Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஒடிசாவில் 18-வது வெளிநாடுவாழ் இந்தியர் தின மாநாட்டை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்

ஒடிசாவில் 18-வது வெளிநாடுவாழ் இந்தியர் தின மாநாட்டை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்


ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் 18-வது வெளிநாடுவாழ் இந்தியர்கள் தின மாநாட்டை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை தந்துள்ள பிரதிநிதிகள் மற்றும் வெளிநாடுவாழ் இந்தியர்களை வரவேற்ற திரு மோடி, இந்த தொடக்க பாடல் எதிர்காலத்தில் உலகெங்கிலும் உள்ள பல்வேறு இந்திய புலம் பெயர்ந்தோர் நிகழ்வுகளிலும் இசைக்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார். இந்திய புலம் பெயர்ந்தோரின் உணர்வுகளை வெளிப்படுத்திய அற்புதமான பாடலுக்காக கிராமி விருது பெற்ற கலைஞர் ரிக்கி கெஜ்-ஐயும், அவரது குழுவினரையும் அவர் பாராட்டினார்.

தலைமை விருந்தினரான டிரினிடாட் & டொபாகோ குடியரசின் அதிபர் கிறிஸ்டின் கார்லா கங்காலூவுக்கு அவரது காணொலி செய்தியில் அன்பான வார்த்தைகளை தெரிவித்ததற்கு நன்றி தெரிவித்த பிரதமர், இந்தியாவின் முன்னேற்றம் குறித்து அவர் பேசி வருவதாகவும், அவரது வார்த்தைகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரிடமும் தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும் குறிப்பிட்டார். இந்தியாவில் உணர்வுப்பூர்வமான பண்டிகைகள், ஒன்று கூடல்களுக்கான நேரம் இது என்று குறிப்பிட்ட திரு மோடி, இன்னும் சில நாட்களில் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா தொடங்கும் என்றும், மகர சங்கராந்தி, லோஹ்ரி, பொங்கல், மாக் பிஹு ஆகிய பண்டிகைகள் வரவுள்ளன என்றும் கூறினார். எல்லா இடங்களிலும் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவுகிறது என்றும் அவர் தெரிவித்தார். மகாத்மா காந்தியடிகள், 1915-ம் ஆண்டு இதே நாளில்தான் நீண்ட காலம் வெளிநாட்டில் தங்கியிருந்தபிறகு இந்தியா திரும்பினார் என்பதை நினைவு கூர்ந்த திரு மோடி, இத்தகைய அற்புதமான தருணத்தில் இந்தியாவில் வெளிநாடுவாழ் இந்தியர்களின் வருகை பண்டிகை உணர்வை அதிகரித்துள்ளது என்றும் குறிப்பிட்டார். வெளிநாடுவாழ் இந்தியர்கள் தினத்தின் இந்தப் பதிப்பு மற்றொரு காரணத்திற்காகவும் சிறப்பானது என்று கூறிய அவர், திரு அடல் பிஹாரி வாஜ்பாயின் நூற்றாண்டு கொண்டாடப்பட்ட சில நாட்களுக்குப் பின் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது என்றார். வெளிநாடுவாழ் இந்தியர் தினம் இந்தியாவுக்கும் அதன் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கும் இடையிலான பிணைப்பை வலுப்படுத்தும் தருணமாக மாறியுள்ளது என்று அவர் மேலும் கூறினார். இந்தியா, இந்தியத்தன்மை, நமது கலாச்சாரம், முன்னேற்றம் ஆகியவற்றை நாம் ஒன்றாக கொண்டாடுவதோடு, நமது வேர்களுடனும் இணைவோம் என்று அவர் குறிப்பிட்டார்.

