Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஏழைகள் நல வேலைவாய்ப்புத் திட்டத்தின் தொடக்க விழாவில் பிரதமரின் உரை


 

நண்பர்களே,

இத்திட்டத்தைத் தொடங்கி வைப்பதற்கு முன்பாக நான் பிகார் மாநிலம் ககாரியாவில் வசிக்கும் சகோதர சகோதரிகளுடன் பேசினேன்.

இன்று உங்களுடன் பேசிய பிறகு மன நிறைவோடும் திருப்தியோடும் இருக்கிறேன். இந்தக் கொரோனா தொற்று தொடங்கியபோது, மத்திய அரசும், மாநில அரசுகளும் உங்களைப் பற்றிப் பெரிதும் கவலைப்பட்டன. அந்த சமயத்தில் மக்கள் இருந்த இடங்களுக்கு உதவிகள் அளிக்கப்பட்டு வந்தன. அத்துடன் புலம் பெயர்ந்த நமது சகோதர சகோதரிகளுக்காக ஷ்ரமிக் சிறப்பு ரயில்களை இயக்கத் தொடங்கினோம்.

உண்மையில், இன்று உங்களுடன் பேசிய பிறகு, உங்களிடம் புதிய ஆற்றலையும் மரியாதை, நம்பிக்கை ஆகியவற்றையும் பார்க்கிறேன். கொரோனோ தீநுண் கிருமி போன்ற உலகையே ஆட்டிப் படைக்கும் நிலையிலும் நீங்கள் மன உறுதியோடு இருக்கிறீர்கள். இந்திய கிராமங்களில் கொரோனாவுக்கு எதிராக நடக்கும் போர் நகரங்களுக்கு நல்ல பாடத்தைக் கற்றுத் தருகிறது.

கற்பனை செய்து பாருங்கள்! நம் நாட்டில் ஆறு லட்சம் கிராமங்கள் உள்ளன. அந்த கிராமங்களில் நாட்டின் மூன்றில் இரு பங்குக்கும் மேலே அதாவது, 80 முதல் 85 கோடிப் பேர் வசிக்கிறார்கள். ஆனால், கிராமப்புறங்களில் கொரோனா தீநுண் கிருமி பரவுவாமல் தடுத்துவிட்டீர்கள். நம் நாட்டின் கிராமங்களில் வசிக்கும் மக்கள் தொகை ஐரோப்பிய நாடுகள் அனைத்திலும் உள்ள மக்கள் தொகையை விட மிக அதிகமாகும். மேலும் அமெரிக்கா, ரஷ்யா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் மொத்த மக்கள் தொகையைச் சேர்த்தாலும் அதை விட அதிகமான எண்ணிக்கையும் ஆகும். அந்த அளவுக்கு மக்கள் தொகை அதிகமாக இருந்தபோதும் கொரோனா தொற்றினை எதிர்த்து தீரத்துடன் போராடி வருகிறீர்கள். அதற்காக ஒவ்வொரு இந்தியரும் பெருமிதம் கொள்கிறோம். இந்த வெற்றிக்கு கிராமப்புற மக்களிடையில் உள்ள விழிப்புணர்வே காரணம். அத்துடன், நமது உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள ஜனநாயகக் கட்டமைப்பு, நமது சுகாதார வசதிகள், மருத்துவ மையங்கள், தூய்மை குறித்த விழிப்புணர்வு பிரசாரம் ஆகியவை முக்கியப் பங்காற்றியுள்ளன.

மேலும், களத்தில் பணியாற்றும் கிராமத் தலைவர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், ஆஷா (ASHA) தன்னார்வத் தொண்டர்கள், ஜீவிகா திதி உள்ளிட்ட நமது நண்பர்கள் மிகவும் பாராட்டத் தக்கப் பணிகளை ஆற்றுகிறார்கள்! அவர்கள் அனைவருக்கும் மிகுந்த பாராட்டுகள்!

