Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஒரே பூமி ஒரே சுகாதாரம் – மேன்மையான சுகாதார கவனிப்பு இந்தியா 2023 நிகழ்வில் பிரதமரின் உரை

ஒரே பூமி ஒரே சுகாதாரம் – மேன்மையான சுகாதார கவனிப்பு இந்தியா 2023 நிகழ்வில் பிரதமரின் உரை


மேன்மை தங்கியவர்களே, உலகின் பல நாடுகளைச் சேர்ந்த சுகாதார அமைச்சர்களே, மேற்காசியா, சார்க், ஆசியான், ஆப்பிரிக்க பிராந்தியங்களைச் சேர்ந்த சிறப்புமிகு பிரதிநிதிகளே, உங்கள் அனைவரையும் இந்தியாவிற்கு அன்புடன் வரவேற்கிறேன்.   எனது அமைச்சரவை சகாக்களுக்கும், இந்திய சுகாதார தொழில்துறையின் பிரதிநிதிகளுக்கும் வணக்கம்!

நண்பர்களே,

அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கட்டும். அனைவரும் நோயற்று  இருக்கட்டும். அனைவருக்கும் நல்லதே நடக்கட்டும். துன்பத்தால் யாரும் பாதிக்கப்பட வேண்டாம் என்பது இந்தியாவின் வேதவாக்காக உள்ளது. இது அனைவரையும் உள்ளடக்கிய தொலைநோக்குப் பார்வையாகும். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, உலகளவில்  பெருந்தொற்றுகள் இல்லாத காலத்தில் சுகாதாரத்திற்கான இந்தியாவின் தொலைநோக்குப் பார்வை அனைவருக்கும் பொருத்தமாக இருந்துள்ளது. இன்று நாம் கூறுகின்ற ஒரே பூமி ஒரே சுகாதாரம் என்பது செயல்பாட்டில் ஒரே மாதிரியான சிந்தனையாகும். மேலும் எங்களின் தொலைநோக்குப்பார்வை மனித குலத்திற்கு மட்டுமானது அல்ல. தாவரங்களில் இருந்து விலங்குகள் வரையும், நிலத்தில் இருந்து நதிகள் வரையும் நம்மை சுற்றியுள்ள அனைத்தும் சுகாதாரத்துடன் இருக்கும் போதுதான் நாமும் சுகாதாரமாக இருக்க முடியும் என்ற ஒட்டுமொத்த சூழலையும் இது உள்ளடக்கியதாகும்.

நண்பர்களே,

நோயில்லாமல் இருப்பது நல்ல சுகாதாரத்திற்கு இணையானது என்ற பொதுக்கருத்து உள்ளது. இருப்பினும் சுகாதாரம் குறித்த இந்தியாவின் கண்ணோட்டம் நோய்வாய்படாமல் இருப்பதோடு நின்று விடுவதில்லை. நோய்வாய்படாமல் இருப்பது என்பது  ஆரோக்கியத்தின் ஒரு பகுதிதான். எங்களின் இலக்கு ஆரோக்கியம் மற்றும் அனைவருக்குமான நல்வாழ்வு. எங்களின் இலக்கு உடல், மனம் மற்றும் சமூகத்தின் நல்வாழ்வாகும்.  

நண்பர்களே,

ஜி20 தலைமைத்துவ பயணத்தை ‘ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்’ என்ற மையப்பொருளுடன் இந்தியா தொடங்கியது. இந்த தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்ற உலகளாவிய சுகாதார முறைகள் உறுதியாக இருப்பதன் முக்கியத்துவத்தை நாங்கள் உணர்ந்திருக்கிறோம். இந்தவகையில் ஒரே பூமி ஒரே சுகாதாரம் – மேன்மையான சுகாதார கவனிப்பு இந்தியா 2023 என்பது முக்கியமான செயல்பாடாகும். இது இந்தியாவில் ஜி20 தலைமைத்துவ மையப்பொருளைப் பிரதிபலிக்கிறது. பல நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பிரதிநிதிகள் இங்கே இருக்கிறீர்கள். இது அரசு மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த பங்குதாரர்களின், தொழில்முறையாளர்களின், கல்வித்துறையினரின் மகத்தான பங்கேற்பாகும். இது உலகம் ஒரே குடும்பம் என பொருள்தரும் ‘வசுதைவ குடும்பகம்’ என்ற இந்திய தத்துவத்தின் அடையாளமாகத் திகழ்கிறது.

நண்பர்களே,

ஒட்டுமொத்தமான சுகாதாரம் என்று வரும்போது, இந்தியா பல முக்கியமான சாதகங்களைப் பெற்றிருக்கிறது.  நாங்கள் திறமையாளர்களை கொண்டிருக்கிறோம். தொழில்நுட்பத்தை கொண்டிருக்கிறோம்.  சாதனைகளை பெற்றிருக்கிறோம், பாரம்பரியத்தை கொண்டிருக்கிறோம். இந்திய மருத்துவர்களின் தாக்கம் உலகம் முழுவதும் உள்ளது. இதே போல் இந்திய செவிலியர்கள் மற்றும் கவனிப்பாளர்கள் உலகளவில் நன்கு அறியப்பட்டிருக்கிறார்கள். சுகாதார கவனிப்புக்காக இந்தியாவில் பயிற்சிபெறும் தொழில்முறையாளர்கள் பன்முக அனுபவங்களைப் பெற்றிருக்கிறார்கள்.  இது பல்வேறு சூழ்நிலைகளின் தேவையை பூர்த்தி செய்வதற்கான திறன்களை உருவாக்க அவர்களுக்கு உதவுகிறது. இதனால்தான் இந்திய சுகாதார கவனிப்பு திறமை உலகின் நம்பிக்கையை வென்றிருக்கிறது.