நாம் கூடியிருக்கும் மகத்தான ஒடிசா, இந்தியாவின் வளமான பாரம்பரியத்தின் பிரதிபலிப்பாகும் என்று திரு மோடி பெருமிதம் தெரிவித்தார். ஒடிசாவின் ஒவ்வொரு அடியிலும் நமது பாரம்பரியத்தைக் காண முடியும் என்றும் அவர் கூறினார். வரலாற்றுச் சிறப்புமிக்க உதயகிரி, கந்தகிரி குகைகளுக்கோ அல்லது கொனார்க்கில் உள்ள பிரம்மாண்டமான சூரியக் கோயிலுக்கோ அல்லது தாம்ரலிப்தி, மணிக்பட்னா, பாலூர் போன்ற புராதன துறைமுகங்களுக்கோ செல்லும்போது ஒவ்வொருவரும் பெருமிதம் கொள்வார்கள் என்று பிரதமர் குறிப்பிட்டார். நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன், ஒடிசாவைச்  சேர்ந்த வர்த்தகர்கள், பாலி, சுமத்ரா, ஜாவா போன்ற இடங்களுக்கு நீண்ட கடல் பயணங்களை மேற்கொண்டனர் என்று கூறிய பிரதமர், பாலி யாத்திரையின் நினைவு இன்றும் கூட ஒடிசாவில் கொண்டாடப்படுகிறது என்றார். ஒடிசாவின் முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்று தலமான தௌலி அமைதியின் சின்னமாக விளங்குகிறது என்று அவர் மேலும் கூறினார். வாளின் சக்தியால் உலகம் பேரரசுகளை விரிவுபடுத்திக் கொண்டிருந்தபோது, சாம்ராட் அசோகர் இங்கு அமைதிக்கான பாதையைத் தேர்ந்தெடுத்தார் என்றும் அவர் குறிப்பிட்டார். எதிர்காலம் போரில் அல்ல, புத்தரிடம் உள்ளது என்பதை உலகிற்கு இந்தியா தெரிவிக்க இந்த மரபு ஊக்கமளிக்கிறது என்று கூறிய திரு மோடி, ஒடிசாவுக்கு அனைவரையும் வரவேற்பது தமக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

வெளிநாடுவாழ் இந்தியர்களை தாம் எப்போதும் இந்தியாவின் தூதர்களாக கருதி வருவதாக பிரதமர் தெரிவித்தார். உலகெங்கிலும் உள்ள இந்தியர்களை சந்திப்பதும் உரையாடுவதும் தமக்கு மகிழ்ச்சியானது என்று குறிப்பிட்ட அவர், அவர்களிடமிருந்து தாம் பெறும் அன்பும் ஆசீர்வாதங்களும் மறக்க முடியாதவை என்றார்.

இந்திய வம்சாவளியினருக்கு தமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்த திரு மோடி, உலக அரங்கில் பெருமையுடன் தலை நிமிர்ந்து நிற்க வாய்ப்பளித்ததற்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்தார். கடந்த பத்தாண்டுகளில் பல உலகத் தலைவர்களை தாம் சந்தித்ததாகவும், அவர்கள் அனைவரும் இந்திய வம்சாவளியினர் என்றும் அவர்களின் சமூக மதிப்புகளுக்காகவும், அந்தந்த சமூகங்களுக்கு அவர்கள் செய்த பங்களிப்புக்காகவும் அவர்களைத் தாம் பாராட்டியதாக பிரதமர் குறிப்பிட்டார்.

இந்தியா ஜனநாயகத்தின் தாய் மட்டுமல்ல, ஜனநாயகம், இந்திய வாழ்க்கையின் ஒருங்கிணைந்த பகுதியாகும் என்று பிரதமர் புகழாரம் சூட்டினார். இந்தியர்கள் இயல்பாகவே பன்முகத்தன்மையை ஏற்றுக்கொண்டு, உள்ளூர் விதிகள், பாரம்பரியங்களை மதித்து, தாங்கள் வந்து சேர்ந்துள்ள சமூகங்களுடன் தடையின்றி ஒருங்கிணைகிறார்கள் என்றும் அவர் கூறினார். இந்தியர்கள் தங்களை ஆதரிக்கும் நாடுகளுக்கு நேர்மையாக சேவை செய்கிறார்கள், அவர்களின் வளர்ச்சி மற்றும் செழிப்புக்கு பங்களிக்கிறார்கள். அதே நேரத்தில் இந்தியாவை எப்போதும் தங்கள் இதயங்களுக்கு நெருக்கமாக வைத்திருக்கிறார்கள் என்று திரு மோடி குறிப்பிட்டார். இந்தியாவின் ஒவ்வொரு மகிழ்ச்சியையும், சாதனையையும் அவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடுவதாகவும் அவர் கூறினார்.

