Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமருடன் சந்திப்பு


ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதமர் திரு. நரேந்திர மோடியை, புதுதில்லி எண்.7, லோக் கல்யாண் மார்கில் இன்று சந்தித்தனர். தங்களது பதவிக்காலத்தின் தொடக்கத்திலேயே இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ளும் அளவிற்கு, முக்கியத்துவம் அளித்து நட்புறவு பாராட்டும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்தார்.

ஐரோப்பிய ஒன்றியத்துடனான இந்தியாவின் நட்புறவு, பகிர்ந்து கொள்ளப்பட்ட நலன்கள் மற்றும் ஜனநாயகத்தின் நன்மதிப்பு மீதான பொதுவான உறுதிப்பாடு போன்றவற்றின் அடிப்படையில் அமைந்தது என்று பிரதமர் குறிப்பிட்டார்.

நியாயமான, சமச்சீரான, பரந்த அளவிலான வர்த்தக மற்றும் முதலீட்டு ஒப்பந்தத்தை விரைவில் நிறைவு செய்ய தமது அரசு முன்னுரிமை அளிப்பதாக அவர் கூறினார். பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்களில் ஐரோப்பிய ஒன்றியத்துடனான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது பற்றி குறிப்பிட்ட பிரதமர், பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையில் சர்வதேச அளவில் நெருங்கிய ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். சர்வதேச சூரியசக்தி கூட்டணி, உலக அளவிலான பங்குதாரராக வளர்ந்து வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஐரோப்பிய நாடாளுமன்ற தூதுக்குழுவினரின் இந்திய பயணத்தை வரவேற்ற பிரதமர், இக்குழுவினர் ஜம்மு-காஷ்மீர் உட்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பயனுள்ள வகையில் பயணம் மேற்கொண்டிருக்கக் கூடும் என நம்பிக்கை தெரிவித்தார். ஜம்மு-காஷ்மீர் பயணம், இக்குழுவினருக்கு ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக் பிராந்தியங்களின் கலாச்சார மற்றும் மதரீதியான பன்முகத்தன்மையை தெளிவாக அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக அமைந்ததுடன், அந்தப் பிராந்தியத்தின் மேம்பாடு மற்றும் ஆளுகைக்கான முன்னுரிமைகளை பற்றிய ஒரு தெளிவான கண்ணோட்டத்தை அளித்திருக்கும் என்றும் தெரிவித்தார்.

தொழில் தொடங்குவதற்கு உகந்த நாடுகளின் பட்டியலில் 2014-ல், 142-வது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது 63-வது இடத்திற்கு முன்னேறி இருப்பதையும் பிரதமர் சுட்டிக்காட்டினார். பரப்பளவு, மக்கள் தொகை மற்றும் பன்முகத் தன்மை மிகுந்த இந்தியாவில், இது ஒரு மாபெரும் சாதனை என்றும் அவர் கூறினார். மக்கள் தாங்கள் விரும்பும் பாதையில் செல்லக்கூடிய அளவிற்கு, தற்போதைய ஆட்சி நடைமுறைகள் வகை செய்வதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்திய மக்கள் அனைவரும் எளிதாக வாழ்க்கை நடத்துவதை உறுதி செய்வதில் அரசு கவனம் செலுத்தி வருவதையும் பிரதமர் சுட்டிக்காட்டினார். தூய்மை இந்தியா மற்றும் ஆயுஷ்மான் பாரத் உள்ளிட்ட மத்திய அரசின் முக்கியத் திட்டங்கள் பெரும் வெற்றி பெற்றிருப்பதையும் அவர் எடுத்துரைத்தார். 2025-க்குள் காசநோயை முற்றிலும் ஒழிப்பது என்ற இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய அவர், உலகளவிலான இலக்கிற்கு 5 ஆண்டுகள் முன்கூட்டியே இந்தியா இந்த சாதனையைப் படைக்கும் என்றும் தெரிவித்தார். சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்குகளை அதிகரிப்பது மற்றும் ஒருமுறை மட்டும் உபயோகிக்கக் கூடிய பிளாஸ்டிக்கிற்கு எதிரான இயக்கங்களை செயல்படுத்துவதில் அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளையும் அவர் எடுத்துரைத்தார்.

*****