Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

கர்நாடகாவின் ஹூப்ளி-தர்வாடில் முக்கிய வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதோடு, நிறைவடைந்த வளர்ச்சித் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர்

கர்நாடகாவின் ஹூப்ளி-தர்வாடில் முக்கிய வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதோடு, நிறைவடைந்த வளர்ச்சித் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர்


பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று கர்நாடக மாநிலம் ஹுப்ளி-தார்வாடில் முக்கிய வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். 2019-ம் ஆண்டு பிப்ரவரியில் பிரதமரால் அடிக்கல் நாட்டப்பட்ட ஐஐடி தார்வாட், கின்னஸ் புத்தகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஸ்ரீ சித்தரூதா சுவாமிஜி ஹுப்ளி நிலையத்தில் 1,507 மீட்டர் நீளமுள்ள உலகின் மிக நீளமான ரயில்வே நடைமேடையை நாட்டிற்கு அர்ப்பணித்தல், ஹோசப்பேட்டை – ஹூப்ளி – தினைகாட் வழித்தடத்தை மின்மயமாக்கல் மற்றும் ஹோசப்பேட்டை ரயில் நிலையத்தை மேம்படுத்துதல் உள்ளிட்ட திட்டங்கள் இதில் அடங்கும். ஹூப்ளி-தர்வாட் ஸ்மார்ட் சிட்டியில் பல்வேறு திட்டங்களைப் பிரதமர் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார். ஜெயதேவா மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம், தார்வாட் பல கிராம குடிநீர் வழங்கும் திட்டம் மற்றும் துப்பரிஹல்லா வெள்ள சேதக் கட்டுப்பாட்டுத் திட்டம் ஆகியவற்றிற்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஹூப்ளிக்கு வருகை தரும் வாய்ப்பைப் பெற்றதை நினைவு கூர்ந்ததோடு,  தன்னை வரவேற்க வந்த மக்கள் தம்மீது காட்டிய அன்பு குறித்து எடுத்துரைத்தார். கடந்த சில ஆண்டுகளாக பெங்களூரு முதல் பெல்காவி, கல்புர்கி முதல் ஷிவமோகா, மைசூரு முதல் தும்குரு வரை கர்நாடகாவின் பல பகுதிகளுக்குச் சென்றதை நினைவு கூர்ந்த பிரதமர், கன்னட மக்கள் காட்டும் அதீத அன்புக்கும், பாசத்துக்கும் கடமைப்பட்டிருப்பதாகவும், மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதன் மூலம் அவர்களின் வாழ்க்கையை எளிதாக்குவது, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவது, பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் ஆகியவற்றுக்காக அரசு செயல்படும் என்றும் சுட்டிக் காட்டினார்.. “கர்நாடகாவின் இரட்டை எஞ்சின் அரசு, மாநிலத்தின் ஒவ்வொரு மாவட்டம், கிராமம் மற்றும் குக்கிராமங்களின் முழுமையான வளர்ச்சிக்கு மிகுந்த நேர்மையுடன் பாடுபடுகிறது” என்று பிரதமர் கூறினார்.

பல நூற்றாண்டுகளாக, மலேநாடு மற்றும் பயலு சீமைப் பகுதிகளின் நுழைவாயிலாக தார்வாட் திகழ்வதாகவும், இது அனைவரையும் திறந்த மனதுடன் வரவேற்று, அனைவரிடமிருந்தும் கற்று தன்னை வளப்படுத்திக் கொண்டதாகவும் பிரதமர் கூறினார். எனவே, தார்வாட் ஒரு நுழைவாயிலாக மட்டும் இருக்காமல், கர்நாடகா மற்றும் இந்தியாவின் பிரதிபலிப்பாக மாறியது என்று பிரதமர் கூறினார். இலக்கியம் மற்றும் இசைக்கு பெயர் பெற்ற கர்நாடகாவின் கலாச்சார தலைநகரமாக தார்வாட் அறியப்படுகிறது. தார்வாடில் இருந்து கலாச்சார தலைவர்களுக்கு பிரதமர் மரியாதை செலுத்தினார்.