21-ம் நூற்றாண்டு இந்தியாவின் நம்பமுடியாத வேகத்தையும், வளர்ச்சியையும் சுட்டிக்காட்டிய பிரதமர், வெறும் 10 ஆண்டுகளில் இந்தியா 250 மில்லியன் மக்களை வறுமையிலிருந்து மீட்டுள்ளது என்றும், உலகின் 10-வது பெரிய பொருளாதாரத்திலிருந்து 5-வது பெரிய பொருளாதாரமாக உயர்ந்துள்ளது என்றும் கூறினார். இந்தியா விரைவில் 3-வது பெரிய பொருளாதார நாடாக மாறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

சந்திரயான் விண்கலம் சிவசக்தி புள்ளியை அடைந்தது,  டிஜிட்டல் இந்தியாவின் வலிமைக்கு உலகளாவிய அங்கீகாரம் போன்ற இந்தியாவின் சாதனைகளை எடுத்துரைத்த திரு மோடி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, விமானப் போக்குவரத்து, மின்சார வாகனம், மெட்ரோ கட்டமைப்பு, புல்லட் ரயில் திட்டங்கள் ஆகியவற்றில் இந்தியாவின் ஒவ்வொரு துறையும் புதிய உச்சங்களை நோக்கி முன்னேறி வருகிறது என்று கூறினார்.  இந்தியா இப்போது உள்நாட்டிலேயே  போர் விமானங்கள், போக்குவரத்து விமானங்களை உற்பத்தி செய்து வருவதை அவர் எடுத்துக்காட்டினார்.  இந்தியாவில் தயாரித்த விமானங்களில் வெளிநாடு வாழ் இந்திய தினத்திற்காக இந்தியாவுக்கு வெளிநாடு வாழ் இந்தியர்கள்  பயணம் மேற்கொள்ளும் எதிர்காலம் பற்றிய கற்பனையை அவர் வெளிப்படுத்தினார்.

சாதனைகள், வாய்ப்புகள் காரணமாக இந்தியாவின் வளர்ந்து வரும் உலகளாவிய பங்களிப்பை சுட்டிக்காட்டிய பிரதமர், இன்றைய இந்தியா தனது சொந்தக் கருத்தை உறுதியாக வலியுறுத்துவது மட்டுமின்றி, உலகளாவிய தெற்கின் குரலையும் வலுவாக ஓங்கி ஒலிக்கிறது என்று கூறினார். ஆப்பிரிக்க ஒன்றியத்தை ஜி-20-ன் நிரந்தர உறுப்பினராக்குவதற்கான இந்தியாவின் முன்மொழிவுக்கு ஒருமனதான ஆதரவு கிடைத்ததை   எடுத்துரைத்த அவர்,  மனிதநேயம்தான் முதலில் என்ற இந்தியாவின் உறுதிப்பாட்டை வலியுறுத்தினார்.

பெரிய நிறுவனங்கள் மூலம் உலக வளர்ச்சிக்கு தொழில் வல்லுநர்கள் பங்களிப்பு செய்வதன் மூலம், இந்திய திறமைக்கு உலகளாவிய அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என்று திரு மோடி வலியுறுத்தினார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடமிருந்து வெளிநாடுவாழ் இந்தியர் விருதைப் பெற்றவர்களுக்கு தனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்த அவர், உலகளாவிய திறன் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், பல தசாப்தங்களுக்கு உலகின் இளைய மற்றும் மிகவும் திறன் வாய்ந்த மக்கள்தொகையாக இந்தியா நீடிக்கும் என்று உறுதியளித்தார். பல நாடுகள் தற்போது திறமையான இந்திய இளைஞர்களை வரவேற்கின்றன என்று கூறிய அவர், வெளிநாடுகளுக்குச் செல்லும் இந்தியர்கள்  திறன், மறுதிறன் மற்றும் திறன்  மேம்பாடு ஆகியவற்றுக்கான தொடர் முயற்சிகள் மூலம் அதிகத் திறன் கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்பதை உறுதி செய்ய மத்திய அரசு கடமைப்பட்டுள்ளது என்றார்.

வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான வசதியின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர், அவர்களின் பாதுகாப்புக்கும், நலனுக்கும் முன்னுரிமை அளித்து வருவதாகக் கூறினார். நெருக்கடியான சூழ்நிலைகளில் புலம் பெயர்ந்தோருக்கு உதவுவது இந்தியாவின் பொறுப்பாகும். இது இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் தன்மையைப் பிரதிபலிக்கிறது என்று அவர் குறிப்பிட்டார். கடந்த பத்தாண்டுகளாக உலகெங்கிலும் உள்ள இந்திய தூதரகங்களும், அலுவலகங்களும் உணர்வுபூர்வமாகவும், ஆக்கப்பூர்வமாகவும் செயல்பட்டு வருவதாக அவர் கூறினார்.

தூதரக வசதிகளைப் பெறுவதற்கு நீண்ட தூரம் பயணம் செய்து பல நாட்கள் காத்திருக்க வேண்டியிருந்த மக்களின் முந்தைய அனுபவங்களை நினைவுகூர்ந்த திரு மோடி, கடந்த இரண்டு ஆண்டுகளில் 14 புதிய தூதரகங்கள், துணைத் தூதரகங்கள் திறக்கப்பட்டதன் மூலம் இந்தப் பிரச்சினைகள் தற்போது தீர்க்கப்பட்டு வருவதாகக் கூறினார். மொரீஷியஸைச் சேர்ந்த 7-வது தலைமுறையைச் சேர்ந்த இந்திய வம்சாவளியினருக்கும் சுரினாம், மார்டினிக், குவாதலூப் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 6-வது தலைமுறையைச் சேர்ந்த இந்திய வம்சாவளியினருக்கும்  வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான அட்டைகள் வழங்கப்படும் வாய்ப்புகள் விரிவுபடுத்தப்படுவதாக அவர் கூறினார்.

உலகெங்கிலும் உள்ள இந்திய வம்சாவளியினரின் குறிப்பிடத்தக்க வரலாற்றை சுட்டிக்காட்டிய பிரதமர், பல்வேறு நாடுகளில் அவர்கள் செய்த சாதனைகள் இந்திய பாரம்பரியத்தின் முக்கியப் பகுதியாகும் என்றார். இந்த ஆர்வம் மிகுந்த ஊக்கமளிக்கும் கதைகள் நமது பகிரப்பட்ட பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும், காட்சிப்படுத்தப்பட வேண்டும், பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தினார். பல நூற்றாண்டுகளுக்கு முன் குஜராத்தைச் சேர்ந்த பல குடும்பங்கள் ஓமனில் குடியேறியது பற்றி மனதின் குரல் நிகழ்ச்சியில் தாம் அண்மையில் தெரிவித்ததை சுட்டிக்காட்டிய திரு மோடி, இவர்களின் 250 ஆண்டுகால வாழ்க்கைப்  பயணம் ஊக்கமளிப்பதாக உள்ளது என்று பாராட்டினார். இந்தச் சமூகம் தொடர்பான ஆயிரக்கணக்கான ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்க ஒரு கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது என்றும் அவர் கூறினார். வாய்மொழி வரலாற்றுத் திட்டம் ஒன்று நடத்தப்பட்டதாகவும், அங்குள்ள சமூகத்தின் மூத்த உறுப்பினர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதாகவும் அவர் தெரிவித்தார். இன்றைய நிகழ்ச்சியில் பல குடும்பங்கள் கலந்து கொண்டது குறித்து அவர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். 

பல்வேறு நாடுகளில் உள்ள புலம்பெயர்ந்தோருடன் இதேபோன்ற முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்த திரு மோடி, கிர்மிடியா சகோதர சகோதரிகளை உதாரணம் காட்டினார். இந்தியாவில் உள்ள கிராமங்கள், நகரங்கள் எங்கிருந்து தோன்றின என்பது பற்றி அறியவும் குடியேறிய இடங்களை அடையாளம் காணவும் ஒரு தரவுத்தளத்தை உருவாக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். அவர்களின் வாழ்க்கையை ஆவணப்படுத்துவதன் மூலம், சவால்களை எவ்வாறு வாய்ப்புகளாக அவர்கள் மாற்றினார்கள் என்பதை திரைப்படங்கள், ஆவணப்படங்கள் வழியாக காட்சிப்படுத்த முடியும் என்று அவர் கூறினார். கிர்மீடியா பாரம்பரியத்தை ஆய்வு   செய்வதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த பிரதமர், இந்த நோக்கத்திற்காக ஒரு பல்கலைக்கழக இருக்கையை நிறுவும் யோசனையையும் முன்வைத்தார். உலக கிர்மீடியா மாநாடுகளை தொடர்ந்து நடத்த வேண்டும் என்று வலியுறுத்திய அவர், இதற்கான  சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து முயற்சிகளை முன்னெடுத்துச் செல்ல தமது குழுவினரை அறிவுறுத்தினார்.

