Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

கட்டுடல் இந்தியா இயக்கம், பிரதமர் துவக்கி வைத்தார்


தேசிய விளையாட்டுத் தினத்தையொட்டி புதுதில்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கட்டுடல் இந்தியா இயக்கத்தை பிரதமர் திரு.நரேந்திர மோடி துவக்கி வைத்தார். தங்களது வாழ்வியல் முறையை, உடல் உறுதியான வாழ்க்கை முறையாக உருவாக்க வேண்டும் என நாட்டு மக்களை பிரதமர் வலியுறுத்தினார்.

மேஜர் தியான் சந்த் பிறந்தநாளையொட்டி மக்கள் இயக்கத்தை துவக்கி வைத்த பிரதமர் திரு.நரேந்திர மோடி, அவருக்கு தனது புகழஞ்சலியை செலுத்தினார். இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீர்ராகத் திகழ்ந்த அவர், தனது விளையாட்டுத் திறமை மற்றும் நுட்பங்களின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார் என்றார். நாட்டின் இளம் விளையாட்டு வீரர்களைப் பாராட்டிய பிரதமர், உலகம் முழுவதும் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் நம் நாட்டின் மூவர்ண கொடி மேலோங்கிப் பறந்திட அவர்கள் மேற்கொண்டு வரும் முயற்சி அளப்பரியது என்றும் அவர் தெரிவித்தார்.

“அவர்களது பதக்கங்கள், அவர்களது கடுமையான உழைப்பின் பலனாகக் கிடைத்தவை மட்டுமல்ல, புதிய உத்வேகம், புதிய இந்தியாவின், புதிய நம்பிக்கையின் பிரதிபலிப்பு அவை” என்று பிரதமர் சுட்டிக்காட்டினார்.
‘கட்டுடல் இந்தியா இயக்கம்’ ஒரு தேசிய லட்சியமாகவும் ஆர்வத்தின் வெளிப்பாடாகவும் இருக்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். நாட்டு மக்களை ஊக்குவிக்கும் வகையில் கட்டுடல் இந்தியா இயக்கத்தை அரசு துவக்கியுள்ளது என்ற பிரதமர், அரசு இதனை ஆரம்பித்திருக்கலாம் ஆனால் மக்கள் இதனை முன்னெடுத்து, வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

“வெற்றி என்பது உடல் தகுதியுடன் தொடர்புடையது, வாழ்வின் ஏதேனும் ஒரு துறையில் வெற்றி பெற்ற நமது மாமனிதர்களின் வெற்றிக் கதைகளில் பொதுவான ஒரு அம்சம் காணப்படும், அவர்களில் பெரும்பாலானவர்கள் உடலை உறுதியாக வைத்திருப்பதில் ஆர்வம் கொண்டிருப்பார்கள், கட்டுடலை பேணுவதில் கவனமும், விருப்பமும் கொண்டிருப்பார்கள்” என்று பிரதமர் மேலும் தெரிவித்தார்.

தொழில்நுட்பம் நமது உடல் திறமையைக் குறைத்து விட்டது என்றும், நமது அன்றாட உடல் பயிற்சியைக் களைந்து விட்டது என்றும் தெரிவித்த பிரதமர், உடலை கட்டாக வைத்திருக்கக் கூடிய பாரம்பரிய பயிற்சிகள் மற்றும் வாழ்க்கை முறையை நாம் தெரிந்து கொள்ளாமல் இருந்து விட்டோம் என்றும் குறிப்பிட்டார். காலம் செல்ல செல்ல உடலை கட்டாக வைத்திருப்பது புறக்கணிக்கப்பட்டு விட்டதாக கூறிய பிரதமர், நமது சமுதாயத்தில் அது மிக குறைந்த முன்னுரிமையாகி விட்டது என்று தெரிவித்தார். முன்பு ஒருவர் நடைபயிற்சி செய்வதை அல்லது சில கிலோ மீட்டர் தூரத்திற்கு சைக்கிள் ஓட்டுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் என்றும், இன்று நாம் எவ்வளவு தூரம் அடி மேல் அடி வைத்து நடந்து செல்கிறோம் என்பதை மொபைல் ஆஃப்ஸ்தான் சொல்ல வேண்டியிருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

“இந்தியாவில் வாழ்க்கை முறை நோய்கள் இன்று அதிகரித்து, இளைஞர் சமுதாயத்தையும் பாதித்து வருகின்றன. சர்க்கரை நோயும், உயர் இரத்த அழுத்தமும் அதிகரித்து வருகின்றன. குழந்தைகளையும் கூட இவை பாதிக்கின்றன. ஆனால், வாழ்க்கை முறையில் சிறு மாற்றத்தைக் கொண்டு வந்தால் வாழ்க்கை முறை நோய்களைத் தடுக்க முடியும். ‘கட்டுடல் இந்தியா இயக்கம்’ வாழ்க்கை முறையில் சிறு மாற்றங்களை கொண்டு வருவதற்கான முயற்சியாகும்” என்று பிரதமர் தெரிவித்தார்.

மனதளவிலும், உடல் அளவிலும் தகுதியோடு இருந்தால் எந்த தொழிலில் இருந்தாலும் யாரும் அவர்களது தொழிலில் திறமையை வெளிப்படுத்த முடியும் என்றும் பிரதமர் கூறினார். உடல் தகுதியோடு இருந்தால் நீங்கள் மனதளவிலும் தகுதியாக இருக்க முடியும். விளையாட்டுக்கள் கட்டுடலுடன் நேரடியாக தொடர்பு கொண்டவையாகும். ஆனால் ‘கட்டுடல் இந்தியா இயக்கம்’ உடல் தகுதிக்கும் மேலாக பல நோக்கங்களைக் கொண்டது. உடல் தகுதி என்பது ஒரு வார்த்தை மட்டுமல்ல, ஆரோக்கியமான வளமான வாழ்க்கைக்கு அத்தியாவசியமான ஒரு தூணாகும். போருக்கு நமது உடலை நாம் தயார்படுத்தும் போது நமது நாட்டை இரும்பு போல வலுவாக உருவாக்குகிறோம். கட்டுடல் என்பது நமது வரலாற்று மரபின் ஒரு பகுதியாகும். இந்தியாவின் மூலைமுடுக்கெல்லாம் விளையாட்டுக்களும், விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற்று வருகின்றன. உடல் அளவில் நாம் செயல்படும் போது அவை நமது மூளைக்கும் பயிற்சி அளித்து, உடல் பகுதிகளின் கவனத்தையும் ஒருங்கிணைப்பையும் கூட்டுகிறது. ஆரோக்கியமான ஒரு தனிநபர், ஆரோக்கியமான ஒரு குடும்பம் மற்றும் ஆரோக்கியமான சமுதாயம் புதிய இந்தியாவை கட்டுடல் இந்தியாவாக உருவாக்குவதற்கு அத்தியாவசியமானவை ஆகும் என்று பிரதமர் தெரிவித்தார்.

தேசிய விளையாட்டுத் தினமான இன்று கட்டுடல் இந்தியா இயக்கத்தை வலுப்படுத்த நாம் உறுதியெடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக் கொண்டார்.

*******