பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கங்கை நதி (புத்துயிரூட்டல், பாதுகாப்பு மற்றும் மேலாண்மை) ஆணையகத்தின் (2016) ஆணைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. அதற்கான கொள்கை மற்றும் விரைவான செயலாக்கத்துக்கும் தூய்மைக் கங்கை இயக்கத்துக்கு வலுவூட்டவும் சுதந்திரமாகவும் பொறுப்புமிக்க ஒரு கட்டமைப்பை உருவாக்குதற்கு அந்த ஆணை வழிவகை செய்யும்.
கங்கை நதி ஆணைய சட்டத்தின் அம்சங்களைக் கவனத்தில் கொள்ளும் வகையில் சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டத்திற்கு (1986) அளிக்கப்படும் அந்தஸ்து இந்த ஆணையத்திற்கும் வழங்குவது என்றும் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இதன்படி, தேசிய தூய்மைக் கங்கை இயக்கம் (NMCG) பொறுப்புள்ள, நம்பகமுள்ள மையமாக அமைக்கப்படும் வகையிலும் கங்கை நதியின் புத்துணர்வுப் பணிக்கான செயலாக்க நடைமுறைகளை திறம்பட மேற்கொளளவும் போதிய நிதி ஒதுக்கீடும், நிர்வாக அதிகாரங்களும் உள்ளன.
இதன் முக்கிய அம்சங்கள்:
இந்த ஆணையில் இடம்பெற்றவை.
1. கங்கையில் மாசு தடுப்பதற்கும் புத்துயிர் பெறவும் தற்போதுள்ள NGRBA ஆணையக்துக்குப் பதிலாக மாண்புமிகு பாரதப் பிரதமர் தலைமையில் கங்கை நதி (புத்துணர்வு, பாதுகாப்பு, மேலாண்மை) தேசிய கவுன்சில் அமைப்பது,
2. மத்திய நீர்வளம் மற்றும் நதி மேம்பாடு மற்றும் கங்கைப் புத்தாக்கத் துறை அமைச்சர் தலைமையில் அதிகாரமுள்ள பணிக்குழுவை அமைப்பது, சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள், துறைகள், மாநில அரசுகள் கங்கை நதியைத் தூய்மைப்படுத்தி பாதுகாக்கும் நோக்கில் கீழ்க்கண்டவற்றைப் பின்பற்றுவதை உறுதி செய்வது:
இலக்குகள், காலக்கெடு குறிப்பிட்ட செயல்பாடுகளுடன் கூடிய செயல்திட்டம்,
அந்தச் செயல் திட்டங்கள் அமலாவதைக் கண்காணிக்க ஒரு நடைமுறை,
மேலும், செயல்திட்டங்கள் கால வரம்புக்குள் அமலாகும் வகையில் சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள், துறைகள், மாநில அரசுகளுக்கு இடையில் ஒருங்கிணைப்பை உறுதி செய்யும்.
3. தூய்மை கங்கைக்கான தேசிய இயக்கத்தை (NMCG) ஆணையகமாக அறிவித்து, அந்த இயக்கம் உத்தரவு பிறப்பிக்கும் அதிகாரத்தையும், சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) 1986 ஆண்டு சட்டத்தின் கீழுள்ள அதிகாரங்களையும் அளித்து திறம்பட வழியமைப்பது. தூய்மை கங்கைக்கான தேசிய இயக்கம் இரண்டு அடுக்கு மேலாண்மை அமைப்பைக் கொண்டதாக இருக்கும். அதன்படி, NMCG இயக்கத்தின் தலைமை இயக்குநர் தலைமையிலான ஆளுகைக் குழு (Governing Council) இருக்கும். அதன்கீழ், NMCG இயக்கத்தின் தலைமை இயக்குநர் தலைமையில் ஆளுகைக் குழுவால் உருவாக்கப்பட்ட செயற்குழு இயங்கும்.
4. NMCG அமைப்பு, தேசிய கங்கை கவுன்சில் பிறப்பிக்கும் முடிவுகள், உத்தரவுகள் ஆகியவற்றை செயல்படுத்தும். மேலும், ஒப்புதல் பெறப்பட்ட கங்கை வடிநில மேலாண் திட்டத்தையும் செயல்படுத்தும், மேலும் கங்கை நதி, அதன் கிளை நதிகள் புத்தாக்கம் செய்யபட்டு, பாதுகாக்கப்படுவதற்கான அனைத்து செயல்களையும் மேற்கொள்ளும்.
5. மாநிலங்கள் நிலையில், ஒவ்வொரு குறிப்பிட்ட மாநிலத்திலும் மாநில கங்கை கமிட்டிகள் அமைக்கப்படும். அவை அந்தந்த மாநிலங்களில் ஆணையகங்களாகச் செயல்படும்.அத்துடன், அவை, தமது அதிகார எல்லைக்கு உள்பட்ட மாவட்டங்களில் மாவட்ட கங்கை பாதுகாப்புக் கமிட்டிகளை அமைக்கும்.