நண்பர்களே,

மேலை நாட்டில் இப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால், அதற்கு மிகுந்த பாராட்டும் வரவேற்பும் கிடைத்திருக்கும். சர்வதேச அளவில் அது குறித்து விவாதிக்கவும் பட்டிருக்கும். ஆனால், இது குறித்துத் தெரிவிக்கத் தயங்குகிறார்கள் என்பதும் நமக்குத் தெரியும். கிராமப்புற வாழ்க்கையை நாம் போற்றினாலும் அவர்களால் உலகுக்கு என்ன தெரிவிக்க இயலும் என்றும் சிலர் கருதுகிறார்கள். இந்த தீரச் செயலுக்குப் பாராட்டு பெற முழுத் தகுதி படைத்தவர்கள் நீங்கள். உங்களது உயிரைத் துச்சமாகக் கருதி கிராம மக்களின் உயிரை இந்தத் தொற்றிலிருந்து காப்பாற்றுகிறீர்கள். என்ன செய்ய, சிலர் உங்களைர முதுகில் தட்டிப் பாராட்டுவதில்லைதான்.

இருந்தாலும், யாராவது பாராட்டுகிறார்களோ இல்லையோ, நான் உங்களுக்கு உற்சாகம் ஊட்டிக் கொண்டே வருவேன். உங்களது அரும் பெரும் ஆற்றலைப் பற்றி உலகுக்கே எடுத்துரைத்து வருவேன். கொரோனாவிலிருந்து ஆயிரக் கணக்கான, லட்சக் கணக்கானோரைக் காப்பாற்றும் மிகப் பெரிய சவாலைச் செய்து முடித்திருக்கிறீர்கள்.

இன்று, இத்திட்டத்தைத் தொடங்குவதற்கு முன்பு, இந்தியாவின் கிராமப்புறங்களையும் கிராம மக்களையும் அவர்களது பணிக்காகப் பெரிதும் பாராட்டுகிறேன்!

நாட்டில் உள்ள ஏழைகள், தொழிலாளர்கள், ஊழியர்களுக்கு வணக்கம்! என் நாட்டின் கிராமப்புற மக்களுக்கு வணக்கம்! ஒரு விஷயம், கொரோனா தொற்றுக் கிருமி குறித்து பரிசோதிப்பதற்கான அதி நவீன இயந்திரம் பாட்னாவில் நாளை மறுநாள் பயன்பாட்டுக்கு வருகிறது என்று என்னிடம் தெரிவிக்கப்பட்டது. இந்த இயந்திரம் மூலம் ஒரே நாளில் 1,500 பேருக்கு பரிசோதனைகளை நடத்த இயலும். இந்த இயந்திரம் பயன்பாட்டுக்கு வருவதை ஒட்டி, பிகார் மக்களுக்கு எனது வாழ்த்துகள்!

இந்தத் திட்டத்தில் எனது அமைச்சரவை சகாக்கள், பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்கள், மதிப்பிற்குரிய நிதீஷ்குமார், அசோக் கெலாட், யோகி ஆதித்யநாத், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அனைத்து அலுவலர்கள், பஞ்சாயத்துகளின் பிரதிநிதிகள், நாட்டில் உள்ள நூற்றுக்கணக்கான கிராமப்புறங்களைச் சேர்ந்த உழைப்பாளர்களான எனது நண்பர்கள் தொழில்நுட்பம் மூலமாக இன்று என்னுடன் இணைந்துள்ளனர். அவர்களுக்கு மீண்டும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

