Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஐரோப்பிய ஆணையத்தின் தலைவருடனான அமர்வில் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆற்றிய தொடக்க உரையின் தமிழாக்கம் (பிப்ரவரி 28, 2025)

ஐரோப்பிய ஆணையத்தின் தலைவருடனான அமர்வில் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆற்றிய தொடக்க உரையின் தமிழாக்கம் (பிப்ரவரி 28, 2025)


மதிப்பிற்குரியவர்களே,

உங்கள் அனைவரையும் இந்தியாவுக்கு அன்புடன் வரவேற்கிறேன். ஐரோப்பிய யூனியன் ஆணையர்கள் ஒரு நாட்டுடன் இவ்வளவு பரந்த அளவில் ஈடுபாடு கொண்டிருப்பது முன் எப்போதும் இல்லாதது.

எனது அமைச்சர்கள் பலர் இந்த எண்ணிக்கையில் இருதரப்பு பேச்சு வார்த்தைகளுக்காக ஒன்று கூடுவது இதுவே முதல் முறை. 2022-ம் ஆண்டில் ரைசினா உரையாடலில் இந்தியாவும் ஐரோப்பிய யூனியனும் இயற்கையான கூட்டாளிகள் என்று நீங்கள் கூறியது எனக்கு நினைவிருக்கிறது. இந்தியாவுடனான உறவுகளை வலுப்படுத்துவதும், உற்சாகப்படுத்துவதும் வரும் பத்தாண்டுகளில் ஐரோப்பிய யூனியனின் முன்னுரிமையாக இருக்கும்.

இப்போது, உங்கள் புதிய பதவிக்காலத்தின் தொடக்கத்தில் நீங்கள் இந்தியாவுக்கு வருகை புரிந்துள்ளீர்கள். இது இந்தியாவுக்கும் ஐரோப்பிய யூனியனுக்கும் ஒரு மைல்கல் தருணம் ஆகும்.

மதிப்பிற்குரியவர்களே,

உலகம் தற்போது முன்னெப்போதும் இல்லாத மாற்றத்தைச் சந்தித்து வருகிறது. செயற்கை நுண்ணறிவு, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் ஆகியவை சமூக-பொருளாதார மாற்றங்களுக்கு வழிவகுக்கின்றன.

புவிசார் பொருளாதார – அரசியல் சூழ்நிலைகள் வேகமாக மாறி வருகின்றன. பழைய சமன்பாடுகள் உடைந்து கொண்டிருக்கின்றன. இதுபோன்ற நேரங்களில், இந்தியாவுக்கும் ஐரோப்பிய யூனியனுக்கும் இடையிலான ஒத்துழைப்பு முக்கியமானதாகிறது.

ஜனநாயக மாண்புகள், சுயாட்சி, விதிகள் ஆகியவற்றின் அடிப்படையிலான உலக ஒழுங்கில் பகிரப்பட்ட நம்பிக்கை இந்தியாவையும் ஐரோப்பிய யூனியனையும் ஒன்றிணைக்கிறது. இருதரப்பும், பன்முகத்தன்மை கொண்ட சந்தைப் பொருளாதாரங்களாகும். ஒரு வகையில் நாங்கள் இயற்கையான கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கூட்டாளிகள்.

மதிப்பிற்குரியவர்களே,

இந்தியாவும் ஐரோப்பிய யூனியனும் உத்திசார் ஒத்துழைப்பின் இருபது ஆண்டுகளை நிறைவு செய்துள்ளன. உங்களது வருகையின் மூலம், அடுத்த பத்தாண்டுகளுக்கான அடித்தளத்தை நாங்கள் அமைக்கிறோம்.

இந்தச் சூழலில், இரு தரப்பினரும் காட்டிய குறிப்பிடத்தக்க அர்ப்பணிப்பு பாராட்டத்தக்கது. கடந்த இரண்டு நாட்களில் சுமார் இருபது அமைச்சர்கள் நிலையிலான கூட்டங்கள் நடந்துள்ளன.

வர்த்தக – தொழில்நுட்ப கவுன்சில் கூட்டமும் இன்று காலை வெற்றிகரமாக ஏற்பாடு செய்யப்பட்டது. இருதரப்புக் குழுவினரும் கூறிய யோசனைகள் மதிப்புமிக்கவை.

மதிப்பிற்குரியவர்களே,

ஒத்துழைப்புக்கான சில முன்னுரிமைத் துறைகளை அடையாளம் காண விரும்புகிறேன்.