நவீன இந்தியாவானது வளர்ச்சியும் பாரம்பரியமும் என்ற தாரக மந்திரத்துடன் முன்னேறி வருகிறது என்று பிரதமர் கூறினார். ஜி-20 கூட்டங்களின் போது, இந்திய பன்முகத்தன்மையின் முதல் அனுபவத்தை உலகிற்கு வழங்குவதற்காக நாடு முழுவதும் அமர்வுகள் பிரித்து நடத்தப்பட்டன என்று அவர் தெரிவித்தார். காசி-தமிழ் சங்கமம், காசி-தெலுங்கு சங்கமம், சவுராஷ்டிரா-தமிழ் சங்கமம் போன்ற நிகழ்வுகளை அவர் பெருமையுடன் குறிப்பிட்டார். வரவிருக்கும் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, அவரது கருத்துகளை பரப்புவதற்காக திருவள்ளுவர் கலாச்சார மையங்கள் அமைக்கப்படும் என்று பிரதமர் அறிவித்தார். முதல் மையம் சிங்கப்பூரில் தொடங்கப்பட்டுள்ளதாகவும், அமெரிக்காவில் உள்ள ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் இருக்கை நிறுவப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். தமிழ் மொழி, பாரம்பரியம், இந்தியாவின் பாரம்பரியம் ஆகியவற்றை உலகின் அனைத்துப் பகுதிக்கும் கொண்டு செல்வதே இந்த முயற்சிகளின் நோக்கமாகும் என்று திரு மோடி குறிப்பிட்டார்.

இந்தியாவில் உள்ள பாரம்பரிய இடங்களை இணைக்க மேற்கொண்ட நடவடிக்கைகளை எடுத்துரைத்த பிரதமர், ராமாயண எக்ஸ்பிரஸ் போன்ற சிறப்பு ரயில்கள், ராமர், சீதா தொடர்புடைய இடங்களுக்கு சென்று வருவதற்கான வசதிகளை வழங்குகின்றன என்று குறிப்பிட்டார். பாரத் கவுரவ் ரயில்கள் நாடு முழுவதும் உள்ள முக்கியமான பாரம்பரியத் தலங்களை இணைத்துள்ளன. அதே நேரத்தில் ஓரளவு அதிவேக வந்தே பாரத் ரயில்கள் இந்தியாவின் முக்கிய பாரம்பரிய மையங்களை இணைக்கின்றன என்றும் அவர் கூறினார். சுற்றுலா, சமய நம்பிக்கை தொடர்பான 17 இடங்களுக்கு 150 பேர் பயணம் மேற்கொள்ளும் பிரவாசி பாரதிய எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயிலை தொடங்கி வைப்பது பற்றியும் பிரதமர் குறிப்பிட்டார். ஒடிசாவில் உள்ள பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைப் பார்வையிடுமாறு அனைவரையும் கேட்டுக் கொண்ட அவர், பிரயாக்ராஜில் நடைபெறவுள்ள மகா கும்பமேளா பற்றி குறிப்பிட்டு, இந்த அரிய வாய்ப்பை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