இன்றைய தினம் வரலாற்றுச் சிறப்புள்ள நாளாகும். ஏழைகளுக்காக அவர்களது வேலைவாய்ப்புக்காக இன்று புதிய பிரசார இயக்கம் தொடங்குகிறது. இந்தப் பிரசார இயக்கம் கிராமங்களில் உள்ள  நமது தொழிலாள சகோதர சகோதரிகள், இளைஞர்கள், புதல்வியருக்குச் சமர்ப்பணம். அவர்களில் பெரும்பாலானோர் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள். பொதுமுடக்க காலத்தில் தங்களது வசிப்பிடங்களுக்குத் திரும்பியவர்கள். அவர்கள் தங்களது கிராமங்களுக்கு தங்களது கைத்திறன், ஆற்றல் மூலமாக ஏதாவது செய்ய ஆர்வமாக இருக்கிறார்கள். அவர்கள் எவ்வளவு காலம் கிராமங்களில் வசிக்கிறோமோ அவ்வளவு காலம் தங்களது கிராமங்களின் மேம்பாட்டுக்காக ஏதாவது உதவி புரியவிரும்புகிறார்கள்.

எனது அருமை நண்பர்களே,

உங்களது உணர்வுகளையும் தேவைகளையும் நாடு நன்றாக உணர்ந்துள்ளது.

இன்று ககாரியா கிராமத்தில் தேவைகளையெல்லாம் பூர்த்தி செய்யும் வகையில் ஏழைகள் நல வேலைவாய்ப்புத் திட்டம் (Garib Kalyan Rozgar Yojana) தொடங்கப்படுகிறது.

இந்தப் பிரசாரம் பிகார், உத்தரப் பிரதேசம், ஜார்க்கண்ட், ஒடிசா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் உள்ள 116 மாவட்டங்களில் தீவிரமாக மேற்கொள்ளப்படும். இந்தப் பிரசார இயக்கத்தின் மூலம் தொழிலாளர்கள், பணியாளர்களுக்கு அவர்கள்  வீட்டுக்கு அருகிலேயே பணி செய்யும் வகையில் வேலைவாய்ப்பு அளிப்பதை உறுதி செய்ய முயல்கிறோம்.

இதுவரை உங்களது ஆற்றலைப் பயன்படுத்தி, நகர்ப்புறங்களின் மேம்பாட்டுக்குத் துணைபுரிந்து வந்தீர்கள். இனிமேல், கிராமங்களின் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லப் போகிறீர்கள்.

உண்மையில், இப்படி ஒரு திட்டத்தை உருவாக்க வேண்டும் என்பதற்கு சில தொழிலாளர்கள்தான் தூண்டுதலாக இருந்துள்ளனர்.

நண்பர்களே,

ஒரு முறை ஊடகத்தில் ஒரு செய்தியைப் பார்த்தேன். உத்திரப் பிரதேதசத்தில் உன்னோ குறித்த செய்தி. அங்கோ ஓர் அரசுப் பள்ளி தனியொதுக்கல் பிரிவாகவே மாற்றப்பட்டது. பல்வேறு நகர்ப்புறங்களிலிருந்து வந்த தொழிலாளர்கள் அங்கே தங்கவைக்கப்பட்டனர். ஹைதராபாதிலிருந்து வந்த பலர் அந்த மையத்திலேயே தங்கியுள்ளனர்.

இந்தத் தொழிலாளர்கள் பெயிண்டிங், கட்டுமானப் பணிகளைச் சிறப்பாகச் செய்பவர்கள். அவர்கள், நேரத்தை வீணாக்குகிறோமே, ஏதாவது செய்ய வேண்டுமே என்று நினைத்தனர். மாறாக, அவர்கள் தங்களது திறனை எதாவது பணியில் செலுத்தியிருக்கலாம். அவர்கள் பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டபோது, அத்தொழிலாளர்கள் தங்களது திறனைப் பயன்படுத்தி, பள்ளியையே மாற்றிவிட்டனர்.

இப்படி புலம்பெயர்ந்த தொழிலாளர்களின், சகோதர சகோதரிகளின் இந்தப் பணியை, தேசப் பற்றை, திறனை அறிந்தபோது, ஊக்கம் பெற்றேன். இத்தகைய மக்கள் ஏதாவது நல்ல பணியைத் திறம்படச் செய்பவர்கள் என்று உணர்ந்துகொண்டேன். அதைச் சிந்தித்தபோதுதான் இந்த திட்டம் உருவானது.