முன்னதாக தனது மாண்டியா பயணத்தை பிரதமர் நினைவு கூர்ந்தார். புதிய பெங்களூரு – மைசூரு விரைவுச்சாலையானது கர்நாடகாவின் மென்பொருள் மையம் என்ற அடையாளத்தை மேலும் முன்னெடுத்துச் செல்ல வழி வகுக்கும் என்றார். இதேபோல், பெலகாவியில் பல வளர்ச்சித் திட்டங்கள் அர்ப்பணிக்கப்பட்டதாகவும், சில திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டதாகவும் பிரதமர் கூறினார். சிவமோகா குவெம்பு விமான நிலையத்தையும் குறிப்பிட்டார். இந்தத் திட்டங்கள் புதிய வளர்ச்சிக் கதையை எழுதுவதாக பிரதமர் குறிப்பிட்டார்.

“தார்வாடில் உள்ள ஐஐடியின் புதிய வளாகம்,  எதிர்காலத்தில் சிறந்த இளைஞர்களை உருவாக்கும் அதே வேளையில் தரமான கல்வியை வழங்கும்” என்று பிரதமர் கூறினார். புதிய ஐஐடி வளாகம் கர்நாடகாவின் வளர்ச்சிப் பயணத்தின் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதுகிறது என்று அவர் குறிப்பிட்டார். தார்வாட் ஐஐடி வளாகத்தின் உயர் தொழில்நுட்ப வசதிகளைக் குறிப்பிட்ட அவர், உலகின் மற்ற முன்னணி நிறுவனங்களைப் போலவே, இந்த நிறுவனத்தையும் உயரத்திற்கு அழைத்துச் செல்ல உத்வேகமாக இருக்கும் என்று கூறினார். ஐஐடி தார்வாட் வளாகம் தற்போதைய அரசின் ‘சங்கல்ப் சே சித்தி’ (அதாவது தீர்மானங்கள் மூலம் சாதனை) மனப்பான்மைக்கு ஒரு சிறந்த உதாரணம் என்பதை எடுத்துக்காட்டிய பிரதமர், பிப்ரவரி 2019-ல் அதற்கு அடிக்கல் நாட்டியதை நினைவு கூர்ந்தார். கொரோனா வைரஸ் தொற்றால் பல தடைகள் வந்தாலும் 4 ஆண்டு காலக்கட்டத்தில் பணிகளை முடித்ததற்கு மகிழ்ச்சி தெரிவித்தார். அடிக்கல் நாட்டுவது முதல் திட்டப்பணிகளை தொடங்குவது வரை இரட்டை எஞ்சின் அரசு சீரான வேகத்தில் செயல்படுகிறது” என்று பிரதமர் குறிப்பிட்டார்.

தரமான கல்வி நிறுவனங்களின் விரிவாக்கம் அவற்றின் அடையாளத்தை நீர்த்துப்போகச் செய்யும் என்ற பழைய சிந்தனை குறித்து பிரதமர் வருத்தம் தெரிவித்தார். இந்த சிந்தனை இளம் தலைமுறையினருக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியதாகவும், புதிய இந்தியா இந்த சிந்தனையை நிராகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டார். “நல்ல கல்வி எல்லா இடங்களிலும், அனைவருக்கும் சென்றடைய வேண்டும். அதிக எண்ணிக்கையிலான தரமான நிறுவனங்கள் நல்ல கல்வியை அதிகமான மக்களுக்கு சென்றடைவதை உறுதி செய்யும்” என்று அவர் மேலும் கூறினார். அதனால்தான், கடந்த 9 ஆண்டுகளில் இந்தியாவில் தரமான நிறுவனங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்று அவர் கூறினார். சுதந்திரத்திற்குப் பிறகு 70 ஆண்டுகளில் 380 மருத்துவக் கல்லூரிகள் இருந்த நிலையில், கடந்த 9 ஆண்டுகளில் 250 மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளதோடு, எய்ம்ஸ் மருத்துவமனைகளின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. இந்த 9 ஆண்டுகளில் பல புதிய ஐஐஎம் மற்றும் ஐஐடி-க்கள் திறக்கப்பட்டுள்ளன.

