கத்தார் மன்னர் மேதகு ஷேக் தமிம் பின் ஹமாத் அல் தனியுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாடினார். கத்தார் மன்னர் பிரதமரை கத்தார் நாட்டிற்கு வருகை தருமாறு அழைப்புவிடுத்தார்.
இந்த உரையாடலின் போது பிரதமர் கடந்த 2015 மார்ச் மாதம் நிகழ்ந்த தனது கத்தார் பயணம் குறித்து நினைவு கூர்ந்தார். தம்முடைய அந்த பயணம் இருநாடுகளுக்கு இடையே உள்ள உறவிற்கு ஒரு புதிய பலத்தை சேர்த்துள்ளதாக குறிப்பிட்டார். கத்தாரில் வாழும் இந்திய மக்களின் நலனை காக்கவும் அவர்களது பாதுகாப்பை உறுதிசெய்யவும் கத்தார் அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை பிரதமர் வெகுவாக பாராட்டினார்.
வர்த்தகம், முதலீடு, எரிசத்தி, பாதுகாப்பு, கலாச்சாரம் போன்ற துறைகளில் இருநாடுகளுக்கும் இடையே உள்ள உறவினை பலப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். இந்திய பொருளாதார வளர்ச்சியில் கத்தார் நாடு பங்கு வகிக்க ஆர்வமாக உள்ளதாக மன்னர் தெரிவித்தார்.
ஆசிய கண்டத்தில் அமைதி மற்றும் நிலைத்தன்மைக்காக கத்தார் எடுத்துள்ள முயற்சியை பிரதமர் பாராட்டினர்.
கத்தார் பயணத்திற்கான அழைப்பை ஏற்றுக்கொண்ட பிரதமர் இருதரப்பிற்கும் ஏற்ற தேதியில் வருவதாக உறுதி அளித்தார்.