கிராமங்களுக்கு எத்தனை ஆற்றல் மிக்க திறன்கள் திரும்பிக் கிடைத்துள்ளன என்பதை நினைத்துப் பாருங்கள்.தொழிலாளர்களின் திறமையும் ஆற்றலும் நாட்டின் ஒவ்வொரு நகரிலும் அபிவிருத்தி, மேம்பாட்டை விரைந்து அடைய உதவியுள்ளதோ அதே திறன், ககாரியா போன்ற கிராமங்களிலும் பயன்படுத்தப்பட்டால், பிகார் வளர்ச்சி அடைவதற்கு வேறு என்ன தேவையிருக்கிறது!

நண்பர்களே,

இந்த ஏழைகள் நல வேலைவாய்ப்புத் திட்டத்தின் (Garib Kalyan Rozgar Yojana) கீழ் ரூ. 50,000 கோடி உங்களது கிராமங்களின் மேம்பாட்டுக்காகப் பயன்படுத்தப்படும். உங்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும். இந்தத் தொகையின் மூலம் கிராமங்களின் வேலை வாய்ப்புப் பணிகளுக்காக மேம்பாட்டுக்காக 25 வகையான பணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த 25 வகையான வேலைகள், திட்டப் பணிகள் கிராமங்களின் அடிப்படை  வசதிகளைப் பூர்த்தி செய்யவும் கிராம மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும் வகை செய்யும். உங்களது கிராமத்தில் உங்கள் குடும்பங்களுடன் நீங்கள் வசித்துக் கொண்டே இங்கே பணி புரிவதற்கான நல்ல வாய்ப்பை நீங்கள் பெறுவீர்கள்.

ககாரியா மாவட்டம் தெலிஹர் கிராமத்தில் அங்கன்வாடி கட்டடங்களைக் கட்டுதல், பொது சுகாதாரக் கழிப்பிடங்கள், கிராமப்புற மண்டிகள், கிணறுகள் அமைத்தல் ஆகியவற்றுக்கான பணிகள் இன்று தொடங்கப்பட்டுள்ளன. அதைப் போல், ஒவ்வொரு கிராமத்திற்கும் அவற்றுக்கான தேவைகள் உள்ளன. இந்தத் தேவைகள் ஏழைகள் நல வேலைவாய்ப்புத் திட்டத்தின் (Garib Kalyan Rozgar Yojana) மூலம் நிறைவேற்றப்படும். இதன் கீழ் பல்வேறு கிராமங்களில் ஏழைகளுக்குத் தரமான வீடுகள் கட்டுதல், மரக் கன்றுகளை நடுதல் ஆகியவை மேற்கொள்ளப்படும். கால்நடைகளுக்குக் கொட்டகைகளும் அமைக்கப்படும். குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்ய கிராம சபைகளுடன் கூட்டு சேர்ந்து ஜல் ஜீவன் இயக்கம் முன்னெடுத்துச் செல்லப்படும்.

இவை தவிர, தேவைப்படும் இடங்களில் சாலைகளை அமைப்பது வலியறுத்தப்படும். பஞ்சாயத்துக் கட்டடங்களும் கட்டித் தரப்படும்.