21-ம் நூற்றாண்டில் நகரங்களை நவீனமயமாக்குவதன் மூலம் இந்தியா முன்னேறி வருவதாகப் பிரதமர் கூறினார். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஹூப்ளி-தார்வாட் இணைக்கப்பட்டு இன்று பல ஸ்மார்ட் திட்டங்கள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். “தொழில்நுட்பம், உள்கட்டமைப்பு மற்றும் ஸ்மார்ட் ஆளுமை ஆகியவை ஹூப்ளி-தார்வாட் பகுதியை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும்” என்று அவர் கூறினார்.

பெங்களூரு, மைசூர் மற்றும் கல்புர்கியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ ஜெயதேவா இருதய அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மீது கர்நாடக மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை பிரதமர் சுட்டிக் காட்டினார். இதன் மூன்றாவது கிளைக்கு ஹூப்ளியில் இன்று அடிக்கல் நாட்டப்பட்டது.

தார்வாட் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு சுத்தமான குடிநீரை வழங்க மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுவதை எடுத்துரைத்த பிரதமர், ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ரேணுகா சாகர் நீர்த்தேக்கம் மற்றும் மலபிரபா நதி ஆகியவற்றிலிருந்து குழாய்கள் மூலம் 1.25 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்கு குடிநீர் கொண்டு வரப்படும். தார்வாடில் புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் தயாராகும் போது, மாவட்டம் முழுவதும் உள்ள மக்கள் பயன்பெறுவர் என்றும் அவர் தெரிவித்தார். துபரிஹல்லா வெள்ள சேதக் கட்டுப்பாட்டுத் திட்டத்துக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டது குறித்தும் பேசிய பிரதமர், இப்பகுதியில் வெள்ளத்தால் ஏற்படும் சேதங்களை இது குறைக்கும் என்றும் தெரிவித்தார்.

சித்தரூதா சுவாமிஜி ரயில் நிலையம் இப்போது உலகிலேயே மிகப் பெரிய நடைமேடையைக் கொண்டிருப்பதால், இணைப்பின் அடிப்படையில் கர்நாடகம் மற்றொரு மைல்கல்லை எட்டியுள்ளது என்று பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார். இது உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு முன்னுரிமை அளிக்கும் சிந்தனையைக் குறிப்பதாக அவர் சுட்டிக் காட்டினார். ஹோசப்பேட்டை – ஹூப்ளி – தினைகாட் பகுதியின் ரயில் பாதையை மின்மயமாக்கல் மற்றும் ஹோசப்பேட்டை ரயில் நிலையத்தை மேம்படுத்துதல் ஆகியவை இந்த பார்வையை வலுப்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த வழித்தடத்தில் தொழிற்சாலைகளுக்கு நிலக்கரி அதிக அளவில் கொண்டு செல்லப்படுவதாகவும், இந்த வழித்தடம் மின்மயமாக்கப்பட்ட பிறகு, டீசலை சார்ந்திருப்பது குறையும் என்றும், அதன் மூலம் சுற்றுச்சூழலை பாதுகாக்க முடியும் என்றும் பிரதமர் தெரிவித்தார். இந்த முயற்சிகள் பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதோடு, சுற்றுலாவை மேம்படுத்தும் என்றும் பிரதமர் சுட்டிக் காட்டினார்.

“சிறந்த மற்றும் மேம்பட்ட உள்கட்டமைப்பு பார்ப்பதற்கு நன்றாக இருப்பது மட்டுமின்றி, மக்களின் வாழ்க்கையை எளிதாக்குகிறது” என்று பிரதமர் குறிப்பிட்டார். சிறந்த சாலைகள் மற்றும் மருத்துவமனைகள் இல்லாததால் அனைத்து சமூகங்கள் மற்றும் முதியவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை எடுத்துரைத்த பிரதமர், நாடு முழுவதும் மேம்படுத்தப்பட்டு வரும் மேம்பட்ட உள்கட்டமைப்பின் பலன்களை நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் அனுபவித்து வருவதாகக் குறிப்பிட்டார். மாணவர்கள், விவசாயிகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் தங்கள் இலக்கை அடைய சிறந்த இணைப்பைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதற்கான உதாரணங்களை அவர் கூறினார். கடந்த 9 ஆண்டுகளில் உள்கட்டமைப்பை நவீனமயமாக்கும் பணியை பட்டியலிட்ட அவர், பிரதமர் சாலைகள் திட்டத்தின் மூலம் கிராமங்களில் சாலைகளின் இணைப்பு இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது என்றும், தேசிய நெடுஞ்சாலை இணைப்பு 55%க்கும் மேலாக அதிகரித்துள்ளது என்றும் தெரிவித்தார். கடந்த 9 ஆண்டுகளில் நாட்டில் விமான நிலையங்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

