பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், கணக்கிடுதல், நிதி மற்றும் தணிக்கை அறிவுத் துறையில் இந்தியா – குவைத் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
பயன்களில் சில
இந்தியப் பட்டயக் கணக்காளர்கள் கல்விக் கழகமும், குவைத்தின் கணக்குகள் மற்றும் தணிக்கையாளர்கள் சங்கமும் ஒருங்கிணைந்து செயல்படவும், இருதரப்பினரும் பயன்பெறும் வகையில் குவைத்தில் தொழில்நுட்ப ரீதியான நிகழ்வுகள், கருத்தரங்குகள், மாநாடுகள் நடத்தவும் இது பயன்படும். இதற்கான செலவை இருதரப்பினரும் பகிர்ந்து கொள்வார்கள்.
பரஸ்பர நலன் பயப்பதற்கு அடையாளம் காணப்பட்டுள்ள துறைகளில் சாத்தியமான ஒத்துழைப்புக்கு இரு அமைப்புகளும் கூட்டாக நடவடிக்கைகளை மேற்கொள்ளும். இந்தியப் பட்டயக் கணக்காளர்கள் கல்விக் கழகம், குவைத் அரசு / அமைச்சகங்களின் ஊழியர்கள் / குவைத்தின் கணக்குகள் மற்றும் தணிக்கையாளர்கள் சங்க உறுப்பினர்கள், குவைத் பிரஜைகளுக்குத் தொழில்நுட்பத் திட்டங்களை வழங்கும்.
குவைத்தில் உள்ள இந்தியப் பட்டயக் கணக்காளர்களுக்கு ஆக்கப்பூர்வமான நம்பிக்கையை உறுதி செய்ய இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.