நண்பர்களே,

கிராமங்களில் செய்யப்பட வேண்டிய விஷயங்கள் இவைதான். என்றாலும் இந்தப் பிரச்சாரத்தினோடு கூடவே கிராமங்களை நவீன வசதிகளோடும் தொடர்புபடுத்த வேண்டும். உதாரணமாக, நகரங்களில் இருப்பதைப் போலவே கிராமங்களில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் மலிவான, மிக விரைவான இணைய வசதி இருப்பது மிக முக்கியமானதாகும். கிராமங்களில் உள்ள நமது குழந்தைகள் நன்றாகப் படிப்பதற்கு இது மிகவும் முக்கியமானதாகும். இதன் விளைவாகவே கிராமங்களின் இந்த தேவையும் கூட ஏழைமக்களின் மேம்பாட்டிற்கான வேலைவாய்ப்பு இயக்கத்தோடு தொடர்பு படுத்தப்பட்டுள்ளது. நமது நாட்டின் வரலாற்றிலேயே முதன்முறையாக நகரங்களை விட அதிகமான அளவில் இணைய வசதி கிராமங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கிராமங்களில் இணைய வசதியின் வேகத்தை அதிகரிப்பதற்கான, இதற்கான செயற்கை இழை குழாய்கள் இணைப்பை கிராமங்களுக்கு விரிவுப்படுத்துவது போன்ற வேலைகளும் கூட மேற்கொள்ளப்படும்.

நண்பர்களே,

இந்த வேலைகள் அனைத்தையும் யார் செய்வார்கள்? கிராமத்தில் உள்ள மக்கள் மட்டும்தான் இதைச் செய்வார்கள்! எனது தொழிலாள நண்பர்களான நீங்கள்தான் அதைச் செய்வீர்கள்! தொழிலாளர்கள், மெக்கானிக்குகள், சிறு கடை வியாபாரிகள், ஓட்டுநர்கள், பிளம்பர்கள், எலெக்ட்ரீசியன்கள் போன்ற அனைத்து துறையைச் சேர்ந்த நண்பர்களுக்கும் இதன் மூலம் வேலை வாய்ப்பு கிடைக்கும். நமது சகோதரிகளும் கூட சுய உதவிக் குழுக்களுடன் இணைக்கப்படுவார்கள். அதன் மூலம் அவர்களும் கூட தங்கள் குடும்பங்களுக்காக கூடுதல் வருவாயை ஈட்ட முடியும்.

நண்பர்களே,

மேலும் அனைத்துத் தொழிலாளர்களின் தனிப்பட்ட திறன்கள் குறித்த விவரங்களையும் சேகரிக்கும் பணியும் தொடங்கி விட்டது.

அதாவது, உங்களின் தனிப்பட்ட திறன்கள் கிராமத்திற்கு உள்ளேயே அடையாளம் காணப்படும். அதன் மூலம் உங்களது திறமைக்கு ஏற்ப உங்களுக்கு வேலை கிடைக்கும். உங்களுக்குத் தெரிந்த வேலையை செய்து கொடுப்பதற்காக உங்களைத் தேடி மக்கள் வருவார்கள்.

நண்பர்களே,

கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியிலும் கூட கிராமத்தில் வாழும்போது எவரிடமும் நீங்கள் கடன் வாங்க வேண்டிய அவசியம் எழக் கூடாது என்பதை உறுதிப்படுத்த எமது அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. ஏழைகளுக்கே இருக்கும் சுய மரியாதை குறித்து எங்களுக்கு நன்றாகவே தெரியும். உழைப்பே உயர்வு தரும் என்ற பழமொழிக்கு உதாரணமாக இருப்பவர்கள் நீங்கள். வேலைதான் உங்களுக்கு தேவை. உங்களுக்குத் தேவை வேலை வாய்ப்பு. இந்த உணர்வை அடிப்படையாக வைத்துத்தான் இந்த குறுகிய நேரத்திற்குள்ளேயும் கூட இந்தத் திட்டத்தை  உருவாக்கி அரசு அமலாக்கியுள்ளது.

அதற்கு முன்பாக, ஊரடங்கின் தொடக்க நிலையில் உங்களைப் போன்ற நாடு முழுவதிலும் உள்ள கோடிக்கணக்கான மக்களின் உடனடித் தேவைகளை நிறைவேற்றுவதற்காகவும் அரசு உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டது.

