2022 மே 31 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடி இமாசலப்பிரதேசத்தின் சிம்லாவுக்கு செல்லவிருக்கிறார். அன்று காலை 11 மணிக்கு ‘ஏழைகள் நல மாநாட்டில்’ பிரதமர் பங்கேற்பார். பிரதமர் தலைமையிலான அரசின் எட்டு ஆண்டுகள் நிறைவைக் குறிக்கும் இந்தப் புதுமையான பொதுமக்கள் பங்கேற்கும் நிகழ்ச்சி நாடு முழுவதும் உள்ள மாநில தலைநகர்கள், மாவட்ட தலைமையிடங்கள், விவசாய அறிவியல் மையங்கள் ஆகியவற்றில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அரசால் மேற்கொள்ளப்படும் பல்வேறு நலத்திட்டங்கள் பற்றி கருத்துக்களைப் பெறும் முயற்சியாக நாடு முழுவதும் முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், இதர தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், ஆகியோர் அவரவர்க்குரிய இடங்களிலிருந்து பொதுமக்களுடன் நேரடியாகக் கலந்துரையாடும் ‘ஏழைகள் நல மாநாடு’ காலை 09:45 மணிக்கு தொடங்கும். காலை 11:00 மணிக்கு பிரதமர் இந்த நிகழ்ச்சியில் இணைவார். பல்வேறு மாநில மற்றும் உள்ளூர் நிலையிலான நிகழ்ச்சிகள், நடைபெறுவதையடுத்து இந்த மாநாடு தேசிய அளவிலானதாக மாறும். இந்த மாநாட்டில் மத்திய அரசின் ஒன்பது அமைச்சகங்கள் / துறைகளின் பல்வேறு திட்டங்களின் பயனாளிகளுடன் பிரதமர் நேரடியாகக் கலந்துரையாடுவார்.
பல்வேறு அரசுத் திட்டங்கள் தொடர்பாக மக்களிடமிருந்து சுதந்திரமாகவும், வெளிப்படையாகவும் கருத்துக்களை அறிதல், நலத்திட்டங்கள் மக்களின் வாழ்க்கையில் ஏற்படுத்தும் தாக்கத்தை புரிந்துகொள்ளுதல், ஒருங்கிணைக்க மற்றும் முழுமையாக்க வழிகாணுதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு நாடு முழுவதும் இத்தகைய கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிரதமரின் விவசாய கவுரவிப்பு நிதித் திட்டத்தின் கீழ், 11-வது தவணை நிதிப்பயனையும் பிரதமர் வெளியிடுவார். இதன் மூலம் 10 கோடிக்கும் அதிகமான விவசாய குடும்பங்களைச் சேர்ந்த பயனாளிகளுக்கு ரூ.21,000 கோடி நேரடி பரிமாற்றம் செய்யப்படும். இந்த நிகழ்ச்சியின் போது நாடு முழுவதும் உள்ள (பிஎம்-கிசான்)
பயனாளிகளுடன் பிரதமர் கலந்துரையாடுவார்.
——-
I will be in Shimla tomorrow, 31st May, to take part in the ‘Garib Kalyan Sammelan’ which is a special initiative that deepens the connect between people and the elected representatives. The 11th instalment of PM-KISAN will also be released. https://t.co/EQS7837mWR
— Narendra Modi (@narendramodi) May 30, 2022