மத்திய அமைச்சர்கள் திரு. கஜேந்திர சிங் ஷெகாவத் அவர்களே, ராவ் இந்தர்ஜித் சிங் அவர்களே, எல். முருகன் அவர்களே, இந்த நிகழ்ச்சியின் முக்கியப் பிரமுகர், இலக்கிய அறிஞர் திரு. சீனி விஸ்வநாதன் அவர்களே, பதிப்பாளர் வி. சீனிவாசன் அவர்களே, வந்திருக்கும் மதிப்புமிக்க பிரமுகர்களே.
இன்று நாடு முழுவதும் மகாகவி சுப்பிரமணிய பாரதியின் பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. சுப்பிரமணிய பாரதி அவர்களுக்கு என் மரியாதைக்குரிய அஞ்சலிகளைக் காணிக்கையாக்குகிறேன். இது இந்திய கலாச்சாரம் மற்றும் இலக்கியத்திற்கும், பாரதத்தின் சுதந்திரப் போராட்ட நினைவுகளுக்கும், தமிழ்நாட்டின் பெருமைக்கும் ஒரு குறிப்பிடத்தக்க தருணமாகும். மகாகவி சுப்பிரமணிய பாரதியின் படைப்புகள் வெளியிடப்படுவது ஒரு மகத்தான சேவை மற்றும் மகத்தான ஆன்மீக முயற்சியாகும். இது இன்று அதன் உச்சத்தை எட்டுகிறது. ‘காலவரிசையில் பாரதியார் படைப்புகள்‘ 21 தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டிருப்பது அறுபது ஆண்டுகால அயராத உழைப்பு மற்றும் குறிப்பிடத்தக்க துணிச்சலின் விளைவாக அசாதாரணமான, முன்னெப்போதும் இல்லாத சாதனையாகும். இந்த சாதனை திரு. சீனி விஸ்வநாதன் அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பின் விளைவாகும், இது எதிர்கால சந்ததியினருக்கு பெரிதும் பயனளிக்கும் என்று நான் நம்புகிறேன். “ஒரே வாழ்க்கை, ஒரே இலக்கு” என்ற சொற்றொடரை நாம் அடிக்கடி கேள்விப்படுகிறோம், ஆனால் திரு சீனி அவர்கள் இதன் அர்த்தத்தை உண்மையிலேயே எடுத்துக்காட்டியுள்ளார். இது உண்மையிலேயே ஆழமான அர்ப்பணிப்பு. தர்ம சாஸ்திரத்தின் வரலாற்றை எழுதுவதற்காக தனது வாழ்க்கையின் 35 ஆண்டுகளை அர்ப்பணித்த மஹாமஹோபாத்யாய பாண்டுரங் வாமன் கானே என்பதை அவரது அன்பின் உழைப்பு எனக்கு நினைவூட்டுகிறது. திரு. சீனி விஸ்வநாதன் அவர்களின் இந்தப் பணி, கல்வி வட்டாரங்களில் ஒரு அடையாளத்தை அமைக்கும் என்று நான் நம்புகிறேன். இந்த அசாதாரண சாதனைக்காக விஸ்வநாதன் அவர்களுக்கும், அவரது குழுவினருக்கும், உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே
கால வரிசையில் பாரதியார் படைப்புகளின் இந்த 23 தொகுதிகளும் பாரதியின் இலக்கியப் படைப்புகள் மட்டுமல்ல, அவற்றின் பின்னணி மற்றும் தத்துவ பகுப்பாய்வு பற்றிய நுண்ணறிவுகளையும் உள்ளடக்கியவை என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது. ஒவ்வொரு தொகுதியிலும் வர்ணனைகள், விளக்கங்கள் மற்றும் சிறுகுறிப்புகள் உள்ளன, அவை பாரதியின் எண்ணங்களை ஆழமாகப் புரிந்துகொள்வதற்கும் அந்த காலகட்டத்தின் சூழலைப் புரிந்துகொள்வதற்கும் பெரிதும் உதவும். இத்தொகுப்பு ஆராய்ச்சி அறிஞர்களுக்கும் புத்திசாலிகளுக்கும் ஒரு மதிப்புமிக்க வளமாகவும் அமையும்.