பிரதமரின் ஏழைகள் மேம்பாட்டிற்கான திட்டத்துடன் சுயச்சார்பு மிக்க இந்தியா திட்டத்திற்கான பிரச்சாரம் தொடங்கியது. எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. தொடக்கத்தில் ஏழைகளுக்கான இந்தத் திட்டத்தை நாங்கள் கொண்டு வந்தபோது எல்லா இடத்திலிருந்தும் கூச்சல் எழுந்தது. தொழில் துறைக்கு என்ன கிடைக்கும்? வர்த்தகத்துறைக்கு என்ன கிடைக்கும்? சிறு-குறு-நடுத்தர தொழில்களுக்கு என்ன கிடைக்கும்? பலரும் என்னை குறை கூறினார்கள். ஆனால் இந்த  நெருக்கடியின் போது ஏழைகளின் கைகளை ஆதரவாகப் பிடித்துக் கொண்டிருப்பதுதான் எனக்கு முன்னுரிமை என்று நன்றாகவே தெரியும்.

ஒரு சில வாரங்களிலேயே இந்த திட்டத்திற்காக ரூ. 1.75 லட்சம் கோடியை நாங்கள் செலவழித்திருந்தோம்.

இந்த மூன்று மாத காலத்தில் 80 கோடி ஏழை மக்களுக்கு பருப்பு போன்ற ரேஷன் பொருட்களை நாங்கள் வழங்கினோம். மேலும் இந்த ரேஷன் பொருட்களோடு கூடவே சமையல் எரிவாயு உருளைகளையும் இலவசமாக வழங்கினோம். அதைப் போன்றே 20 கோடி தாய்மார்கள், சகோதரிகளின் ஜன் தன் வங்கிக் கணக்குகளில் ரூ. 10,000 கோடிக்கும் மேலான உதவித் தொகை நேரடியாக வரவு வைக்கப்பட்டது. ஏழைகள், முதியோர், தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோரின் வங்கிக் கணக்குகளில் ஒவ்வொருவருக்கும் ரூ. 1,000 நிதியுதவி என்ற வகையில் நேரடியாக வரவு வைக்கப்பட்டது.

கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்!

இந்த ஜன் தன் வங்கிக் கணக்குகள் மட்டும் உருவாக்கப்பட்டு இல்லாமல் இருந்தால், இந்த கணக்குகளோடு ஆதார் அட்டைகளும் கைபேசி எண்களும் இணைக்கப்படாமல் இருந்திருந்தால் இது நடந்திருக்குமா? பழைய காலத்தில் எப்படி இருந்தது என்று உங்களுக்கு நன்றாகவே நினைவிருக்கும்.

உங்களுடைய பெயர்களில் அரசிடமிருந்து பணம்  வெளியேறியிருக்கும். ஆனால் அது உங்களை வந்து அடைந்திருக்காது!

இவை எல்லாமே இப்போது மாறிக் கொண்டிருக்கிறது. ஒரே தேசம் – ஒரே ரேஷன் அட்டை என்ற திட்டமும் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூல அரசு கடைகளிலிருந்து உணவுப்பொருட்களை வாங்கும்போது நீங்கள் எந்தவித பிரச்சனையையும் எதிர்கொள்ள வேண்டிய அவசியம் இருக்காது. அதே ரேஷன் அட்டையைக் கொண்டு நாட்டின் எந்தவொரு மாநிலத்திலும் எந்தவொரு நகரத்திலும் நமது ஏழை சகோதரர்களும், சகோதரிகளும் ரேஷன் கடைகளில் உணவுப் பொருட்களை வாங்கிக் கொள்ள முடியும்.

