Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

கலிபோர்னியா சான் ஜோஸ் நகரில் 26 செப்டம்பர் 2015 அன்று நடந்த டிஜிட்டல் இந்தியா இரவு விருந்தில், பிரதமர் திரு மோடி அவர்கள் ஆற்றிய உரை.

கலிபோர்னியா சான் ஜோஸ் நகரில் 26 செப்டம்பர் 2015 அன்று நடந்த டிஜிட்டல் இந்தியா இரவு விருந்தில், பிரதமர் திரு மோடி அவர்கள் ஆற்றிய உரை.

கலிபோர்னியா சான் ஜோஸ் நகரில் 26 செப்டம்பர் 2015 அன்று நடந்த டிஜிட்டல் இந்தியா இரவு விருந்தில், பிரதமர் திரு மோடி அவர்கள் ஆற்றிய உரை.


சாந்தனு, ஜான், சத்யா, பால், சுந்தர் மற்றும் வெங்கடேஷ் ஆகியோருக்கு நன்றி. ஒரு பெரிய நன்றி.

இது முன்கூட்டியே முடிவு செய்யப்பட்டதல்ல. ஆனால் இந்த மேடையில், டிஜிட்டல் பொருளாதாரத்தில் இந்திய அமெரிக்க கூட்டணியை பார்க்கிறோம்.

அனைவருக்கும் மாலை வணக்கம்.

உலகை மாற்றி அமைப்பதற்கான கூட்டம் என்று ஏதாவது ஒரு கூட்டத்தை சொல்ல வேண்டும் என்றால் அது இதுதான். நான் இங்கேயோ, இந்தியாவிலோ உள்ள அரசாங்கங்களைப் பற்றி குறிப்பிடவில்லை. கலிபோர்னியா நகரில் வந்தடைந்தது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. சூரியன் மறைவினை கடைசியாக பார்க்கும் நகர் இதுதான். ஆனால் இதே இடத்தில்தான் புதிய யோசனைகளின் முதல் வெளிச்சத்தை பார்க்கின்றன.

உங்களோடு இந்தக் கூட்டத்தில் பங்கு பெறுவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன். உங்களில் பலரை டெல்லியிலும், நியுயார்க் நகரிலும், ஃபேஸ்புக், ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் சந்தித்திருக்கிறேன். இது உலகத்தின் அண்டை வீடுகளாகும். ஃபேஸ் புக் ஒரு நாடாக இருந்திருந்தால், உலகின் அதிக மக்கள் தொகையைக் கொண்ட மூன்றாவது நாடாக அது அமைந்திருக்கும். இன்று கூகுள், ஆசிரியர்களை ஆச்சர்யம் குறைந்தவர்களாகவும், முதியவர்களுக்கு வேலை இல்லாமலும் செய்துள்ளது. ட்விட்டர், அனைவரையும் பத்திரிக்கையாளர்களாக மாற்றியுள்ளது. சிறப்பாக செயல்பட வேண்டிய போக்குவரத்து விளக்குகள், சிஸ்கோவின் ரவுட்டர்களில் செயல்படுகின்றன.

தற்போது நீங்கள் தூங்குகிறீர்களா விழித்திருக்கிறீர்களா இல்லையா என்பது முக்கியமல்ல. ஆன்லைனில் இருக்கிறீர்களா, ஆப்லைனில் இருக்கிறீர்களா என்பதுதான் முக்கியம். தற்போது உள்ள இளைஞர்களிடையே பெரிதும் விவாதிக்கப்படும் பொருள், ஆன்ட்ராய்ட் சிறந்ததா, ஐஓஎஸ் சிறந்ததா அல்லது விண்டோஸ் சிறந்ததா என்பதே. தகவல்தொடர்பு முதல் கணக்கிடுவது வரை, பொழுதுபோக்கு முதல் கல்வி வரை, ஆவணங்களை அச்சிடுவது முதல் பொருட்களின் மீது அச்சிடுவது வரை, இணையத்தின் பயணம் குறுகிய காலத்தில் நீண்டதூரத்தை கடந்து வந்துள்ளது. மாசற்ற எரிசக்தி, நல்ல சுகாதாரம் மற்றும் பாதுகாப்பான பயணம். இவை அனைத்தும் நீங்கள் ஆற்றும் பணியைச் சுற்றியே உள்ளன. ஆப்ரிக்காவில் தொலைபேசி மூலம் பணப் பரிமாற்றம் செய்ய முடிகிறது. இம்முயற்சி சிறிய தீவுகளை அடைவதற்கு இத்தனை நாள் பட்ட சிரமங்களை படவேண்டியதில்லை. மாறாக ஒரு மவுசின் அழுத்தம் மூலம் செய்து விட முடிகிறது.

