Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா கப்பலில், தளபதிகளின் கூட்டுக் கூட்டத்துக்கு தலைமையேற்றார் பிரதமர்.

ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா  கப்பலில், தளபதிகளின் கூட்டுக் கூட்டத்துக்கு தலைமையேற்றார் பிரதமர்.

ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா  கப்பலில், தளபதிகளின் கூட்டுக் கூட்டத்துக்கு தலைமையேற்றார் பிரதமர்.

ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா  கப்பலில், தளபதிகளின் கூட்டுக் கூட்டத்துக்கு தலைமையேற்றார் பிரதமர்.

ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா  கப்பலில், தளபதிகளின் கூட்டுக் கூட்டத்துக்கு தலைமையேற்றார் பிரதமர்.

ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா  கப்பலில், தளபதிகளின் கூட்டுக் கூட்டத்துக்கு தலைமையேற்றார் பிரதமர்.


பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள், இன்று ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா கப்பலில், கொச்சி கடல் பகுதியில், ஒருங்கிணைந்த கமாண்டர்கள் மாநாட்டில் தலைமையேற்றார்.

ஒரு விமானந்தாங்கிக் கப்பலில், ஒருங்கிணைந்த கமாண்டர்கள் மாநாடு நடைபெறுவது இதுவே முதன் முறை.

ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா கப்பலுக்கு வருகை தரும் முன், ஐ.என்.எஸ். கருடா கப்பலில், கொச்சியில் முப்படைகளின் அணிவகுப்பை ஏற்றுக் கொண்ட பிரதமரை விக்ரமாதித்யா கப்பலில், முப்படைத் தளபதிகளும் வரவேற்றனர்.

மாநாட்டுக்குப் பின்பு, பிரதமர், கடல் மற்றும் வான்படை திறன்களை பார்வையிட்டார். விமானந்தாங்கிக் கப்பலில் இருந்து விமானம் வானில் பறந்து தரையிறங்குவது, ஏவுகணை ஏவுவது, ஹெலிகாப்டர் மற்றும் விமானப்படை விமானங்களின் சாகசம், கடற்படை கமாண்டோக்களின் சாகசம், ஐ.என்.எஸ். விராட் உள்ளிட்ட போர்க்கப்பல்களின் சாகசம் ஆகியவற்றை பிரதமர் பார்வையிட்டார். ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா கப்பலில் இருந்த ராணுவ வீரர்கள், கடற்படை வீரர்கள், விமானப்படை வீரர்கள் ஆகியோரோடு பிரதமர் கலந்துரையாடினார். பிரதமர் அன்று ஆற்றிய உரையின் முக்கிய பகுதிகள் பின்வருமாறு :

பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு மனோகர் பாரிக்கர் அவர்களே, ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை தளபதிகளே.

நமது முப்படைத் தளபதிகளோடு இணைவது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. டெல்லி அல்லாத ஒரு இடத்தில் நாம் சந்திப்பது மகிழ்ச்சி தருகிறது. நீங்களும் ஒரு வேறுபாட்டை உணர்வீர்கள் என்று நம்புகிறேன். அது இந்திய கடற்படையின் விருந்தோம்பலால் மட்டும் அல்ல. இந்திய பெருங்கடலின் தலைமையாகவும், நமது கடற்பகுதி வரலாற்றின் மையமாகவும் கொச்சி விளங்குகிறது. இந்திய வரலாறு கடற்பகுதியால் பெரும் தாக்கத்துக்குள்ளாகி இருக்கிறது. நமது எதிர்கால வளமும், பாதுகாப்பும் இந்தக் கடல் பகுதியில் அமைந்திருக்கிறது. இது உலகத்தின் வளமைக்கும் ஒரு திறவுகோலாக அமைந்திருக்கிறது. இந்த விமானந்தாங்கி கப்பல், நமது கடற்படையின் சக்தியையும், நமது கடற்பகுதி பொறுப்பின் அடையாளமாகவும் விளங்குகிறது.