நண்பர்களே
இன்று கீதை ஜெயந்தியும் கூட! ஸ்ரீ சுப்பிரமணிய பாரதி அவர்கள் கீதையின் மீது ஆழ்ந்த நம்பிக்கையும், அதன் ஞானத்தின் மீது ஆழ்ந்த புரிதலும் கொண்டிருந்தார். கீதையைத் தமிழில் மொழிபெயர்த்து எளிமையாக விளக்கவுரை வழங்கினார். தற்செயலாக, இன்று நாம் கீதா ஜெயந்தி, சுப்பிரமணிய பாரதியின் பிறந்த நாள் மற்றும் அவரது படைப்புகளின் வெளியீடு – திரிவேணி சங்கமம் (சங்கமம்) ஆகியவற்றைக் கொண்டாடுகிறோம். இந்த நிகழ்ச்சி வாயிலாக, உங்கள் அனைவருக்கும், அனைத்து இந்தியர்களுக்கும் கீதா ஜெயந்தியை முன்னிட்டு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே
நமது கலாச்சாரத்தில் சொற்கள் வெறும் வெளிப்பாட்டு சாதனம் அல்ல. ‘சப்த பிரம்மா‘ (தெய்வீக வார்த்தை) பற்றி பேசும் மற்றும் அவர்களின் எல்லையற்ற சக்தியை ஒப்புக்கொள்ளும் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக நாம் இருக்கிறோம். ஆக, ஞானிகள் மற்றும் அறிஞர்களின் வார்த்தைகள் அவர்களின் எண்ணங்கள் மட்டுமல்ல; அவை அவர்களின் சிந்தனை, அனுபவம் மற்றும் பக்தியின் சாரம். இத்தகைய அசாதாரண ஆத்மாக்களின் ஞானத்தை எதிர்கால சந்ததியினருக்காக பாதுகாப்பது நமது கடமையாகும். அத்தகைய தொகுப்பின் முக்கியத்துவம் இன்று நம் மரபில் இருப்பது போலவே நவீன சூழலிலும் பொருத்தமானது. உதாரணமாக, வியாசர் எழுதியதாகக் கூறப்படும் பல படைப்புகள் புராணங்களில் முறையாக தொகுக்கப்பட்டதால் இன்றும் நமக்குக் கிடைக்கின்றன. அதேபோல், சுவாமி விவேகானந்தரின் முழுமையான படைப்புகள், டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர்: எழுத்துக்கள் மற்றும் உரைகள், மற்றும் தீன் தயாள் உபாத்யாய சம்பூர்ண வாங்க்மயா போன்ற நவீன தொகுப்புகள் சமூகத்திற்கும் கல்வித்துறைக்கும் விலைமதிப்பற்றவை என்பதை நிரூபித்துள்ளன. திருக்குறளை பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கும் முயற்சிகளும் நடந்து வருகின்றன. கடந்த வருடம் பப்புவா நியூ கினியாவில் திருக்குறளின் டோக் பிசின் மொழிபெயர்ப்பை வெளியிடும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது, அதற்கு முன்னரே திருக்குறளின் குஜராத்தி மொழிபெயர்ப்பை லோக் கல்யாண் மார்கில் வெளியிட்டிருந்தேன்.
நண்பர்களே
சுப்பிரமணிய பாரதி நாட்டின் தேவைகளுக்கு ஏற்ப செயல்பட்ட தொலைநோக்கு பார்வை கொண்டவர். அவரது நோக்கம் மிகவும் விரிவானது, அந்த சகாப்தத்தில் தேசத்திற்கு தேவையான ஒவ்வொரு திசையிலும் அவர் பணியாற்றினார். அவர் தமிழகத்தின், தமிழ் மொழியின் பெருமை மட்டுமல்ல; அவர் ஒரு சிந்தனையாளர், அவரது ஒவ்வொரு மூச்சும் பாரத அன்னைக்கு சேவை செய்ய அர்ப்பணிக்கப்பட்டது. பாரதியின் எழுச்சியும் மகிமையும் பாரதியின் கனவு. பாரதியின் பங்களிப்பை மக்களிடம் கொண்டு சேர்க்க எங்கள் அரசு தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 2020 ஆம் ஆண்டில் கோவிட் சவால்கள் இருந்தபோதிலும், பாரதி மறைந்த 100- வது ஆண்டு விழாவை நாம் பிரமாண்டமாக கொண்டாடினோம். சர்வதேச பாரதி விழாவில் நானே நேரில் கலந்து