இந்தியாவில் ஒரு மலைக் கிராமத்தில் இருக்கும் பெண்மணி தனது குழந்தையைக் காப்பாற்ற இது எளிதில் வகை செய்கிறது. ஒரு குக்கிராமத்தில் இருக்கும் ஒரு குழந்தை நல்ல கல்வியை பெறுவதற்கு வழிவகை செய்கிறது. ஒரு சிறிய விவசாயி தனது நிலத்தில் விளையும் பயிர்களுக்கு சந்தையில் நல்ல விலையை பெற முடிகிறது. ஒரு மீனவனுக்கு சிறப்பாக மீன்கள் கிடைக்கின்றன. சான் ப்ரான்சிஸ்கோ நகரில் உள்ள ஒரு பொறியாளர், ஸ்கைப் மூலமாக இந்தியாவில் உள்ள தனது வயதான பாட்டியிடம் பேச முடிகிறது. ஹரியாணாவில் ஒரு தந்தை, “மகளுடன் செல்ஃபி” என்று தொடங்கி வைத்தது உலகத்தின் கவனத்தையே கவர்ந்துள்ளது.

இவையனைத்தும் நீங்கள் ஆற்றும் பணியால் சாத்தியமாகிறது. எனது அரசு கடந்த ஆண்டு பதவியேற்றது முதலாக, செல்பேசிகள் மூலமாகவும், இணைய இணைப்பு மூலமாகவும ஏழ்மையின் மீது தாக்குதல் தொடுத்து ஒருங்கிணைந்த அதிகாரம் வழங்க முயற்சி எடுத்துள்ளோம். ஒரு சில மாதங்களிலேயே 180 மில்லியன் வங்கிக் கணக்குகள், ஏழைகளுக்கு நேரடி மானியம், வங்கி கணக்கு இல்லாதோருக்கு நிதி உதவி, ஏழைகளுக்கு ஆயுள் காப்பீடு, மற்றும் இறுதிக்காலத்தில் ஓய்வூதியம் ஆகிய அனைத்தையும் சாதித்துள்ளோம். விண்வெளி ஆய்வு மற்றும் 170 செல்பேசி செயலிகள் ஆய்வு மூலமாக அரசு நிர்வாகத்தை வேகமானதாகவும், வளர்சியை துரிதப்படுத்தவும் முடிந்துள்ளது.

ஒரு கிராமத்தில் உள்ள ஒரு கைவினைக் கலைஞரால், நியுயார்க் மெட்ரோவில் உள்ளவர் தன் செல்பேசியை பார்த்து புன்னகை புரிய வைக்க முடிகிறது. நான் பிஷ்கேக்கில் பார்த்தது போல, கிர்கிஸ் நாட்டில் உள்ள ஒரு நோயாளிக்கு டெல்லியில் உள்ள மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க முடிகிறதென்றால், நாம் நமது வாழ்வில் உள்ள சில அடிப்படைகளையே மாற்றியுள்ளோம் என்பதை உணர முடிகிறது.

டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் வேகம் நமது பாரம்பரிய கல்வி முறை, வயது, மொழி மற்றும் வருமானத்தை தலைகீழாக மாற்றியுள்ளது. குஜராத் மாநிலத்தில் படிப்பறிவற்ற ஏழை பழங்குடியின பெண்களிடம் உரையாடியதை நினைவுகூற விரும்புகிறேன். அங்கே நான் தொடங்கி வைத்த பால் பதனிடும் தொழிற்சாலைக்கு அவர்கள் வருகை தந்திருந்தார்கள். அவர்கள் தங்கள் செல்பேசியில் அந்த நிகழ்ச்சியை புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள். அந்த புகைப்படங்களை என்ன செய்யப் போகிறீர்கள் என்று கேட்டேன். அவர்களின் பதில் எனக்கு வியப்பளித்தது. வீட்டுக்கு சென்ற பிறகு, அந்த புகைப்படங்களை கணிப்பொறியில் தரவிரக்கம் செய்து அச்செடுப்போம் என்றனர். நமது டிஜிட்டல் உலகம் அவர்களுக்கும் தெரிந்திருக்கிறது. மராட்டிய மாநிலத்தில் உள்ள விவசாயிகள் விவசாய முறைகள் குறித்து செய்திகளை பகிர்ந்து கொள்ள, ஒரு வாட்சப் குழு தொடங்கியுள்ளனர்.