இந்திய ராணுவம் அதன் வலிமைக்கு மட்டும் பெயர்போனதல்ல. மாறாக அதன் வலிமையை பொறுப்போடு பயன்படுத்துவதற்கும் அது பெயர்பெற்றது. அவை நமது கடல்களையும், எல்லைகளையும் பாதுகாக்கின்றன. அவை நமது தேசத்தை பாதுகாப்பாக வைத்து, நமது மக்களையும் பாதுகாப்பாக வைக்கின்றன. இயற்கை பேரிடரின்போது, அவை மீட்புப் பணிகளோடு நிவாரணங்களும் வழங்கி, நமது மக்களுக்கு நம்பிக்கையையும் அளிக்கின்றன. நமது தேசத்தின் ஆன்மாவை உயர்த்தி, உலகின் நம்பிக்கையை பெறுகின்றன.

சென்னையில் மழையோடு போராடி நதிகளில் இருந்து மக்களை மீட்டனர். நேபாளத்தில் துணிவோடும், கருணையோடும் பணியாற்றினீர்கள். ஏமன் நாட்டில், நேபாளத்தைப் போலவே, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உங்கள் கரங்களை அளித்து காப்பாற்றினீர்கள். நமது படைகள் நமது தேசத்தின் வேற்றுமையில் ஒற்றுமையை உணர்த்துகின்றன. இந்தியாவின் காலத்தைக் கடந்த கலாச்சாரத்தையும் நமது படைகளின் பாரம்பரியத்தையும் இவை உணர்த்துகின்றன. நமது வெற்றி, உங்கள் தலைமையில் இருந்து கிடைக்கிறது. இன்று நமது தேசத்தின் நன்றிகளை நான் உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தியா முன்னேறிச் செல்ல வேண்டும் என்பதற்காக, மிகப்பெரிய தியாகத்தை அமைதியாக செய்தவர்களுக்கு இந்த நேரத்தில் அஞ்சலி செலுத்துகிறேன். வீடுகளை விட்டு, சொந்தங்களை விட்டு, உறவுகளை விட்டு, குடும்பங்களை விட்டு, சமயத்தில் சவப்பெட்டியில் கூட வரக்கூடிய சூழலில், உலகின் கடினமான பிரதேசங்களில் காவல் காக்கும் வீரர்களை இந்த நேரத்தில் நான் நினைவுகூர்கிறேன்.

ஒரு ராணுவ அதிகாரி, அவரது இளமைக்காலத்தில் திறமைக் குறைவால் அல்லாமல், இடமில்லை என்ற காரணத்தால் அடுத்த பதவி உயர்வு கிடைக்காத நிலையை என்னால் உணர முடிகிறது. உங்களது சேவைகளை நினைவுகூர்ந்து, உங்கள் நலனைப் பேணுவது எங்கள் கடமை. இந்த காரணத்தினால்தான், ஒரே நிலை, ஒரே ஓய்வூதியம் என்ற நீண்ட நாட்கள் அமலாக்காமல் இருந்த திட்டத்தினை விரைவாக செயல்படுத்தியுள்ளோம். உங்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில், தேசிய போர் நினைவுச் சின்னத்தையும், அருங்காட்சியகத்தையும் அமைத்துள்ளோம். முன்னாள் ராணுவ வீரர்களுக்கான வாய்ப்புகளையும், அவர்கள் திறனையும் அதிகப்படுத்தி, ஓய்வுக்கு பின்னால் அவர்கள் இன்னும் சிறப்பாக நாட்டுக்கு சேவை செய்யும் வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளோம். உள்நாட்டுப் பாதுகாப்புப் படைகளுக்கும் எனது வாழ்த்துக்கள். அவர்களின் வீரம் மற்றும் சேவையால் ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதம் தோற்கடிக்கப்படுகிறது. இடது சாரி தீவிரவாதமும், வடகிழக்கு தீவிரவாதமும் கட்டுப்படுத்தப்பட்டு அப்பிராந்தியங்கள் அமைதியாக இருக்கின்றன. நாகா பிரச்சினையில் ஒரு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியதற்காக பேச்சுவார்த்தை நடத்தியவர்களுக்கு எனது பாராட்டுக்கள்.

இந்தியா ஒரு உற்சாகமான மாற்றத்தை சந்தித்து வருகிறது. இந்தியாவில் நம்பிக்கையின் அலை வீசுகிறது. சர்வதேச அளவில் இந்தியா மீதான ஆர்வமும் நம்பிக்கையும் அதிகரித்துள்ளது. உலகில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக மாறியுள்ளோம். நமது பொருளாதாரம் ஒரு நிலையான பாதையில் சென்று கொண்டிருக்கிறது.