நண்பர்களே,

நூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை பெருந்தொற்று என்பது  பல உண்மைகளை உலகிற்கு நினைவுபடுத்துகிறது. சுகாதார அச்சுறுத்தலை எல்லைகள் தடுத்து நிறுத்துவதில்லை. நெருக்கடியான காலத்தில் நாடுகள் எவ்வாறு சிக்கல்களை எதிர்கொள்கின்றன.  ஆதார வளங்கள் மறுக்கப்படுகின்றன என்பதை  உலகம் காண்கிறது. மருத்துவ அறிவியலில் எவ்வளவு முன்னேற்றத்தைக் கண்டிருக்கிறோம் என்பது முக்கியமல்ல. அது கடைக்கோடி மனிதருக்கும், கடைக்கோடி பகுதிக்கும் பயன்படுவதை உறுதிசெய்ய வேண்டும். இதுபோன்ற தருணத்தில் பல நாடுகள் உண்மையான பங்களிப்பாளரின் முக்கியத்துவத்தை  உணர்ந்தன.  தடுப்பூசிகள், மருந்துகள் ஆகியவற்றின் மூலம் உயிர்காக்கும் இயக்கத்தில் பல நாடுகளுக்கு பங்களிப்பாளராக இருந்ததில் இந்தியா பெருமைப்படுகிறது.  எங்களின் துடிப்புமிக்க  அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவால் தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டன. உலகில்  மிகப்பெரிய மற்றும் அதிவேகமான கொவிட்-19 தடுப்பூசி இயக்கத்திற்குரியதாக நாங்கள் மாறியிருந்தோம். நூற்றுக்கும் அதிகமான நாடுகளுக்கு  கொவிட்-19 தடுப்பூசிகளின் 300 மில்லியன் டோஸ்களை நாங்கள் அனுப்பிவைத்தோம்.  ஒவ்வொரு நாட்டின்  குடிமக்களும் ஆரோக்கியமாக  இருப்பதற்கு  நம்பிக்கையுள்ள நண்பனாக நாங்கள் தொடர்ந்து செயல்படுவோம்.

நண்பர்களே,

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்தியாவின்  கண்ணோட்டம் ஒட்டுமொத்த சுகாதாரம் என்பதை நோக்கியதாக இருந்துள்ளது. தடுப்பு மருத்துவத்திலும், சுகாதார மேம்பாட்டிலும் நாங்கள் மிகப்பெரிய பாரம்பரியத்தை கொண்டிருக்கிறோம்.  யோகா போன்ற நடைமுறைகள் தற்போது உலக இயங்கங்களாக மாறியிருக்கின்றன. இவை நவீன உலகத்திற்கு பண்டைக்கால இந்தியாவின்  கொடையாக இது விளங்குகிறது.  இதே போல் எங்களின் ஆயுர்வேத வைத்தியமுறை ஆரோக்கியம் அளிக்கும் முழுமையான வைத்தியமுறையாகும்.  இது உடல், மன நலன்களை பாதுகாக்கிறது.  சிறுதானியங்களைக் கொண்டுள்ள  எங்களின் பாரம்பரிய உணவுமுறை, உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்துக்கு  உதவுகிறது.

நண்பர்களே,

அரசு நிதியுதவியுடன் உலகின் மிகப்பெரிய காப்பீட்டு திட்டத்தை இந்தியா கொண்டிருக்கிறது. ஆயுஷ்மான் பாரத் திட்டம் 500 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கட்டணமின்றி மருத்துவ சிகிச்சை  பெற வகைசெய்கிறது. ஏற்கனவே  40 மில்லியன் மக்கள்  இதனால் பயனடைந்துள்ளனர். இதனால் குடிமக்கள் சுமார் 7 பில்லியன் டாலர் அளவு பணத்தை  சேமித்துள்ளனர்.

நண்பர்களே,

ஒருங்கிணைந்த, அனைவரையும் உள்ளடக்கிய, நிறுவன ரீதியான செயல்பாட்டுக்குரிய தருணமாகும் இது.  எங்களின் ஜி20 தலைமைத்துவத்தில்  எங்களின் கவனிப்புக்குரிய துறைகளில் ஒன்றாக  இது இருக்கிறது. சுகாதார கவனிப்பை எளிதாகவும், குறைந்த செலவிலும்  வழங்குவது எங்களின் இலக்காகும்.  இது இந்திய குடிமக்களுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகத்திற்கும் பொருந்தும். ஒரே பூமி ஒரே சுகாதாரம் என்ற பொதுவான செயல்திட்டத்தில் உங்களின் பங்களிப்பை நாங்கள் கோருகிறோம்.

***

(Release ID: 1919826)

SM/SMB/AG/KRS