ஒரு பொருளின் பயன்பாட்டை, விற்பனையாளர் அல்லாமல், நுகர்வோரே தீர்மானிக்கின்றனர். மனித இனம் மேலும் போராடி முன்னேறுவதை நாம் பார்க்கத்தான் போகிறோம். மனித இனத்தின் எழுச்சியை நாம் காணப் போகிறோம். சில ஆண்டுகளுக்கு முன்னால் நினைத்தே பார்க்க முடியாத வகையில் மனித வாழ்வை மாற்றுவதற்கான வாய்ப்பு நமக்கு வாய்த்துள்ளது. இதுதான் கடந்த நூற்றாண்டையும் இந்த நூற்றாண்டையும் வேறுபடுத்துகிறது. இன்னமும் கூட சிலர், டிஜிட்டல் தொழில்நுட்பத்தையும் டிஜிட்டல் பொருளாதாரத்தையும், பணக்காரர்களுக்கானது, படித்த வர்களுக்கானது, வசதி படைத்தவர்களுக்கானது என்று கருதுகிறார்கள். ஆனால், இந்தியாவில் ஒரு மூலையில் இருக்கும் டாக்சி ஓட்டுனரிடம், உங்கள் செல்பேசி மூலமாக என்ன அடைந்தீர்கள் என்று கேட்டுப் பாருங்கள். இந்த விவாதம் முற்று பெறும். தொழில்நுட்பத்தை விருப்பத்திற்கும் வாய்ப்புக்கும் இடையே உள்ள தூரத்தை குறைப்பதற்காக பயன்படுத்தலாம் என்று நினைக்கிறேன். சமூக வலைத்தளங்கள், அனைத்து சமூகத் தடைகளையும் உடைத்துள்ளது. சமூக வலைத்தளம், மக்களை மனித மாண்புகளின் அடிப்படையில் இணைக்கிறது. அடையாளத்தினால் அல்ல. அரசியல் அமைப்புச் சட்டங்களில் இருந்து அதிகாரத்தைப் பெற்றுக் கொண்டிருந்த ஜனநாயகமும் அதன் குடிமக்களும், இன்று தொழில்நுட்பத்தால் உந்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். தொழில்நுட்பத்தினால் கிடைக்கும் விபரங்கள் அரசுகளை 24 மணி நேரத்தில் அல்ல, 24 நிமிடங்களில் பதில் சொல்ல வைக்கிறது. சமூக வலைத்தளங்களின் பிரம்மாண்டமான வளர்ச்சியின் மூலமாக விளிம்பு நிலையில் உள்ள மக்களின் வாழ்வை முன்னேற்ற முடியும் என்று நம்பிக்கை கொள்ளுங்கள். நண்பர்களே, இந்த நம்பிக்கையிலிருந்து பிறந்ததுதான் டிஜிட்டல் இந்தியா என்ற திட்டம். மனிதகுல வரலாற்றிலேயே இது வரை இல்லாதது போல, ஒரு மிகப்பெரிய திட்டமாக இதை உருவெடுக்க உள்ளோம். இத்திட்டம் ஏழை, விளிம்புநிலை மக்களின் வாழ்வை மாற்றுவதற்காக மட்டுமல்ல. இந்தியாவின் வாழ்க்கை முறையையே மாற்றுவதற்கான திட்டம் இது. 35 வயதுக்கும் குறைவான 800 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்கள் மாற்றத்துக்காக துடித்துக் கொண்டிருக்கையில் இத்திட்டம் போல வேறு எந்த திட்டமும் பயன்தராது.

அரசு நிர்வாகத்தை வெளிப்படைத் தன்மை நிறைந்ததாகவும், பொறுப்புள்ளதாகவும், அனைவரும் பங்குபெறக் கூடியதாகவும் மாற்ற உள்ளோம். மின்னணு நிர்வாகம் என்பது, சிக்கனமானதும், சிறந்ததாகவும் அமையும் என்று நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.

இப்போது நான் மின்னணு நிர்வாகம் அல்லது, செல்பேசி நிர்வாகம் குறித்து பேசப் போகிறேன். ஒரு பில்லியன் செல்போன்கள் வைத்திருக்கும், ஸ்மார்ட் போன்களை பரவலாக பயன்படுத்தும், அபிரிமிதமான வளர்ச்சியை கண்டு கொண்டிருக்கும் ஒரு நாட்டை அப்படித்தான் அணுக வேண்டும். வளர்ச்சி என்பதை அனைவருக்கானதாக மாற்றி, ஒரு இயக்கமாக மாற்ற வல்லது அந்த யோசனை. அது அரசு நிர்வாகத்தை அனைவருக்கும் சொந்தமானதாக மாற்றும்.