நண்பர்களே,

அதைப் போன்றே சுயச்சார்புமிக்க இந்தியாவிற்கு சுயச்சார்பு மிக்க விவசாயிகள் அத்தியாவசியமானவர்களாக இருக்கின்றனர். என்றாலும் நமது நாட்டில் கடந்த பல ஆண்டுகளாகவே விவசாயமும், விவசாயிகளும் தேவையில்லாத விதிமுறைகள், சட்டங்கள் ஆகியவற்றால் கட்டுண்டு கிடந்தார்கள். பல ஆண்டுகளாக நீடித்து வந்த இந்த கையறுநிலையை என் முன்னால் அமர்ந்திருக்கும் எனது விவசாய நண்பர்கள் அனைவருமே நன்கு உணர்ந்தவர்களாகத்தான் இருப்பீர்கள்!

தான் விளைவித்த பயிரை எங்கே விற்பது அல்லது  அந்தப் பயிரை சேமித்து வைக்கலாமா, கூடாதா? என்பதை முடிவு செய்யும் உரிமை கூட விவசாயிக்கு வழங்கப்படவில்லை. இத்தகைய பாரபட்சமான சட்டங்களை இரண்டு வாரங்களுக்கு முன்புதான் நாங்கள் அகற்றினோம். இப்போது தாங்கள் விளைவித்த உணவுப் பயிர்களை எங்கே விற்பது என்பதை அரசோ அல்லது அரசு அதிகாரிகளோ முடிவு செய்ய மாட்டார்கள். மாறாக, அந்த விவசாயிதான் முடிவு செய்வார்.

இப்போது எந்தவொரு விவசாயியும் தனது பயிரை மாநிலத்திற்கு வெளியேயும் கூட எந்தவொரு சந்தையிலும் விற்கமுடியும்! உங்கள் விளைபொருட்களுக்கு நல்ல விலை கொடுக்கத் தயாராக உள்ள வர்த்தகர்களுக்கும் வணிக நிறுவனங்களுக்கும் நேரடியாக உங்களால் விற்க முடியும். விவசாய உற்பத்திப் பொருட்களை சேமித்து வைப்பது இதற்கு முன்பிருந்த சட்டத்தில் தடை செய்யப்பட்ட ஒன்றாக இருந்தது. அதுவும் கூட இப்போது மாற்றப்பட்டுள்ளது.

நண்பர்களே,

விவசாயிகள் தங்களது உற்பத்திப்பொருட்களை சேமித்து வைப்பதற்கான சேமிப்புக் கிடங்குகளை கட்டுவதற்கென ரூ. 1 லட்சம் கோடி முதலீடு குறித்தும் சுயச்சார்பு மிக்க இந்தியா தொகுப்பின்கீழ் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் நேரடியாக சந்தையுடன் தொடர்பு கொள்ள முடியும். விவசாயிகள் சந்தையோடு நேரடியாகத் தொடர்பு கொள்ள முடியும்போது அவரால் தனது உற்பத்திப் பொருட்களை அதிக விலைக்கு விற்கவும் முடியும்.

சுயச்சார்புமிக்க இந்தியா இயக்கத்தின் கீழ் எடுக்கப்பட்டுள்ள மற்றொரு முடிவு பற்றியும் நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்! உங்கள் கிராமங்களுக்கு அருகே உள்ள சிறிய நகரங்கள், பெருநகரங்கள் ஆகியவற்றில் உள்ளூர் உற்பத்திப் பொருட்களை கொண்ட பல்வேறு பொருட்களைத் தயாரிக்கவும், தொகுப்பாக அமைக்கவும் உதவும் வகையில் தொழில் மையங்கள் உருவாக்கப்படவுள்ளன. விவசாயிகளுக்கு இது பெருமளவில் உதவிகரமாக இருக்கும்.