6. அதைப் போல் மாவட்ட அளவில் உள்ள மாவட்ட கங்கை கமிட்டிகள் மாவட்ட நிலையிலான ஆணையகமாகச் செயல்பட்டு, அந்தந்த உள்ளூர்களில் காணப்படும் சூழல் அச்சுறுத்தல்கள், தூய்மைப் பராமரிப்புக்கான தேவைகள், கங்கையில் தரமான நீர் இருப்பதற்குத் தேவையான நடவடிக்கைளை உருவாக்குதல், அவை தொடர்பான பல திட்டங்களின் செயலாக்கத்தைக் கண்காணித்தல்.
இந்த இலக்குகளை அடைவதற்காக ஆணையகங்களை அமைப்பதற்கேற்ப, சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) 1986 ஆண்டு சட்டத்தின் 3-ஆவது பிரிவின் கீழ் உள்ள அம்சங்கள் கொண்ட உத்தரவு பிறப்பிக்கப்படும்
இத்திட்டத்தின் இதர அம்சங்கள்:
இத்திட்டம் கங்கை நதியைத் தூய்மைப்படுத்தி, சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் கங்கைக்கான தூய்மை தேசிய இயக்கத்திற்கு அதிக அதிகாரம் அளிக்கும். உள்ளூர் அளவில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு இடையில் முறையான ஒருங்கிணைப்பை உறுதி செய்யும். மேலும், சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் மாசினைக் கட்டுப்படுத்த தேசிய இயக்கம் உத்தரவுகளைச் செயல்படுத்தும்.
மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் போதிய நடவடிக்கையை எடுக்காத நிலையில், தூய்மைகங்கைக்கான தேசிய இயக்கம் நடவடிக்கை எடுக்கும். உரிய சட்டத்தின் கீழ் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தூய்மை கங்கைக்கான தேசிய இயக்கத்துடன் இணைந்து நடவடிக்கை எடுக்கும்.
கங்கை நதியில் தரமான நீர் இருப்பது, நிலையான சுற்றுச்சூழல் மேம்படுவது ஆகியவற்றை உறுதி செய்வதற்கு மாசற்ற நீர் சீராகப் பாய்வதைப் பராமரிக்க இந்த மாற்றியமைக்கப்பட்ட அமைப்பின் சிறப்பு கவனம் செலுத்தப்படும்.
மேலும், கங்கை வடிநிலப் பகுதியில் கழிவுநீரைச் சுத்திகரிக்கும் கட்டமைப்பை விரைந்து செயல்படுத்த அதி நவீன முறைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் உருவாக்கப்படும் உள்கட்டமைப்பு சீராகச் செயல்படுவதை உறுதி செய்யும்.
இதில் வெளிப்படைத்தன்மையையும் குறைந்த செலவையும் உறுதி செய்ய தணிக்கை, பாதுகாப்புத் தணிக்கை, ஆய்வகங்கள் மற்றும் நிதியமைப்பு ஆகியவற்றுக்கு வகை செய்யப்பட்டுள்ளது.
பின்னணி:
கங்கையைத் தூய்மைப்படுத்துவதற்காக, கங்கை செயல் திட்டம் முதல் நிலை 1985 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. பின்னர், கங்கை நதி நீரின் தரத்தை மேம்படுத்துவதற்காக 1993ஆம் ஆண்டு இரண்டாம் நிலை தொடங்கப்பட்டது. பின்னர் அது விரிவாக்கம் செய்யப்பட்டு, கங்கையின்கிளை நதிகளும் சேர்க்கப்பட்டன. பின்னர், கங்கையையும் அதன் கிளைநதிகளையும் புத்தாக்கமாக வடிவமைக்க மத்திய அரசின் நூறுவிழுக்காட்டு நிதியுதவியில் 2015 ஆம் ஆண்டு மே மாதம் “நமாமி கங்கா” என்ற திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
கங்கை நீர் மேலும் மாசடையும் போக்கைத் தடுத்து நிறுத்தினாலும், அதை செயல்படுத்துவதில் சில வரம்புகள் இருக்கின்றன.
இந்த ஆணையகம் கங்கை நதியின் பாதுகாவலாக இருக்கிறது என்று மக்களும் பார்த்தாலும், போதிய உபகரணங்கள் இந்த இயக்கத்திற்கு இல்லை.
இந்நிலையில், இந்த நடவடிக்கை திறமான வகையில் மாசினைக் கட்டுப்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் கஙஅகை நதிக்கு சூழலுக்கு உகந்த நீர் பாய்வதும், மாசு ஏற்படுத்தும் ஆலைகளைக் கட்டுப்படுத்துவதும் உறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நதியின் நிலைமை குறித்து பராமரித்து, தகவல்களை வெளியிடவும் ஆய்வுகளை மேற்கொள்ளவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.