Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஒரு பதவிநிலைக்கு ஒரு ஓய்வூதியம் திட்டம் அமலாக்கம்


பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் கூடிய அமைச்சரவை பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த வீரர்களுக்கான ஒரு பதவிநிலைக்கு ஒரு ஓய்வு திட்டத்தை அமலாக்கம் செய்வதற்கான தனது ஒப்புதலை வழங்கியது. ஒப்புதல் அளிக்கப்பட்ட இந்தத் திட்டத்தின் விவரங்கள் பின்வருமாறு:

1. இந்த வசதி 2014 ஜூலை முதல் தேதியிலிருந்து நடைமுறைப்படுத்தப்படும்.

2. ஒரே பதவிநிலையில் 1.7.2014க்கு முன்பு ஓய்வு பெற்று பென்ஷன் பெற்று வரும் ஓய்வூதியர்களுக்கான ஓய்வூதியம் சீரமைக்கப்படும் 2013ஆம் ஆண்டில் ஓய்வு பெற்ற ஒரே பதவிநிலை மற்றும் ஒரே மாதிரியான சேவைக்காலம் ஆகியவற்றின் அடிப்படையில் உள்ள குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச ஓய்வூதியம் பெற்று வருவோரின் ஓய்வூதியம் சராசரி இதற்கு அடிப்படையாகக் கொள்ளப்படும். இந்த சராசரிக்கும் அதிகமான பென்ஷன் தொகை பெறுவோருக்கு அதே அளவிலான பென்ஷன் பெறுவதற்கான பாதுகாப்பு அளிக்கப்படும்.

3. இந்த வசதியானது குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் போரில் உயிர்நீத்த வீரர்களின் விதவைகள் மற்றும் போரில் ஊனமுற்ற வீரர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் ஆகியவற்றுக்கும் நீட்டிக்கப்படும்.

4. 1954ஆம் ஆண்டின் ராணுவ விதிகளின் 13(3), 1(i), 13(3), 1(iv) அல்லது விதி 16(ஆ) ஆகிய விதிகளின் கீழோ அல்லது இதற்கிணையான கடற்படை அல்லது விமானப் படை பிரிவுகளுக்கான விதிகளின் கீழோ சொந்த விருப்பத்தின் பேரில் இனி பாதுகாப்புப் பணியிலிருந்து விடுவிக்கப்படுவோருக்கு இந்த ஒரு பதவிநிலைக்கு ஒரு ஓய்வூதியம் என்ற நடைமுறை பொருந்தாது. இனி வரும் காலத்தில் மட்டுமே இது நடைமுறைக்கு வரும்.

5. இதற்கான நிலுவைத் தொகையானது நான்கு ஆறுமாதத் தவணைகளில் வழங்கப்படும். எனினும் குடும்ப ஓய்வூதியதாரர்கள், சிறப்பான/தாராளமான வகையில் குடும்ப ஓய்வூதியம் வழங்கப்பெற்றவர்கள், தீரச் செயல்களுக்கான பதக்கம் பெற்றவர்கள் ஆகியோருக்கான நிலுவைத் தொகை ஒரே தவணையில் வழங்கப்படும்.

6. எதிர்காலத்தில் இந்த ஓய்வூதியமானது ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை திருத்தி அமைக்கப்படும்.

7. 14.12.2015 அன்று அமைக்கப்பட்ட பாட்னா உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி நீதியரசர் எல். நரசிம்ம ரெட்டி அவர்கள் தலைமையிலான நீதிக்கான குழு மத்திய அரசு முன்வைத்திருந்த கேள்விகளின் மீதான ஆய்வை நடத்தி தனது அறிக்கையை ஆறு மாதங்களில் வழங்கவிருக்கிறது.

ஒரு படிநிலைக்கு ஒரு பென்ஷன் என்ற இந்தத் திட்டத்தை அமலாக்குவதன் விளைவாக பாதுகாப்புப் படைப் பிரிவுகளைச் சேர்ந்த ஓய்வூதியதாரர்கள்/குடும்ப ஓய்வூதியதாரர்கள் ஆகியோருக்கான பென்ஷன் தொகை அதிகரிக்கும். 7.11.2015 தேதிய ஒரு பதவிநிலைக்கு ஒரு ஓய்வூதியம் என்ற திட்டத்தின் மீதான உத்தரவை அமலாக்குவதில் எழுகின்ற குறைபாடுகளை களைவதில் நீதியரசர் எல். நரசிம்ம ரெட்டி அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள நீதிக்கான குழு உதவி புரியும்.

முதிர்வு காலத்திற்கு முன்னதாகவே ஓய்வு பெற்றவர்கள் உள்ளிட்டு இந்த ஒரு பதவிநிலைக்கு ஒரு பென்ஷன் என்ற திட்டத்தை அமலாக்குவதன் விளைவாக உருவாகும் நிதிச் செலவு என்பது நிலுவைத் தொகையை பொறுத்தவரையில் ரூ. 10925.11 கோடியாகவும், ஒவ்வொரு ஆண்டுக்குமான கூடுதல் நிதிச் செலவு என்பது ரூ. 7488.7 கோடியாகவும் இருக்கும். மார்ச் 31, 2016 வரை இத்திட்டத்தின் கீழ் 15.91 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு முதல் தவணை நிலுவைத்தொகை ரூ. 2,861 கோட் அளவிற்கு வழங்கப்பட்டுள்ளது. சேவை புரிந்த காலம் குறித்த மதிப்பீடு போன்ற தகவல் இடைவெளிகளை நிரப்பிய பிறகு 1.15 லட்சம் ஓய்வூதியதாரர்கள் குறித்த பணிகள் முன்னுரிமை அடிப்படையில் எடுத்துக்கொள்ளும் வகையில் தகவல் சேகரிக்கப்பட்டு வருகிறது.

******