இணைய உலகில் இந்தியாவுக்கு இதற்கு முன் அந்த அளவுக்கு முக்கியத்துவம் இல்லை என்று பிரதமர் கூறினார். இன்று இந்தியா மிகவும் சக்திவாய்ந்த டிஜிட்டல் பொருளாதாரங்களில் ஒன்றாக உள்ளது. அரசு மலிவான இணைய வசதியை கிராமங்களுக்கு கொண்டு சென்றதால் இது நடந்தது. “கடந்த 9 ஆண்டுகளில் சராசரியாக ஒவ்வொரு நாளும் 2.5 லட்சம் பிராட்பேண்ட் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன” என்று அவர் தெரிவித்தார். “உள்கட்டமைப்பு வளர்ச்சியில் இந்த வேகம் இருப்பதற்குக் காரணம், இன்று நாட்டின் தேவைகளுக்கு ஏற்ப உள்கட்டமைப்புகள் கட்டமைக்கப்படுகின்றன. முன்னதாக, அரசியல் லாப நட்டத்தை எடை போட்டுத்தான் ரயில், சாலைத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. நாடு முழுவதும் பிரதமர் கதி சக்தி தேசிய திட்டத்தை நாங்கள் கொண்டு வந்துள்ளோம். அதனால் நாட்டில் எங்கு தேவை இருக்கிறதோ அங்கெல்லாம் விரைவாக உள்கட்டமைப்புகளை உருவாக்க முடியும்” என்று பிரதமர் கூறினார்.

சமூக உள்கட்டமைப்பில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கவனம் செலுத்துவதைப் பற்றி குறிப்பிட்ட பிரதமர், வீடுகள், கழிவறைகள், சமையல் எரிவாயு, மருத்துவமனைகள் மற்றும் குடிநீர் போன்ற அத்தியாவசியத் தேவைகள் கிடைக்காத நாட்களை நினைவு கூர்ந்தார். இந்தப் பகுதிகள் எவ்வாறு கவனிக்கப்பட்டு இன்று இந்த வசதிகள் அனைத்தும் கிடைக்கப்பெறுகின்றன என்பதை அவர் விவரித்தார். அடுத்த 25 ஆண்டுகளில் இளைஞர்கள் தங்கள் தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கான அனைத்து வளங்களையும் இன்று நாங்கள் வழங்குகிறோம் என்றும் பிரதமர் கூறினார்.

பகவான் பசவேஸ்வராவின் பங்களிப்பை எடுத்துரைத்த பிரதமர், இந்த ஜனநாயக அமைப்பு உலகம் முழுவதும் ஆய்வு செய்யப்படுவதாகவும் குறிப்பிட்டார். லண்டனில் பசவேஸ்வரா சிலையை திறந்து வைத்ததை நினைவு கூர்ந்தார். ஆனால், லண்டனிலேயே இந்தியாவின் ஜனநாயகம் கேள்விக்குறியாக்கப்பட்டது துரதிர்ஷ்டவசமானது என்றும் பிரதமர் கூறினார். “இந்தியாவின் ஜனநாயகத்தின் வேர்கள் நமது பல நூற்றாண்டுகள் பழமையான வரலாற்றிலிருந்து எடுக்கப்பட்டவை. உலகின் எந்த சக்தியாலும் இந்தியாவின் ஜனநாயக மரபுகளை சேதப்படுத்த முடியாது” என்று பிரதமர் குறிப்பிட்டார். இருந்த போதிலும், சிலர் தொடர்ந்து இந்தியாவின் ஜனநாயகத்தை குழிக்குள் தள்ளுகின்றனர் என பிரதமர் கூறினார். ”இப்படிப்பட்டவர்கள் பசவேஸ்வராவையும், கர்நாடக மக்களையும், நாட்டையும் அவமதிக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களிடம் இருந்து எச்சரிக்கையாக இருங்கள்” என கர்நாடக மக்களுக்கு பிரதமர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உரையின் நிறைவாக, கர்நாடகாவை தொழில்நுட்ப இந்தியாவின் அடையாளமாக எதிர்காலத்தில் இன்னும் முன்னெடுத்துச் செல்ல வேண்டுமென வலியுறுத்தினார். “ஹைடெக் இந்தியாவின் எஞ்சின் கர்நாடகா” எனவும், இந்த ஹைடெக் இன்ஜினை இயக்குவதற்கு இரட்டை எஞ்சின் அரசு அவசியம் எனவும் பிரதமர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் கர்நாடக முதலமைச்சர் திரு.பசவராஜ் பொம்மை, மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி மற்றும் கர்நாடக அமைச்சர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

