Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

கர்நாடகாவின் ஹூப்பாளியில் 26-ஆவது தேசிய இளைஞர் திருவிழாவில் பிரதமரின் துவக்க உரை

கர்நாடகாவின் ஹூப்பாளியில் 26-ஆவது தேசிய இளைஞர் திருவிழாவில் பிரதமரின் துவக்க உரை


நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள கர்நாடக ஆளுநர் திரு தாவர் சந்த்  கெலாட் அவர்களே, முதலமைச்சர் திரு பசவராஜ் பொம்மை அவர்களே, மத்திய அமைச்சரவை நண்பர்களே, மாநில அரசின் அமைச்சர்களே, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களே, கர்நாடக மாநிலத்தில் இளம் நண்பர்களே!

 

2023-ஆம் ஆண்டின் தேசிய இளைஞர் தினம் மிகவும் சிறப்புமிக்கது. ஒருபுறம் தேசிய இளைஞர் திருவிழா, மறுபுறம் விடுதலையின் அமிர்த பெருவிழா. “எழுந்திரு, விழித்திரு, இலக்கை அடையும் வரை நிறுத்தாதே”. விவேகானந்தரின் இந்த முழக்கம்தான் இந்திய இளைஞர்களின் தாரக மந்திரம். இந்த அமிர்த காலத்தில் நமது கடமைகளைப் புரிந்து கொண்டு அதனை நோக்கி நம் நாட்டை வழி நடத்த வேண்டும். இளைஞர் சக்தியில் கவனம் செலுத்தும்போது ஒரு நாட்டின் எதிர்கால வளர்ச்சி சுலபமானதாகிறது என்று சுவாமி விவேகானந்தர் கூறுவார்.

 

நண்பர்களே,

இளைஞர்களின் சக்தி தான் இந்தியாவின் பயணத்தின் உந்துசக்தியாக உள்ளது. நாட்டை கட்டமைப்பதற்கு அடுத்த 25 ஆண்டுகள் மிகவும் முக்கியமானவை. இளைஞர்களின் கனவுகள் தான் இந்தியாவின் பாதையை முடிவு செய்கின்றன. நமது இளைய சந்ததியினரின் ஈடுபாட்டினால் தான் உலக நாடுகள், தீர்வுகளுக்காக நம்மை நோக்குகின்றன. இன்று உலகளவில் ஐந்தாவது மிகப்பெரிய பொருளாதாரமாக நாம் விளங்குகிறோம். முதல் மூன்று இடங்களுக்குள் முன்னேறுவதை நாம் இலக்காகக் கொண்டிருக்கிறோம். இது போன்ற  பொருளாதார வளர்ச்சி நமது இளைஞர்களுக்கு அபரிமிதமான வாய்ப்புகளை உருவாக்கும். வேளாண் துறையில் சர்வதேச நாடுகளை இன்று நாம் வழி நடத்துகிறோம். தொழில்நுட்பம் மற்றும் புதுமையின் வாயிலாக இத்துறையில் புதிய புரட்சி வரவிருக்கிறது. விளையாட்டுத் துறையிலும் சர்வதேச அளவில் முக்கிய சக்தியாக இந்தியா வளர்ந்து வருகிறது. கிராமமாக இருந்தாலும், நகரமாக இருந்தாலும் இளைஞர்களின் உணர்வு எங்கெங்கும் உச்சத்தை எட்டி வருகிறது.

 

நண்பர்களே,

வரலாற்றில் இது ஒரு சிறப்பான தருணம். நீங்கள் சிறப்பு வாய்ந்த தலைமுறையினர். கடந்த 8-9 ஆண்டுகளில் பொருளாதாரம், கல்வி, விளையாட்டு, புத்தொழில், திறன் வளர்ச்சி அல்லது டிஜிட்டல்மயமாக்கல் என ஒவ்வொரு துறையிலும் வலுவான அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நூற்றாண்டு, இந்தியாவிற்கு உரியது என்ற குரல் சர்வதேச அளவில் ஒலிக்கிறது. இது, இந்திய இளைஞர்களாகிய உங்களது நூற்றாண்டு! பெரும்பாலான முக்கிய முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்ய விரும்புவதாக உலகளாவிய ஆய்வுகள் கூறுகின்றன. இந்திய புத்தொழில் நிறுவனங்கள் முதலீட்டு சாதனைகளைப் படைத்து வருகின்றன. ஏராளமான வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தயாரிக்கும் உற்பத்தி ஆலைகளை அமைத்து வருகின்றன. பொம்மைகள் முதல் சுற்றுலா, பாதுகாப்பு, டிஜிட்டல் வரை உலகம் முழுவதும் இந்தியா அனைவராலும் பேசப்படுகிறது.

 

நண்பர்களே,

நமது நாட்டில் தேசத்தின் ஆற்றலைத் தட்டி எழுப்புவதில் மகளிர் சக்தி எப்போதும் முக்கிய பங்காற்றி வருகிறது. அறிவியல், தொழில்நுட்பம், விண்வெளி, விளையாட்டு என ஒவ்வொரு துறையிலும் நமது வீரத்திருமகள்கள் உயரிய நிலையை அடைந்து வருகின்றனர். முழு சக்தியுடன் தனது இலக்கை நோக்கி இந்தியா முன்னேறுவதற்கு இது ஒரு உதாரணம். 21-வது நூற்றாண்டை இந்தியாவிற்கு உரியதாக நாம் மாற்ற வேண்டும். அதற்கு, நமது சிந்தனைகளும் அணுகுமுறையும் எதிர்காலம் சார்ந்ததாக இருக்க வேண்டும். தேசிய கல்விக் கொள்கையின் வாயிலாக புதிய தலைமுறையினரை உருவாக்குவதற்கு செயல்முறை மற்றும் எதிர்காலம் சார்ந்த கல்விமுறையை நாடு தயாரித்து வருகிறது.

 

வளர்ந்த இந்தியா, வலுவான இந்தியா என்பதுதான் இன்று நமது நாட்டின் இலக்காகும். இளைஞர்கள் இதனை தங்களது கனவாக நினைத்து பொறுப்புடன் நாட்டை வழி நடத்திச் செல்வார்கள் என்பதில் ஐயமில்லை. இந்த நம்பிக்கையோடு உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது நன்றியையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

பொறுப்புத்துறப்பு: இது பிரதமர் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும்.பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்.

*****

 

PKV / RB / DL