பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை ரயில்வே நிலையங்களை மறுமேம்பாடு செய்ய ஒப்புதல் அளித்துள்ளது. பல்வேறு வர்த்தக மாதிரிகளை ஏற்று எளிமையான நடைமுறைகள் மற்றும் 99 ஆண்டு வரையிலான நீண்ட கால குத்தகை அடிப்படையில் இந்தப் பணிகள் நடைபெறும். இந்திய ரயில் நிலையங்கள் மேம்பாட்டு ஆணையமும், திட்ட மேம்பாட்டு முகமையும் இவற்றை செயல்படுத்தும். இதன் மூலம் மிகப் பெரிய நவீனமயத்திற்கும் உலகத் தரம் வாய்ந்த அடிப்படை கட்டமைப்பை உறுதி செய்வதற்கும் வழி ஏற்படும்.
ரயில் நிலையத்திற்கு உள்ளேயும், வெளியேயும் உள்ள நிலம் மற்றும் வான் பகுதியை வணிக மேம்பாட்டிற்கு பயன்படுத்தும் வகையில் நாடு முழுவதும் உள்ள பெரிய ரயில் நிலையங்கள் மறுமேம்பாடு செய்யப்படும். இந்தத் திட்டம் பயணிகளுக்கு நவீன வசதிகள் கிடைக்க உதவும். ரயில்வே துறைக்கும் கூடுதல் வருவாய் கிடைக்கும். மேலும் ரயில் நிலையங்கள் மறுமேம்பாடு செய்யப்படுவது பொருளாதாரத்தில் பலமுனை தாக்கத்தை உருவாக்கும். வேலைவாய்ப்பு அதிகரிக்கும். பொருளாதார வளர்ச்சியையும் ஏற்படுத்தும்.
ரயில் பயணிகளும், ரயில்வே தொழில்துறையும் பெருமளவு பயனடையும். சர்வதேச ரயில்வே முனையங்களுக்கு ஈடாகப் பயணிகள் வசதிகளைப் பெறுவார்கள். பெருமளவு உள்ளூர் வேலை உருவாக்கமும் எதிர்பார்க்கப்படுகிறது.
****