கொண்டேன். செங்கோட்டையில் இருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதாக இருந்தாலும் சரி, சர்வதேச சமூகத்துடன் உரையாற்றுவதாக இருந்தாலும் சரி, பாரதியின் சிந்தனைகள் வாயிலாக பாரதத்தின் தொலைநோக்கு பார்வையை நான் தொடர்ந்து முன்னிலைப்படுத்தி வந்துள்ளேன். திரு. சீனி அவர்கள் குறிப்பிட்டதைப் போல, நான் எங்கெல்லாம் சென்றேனோ அங்கெல்லாம் பாரதி அவர்களைப் பற்றி பேசினேன், சீனி அவர்கள் இதை பெருமையுடன் எடுத்துரைத்திருக்கிறார். எனக்கும் சுப்பிரமணிய பாரதி அவர்களுக்கும் இடையே உயிருள்ள, ஆன்மீகத் தொடர்பு உள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள், அதுதான் நமது காசி. காசியுடனான அவரது பிணைப்பு, அங்கு அவர் கழித்த நேரம், காசியின் பாரம்பரியத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக மாறிவிட்டது. ஞானத்தைத் தேடி காசிக்கு வந்து அதனுடன் ஐக்கியமானார். அவரது குடும்பத்தைச் சேர்ந்த பலர் இன்னும் காசியில் வசிக்கின்றனர், அவர்களுடன் தொடர்பு வைத்திருப்பது எனது பாக்கியம். காசியில் வசித்த போது பாரதியார் தனது பாரம்பரிய மீசையை வளர்க்க தூண்டப்பட்டதாக கூறப்படுகிறது. பாரதியார் காசியில் இருந்த காலத்தில் கங்கைக் கரையில் பல நூல்களை எழுதினார். அதனால்தான், காசி நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில், அவரது எழுத்துக்களைத் தொகுத்த இந்த புனிதமான பணியை நான் முழு மனதுடன் வரவேற்று, கொண்டாடுகிறேன். பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் மகாகவி பாரதியாரின் பங்களிப்புக்காக அர்ப்பணிக்கப்பட்ட இருக்கையை நிறுவியிருப்பது எங்கள் அரசின் சிறப்பாகும்.
நண்பர்களே
சுப்பிரமணிய பாரதி நூற்றாண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே தோன்றும் ஒரு ஆளுமை. அவரது சிந்தனையும், அறிவும், பன்முக ஆளுமையும் இன்றளவும் அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகின்றன. வெறும் 39 வருட வாழ்க்கையில், பாரதி நமக்கு நிறைய வழங்கினார். அறிஞர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் அதை விளக்க முயற்சிப்பார்கள். அவர் 39 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தாலும், அவரது பணி அறுபது ஆண்டுகளாக நீண்டது. அவரது குழந்தைப் பருவத்தில், விளையாடுவதற்கும் கற்றுக்கொள்வதற்கும் ஏற்ற வயதில், அவர் தேசியவாத உணர்வை ஏற்படுத்தினார். ஒருபுறம் ஆன்மீகத்தைத் தேடுபவராகவும், மறுபுறம் நவீனத்துவத்தின் ஆதரவாளராகவும் இருந்தார். அவரது படைப்புகள் இயற்கையின் மீதான அவரது அன்பையும், சிறந்த எதிர்காலத்திற்கான அவரது உத்வேகத்தையும் பிரதிபலிக்கின்றன. சுதந்திரப் போராட்டத்தின் போது, அவர் சுதந்திரத்தைக் கோரியது மட்டுமல்லாமல், சுதந்திரத்தின் அவசியத்தை உணர்த்துவதற்காக இந்திய மக்களின் இதயங்களை உலுக்கினார். இது மிகவும் முக்கியமான விஷயம்! நாட்டு மக்களிடம், நான் தமிழில் பேச முயற்சிக்கிறேன். ஏதேனும் உச்சரிப்புப் பிழைகள் இருந்தால் மன்னிக்கவும். ” என்று தணியும் இந்த சுதந்திர தாகம்? என்று மடியும் இந்த அடிமையின் மோகம்?” என்று மகாகவி பாரதியார் கூறியிருக்கிறார்.