இப்போது காகரியாவில் சோளம் அதிகமான அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. சோளத்தினால் ஆன பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களோடு விவசாயிகளுக்கு நேரடியாக தொடர்பு ஏற்படுமானால், அவர்களின் லாபமும் பெருமளவிற்கு அதிகரிக்கும்! இதைப் போன்றே பிகாரில் மக்கானா, எலுமிச்சை, வாழைப்பழம் ஆகியவை பெருமளவில் உற்பத்தியாகின்றன. அதே போன்று உத்திரப் பிரதேசத்தில் நெல்லி, மாம்பழம் ஆகியவையும், ராஜஸ்தானில் மிளகாயும் மத்தியப் பிரதேசத்தில் பருப்பு வகைகளும் ஒடிசா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் நல்ல வனப் பொருட்களும் அதிக அளவில் கிடைக்கின்றன. ஒவ்வொரு மாவட்டத்திலுமே இதுபோன்ற உள்ளூர் அளவில் உற்பத்தியாகும் பொருட்கள் உள்ளன. அவற்றோடு தொடர்புடைய தொழிற்சாலைகளை அருகிலேயே நிறுவுவதற்கான திட்டமும் தீட்டப்பட்டுள்ளது.

நண்பர்களே,    

நமது கிராமங்களும் ஏழைகளும் சுதந்திரமானவர்களாக, வலிமையானவர்களாக இருக்க வேண்டும் என்ற இதே போன்ற நோக்கத்தோடுதான் கடந்த ஆறு ஆண்டுகளாக தொடர்ந்து இது போன்ற முயற்சிகள் அனைத்தும் எடுக்கப்பட்டு வருகின்றன. நமது நாட்டின் ஏழைகள், தொழிலாளிகள், விவசாயிகளுக்கு உதவி எதுவும் தேவைப்படவில்லை. உழைப்பையே பெருமையோடு மேற்கொண்டு வாழ்ந்து வரும் நமது மக்களுக்கு உதவி எதுவும் தேவையில்லை.

ஏழைகள் மேம்பாட்டிற்கான வேலைவாய்ப்புத் திட்டத்தின் மூலம் இந்த பெருமை பாதுகாக்கப்படுகிறது. உங்களின் கடின உழைப்பு உங்களின் கிராமங்களையும் மேம்படுத்தும். உங்களின் சேவகனான நானும், இந்த நாடு முழுவதுமே இதே கருத்தோட்டத்துடன், உறுதியுடன் உங்களது பெருமையையும் மரியாதையையும் காப்பாற்றுவதற்காகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

நீங்கள் வேலைக்குப் போகும்போது அவசியமான அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் நான் கேட்டுக் கொள்கிறேன். முக கவசங்களை அணிவது அல்லது ஒரு துணியால் முகத்தை மூடிக் கொள்வது, தூய்மையை பின்பற்றுவது, சமூக இடைவெளி என்ற விதிமுறையை பின்பற்றுவது போன்றவற்றை கடைப்பிடிப்பதில் உறுதியோடு இருங்கள். நீங்கள் முன் எச்சரிக்கையோடு இருந்தீர்களெனில், உங்கள் கிராமமும், உங்கள் வீடும் இந்த வைரஸில் இருந்து பாதுகாக்கப்படும். நமது உயிருக்கும் வாழ்க்கைக்கும் இது மிகவும் முக்கியமானதாகும்.

நீங்கள் அனைவரும் நல்ல உடல்நலத்தோடு, தொடர்ந்து முன்னேறிச் செல்ல வேண்டுமென்று வாழ்த்துகிறேன். உங்களோடு சேர்ந்து நமது நாடும் முன்னேறிச் செல்லட்டும்! இந்த வாழ்த்துடன் உங்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாண்புமிகு முதலமைச்சர்கள் அனைவருக்கும், குறிப்பாக பிகார் மாநில அரசுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இத்தகைய முக்கியமானதொரு திட்டத்தை வடிவமைத்து முன்னெடுத்துச் செல்வதில் உங்கள் அனைவரின் ஆதரவுக்காக நான் மிகவும் நன்றி பாராட்டுகிறேன். அனைவருக்கும் நன்றி!

*****