நமது தொழிற்சாலைகளில் வேலைக்கான ஆரவாரம் தெரிகிறது. நமது எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, அடுத்த தலைமுறைக்கான உட்கட்டமைப்பை ஏற்படுத்தி வருகிறோம். வெளிநாட்டு முதலீடுகள் அதிகரித்து, தொழில் செய்ய ஏற்ற இடமாக இந்தியா முன்னேறி வருகிறது. ஒவ்வொரு குடிமகனும் எதிர்கால வாய்ப்புகளை எண்ணி, அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய முடிகிறது. இந்தியாவின் பாதுகாப்புக்கும், வளத்துக்கும் இது மிக முக்கியம்.

பரஸ்பரம் சார்ந்து வாழ வேண்டிய ஒரு உலகில், இந்தியாவின் மாற்றம், பல்வேறு உலக நாடுகளுடனான கூட்டுறவினால் ஏற்படுகிறது. இதுதான் நமது பாதுகாப்பு. நமது வெளிநாட்டுக் கொள்கையில் ஒரு தீவிரமும், நோக்கமும் உருவாகி இருக்கிறது. நமது நீண்ட நாள் நட்பு நாடுகளான ஜப்பான், கொரியா மற்றும் ஆசியான் நாடுகளுடனான நமது உறவு பலப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா, மங்கோலியா, பசிபிக் தீவுகள் போன்ற பிராந்தியங்களில் புதிய கதவுகளை திறந்துள்ளோம். இந்திய பெருங்கடல் பகுதியில் நமது வீச்சை அதிகரித்து நமது கடல் பாதுகாப்பை அதிகரித்துள்ளோம். ஆப்பிரிக்காவுடனான நமது உறவை உயர்த்தியுள்ளோம். மத்திய ஆசியாவில் நமது பழைய தொடர்புகளை புதுப்பித்துள்ளோம். மேற்காசியா மற்றும் வளைகுடா பிராந்தியத்தில் நமது உறவுகளை மேம்படுத்தியுள்ளதோடு, ஈரானுடனும் நமது உறவை பலப்படுத்தியுள்ளோம். ரஷ்யா நமக்கு பலமளிக்கும் நாடாக எப்போதும் இருந்து வந்துள்ளது. இது நமது எதிர்காலத்துக்கு மிக முக்கியம்.

அமெரிக்காவோடு பாதுகாப்புத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நமது கூட்டுறவை மேம்படுத்தியுள்ளோம். ஐரோப்பாவுடனான நமது கூட்டுறவு ஆழப்பட்டுள்ளது. உலகெங்கும் உள்ள நாடுகள், இந்தியாவை ஒரு பிரகாசமான பொருளாதார மண்டலமாக மட்டும் பார்க்கவில்லை. உலக நாடுகளுக்கான அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கான நங்கூரமாக இந்தியா பார்க்கப்படுகிறது. தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்துக்கு எதிராக உலகம் போராடிக் கொண்டிருக்கையில், எல்லா பகுதிகளில் இருந்தும், இஸ்லாமிய உலகம் உட்பட, இந்தியாவின் கூட்டுறவை கோருகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, நமது அருகாமை பகுதியே நமது எதிர்காலத்துக்கும், உலகில் நமக்கென்று ஒரு இடத்துக்கும் முக்கியமாக அமைகிறது. ஆனால் நமது அருகாமை பாதுகாப்பு சவால்களோடு கூடிய ஒரு பகுதி.

நாம் தீவிரவாதத்தையும், எல்லை விதிமீறல்களையும், கட்டுக்கடங்காத அணு ஆயுத சேகரிப்புகளையும், எல்லை மீறல்களையும், ராணுவ நவீனத்துவத்தையும், விரிவாக்கலையும் சந்தித்து வருகிறோம். மேற்காசிய நிலையின்மையின் நிழல் நீளமாகிக் கொண்டே வருகிறது. இது தவிர, நமது பிராந்தியம் அரசியல் நிலையின்மையாலும், பலவீனமான அமைப்புகளாலும், உள்நாட்டு குழப்பங்களாலும் பாதிக்கப்பட்டுள்ளது. பெரிய நாடுகளும், நமது பிராந்தியத்திலும், நமது கடற்பகுதியிலும் அவர்களின் நடவடிக்கைகளை அதிகரித்துள்ளன.