அந்த நேரத்தில், மக்களில் ஒரு பகுதியினர் இன்னும் அடிமைத்தனத்தின் மீது பற்று கொண்டிருந்தனர், அதற்காக அவர்களைக் கண்டித்தார். “இந்த அடிமைத்தனப் பற்று எப்போது முடிவுக்கு வரும்?” சுய சிந்தனைக்கான துணிச்சலும், வெற்றி பெறுவதற்கான நம்பிக்கையும் கொண்ட ஒருவரிடமிருந்து மட்டுமே அத்தகைய அழைப்பு வர முடியும்! இதுதான் பாரதியாரின் தனிச்சிறப்பான பண்பு. அவர் வெளிப்படையாகப் பேசி சமூகத்திற்கு சரியான திசையைக் காட்டினார். இதழியல் துறையிலும் அவர் குறிப்பிடத்தக்க பணிகளைச் செய்தார். 1904 –ம் ஆண்டு சுதேசமித்திரன் நாளிதழில் சேர்ந்தார். பின்னர், 1906-ம் ஆண்டில், சிவப்பு காகிதத்தில் ‘இந்தியா‘ என்ற வாராந்திர செய்தித்தாளை வெளியிடத் தொடங்கினார். தமிழகத்தில் அரசியல் கேலிச்சித்திரங்களை அச்சிட்ட முதல் நாளிதழ் இதுதான். பாரதி அவர்கள் பலவீனமான மற்றும் விளிம்புநிலையில் உள்ளவர்களுக்கு உதவ சமுதாயத்தை ஊக்குவித்தார். ‘கண்ணன் பாட்டு‘ என்ற கவிதைத் தொகுப்பில் கிருஷ்ணரை 23 வடிவங்களில் கற்பனை செய்தார். தனது கவிதை ஒன்றில், ஏழைக் குடும்பங்களுக்கு ஆடைகளை நன்கொடையாகக் கேட்கிறார், வழங்க முடிந்தவர்களை அணுகுகிறார். உதவி செய்வதற்கான உத்வேகம் நிறைந்த அவரது கவிதைகள் இன்றும் நமக்கு உத்வேகம் அளிக்கின்றன.
நண்பர்களே
பாரதியார் ஒரு தொலைநோக்காளர், அவர் காலத்தைக் கடந்து தொலைநோக்குப் பார்வை கொண்டவர். எதிர்காலத்தைப் புரிந்து கொள்ளக் கூடியவர். சமூகம் பல்வேறு போராட்டங்களில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் கூட, இளைஞர் மற்றும் பெண்கள் முன்னேற்றத்திற்காக வலுவான ஆதரவாளராக பாரதியார் திகழ்ந்தார். பாரதியாருக்கு அறிவியல் மற்றும் கண்டுபிடிப்புகளில் அபார நம்பிக்கை இருந்தது. அவர் தனது காலத்தில் தொலைவுகளைக் குறைத்து முழு தேசத்தையும் ஒன்றிணைக்கும் ஒரு தகவல் தொடர்பு அமைப்பை உருவாக்கினார். இன்றைக்கு நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் தொழில்நுட்பம் அன்று பாரதியார் எதிர்பார்த்ததுதான். காசி நகர் புலவர் பேசும் உரைதான். காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்.
அதாவது காஞ்சியில் அமர்ந்து கொண்டு வாரணாசியில் உள்ள முனிவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைக் கேட்க ஒரு சாதனம் இருக்க வேண்டும்.” இந்தக் கனவுகளை டிஜிட்டல் இந்தியா எவ்வாறு நனவாக்குகிறது என்பதை இன்று நாம் கண்கூடாகக் காண்கிறோம். ‘பாஷினி‘ போன்ற செயலிகளும் மொழித் தடைகள் பலவற்றை நீக்கியுள்ளன. பாரதத்தின் ஒவ்வொரு மொழியின் மீதும் மரியாதை உணர்வு ஏற்படும்போது, ஒவ்வொரு மொழியின் மீது பெருமிதம் ஏற்படும்போது, ஒவ்வொரு மொழியையும் பாதுகாக்க வேண்டும் என்ற உண்மையான எண்ணம் இருக்கும்போது, ஒவ்வொரு மொழிக்கும் உண்மையான சேவை நடைபெறுகிறது.
நண்பர்களே
மகாகவி பாரதியின் இலக்கியங்கள் உலகின் பழமையான தமிழ் மொழிக்கு ஒரு பொக்கிஷம். நமது தமிழ் மொழி உலகின் மிகவும் தொன்மையான மொழி என்பதில் நாம் பெருமிதம் கொள்கிறோம். அவரது இலக்கியங்களைப் பரப்பும் போது நாமும் தமிழ்த் துறைக்குச் சேவை செய்கிறோம். நாம் தமிழனுக்கு சேவை செய்யும் போது, இந்த நாட்டின் தொன்மையான பாரம்பரியத்திற்கும் சேவை செய்கிறோம் என்று அர்த்தம்.
