள் அனைவரும் பெரிய அளவில் பங்களித்துள்ளீர்கள்.

2015-ம் ஆண்டு நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பெரும் சோகத்திற்கு பின்னர் நேபாள மக்கள் குறிப்பாக காட்மாண்டுவைச் சேர்ந்தவர்கள் காட்டிய பொறுமை, அசைக்க முடியாத துணிச்சல் ஆகியவை உலகம் முழுவதற்கும் எடுத்துக்காட்டாக திகழ்கிறது. உங்கள் சமுதாயத்தினரின் உறுதியான ஈடுபாடு மற்றும் கடின உழைப்புக்கு இதுவொரு சாட்சியாகும். இயற்கை பேரிடரை கையாண்ட அதே சமயம் நேபாளத்தில் குறுகிய காலத்தில் இதை பிரதிபலிக்கும் புதிய முறை உருவானது. நிலநடுக்கத்திற்கு பின்னர் கட்டிடங்கள் மட்டுமல்லாமல் சமுதாயமும், நாடும் முழுமையாக மறுகட்டுமானம் செய்யப்பட்டது. இன்று நேபாளத்தில் கூட்டாட்சி, பிராந்தியம் உள்ளூர் ஆகிய 3 நிலைகளிலும் ஜனநாயக அரசுகள் உள்ளன. ஓராண்டுக்குள் இந்த 3 நிலைகளுக்கும் தேர்தல்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்டன. இந்த ஆற்றல் உங்களிடமிருந்து வெளியாகி இருக்கிறது. எனவே நான் உங்கள் அனைவரையும் உண்மையாகவே பாராட்டுகிறேன்.

நண்பர்களே, போரில் இருந்து புத்த பகவானை நோக்கி நேபாளம் பயணித்து நீண்டத் தொலைவு வந்து விட்டது. ஒரு காலத்தில் துப்பாக்கிக் குண்டுகள் ஆதிக்கம் செலுத்தி வந்தன. ஆனால் நேபாளம் அவற்றை கைவிட்டு வாக்குச்சீட்டை தேர்வு செய்தது. இதுதான் போரில் இருந்து புத்தரை நோக்கிய பயணமாகும். இருப்பினும் சென்று சேர வேண்டிய இடம் இன்னும் தொலைவில் உள்ளது. நீங்கள் இன்னும் நீண்ட தொலைவு செல்ல வேண்டியிருக்கிறது. ஒரு வகையில் தற்போது நாம் எவரெஸ்ட் சிகரத்தில் அடிப்படை முகாமை அடைந்திருக்கிறோம். ஆனால் நாம் இன்னும் சிகரத்தின் உச்சிக்கு செல்ல வேண்டியது அவசியமாகும். நேபாளத்தின் இந்த வளர்ச்சிப் பயணத்தில் உதவ இந்தியா தயாராக உள்ளது.

இந்தச் செய்தியை நான் மாறுபட்ட சொற்கள் மூலம் வெளிப்படுத்தினேன். நேபாள பயணத்தின் போது நேற்றும் இன்றும் எனக்கு ஏற்பட்ட உணர்வை நான் தெரிவித்துள்ளேன். கடந்த மாதம் நேபாளப் பிரதமர் இந்தியாவுக்கு வந்த போதும் இதைக் கூறினேன். நேபாளம் தனது தேவைகள் மற்றும் முன்னுரிமைகளுக்கு ஏற்ற வகையில் பீடுநடை போடுவதில் எனக்குள்ள கடமைப்பாட்டுடன் இதை நான் தெரிவிக்கிறேன். நேபாளத்தின் வெற்றிக்கு இந்தியா எப்போதும் தோளோடு தோள் சேர்ந்து நடக்கும். உங்களுடைய வெற்றியில்தான் இந்தியாவி்ன் வெற்றி அடங்கியுள்ளது. நேபாளத்தின் மகிழ்ச்சியில்தான் இந்தியாவின் மகிழ்ச்சியும் இடம் பெற்றுள்ளது.

ரயில் பாதைகளை நிர்மாணிப்பது, சாலைகளை அமைப்பது, நீர் மின் திட்டங்களை செயல்படுத்துவது, மின்சார விநியோக தடங்களை நிறுவுவது, ஒருங்கிணைந்த சோதனைச்சாவடிகள், குழாய் மூலம் எண்ணெய் கொண்டு செல்லுதல், இந்தியா மற்றும் நேபாள மக்களுக்கு இடையே கலாச்சார உறவுகளை மேலும் வலுப்படுத்துதல் என அனைத்துப் பணிகளிலும் நாங்கள் எப்போதும் உங்களுடன் இருப்போம். உங்களின் தேவைக்காக வருங்காலத்திலும் தொடர்ந்து பாடுபடுவோம்.

காட்மாண்டுவையும். இந்தியாவையும் ரயில்வே மூலம் இணைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை குறித்த பணியை நாங்கள் தொடங்கியுள்ளோம். தற்போது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் நடைபெற்று வருகின்றன. நேபாளமும் ஐபிஎல் போட்டிகளுடன் தொடர்பு கொண்டுள்ளது.

இந்தப் பயணத்தில் பல்வேறு முன்முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதை நீங்கள் அறிவீர்கள். முதன் முறையாக நேபாளத்தைச் சேர்ந்த சந்தீப் லமிசானே என்ற வீரர் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்றுள்ளதாக எனக்கு தெரிவிக்கப்பட்டது. வருங்காலத்தில் கிரிக்கெட் மூலம் மட்டுமல்லாமல் இதர விளையாட்டுக்களின் மூலமாகவும் இரு நாட்டு மக்களிடையே உறவு ஏற்படும் என நான் நம்புகிறேன்.

நண்பர்களே, இந்த சொற்களுடன், மீண்டும் காட்மாண்டு மேயர் திரு.சக்யாஜி, காட்மாண்டு நிர்வாகம், நேபாள அரசு. மதிப்புக்குரிய வெளியுறவு அமைச்சர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது இதயங்கனிந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களின் இதயங்களில் உள்ளது போன்ற அதே உணர்வுதான் என்னுடைய இதயத்திலும் உள்ளது. நேபாளத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரின் உள்ளங்களிலும் இந்தியர்கள் அனைவரின் உள்ளங்களிலும் இதே உணர்வு உள்ளது.

நேபாள – இந்தியா நட்புறவு நீண்ட காலம் வாழ்க

நேபாள – இந்தியா நட்புறவு நீண்ட காலம் வாழ்க

நேபாள – இந்தியா நட்புறவு நீண்ட காலம் வாழ்க

நன்றி