மாலத்தீவு மற்றும் இலங்கை கடற்பகுதி முதல், நேபாளம் மற்றும் பூட்டான் மலைப்பகுதி வரை நமது நலன்களையும் உறவுகளையும் பாதுகாக்க நாம் பாடுபட்டு வருகிறோம். பங்களாதேஷுடனான நமது எல்லை ஒப்பந்தம் இரு நாட்டு உறவுகளையும், கூட்டுறவையும் மேம்படுத்தியுள்ளது. பாகிஸ்தானோடு பேச்சுவார்த்தை நடத்தி, தீவிரவாதத்துக்கு ஒரு முடிவு கட்டி, அமைதியான உறவுகளை கட்டி, கூட்டுறவை மேம்படுத்தி, ஸ்திரத்தன்மையை அதிகப்படுத்தி, இப்பிராந்தியத்தில் வளத்தை அதிகப்படுத்துவதன் மூலம், வரலாற்றில் ஒரு புதிய திருப்பத்தை உருவாக்க விரும்புகிறோம்.

இந்தப் பாதையில் பல தடைகளும் சவால்களும் உள்ளன. ஆனால், அமைதியின் பலன்கள் அதிகம் என்பதாலும், நமது குழந்தைகளின் எதிர்காலம் முக்கியம் என்பதாலும், இந்த முயற்சிகள் முக்கியமானவை.

அவர்களின் நோக்கத்தை சோதித்து நமது பாதையை தீர்மானிப்போம். இதற்காக, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அளவிலான பேச்சுவார்த்தைகளை தொடங்கி, பாதுகாப்பு நிபுணர்களை நேருக்கு நேராக பேச வைத்து வருகிறோம். அதே நேரத்தில் நமது விழிப்புணர்வை ஒரு நொடியும் கைவிடாமல், தீவிரவாதம் தொடர்பாக அளிக்கப்பட்ட உறுதிமொழிகள் எந்த அளவுக்கு நிறைவேற்றப்பட்டள்ளன என்பதை கவனித்து வருகிறோம்.

ஆப்கானிய மக்கள் ஒரு ஒன்றிணைந்த, அமைதியான, வளமான, ஜனநாயக நாட்டை உருவாக்குவதற்கு நாம் உதவி செய்ய உறுதி பூண்டுள்ளோம். நமது பொருளாதார வளங்களின் முழு பலனை அடைய, சீனாவுடனான நமது உறவை மேலும் பலப்படுத்தி வருகிறோம். தீர்க்கப்படாமல் உள்ள பிரச்சினைகளை தீர்த்து, எல்லையில் ஸ்திரத்தன்மையை நிலைநாட்டி, பரஸ்பர நம்பிக்கையை வளர்த்து, நமது அருகாமை பிராந்தியத்தில் நம்பிக்கையை உருவாக்க முயன்று வருகிறோம். இந்தியாவும் சீனாவும், இரு நாடுகளின் பொறுப்புகளையும், நலன்களையும் உணர்ந்து, இரு நாட்டு உறவுகளின் சிக்கல்களை புரிந்து, இணைந்து வளர முடியும்.

நமது பாதுகாப்பு சக்தியினை வளர்த்து, உட்கட்டமைப்பை மேம்படுத்தி, அண்டை நாடுகளுடனான உறவுகளை பலப்படுத்தி, பிராந்திய மற்றும் உலகளாவிய கூட்டுறவை மேம்படுத்தி, கடற்பாதுகாப்பை பலப்படுத்தி, தொடர்ந்து பணியாற்றுவோம்.

வேகமாக மாறி வரும் உலகில், இந்தியா பழைய மற்றும் புதிய ஆபத்துகளை சந்தித்து வருகிறது. நமது சவால்கள், நிலம், கடல் மற்றும் வான்வெளியில் உள்ளன. அந்த ஆபத்துகள், தீவிரவாதம் முதல், அணு ஆயுத ஆபத்துகள் வரை தொடர்கின்றன. நமது பொறுப்புகள் நமது கடல் எல்லை மற்றும் நில எல்லைகளோடு நிற்பதில்லை. அவை நமது நலன்கள், நமது மக்கள் மற்றும் உலகளாவிய அளவில் எதிர்பாராத ஆபத்துகளை கொண்டுள்ளன.