Mygov.in என்ற இணையதளத்துக்கு பிறகு, நரேந்திர மோடி என்ற செல்பேசி செயலியை அறிமுகப்படுத்தியுள்ளேன். இது மக்களோடு என்னை நெருங்கிய தொடர்பில் இருக்க வைக்கிறது. அவர்களின் புகார்கள் மற்றும் ஆலோசனைகளில் இருந்து நான் ஏராளமாக கற்றுக் கொள்கிறேன்.

அதிகப்படியான காகித உபயோகத்தை அரசு அலுவலகங்களில் இருந்து குறைத்து, பொதுமக்களின் சிரமத்தை குறைக்க உத்தேசித்துள்ளோம். காகிதமில்லா நிர்வாகத்தை நடத்த முயல்கிறோம். ஒவ்வொரு குடிமகனுக்கும் டிஜிட்டல் லாக்கர் வழங்கி, முக்கிய ஆவணங்களை அதில் சேமித்து வைக்க வழிவகை செய்ய இருக்கிறோம். அந்த ஆவணங்களை அனைத்துத் துறைகளும் பயன்படுத்தவும் ஆவண செய்ய உள்ளோம்.

மின்னணு தொழில் நிர்வாகத்துக்காக, தனியான ஒரு இணையதளத்தை தொடங்கி, தொழில் புரிவோரும், மற்றவர்களும் பயன்படும் வகையிலும், அவர்களின் கவனத்தை அரசிடம் அனுமதி பெறுவதில் செலுத்தாமல் அவர்கள் தொழிலில் செலுத்தும் வகையிலும் திட்டங்களை தீட்டி உள்ளோம். வளர்ச்சியை வேகமானதாகவும், சிறப்பானதாகவும் ஆக்குவதற்கு தொழில்நுட்பத்தை பயன்படுத்த உள்ளோம்.

தகவல், கல்வி, தொழில்திறன், சுகாதாரம், வாழ்வு, நிதி, சிறு மற்றும் கிராமப்புர தொழில்கள், பெண்களுக்கான வாய்ப்புகள், இயற்கை வளங்களை பாதுகாத்தல், சுத்தமான எரிசக்தியை வழங்குதல், ஆகியவற்றை இந்த வளர்ச்சிக்கான புதிய திட்டத்தின் மூலம் அடைய முடியும். ஆனால் இவற்றை அடைவதற்கு, கல்வி அறிவை வளர்க்க எவ்வளவு பாடுபடுகிறோமோ, அது போலவே, டிஜிட்டல் அறிவை வளர்ப்பதற்கும் பாடுபட வேண்டும். தொழில்நுட்பம் எளிதாக அனைவருக்கும் கிடைக்கும்படி செய்ய வேண்டியது அவசியம்.

எங்களது 1.25 மில்லியன் மக்களும், இணையம் மூலமாக இணைந்திருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். ஏற்கனவே, இந்தியாவில் ப்ராட்பேன்ட் பயன்படுத்துவோரின் சதவிகிதம் 63ஆக வளர்ந்துள்ளது. இதை மேலும் வளர்த்தெடுக்க வேண்டும்.

நாடெங்கும் ஒளி இழை வடங்களை பதிப்பதன் மூலம், 600,000 கிராமங்களுக்கு ப்ராட்பேன்ட் வசதியை அளிக்க உள்ளோம். அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் ப்ராட்பேன்ட் மூலம் இணைக்கப்படும். இணைய வசதியை உருவாக்குவது, தேசிய நெடுஞ்சாலைகளை அமைப்பது போன்று முக்கியமானது. பொது இடங்களில் வைஃபை வசதியை பெருக்கி வருகிறோம். உதாரணமாக, விமான நிலையங்களைப் போல, ரயில் நிலையங்களிலும் இலவச வைஃபை வழங்க ஏற்பாடு செய்து வருகிறோம். இதற்கென, 500 ரயில் நிலையங்களில் வைஃபை வசதி வழங்க கூகுள் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ய இருக்கிறோம்.

கிராமங்களிலும் சிறு நகரங்களிலும், இணைய வசதியோடு கூடிய சமூக நல மையங்களை நிறுவ உள்ளோம். மேலும் ஸ்மார்ட் நகரங்களை நிர்வகிக்க, தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்த உள்ளோம். கிராமங்களை பொருளாதார மையங்களோடு இணைத்து, விவசாயிகளுக்கு விளைபொருட்களை விற்கும் சந்தையை அருகாமையில் கொண்டு வர உள்ளோம். மேலும், விவசாயிகள் இயற்கை பேரழிவில் சிக்காமல் காப்பாற்றவும் உள்ளோம்.