பின்னணி

தார்வாட் ஐஐடியை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். 2019 பிப்ரவரியில் இந்த நிறுவனத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார் ரூ.850 கோடி செலவில் உருவாக்கப்பட்ட இந்த நிறுவனம் தற்போது 4 வருட பி.டெக். பாடங்கள், 5 ஆண்டு BS-MS திட்டம், எம்.டெக்.மற்றும் PhD பாடத் திட்டங்கள் உள்ளன.

ஸ்ரீ சித்தரூதா சுவாமிஜி ஹூப்ளி நிலையத்தில் உள்ள உலகின் மிக நீளமான ரயில்வே நடைமேடையையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த சாதனையை கின்னஸ் புத்தகம் சமீபத்தில் அங்கீகரித்துள்ளது.1,507 மீ நீளமுள்ள நடைமேடை சுமார் ரூ. 20 கோடி செலவில் கட்டப்பட்டது.

ஹோசப்பேட்டை – ஹூப்ளி – தினைகாட் ரயில் தடத்தின் மின்மயமாக்கல் மற்றும் ஹோசப்பேட்டை ரயில் நிலையத்தை மேம்படுத்தும் பணியை, பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். 530 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட இந்த மின்மயமாக்கல் திட்டம் மின்சாரம் மூலம் தடையற்ற ரயில் இயக்கத்தை உறுதிப்படுத்துகிறது. புனரமைக்கப்பட்ட ஹோசப்பேட்டை நிலையம் பயணிகளுக்கு பல நவீன வசதிகளை வழங்கும். இது ஹம்பியின் நினைவுச் சின்னங்களைப் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஹூப்ளி-தார்வாட் ஸ்மார்ட் சிட்டியின் பல்வேறு திட்டங்களைப் பிரதமர் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார். இந்தத் திட்டங்களின் மொத்த மதிப்பீடு சுமார் ரூ. 520 கோடி ஆகும். இந்த முயற்சிகள் சுகாதாரமான, பாதுகாப்பான பொது இடங்களை உருவாக்கி, இப்பகுதியை எதிர்காலத்தில் நகர்ப்புற மையமாக மாற்றுவதன் மூலம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும்.

ஜெயதேவா மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார் சுமார் ரூ. 250 கோடி மதிப்பில் உருவாகும் இந்த மருத்துவமனை மூலம் இப்பகுதி மக்களுக்கு இருதய சிகிச்சை எளிதில் அளிக்கப்படும். இப்பகுதியில் தண்ணீர் விநியோகத்தை மேலும் பெருக்கும் வகையில், தார்வாட் பல கிராம குடிநீர் வழங்கும் திட்டத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.  இதன் மதிப்பு ரூ. 1,040 கோடி ஆகும். மேலும், துப்பறிஹல்லா வெள்ள சேதக் கட்டுப்பாட்டுத் திட்டத்துக்கும் அவர் அடிக்கல் நாட்டினார். இது சுமார் ரூ. 150 கோடி மதிப்புடையதாகும். இந்தத் திட்டமானது வெள்ளத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதோடு தடுப்புச் சுவர்கள் மற்றும் கரைகள் கட்டுவதை உள்ளடக்கியது.

******

(Release ID : 1906166)

AD/CR/RR