ஒடிசா மாநிலம் சண்டிகோல், கர்நாடகா மாநிலம் பாடூர் ஆகிய இடங்களில் 6.5 எம் எம் டி பெட்ரோலியம் இருப்புகளை கூடுதலாக உருவாக்கும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
27 Jun, 2018
ஒடிசா மாநிலம் சண்டிகோல், கர்நாடகா மாநிலம் பாடூர் ஆகிய இரண்டு இடங்களில் 6.5 மில்லியன் மெட்ரிக் டன் (எம் எம் டி) பெட்ரோலியம் இருப்புகளை கூடுதலாக உருவாக்கும் தளத்தகை பெட்ரோலியம் கையிருப்பு ( எஸ் பி ஆர்) திட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று (27.06.2018) ஒப்புதல் அளித்தது. இந்த இரண்டு எஸ் பி ஆர்-களுக்கான அர்ப்பணிக்கப்பட்ட ஒருமுனை நிறுத்துமிடம் (எஸ் பி எம்) கட்டுமானத்திற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. சண்டிகோல் மற்றும் பாடூரில் அமைய உள்ள எஸ் பி ஆர் வசதி நிலத்தடியிலான பாறைக் குகைகளாக இருக்கும். அவை முறையே 4 எம் எம் டி 2.5 எம் எம் டி திறன்கள் கொண்டதாக இருக்கும். 2017-18 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் கூடுதலாக இரண்டு எஸ் பி ஆர்-கள் அமைக்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது.
கொள்கை அடிப்படையிலான இந்த ஒப்புதலின்படி மத்திய அரசின் பட்ஜெட் ஆதரவு அளவை குறைப்பதற்காக இத்திட்டம் பொதுத்துறை, தனியார்துறை பங்கேற்பு மாதிரியில் செயல்படுத்தப்படும். இதற்கான நிபந்தனைகள், நிதியமைச்சகத்தின் ஆலோசனையின் பேரில் பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு அமைச்சகத்தினால் நிர்ணயிக்கப்படும். சாத்தியமான முதலீட்டாளர்கள் உள்ளிட்ட சந்தைத் தேவைகளை கேட்டறியும் வகையில், பல கூட்டங்களை நடத்தியபின், இந்த நிபந்தனைகள் நிர்ணயிக்கப்படும்.
ஐ எஸ் பி ஆர் எல் ஏற்கனவே 5.33 எம் எம் டி அளவிற்கான இத்தகைய நிலத்தடி பாறைக் குகை சேமிப்புகளை மூன்று இடங்களில் அமைத்துள்ளது. விசாகப்பட்டினத்தில் 1.33 எம் எம் டி திறன் அளவும். மங்களூரில் 1.4 எம் எம் டி திறன் அளவும் பாலூரில் 2.5 எம் எம் டி திறன் அளவும் கொண்ட சேமிப்புகளை அது அமைத்துள்ளது. எஸ் பி ஆர் திட்டத்தின் முதல் கட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த சேமிப்பு தற்போதைய மதிப்பீட்டின்படி இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையில் பத்து நாட்களுக்கான தேவையை வழங்கும் திறன் கொண்டது. 2016-17 நிதியாண்டின் கச்சா எண்ணெய் நுகர்வு அடிப்படையில் இந்தக் கணக்கீடு செய்யப்பட்டது. தற்போது அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ள 6.5 எம் எம் டி–க்கான தளத்தகை பெட்ரோலியம் கையிருப்பு (எஸ் பி ஆர்) வசதியை உருவாக்கி அதன் மூலம் மேலும் 12 நாட்களுக்கான வழங்குதல் திறன் ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. இதனால் இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்புநிலை உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சாண்டிகோல் மற்றும் பாடூரில் இந்த எஸ் பி ஆர்-களுக்கான கட்டுமானப் பணி நடைபெறும் போது ஒடிசா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் குறிப்பிடத்தக்க நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும்.