1947-ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்ததில் வெளிநாடுவாழ் இந்தியர்களின் குறிப்பிடத்தக்க பங்களிப்பை ஒப்புக் கொண்ட பிரதமர், இந்தியாவின் வளர்ச்சிக்கு வெளிநாடுவாழ் இந்தியர்கள் தொடர்ந்து பங்களிப்பு செய்து வருவதாகவும், பணம் அனுப்புவதில் உலகிலேயே இந்தியாவை முதன்மையாக அவர்கள்  மாற்றுவதாகவும் குறிப்பிட்டார். 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்ற வேண்டும் என்ற இலக்கை அவர் வலியுறுத்தினார். வெளிநாடுவாழ் இந்தியர்களின் நிதிச் சேவைகள், முதலீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் கிப்ட் சிட்டி அமைப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த திரு மோடி, வளர்ச்சியை நோக்கிய இந்தியாவின் பயணத்தை வலுப்படுத்த அதன் பலன்களைப் பயன்படுத்திக் கொள்ள அவர்களை வலியுறுத்தினார். வெளிநாடு வாழ் இந்தியர்களின் ஒவ்வொரு முயற்சியும் இந்தியாவின் முன்னேற்றத்திற்கு பங்களிக்கிறது என்று திரு மோடி கூறினார். பாரம்பரிய சுற்றுலாவின் ஆற்றலை வலியுறுத்திய பிரதமர், இந்தியா அதன் முக்கிய மெட்ரோ நகரங்களுடன் நின்றுவிடாமல், தனது பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை நகரங்களையும் மற்றும் கிராமங்களையும் உள்ளடக்குகிறது என்று குறிப்பிட்ட பிரதமர், சிறிய நகரங்களுக்கும்  கிராமங்களுக்கும் சென்று தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் உலகை இந்தப் பாரம்பரியத்துடன் இணைக்குமாறு வெளிநாடுவாழ் இந்தியர்களை வலியுறுத்தினார். அடுத்த முறை இந்தியாவுக்கு வருகை தரும்போது குறைந்தது ஐந்து இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நண்பர்களையும் உடன் அழைத்து வருமாறு  அவர்களை கேட்டுக்கொண்டார். நாட்டை ஆராயவும் பாராட்டவும் அவர்களை ஊக்குவித்தார்.

இந்தியாவை நன்கு புரிந்துகொள்ள பாரத் கோ ஜானியே விநாடி வினா போட்டியில் வெளிநாடுவாழ் இளைஞர்கள் பங்கேற்க வேண்டும் என்று திரு மோடி வேண்டுகோள் விடுத்தார். இந்தியாவில் கல்வி கற்கும் திட்டம், ஐசிசிஆர் உதவித்தொகை திட்டம் ஆகியவற்றைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார். வெளிநாடுவாழ் இந்தியர்கள் வசிக்கும் நாடுகளிலும் இந்தியாவின் உண்மையான வரலாற்றை பரப்புவதன் முக்கியத்துவத்தை பிரதமர் வலியுறுத்தினார். இந்த நாடுகளில் உள்ள தற்போதைய தலைமுறையினர் இந்தியாவின் வளம், நீண்ட கால அடிமைத்தனம், போராட்டங்கள் குறித்து அறிந்திருக்க மாட்டார்கள் என்று அவர் குறிப்பிட்டார். இந்தியாவின் உண்மையான வரலாற்றை வெளிநாடுவாழ் இந்தியர்கள் உலகத்துடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

இந்தியா தற்போது விஸ்வ பந்து நாடாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்று கூறிய பிரதமர்,  வெளிநாடுவாழ் இந்தியர்கள் தங்களது முயற்சிகளை அதிகரிப்பதன் மூலம் இந்த உலகளாவிய தொடர்பை வலுப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அந்தந்த நாடுகளில், குறிப்பாக உள்ளூர் மக்களுக்காக விருது வழங்கும் விழாக்களை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அவர் பரிந்துரைத்தார். இலக்கியம், கலை, கைவினை, திரைப்படம் மற்றும் நாடகம் போன்ற பல்வேறு துறைகளில் உள்ள முக்கிய நபர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படலாம் என்று பிரதமர் குறிப்பிட்டார். இந்திய தூதரகங்கள், துணைத் தூதரகங்களின் உதவியுடன் சாதனையாளர்களுக்கு சான்றிதழ்களை வழங்குமாறு வெளிநாடுவாழ் இந்தியர்களை அவர் கேட்டுக்  கொண்டார். இது உள்ளூர் மக்களுடன் தனிப்பட்ட தொடர்புகளையும் உணர்ச்சிபூர்வமான பிணைப்பையும் மேம்படுத்தும் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்திய தயாரிப்புகளை உலகளாவியதாக மாற்றுவதில் வெளிநாடுவாழ் இந்தியர்களின் குறிப்பிடத்தக்க பங்கை எடுத்துரைத்த திரு மோடி, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட உணவுப் பொட்டலங்கள், உடைகள் மற்றும் பிற பொருட்களை உள்நாட்டிலோ அல்லது ஆன்லைனிலோ வாங்குமாறும், இந்த தயாரிப்புகளை அவர்களின் சமையலறைகள், வரவேற்பு அறைகள் மற்றும் பரிசுப் பெட்டகங்களில் சேர்த்துக்கொள்ளுமாறும் வலியுறுத்தினார். வளர்ந்த இந்தியாவை உருவாக்க இது ஒரு கணிசமான பங்களிப்பாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

