Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஐக்கிய நாடுகள் சபையின் எதிர்கால உச்சி மாநாட்டில் பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆற்றிய உரையின் தமிழாக்கம்

ஐக்கிய நாடுகள் சபையின் எதிர்கால உச்சி மாநாட்டில் பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆற்றிய உரையின் தமிழாக்கம்


மேதகு தலைவர்களே,

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் சார்பிலும், 140 கோடி இந்தியர்களின் சார்பிலும் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். அண்மையில் ஜூன் மாதம் நடைபெற்ற மனிதகுல வரலாற்றில் மிகப் பெரிய தேர்தலில், இந்திய மக்கள் தொடர்ந்து மூன்றாவது முறையாக தங்களுக்கு சேவை செய்ய எனக்கு வாய்ப்பளித்துள்ளனர். மனிதகுலத்தில் ஆறில் ஒரு பங்கு மக்களின் குரலை இன்று உங்களிடம் கொண்டு வருகிறேன்.

நண்பர்களே,

உலகளாவிய எதிர்காலம் குறித்து நாம் விவாதிக்கும் போது, மனிதனை மையமாகக் கொண்ட அணுகுமுறைக்கு நாம் உயர் முன்னுரிமை அளிக்க வேண்டும். நீடித்த வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கும் அதே வேளையில், மனித நலன், உணவு மற்றும் சுகாதாரப் பாதுகாப்பையும் நாம் உறுதி செய்ய வேண்டும். இந்தியாவில் 250 மில்லியன் மக்களை வறுமையிலிருந்து உயர்த்தியதன் மூலம், நிலையான வளர்ச்சியை வெற்றிகரமாக செய்ய முடியும் என்பதை நாங்கள் நிரூபித்துள்ளோம். எங்கள் வெற்றியின் இந்த அனுபவத்தை முழு உலகளாவிய தெற்குடனும் பகிர்ந்து கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம்.

நண்பர்களே,

மனிதகுலத்தின் வெற்றி நமது கூட்டு வலிமையில் உள்ளதே தவிர, போர்க்களத்தில் அல்ல. உலக அமைதி மற்றும் வளர்ச்சிக்கு, உலக அமைப்புகளில் சீர்திருத்தங்கள் அவசியமாகும். சீர்திருத்தம்தான் முக்கியம்! புதுதில்லி உச்சிமாநாட்டில் ஜி20 அமைப்பில், ஆப்பிரிக்க யூனியன் நிரந்தர உறுப்பினர் ஆனது, இந்த திசையில் ஒரு முக்கியமான படியாகும். ஒருபுறம் உலக அமைதி மற்றும் பாதுகாப்புக்கு தீவிரவாதம் தொடர்ந்து அச்சுறுத்தலாக இருந்து வரும் நிலையில், மறுபுறம், இணையவெளி கடல்சார் மற்றும் விண்வெளி போன்ற துறைகள் புதிய மோதல் அரங்கங்களாக உருவாகி வருகின்றன. இந்த அனைத்து பிரச்சனைகளிலும், உலகளாவிய நடவடிக்கை, உலகளாவிய லட்சியத்திற்கு இணையாக இருக்க வேண்டும் என நான் வலியுறுத்துகிறேன்!

நண்பர்களே,

தொழில்நுட்பத்தை பாதுகாப்பாகவும், பொறுப்புடனும் பயன்படுத்தவும், சமச்சீரான ஒழுங்குமுறை தேவைப்படுகிறது. தேசிய இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு நிலைநிறுத்தப்படுவதை உறுதி செய்யும் உலகளாவிய டிஜிட்டல் ஆளுகை நமக்கு தேவை. டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு ஒரு பாலமாக இருக்க வேண்டுமே அல்லாமல், ஒரு தடையாக அல்ல! உலகளாவிய நன்மைக்காக, இந்தியா தனது டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பை ஒட்டுமொத்த உலகத்துடனும் பகிர்ந்து கொள்ளத் தயாராக உள்ளது.

நண்பர்களே,

இந்தியாவைப் பொறுத்தவரை, “ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்என்பது ஒரு உறுதிப்பாடு. “ஒரே பூமி, ஒரே ஆரோக்கியம்“, “ஒரே சூரியன், ஒரே உலகம், ஒரே தொகுப்புபோன்ற நமது முன்முயற்சிகளிலும் இந்த உறுதிப்பாடு பிரதிபலிக்கிறது. அனைத்து மனிதகுலத்தின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், உலகளாவிய செழிப்பிற்கும் இந்தியா சிந்தனை, சொல் மற்றும் செயலில் தொடர்ந்து பணியாற்றும்.

மிகவும் நன்றி.

***

(Release ID: 2058077)
PKV/RR