Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ககன்யான் திட்டத்தின் தயார்நிலை குறித்து பிரதமர் ஆய்வு


இந்தியாவின் ககன்யான் திட்டத்தின் முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கும், இந்தியாவின் விண்வெளி ஆய்வு முயற்சிகளின் எதிர்காலத்திட்டங்கள் குறித்தும் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் உயர்நிலைக் கூட்டம் நடைபெற்றது.

ககன்யான் திட்டத்தின் விரிவான கண்ணோட்டம் குறித்தும் ஏவுகணைகளில் மனிதர்களை அனுப்புவது குறித்தும் கணினி  தகுதி போன்ற இதுவரை உருவாக்கப்பட்ட பல்வேறு தொழில்நுட்பங்கள்  பற்றியும்  விண்வெளித்துறை அமைச்சகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

3 ளில்லா விண்கலம் உட்பட சுமார் 20 முக்கிய சோதனைகள் திட்டமிடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஏவுகணையிலிருந்து மனிதர்கள் பாதுகாப்பாக வெளியேறுவது குறித்த  பரிசோதனை வாகனத்தின் முதல் செயல்விளக்க வாகனம் அக்டோபர் 21 அன்று திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக்கூட்டத்தில் இதன் தயார்நிலை குறித்தும் 2025-ல் தொடங்குவதை உறுதிசெய்வது குறித்தும் ஆய்வுசெய்யப்பட்டது.

சமீபத்திய சந்திரயான் –3 மற்றும் ஆதித்யா எல் 1 திட்டங்கள் உட்பட இந்திய விண்வெளி முன்முயற்சிகளின் வெற்றியைத் தொடர்ந்து, 2035-க்குள்  இந்திய விண்வெளி நிலையம் அமைப்பது மற்றும் 2040-க்குள் சந்திரனுக்கு முதல் இந்தியரை அனுப்புவது உள்ளிட்ட புதிய மற்றும் லட்சிய இலக்குகளை இந்தியா இப்போது இலக்காகக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி அறிவுறுத்தினார்.

இந்த தொலைநோக்குப் பார்வையை நனவாக்க, விண்வெளித் துறை நிலவை ஆய்வு செய்வதற்கான வழித்திட்டத்தை உருவாக்கும். சந்திரயான் திட்டங்கள், அடுத்த தலைமுறை ஏவுகணை (என்.ஜி.எல்.வி) உருவாக்கம், புதிய ஏவுதளம் அமைத்தல், மனிதனை மையமாகக் கொண்ட ஆய்வகங்கள் அமைத்தல் மற்றும் அதனுடன் தொடர்புடைய தொழில்நுட்பங்கள் இதில் அடங்கும்.

வீனஸ் ஆர்பிட்டர் மிஷன் மற்றும் மார்ஸ் லேண்டர் உள்ளிட்ட கிரகங்களுக்கு இடையேயான பயணத்திட்டங்களை மனதில் கொண்டு பணியாற்றுமாறு இந்திய விஞ்ஞானிகளுக்கு பிரதமர் அழைப்பு விடுத்தார்.

இந்தியாவின் திறன்கள் மீது நம்பிக்கை தெரிவித்த பிரதமர் மோடி, விண்வெளி ஆராய்ச்சியில் புதிய உயரங்களை எட்டுவதற்கான தேசத்தின் உறுதிப்பாட்டை வலியுறுத்தினார்.

***

 

ANU/PS/SMB/BS/AG/KPG