நாட்டின் மாபெரும் சுகாதார மற்றும் ஆரோக்கிய முன்முயற்சியாக, பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை, எலக்ட்ரானிக் சிகரெட்டுகள் (உற்பத்தி, தயாரிப்பு, இறக்குமதி, ஏற்றுமதி, பிற இடங்களுக்கு அனுப்புதல், விற்பனை, விநியோகம், இருப்பு வைத்தல், விளம்பரம்) தடைக்கான அவசரச் சட்டம் 2019 பிறப்பிக்க ஒப்புதல் அளித்துள்ளது.
இ-சிகரெட்டுகள் என்பவை பேட்டரியால் இயக்கப்படும் கருவிகளாகும். எரியக்கூடிய சிகரெட்டுகளில் உள்ள போதை தரும் பொருளான நிகோடின் திரவத்தை எரியூட்டுவதால் ஏரோசெல் புகை உண்டாகிறது. எலெக்ட்ரானிக் நிகோடின் வெளியிடும் முறை, சூடான ஆனால் எரியாத பொருட்கள், இ ஹுக்கா மற்றும் இதுபோன்ற கருவிகளும் தடைவிதிப்பில் அடங்கும். இத்தகைய நவீன கருவிகளின் கவர்ச்சிக்கரமான தோற்றம், பலவகையான மணம் போன்றவற்றால் இவற்றின் பயன்பாடு வேகமாக அதிகரித்து வருகிறது. வளர்ந்த நாடுகளில் இவற்றின் பரவல் விகிதம் அதிகமாக உள்ளது. குறிப்பாக இளைஞர்கள் மற்றும் சிறார்களிடம் பரவியுள்ளது.
இ-சிகரெட்டுகள் உற்பத்தி, இறக்குமதி, ஏற்றுமதி போன்ற செயல்பாடுகள் தண்டனைக்குரிய குற்றமாகும். முதல்முறை செய்யும் குற்றத்திற்கு ஓராண்டு வரை சிறைத்தண்டனை அல்லது ரூ.1 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும். தொடர்ச்சியான குற்றத்திற்கு மூன்றாண்டுகள் வரை சிறை, ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். எலக்ட்ரானிக் சிகரெட்டுகளை இருப்பு வைத்திருப்போருக்கு ஆறு மாத சிறைத் தண்டனை அல்லது ரூ.50 ஆயிரம் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.
இந்த அவசரச் சட்டம் அமலாகும் தேதியில் இ-சிகரெட்டுகளை இருப்பு வைத்திருக்கும் உரிமையாளர்கள் அதுகுறித்த விவரங்களைத் தாமாக முன்வந்து அறிவிப்பதோடு அருகில் உள்ள காவல் நிலையத்தில் அவற்றை ஒப்படைத்து விட வேண்டும். இந்த அவசரச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுப்பதற்குக் காவல்துறை உதவி ஆய்வாளர் அதிகாரமளிக்கப்பட்ட அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தப் பணிக்கு இணையான வேறு அதிகாரிகளையும் சட்ட விதிகளை அமலாக்க மத்திய அல்லது மாநில அரசுகள் நியமித்துக்கொள்ளலாம்.
இ-சிகரெட்டுகளுக்கு அடிமையாகும் அபாயத்திலிருந்து பொதுமக்களைக் குறிப்பாக இளைஞர்கள் மற்றும் சிறார்களைப் பாதுகாக்க தடைக்கான அவசரச் சட்ட முடிவு உதவும்.