மேலும், இந்த தொழில்நுட்பத்தில் உள்ளீடுகள் உள்ளுர் மொழிகளில் அமைந்திருப்பது அவசியம். 22 மொழிகளை அலுவல் மொழிகளாக வைத்திருக்கும் நாட்டில் இது கடினம்தான் ஆனால் இது முக்கியமான ஒன்றாகும். எளிமையான முறையில் சேவைகளும், பொருட்களும் மக்களுக்கு கிடைப்பது, இதன் வெற்றிக்கான அடிப்படையாகும். இதற்கு பல பரிமாணங்கள் உண்டு. இந்தியாவிலேயே, தரமானதாகவும், விலை குறைந்ததாகவும் பொருட்களை உற்பத்தி செய்ய ஊக்கப்படுத்துவோம். மேக் இன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா, மற்றும் டிசைன் இன் இந்தியா என்ற எங்கள் திட்டங்களின் ஒரு பகுதி இது.

நமது பொருளாதாரமும், வாழ்வும், தொடர்ந்து இணையத்தோடு இணைந்து வந்து கொண்டிருப்பதால், டேட்டாக்களின் தனித்தன்மைக்கும், பாதுகாப்புக்கும், அறிவுசார் சொத்துரிமைக்கும், இணைய பாதுகாப்புக்கும் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். டிஜிட்டல் இந்தியா என்ற எங்கள் இலக்கை அடைவதற்கு, அரசும் உங்களைப் போலவே சிந்திக்க வேண்டும் என்பதை உணர்ந்திருக்கிறேன்.

உள்கட்டமைப்பு முதல் சேவைகள் வரை, பொருட்களின் உற்பத்தி முதல், மனிதவள மேம்பாடு வரை, அரசு ஆதரவோடு குடிமக்களை இணைய அறிவு உள்ளவர்களாக மாற்றுதல் வரை, டிஜிட்டல் இந்தியா உங்களுக்கு ஏராளமான வாய்ப்பை தருகிறது.

இந்தப் பணி மிகப் பெரியது. சவால்களும் அதிகம். ஆனால், புதிய பாதைகளை தேர்ந்தெடுக்காமல் புதிய இலக்கை அடைவது கடினம் என்பது எங்களுக்குத் தெரியும். இந்தியாவின் பல கனவுகள் இனிதான் கட்டப்பட வேண்டும். ஆகையால், இந்தப் பாதையை செதுக்க நமக்கு இப்போது வாய்ப்பு அமைந்துள்ளது. நமக்கு இந்தப் பாதையை அடைவதற்கான திறமை, தகுதி மற்றும் வாய்ப்புகள் உள்ளன. இந்திய அமெரிக்க கூட்டுறவு என்பதும் நமக்கு சாதகமாக உள்ளது.

அறிவுசார் பொருளாதாரத்தை உருவாக்க இந்தியர்களும் அமெரிக்கர்களும் சேர்ந்து உழைத்துள்ளோம். தொழில்நுட்பத்தின் பல்வேறு சாத்தியங்களை அவர்கள் எங்களுக்கு காண்பித்திருக்கிறார்கள். டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் இளம் தொழில்நுட்ப வல்லுனர்களும், பெரிய நிறுவனங்களும் டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் பங்கெடுக்க முடியும். உலகின் ஆறில் ஒரு பங்கு மக்கள்தொகையின் முன்னேற்றம், இந்த உலகிற்கே நன்மையாக முடியும். இந்திய அமெரிக்க கூட்டுறவை நாம் இந்நூற்றாண்டின் முக்கிய உறவாக பார்க்கிறோம். அதற்கு இரு முக்கிய காரணங்கள் உள்ளன. அவை இன்று கலிபோர்னியாவில் இணைந்துள்ளன. ஆசிய பசிபிக் பகுதி, இந்நூற்றாண்டில் ஒரு முக்கிய பங்கு வகிக்கும் என்பதை நாம் அறிவோம். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளான இந்தியாவும் அமெரிக்காவும், இரு எல்லைகளில் அமைந்துள்ளன. இப்பிரதேசத்துக்கு அமைதி வளம், மற்றும் ஸ்திரத்தன்மையை வளர்க்கும் பொறுப்பு நமக்கு உண்டு. இளைஞர்கள், தொழில்நுட்பம் ஆகிவை நமது இந்த உறவை செழுமைப் படுத்துகின்றன.

மேலும், இந்த டிஜிட்டல் யுகத்தில், நமது உறவின் மூலம் ஒரு அற்புதமான உலகை படைக்க முடியும்.

நன்றி.

***