உலகம் பெரிய மாற்றங்களை சந்திக்கையில், பொருளாதாரத்தின் தன்மைகள் மாறுகையில், தொழில்நுட்பம் முன்னேறுகையில், பிரச்சினைகளின் வடிவமும், போர்களின் நோக்கமும் மாறுகின்றன. இணையம் மூலமான ஆபத்துகள் போல பழைய பகைகள் புதிய வடிவங்களில் வரலாம். அதே நேரத்தில் புதிய தொழில்நுட்பம், இந்த சவால்களை பயனுள்ள வகையில் சந்திக்க வாய்ப்பளிக்கிறது. ஆகையால் நாம், தற்காலத்துக்கு தயாராகவும், எதிர்காலத்துக்கு தயார்ப்படுத்திக் கொள்ளவும் வேண்டும்.

இந்திய பாதுகாப்புப் படைகள், எத்தகைய அச்சுறுத்தல்களையும் சமாளிக்க தயாராக இருக்கின்றன. நமது அணு ஆயுத கொள்கையின்படி, நமது ஆபத்துகால தயார்நிலைகள் நம்பிக்கைக்கு உரியதாகவும், நமது அரசியல் நிலைபாடும் தெளிவாக உள்ளது. ராணுவத்துக்கான ஆயுதங்களை வாங்குவது துரிதப்படுத்தப்பட்டுள்ளது. நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் பல திட்டங்களை துரிதப்படுத்தியுள்ளோம். இப்போது உள்ள குறைகளை நிவர்த்தி செய்து, பழையனவற்றை மாற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம். நமது எல்லைப்பகுதி உட்கட்டமைப்பை விரிவாக்கி, நமது படைகளின் சக்தியையும், ஆயுதங்களையும் மேம்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். எல்லைப்பகுதியில் நாம் அமைக்கும் ரயில் பாதைகள் இதன் ஒரு பகுதியே.

இந்தியாவில் ஆயுதம் மற்றும் பாதுகாப்புத் தளவாட தயாரிப்புகளை கொள்கை ரீதியான மாற்றங்களினால் மாறுதலுக்கு உள்ளாக்கியிருக்கிறோம். நமது பொதுத்துறை நிறுவனங்கள் இந்த சவால்களுக்கு தயாராகி வருகின்றன. தனியார் துறையும் உற்சாகமாக பங்கெடுக்கிறது.

மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம், போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், சரக்கு விமானங்கள், ஆளில்லா விமானங்கள், விமான தொழில்நுட்பங்கள் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பங்களோடு, பல்வேறு வெளிநாட்டு பாதுகாப்பு நிறுவனங்களும் ஆர்வமாக பங்கெடுத்து வருகின்றன.

நமது உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்தாமல் நம்மை ஒரு பாதுகாப்பான தேசமாகவும், ஒரு சக்திவாய்ந்த ராணுவமாகவும் அழைத்துக் கொள்ள முடியாது. இது மூலதனச் செலவுகளையும் குறைக்கும். மேலும், தொழில் வளர்ச்சிக்கும், வேலை வாய்ப்புக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் இது ஒரு முக்கிய கிரியாவூக்கியாக இருக்கும்.

நமது வாங்கும் கொள்கை மற்றும் நடைமுறைகளை விரைவில் சீரமைக்க இருக்கிறோம். நமது கொள்கைகள், பாதுகாப்புத் தொழில்நுட்பத்தில் ஒரு வலுவான ஆயுதமாக இருக்கும். பாதுகாப்புத் தொழில்நுட்பம், இந்தியாவின் அனைத்து அமைப்புகளில் இருந்தும் திறன்களை சேகரிக்கும் ஒரு துறையாக மாறும்.