தாய் மற்றும் தாய்நாடு தொடர்பான மற்றொரு வேண்டுகோளை விடுத்த பிரதமர், தாம் அண்மையில் கயானாவுக்குச் சென்றதையும், அங்கு கயானா அதிபருடன் தாயின் பெயரில் ஒரு மரக்கன்று நடும் முன்முயற்சியில் பங்கேற்றதையும் குறிப்பிட்டார். இந்தியாவில் லட்சக்கணக்கான மக்கள் ஏற்கனவே இதைச் செய்து வருவதாக அவர் கூறினார். புலம்பெயர்ந்த இந்தியர்கள் எங்கிருந்தாலும் தங்கள் தாயின் பெயரில் மரக்கன்று நடுமாறு அவர் ஊக்கப்படுத்தினார். அவர்கள் இந்தியாவிலிருந்து திரும்பும்போது, வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தீர்மானத்தை தங்களுடன் எடுத்துச் செல்வார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். அனைவருக்கும் நல்ல ஆரோக்கியம் மற்றும் செல்வத்துடன் வளமான 2025 ஆம் ஆண்டு அமைய வாழ்த்து தெரிவித்து பிரதமர் தமது உரையை நிறைவு செய்தார்.

இந்த நிகழ்ச்சியில் ஒடிசா ஆளுநர் டாக்டர் ஹரி பாபு கம்பபதி, ஒடிசா முதலமைச்சர் திரு மோகன் சரண் மஞ்சி, மத்திய அமைச்சர்கள் திரு எஸ் ஜெய்சங்கர், திரு அஸ்வினி வைஷ்ணவ், திரு பிரல்ஹாத் ஜோஷி, திரு தர்மேந்திர பிரதான், திரு ஜுவல் ஓரம், மத்திய இணை அமைச்சர்கள் திரு ஷோபா கரண்ட்லஜே, திரு கீர்த்தி வர்தன் சிங், திரு பபித்ரா மார்கெரிட்டா ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின்னணி

வெளிநாடுவாழ் இந்தியர்கள் தின மாநாடு என்பது இந்திய அரசின் முதன்மையான நிகழ்வாகும். இது வெளிநாடுவாழ் இந்தியர்களுடன் தொடர்பு கொள்ளவும், ஈடுபடவும், அவர்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளவும் ஒரு முக்கியமான தளத்தை வழங்குகிறது. 18-வது வெளிநாடுவாழ் இந்தியர்கள் தின மாநாடு ஒடிசா மாநில அரசுடன் இணைந்து 2025 ஜனவரி 8 முதல் 10 வரை புவனேஸ்வரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மாநாட்டின் கருப்பொருள் ‘வளர்ச்சியடைந்த இந்தியா திட்டத்திற்கு புலம்பெயர்ந்தோரின் பங்களிப்பு’ என்பதாகும். இந்த மாநாட்டில் பங்கேற்க 50-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த ஏராளமான இந்திய வம்சாவளி உறுப்பினர்கள் பதிவு செய்திருந்தனர்.

வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான சிறப்பு சுற்றுலா ரயிலான பிரவாசி பாரதிய எக்ஸ்பிரஸின் தொடக்க பயணத்தை பிரதமர் தொலை உணர்வு கருவிக் வாயிலாக தொடங்கி வைத்தார். இந்த ரயில், தில்லியில் உள்ள நிஜாமுதீன் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு, மூன்று வார காலத்திற்கு இந்தியாவில் சுற்றுலா மற்றும் மத முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு இடங்களுக்கு பயணிக்கும். வெளிநாடு வாழ் இந்தியருக்கான தீர்த்த தரிசன திட்டத்தின் கீழ் பிரவாசி பாரதிய எக்ஸ்பிரஸ் செலுத்தப்படும்.

—-

TS/SMB/KPG/KR/DL

\