சகோதர சகோதரிகளே,
கடந்த 10 ஆண்டுகளில் தமிழ் மொழியின் மகிமைக்காக நாடு அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளது. தமிழின் பெருமையை ஐக்கிய நாடுகள் சபையில் உலகத்தின் முன் எடுத்துரைத்தேன். உலகம் முழுவதும் திருவள்ளுவர் பண்பாட்டு மையங்களை திறக்க உள்ளோம். ‘ஒரே பாரதம், உன்னத பாரதம்‘ என்ற உணர்வு சுப்பிரமணிய பாரதியின் சிந்தனைகளைப் பிரதிபலிக்கிறது. நாட்டின் பல்வேறு கலாச்சாரங்களை இணைக்கும் சித்தாந்தத்தை பாரதியார் எப்போதும் வலுப்படுத்தினார். தற்போது, காசி தமிழ்ச் சங்கமம், சௌராஷ்டிரா தமிழ்ச் சங்கமம் போன்ற நிகழ்ச்சிகள் அதே பணியைச் செய்கின்றன. இந்த முயற்சிகள் நாடு முழுவதும் தமிழைப் பற்றி அறியவும் கற்றுக்கொள்ளவும் மக்களின் ஆர்வத்தை அதிகரித்து வருகின்றன. தமிழகத்தின் கலாசாரமும் வளர்க்கப்பட்டு வருகிறது. நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் நாட்டின் ஒவ்வொரு மொழியையும் தங்கள் சொந்த மொழியாக ஏற்றுக்கொள்ள வேண்டும், ஒவ்வொரு மொழியிலும் பெருமை கொள்ள வேண்டும் என்பதே நமது தீர்மானம். தமிழ் போன்ற இந்திய மொழிகளை வளர்க்க இளைஞர்கள் தங்கள் தாய்மொழியில் உயர்கல்வி பெறும் வாய்ப்பை வழங்கியுள்ளோம்.
நண்பர்களே
பாரதிஜியின் இலக்கியத் தொகுப்பு தமிழ் மொழியைப் பரப்புவது தொடர்பான நமது முயற்சிகளை மேலும் ஊக்குவிக்கும் என்று நான் முழுமையாக நம்புகிறேன். நாம் ஒன்றிணைந்து, ‘வளர்ச்சியடைந்த பாரதம்’ என்ற இலக்கை அடைவோம், பாரதியாரின் கனவுகளை நிறைவேற்றுவோம். இந்தத் தொகுப்பு மற்றும் வெளியீட்டிற்காக உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டில் வாழ்ந்து, தில்லியின் குளிரையும் தாங்கிக்கொண்டு, வாழ்க்கையின் இந்தக் கட்டத்தில், அவர் ஒரு பெரும் அர்ப்பணிப்பு நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்திருக்க வேண்டும் என்பதை நான் கவனித்தேன். நானும் அவர் கையால் எழுதிய குறிப்புகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன் – அவ்வளவு அழகான கையெழுத்து! இந்த வயதில், கையெழுத்து போடும்போது கூட நாம் நடுங்குகிறோம், ஆனால், அவரது கையெழுத்து உண்மையிலேயே அவரது பக்தி மற்றும் தவத்தின் அடையாளம். ஆழ்ந்த பயபக்தியுடன் உங்களை வணங்குகிறேன். உங்கள் அனைவரையும் அன்பான வணக்கத்துடன் வாழ்த்துகிறேன், மிக்க நன்றி!
பொறுப்புத் துறப்பு: இது பிரதமரின் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பு. அசல் உரை இந்தியில் நிகழ்த்தப்பட்டது.
***
AD/IR/RJ/DL
Honoured to release a compendium of Mahakavi Subramania Bharati's works. His vision for a prosperous India and the empowerment of every individual continues to inspire generations. https://t.co/3MvdIVyaG0
— Narendra Modi (@narendramodi) December 11, 2024
हमारे देश में शब्दों को केवल अभिव्यक्ति ही नहीं माना गया है।
— PMO India (@PMOIndia) December 11, 2024
हम उस संस्कृति का हिस्सा हैं, जो ‘शब्द ब्रह्म’ की बात करती है, शब्द के असीम सामर्थ्य की बात करती है: PM @narendramodi pic.twitter.com/A8MBA5Zchn
Subramania Bharati Ji was a profound thinker dedicated to serving Maa Bharati. pic.twitter.com/T22Un1pSK1
— PMO India (@PMOIndia) December 11, 2024
Subramania Bharati Ji's thoughts and intellectual brilliance continue to inspire us even today. pic.twitter.com/uUmUufXRJu
— PMO India (@PMOIndia) December 11, 2024
The literary works of Mahakavi Bharati Ji are a treasure of the Tamil language. pic.twitter.com/CojAV8jlja
— PMO India (@PMOIndia) December 11, 2024