மேக் இன் இந்தியா திட்டத்தின் வெற்றிக்கு ராணுவப் படைகள் ஒரு முக்கிய காரணமாக இருக்கும். உங்களின் உள்ளுர்மயமாக்கல், குறிப்பாக கடற்படை மற்றும் விமானப்படையின் நடவடிக்கைகள் எனக்கு நம்பிக்கையை தருகின்றன. உள்ளுரில் பாதுகாப்பு உபகரணங்கள் வாங்குவது அதிகரிக்க வேண்டும். இதற்கான இலக்குகள் தெளிவாக நிர்ணயிக்கப்பட வேண்டும். தேவைப்படும் பொருட்களுக்கான விபரங்கள் தெளிவாக்கப்பட வேண்டும். இப்பொருட்களின் வடிவமைப்பு, கண்டுபிடிப்பு, வளர்ச்சி போன்றவற்றில், இவற்றை களங்களில் பயன்படுத்தும் படைகளின் பங்களிப்பு அதிகம் இருக்க வேண்டும்.

எல்லாவற்றுக்கும் மேலாக, நமது படைகள் எதிர்காலத்துக்கு தயாராக வேண்டும். அது ஒரே காரியத்தை மீண்டும் மீண்டும் செய்வதனாலோ, அல்லது பழைய காலத்து திட்டங்களை துண்டிக்கப்பட்ட நிதிச் சுமையின் அடிப்படையில் பிடிவாதமாக பிடித்துக் கொண்டிருப்பதாலோ முடியாது.

கடந்த வருடத்தில் நான் முன்னேற்றங்களை கண்டுள்ளேன். ஆனால், நமது படைகளும், அரசும், அவர்களது நம்பிக்கைகள், கோட்பாடுகள், இலக்குகள் மற்றும் தந்திரங்களை சீர்திருத்த வேண்டும். மாறி வரும் உலகத்திற்கு ஏற்றார்ப்போல நமது இலக்குகளையும் உபகரணங்களையும் மாற்ற வேண்டும். உலகின் பெரிய நாடுகள் படைகளின் அளவை குறைத்து, தொழில்நுட்பத்தில் அதிக முதலீடுகள் செய்கையில், நாம் இன்னும் நமது படைகளை விரிவாக்குவதிலேயே கவனமாக இருக்கிறோம்.

நமது படைகளின் நவீனமயமாக்கலும், விரிவாக்கமும் கடினமான பணியாக இருந்தாலும், அது அவசியமானதொரு இலக்கு. நமது படைகள், மனித வீரம் மட்டும் இல்லாமல், துடிப்பாகவும், விரைவாகவும், தொழில்நுட்பம் சார்ந்ததாகவும் இருக்க வேண்டும். விரைவான போர்களை வெல்லும் வலிமை நமக்கு வேண்டும். நீண்டகால போர்களை நம்மால் சமாளிக்க முடியாது. நமது நிதிகளை தளவாடங்களில் முடக்கி வைக்கும் கொள்கைகளை மறு ஆய்வு செய்ய வேண்டும். நமது பாதுகாப்பு எல்லைகளும், பொறுப்புகளும், எல்லைகளையும், கடற்கரையையும் கடந்து செல்வதால், நமது படைகளை அதற்கேற்றவாறு தயார் செய்ய வேண்டும்.

டிஜிட்டல் தொழில்நுட்பத்தையும், விண்வெளி தொழில்நுட்பங்களையும் நமது படைகளின் சக்தியோடு இணைக்க வேண்டும். மேலும், அவைதான் முதல் தாக்குதலுக்கு உள்ளாகும் என்பதால், அவற்றை பாதுகாக்கவும் தயாராக வேண்டும். நமது இணைப்புகள், தடையில்லாமல் அனைத்து துறைகளோடும் இணைக்கப்பட்டு, துல்லியமாகவும், தெளிவாகவும் செயல்பட வேண்டும்.

நமது ராணுவப் படைகளின் கட்டமைப்பை நவீனமயமாக்குவதில் சற்றே தாமதமாக உள்ளோம். இதை உடனடியாக விரைவுபடுத்த வேண்டும். நமது படைகளின் இணைப்பை அனைத்து மட்டங்களிலும் உயர்த்த வேண்டும். பல்வேறு நிறங்களை நாம் அணிந்திருந்தாலும், நமது கொள்கையும் கொடியும் ஒன்றே. நமது படைகளின் இணைப்புத் தன்மையே தற்போதைய தேவை.