 

முதலாவது வர்த்தகம் – முதலீடு. பரஸ்பர நன்மை பயக்கும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தையும், முதலீட்டு பாதுகாப்பு ஒப்பந்தத்தையும் விரைவில் முடித்து வைக்க வேண்டியது அவசியம்.

இரண்டாவது, விநியோகச் சங்கிலியை வலுப்படுத்துவது. மின்னணுவியல், செமிகண்டக்டர்கள், தொலைத்தொடர்பு, பொறியியல், பாதுகாப்பு, மருந்து போன்ற துறைகளில் நமது திறன்கள் ஒன்றையொன்று நிறைவு செய்யும். பாதுகாப்பான, நம்பகமான மதிப்புச் சங்கிலியை உருவாக்க இத்துறைகள் உதவும்.

மூன்றாவது போக்குவரத்து இணைப்பு. ஜி20 உச்சி மாநாட்டின் போது தொடங்கப்பட்ட ஐஎம்இசி வழித்தடம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியாகும். இதில் இருதரப்பும் வலுவான அர்ப்பணிப்புடன் தொடர்ந்து பணியாற்ற வேண்டும்.

நான்காவது தொழில்நுட்பம், புத்தாக்க கண்டுபிடிப்பு. தொழில்நுட்ப இறையாண்மை குறித்த நமது பகிரப்பட்ட பார்வையை உணர, நாம் தொடர்ந்து விரைவான முன்னேற்றத்தை அடைய வேண்டும். டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு, செயற்கை நுண்ணறிவு குவாண்டம் கம்ப்யூட்டிங், விண்வெளி, 6-ஜி போன்ற துறைகளில், இளம் திறமையாளர்களை ஊக்குவிக்க இரு தரப்பினரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

ஐந்தாவது காலநிலை நடவடிக்கை, பசுமை ஆற்றல் புத்தாக்க கண்டுபிடிப்புகள். இந்தியாவும் ஐரோப்பிய யூனியனும் பசுமை மாற்றத்திற்கு முன்னுரிமை அளித்துள்ளன. நீடித்த நகரமயமாக்கல், குடிநீர், தூய்மையான எரிசக்தி ஆகியவற்றில் ஒத்துழைப்பை அதிகரிப்பதன் மூலம், உலகளாவிய பசுமை வளர்ச்சியின் முன்னோடிகளாக நாம் மாற முடியும்.

ஆறாவது பாதுகாப்பு. இணைந்த வளர்ச்சி, கூட்டு உற்பத்தி ஆகியவை மூலம் நாம் ஒருவருக்கொருவர் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். ஏற்றுமதி கட்டுப்பாட்டு சட்டங்களில் ஒருவருக்கொருவர் முன்னுரிமை அளிக்க நாம் பணியாற்ற வேண்டும்.

ஏழாவது பாதுகாவல். பயங்கரவாதம், தீவிரவாதம், கடல்சார் பாதுகாப்பு, இணையதளப் பாதுகாப்பு, விண்வெளிப் பாதுகாப்பு ஆகியவற்றால் எழும் சவால்களை எதிர்கொள்ள அதிக ஒத்துழைப்பு தேவைப்படுகிறது.

எட்டாவது மக்களுக்கிடையேயான உறவு. இடப்பெயர்வு, போக்குவரத்து , ஷெஞ்சன் விசா மற்றும் ஐரோப்பிய யூனியனின் புளூ கார்டு ஆகியவற்றை எளிமையாகவும் சிரமம் இல்லாததாகவும் மாற்றுவது இரு தரப்பினருக்கும் முன்னுரிமையாக இருக்க வேண்டும். இது ஐரோப்பிய யூனியனின் தேவைகளைப் பூர்த்தி செய்வதாக உள்ளது. ஐரோப்பாவின் வளர்ச்சிக்கும், செழிப்புக்கும் இந்தியாவின் இளம் தொழிலாளர்கள் பெரிய பங்களிப்பை வழங்க முடியும்.

மதிப்பிற்குரியவர்களே,

அடுத்த இந்திய-ஐரோப்பிய யூனியன் உச்சிமாநாட்டில், நாம் லட்சியம், செயல்திறன் அர்ப்பணிப்புடன் முன்னேறிச் செல்ல வேண்டும்.

இன்றைய செயற்கை நுண்ணறிவு சகாப்தமானது எதிர்காலப் பார்வையை வெளிப்படுத்துபவர்களுக்குச் சொந்தமானது.

மதிப்பிற்குரிய ஐரோப்பிய யூனியன் தலைவர் அவர்களே, உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள உங்களை அழைக்கிறேன்.

***

TS/PLM/RJ/DL