மூத்த ராணுவ அதிகாரிளுக்கு, முப்படைகளிலும் அனுபவமும், தொழில்நுட்பம் சார்ந்த சூழலின் தாக்கமும் அனைத்து சவால்களையும் – தீவிரவாதம் முதல் தந்திரமானது வரை – சந்திக்க தயாராக வேண்டும். போர்க்களத்தில் மட்டுமல்லாமல், அனைத்து பாதுகாப்பு தளங்களிலும் நமது படைகளை வழிநடத்தக் கூடிய ராணுவத் தளபதிகள் நமக்கு வேண்டும். அடுத்தவர்களின் அனுபவங்களில் இருந்து நாம் கற்றுக் கொண்டாலும், நமது அமைப்புகளையும், முறைகளையும் நாமே உருவாக்க வேண்டும். ஒரு தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகம் விரைவில் உருவாக்கப்படும்.

பாதுகாப்பு மேலாண்மையில் சீர்திருத்தங்கள் வேண்டும். கடந்த காலத்தில் பரிந்துரைக்கப்பட்ட பாதுகாப்பு சீர்திருத்தங்கள் செயல்படாமல் போனது, வருத்தமளிக்கக் கூடிய விஷயம். நான் இதை விரைவுபடுத்துவேன். நமது கடற்பகுதி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும், நமது திறன்களை வளர்த்து, அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் உருவாக்க ஒரு முழுமையான தந்திரம் நமக்கு வேண்டும்.

ஐக்கிய நாடுகள் அமைதிப் படைகளின் மூலமாக அமைதிப் பணிகளில் ஈடுபட்டுள்ளோம். நீண்ட தூரத்தில் உள்ள தீவுகளுக்கு மருத்துவக் கப்பல்களை அனுப்புவதன் மூலமும், இதர ராணுவங்களோடு உறவுகளை பேணுவதன் மூலமும் நாம் அமைதியின் தூதுவர்களாக மாற முடியும்.

முடிவாக, நமது நாட்டை மாற்றுவதற்கு, ஒவ்வொரு அமைப்பும் மாற வேண்டும். அனைத்து அமைப்புகளும் ஒரே அடியில் பயணிக்கையில் நமது தேசம் முன்னேறும். செலவினங்களின் சீர்திருத்தத்திலோ, சுத்தமான மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியிலோ, நீங்கள் முன்னே நின்று வழிநடத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். நீங்கள் மாறுகையில், உங்களின் தேவைகளை பூர்த்தி செய்து உங்களை தயார் நிலையில் வைத்திருப்போம். நமது பொருளாதாரம் வளர வளர, நாம் நம்மை பாதுகாக்க மேலும் தயாராவோம்.

உங்களின் பாதுகாப்பான கரங்களில் இருக்கிறோம் என்ற நம்பிக்கையில், இந்தியா அதன் கனவுகளை நோக்கிச் செல்கிறது. இந்த ஆண்டு இரண்டு உலகப்போர் மற்றும் 1965 போர்களின் நினைவு ஆண்டு. இந்த ஆண்டு வறுமையை ஒழிப்பதற்காகவும் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளவும் ஐக்கிய நாடுகள் அவையின் தலைமையில் மனிதகுலம் ஒன்றிணைந்த ஆண்டு. கடந்த கால துயர நிகழ்வுகளின் நினைவுகளோடு, ஒரு மேம்பட்ட உலகத்துக்கான ஒன்றிணைந்த முயற்சியில், நமது மனித குலத்தின் ஆபத்துகள் மற்றும் முன்னேற்றங்கள் நிறைந்த வரலாற்றை நினைவுகூர்கிறோம். சீருடையில் உள்ள ஆண் பெண்களின் பொறுப்புகளையும் நினைவுகூர்கிறோம். அமைதிக்கான பணியை நினைவு கூர்கிறோம். முன்னேற்றத்தின் அணிகலன்களாக மாற வேண்டும் என்று உறுதி கொள்கிறோம்.

அந்த நோக்கத்தில்தான் நமது படைகளும் உள்ளன என்பதை நான் அறிவேன். உலகில் தனக்கான இடத்தை இந்தியா அடைய நீங்கள் உதவுவீர்கள் என்று நம்புகிறேன்.

நன்றி.

***