Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

என்சிசி, என்எஸ்எஸ் மாணவர்களிடையே பிரதமர் உரையாற்றினார்

என்சிசி, என்எஸ்எஸ் மாணவர்களிடையே பிரதமர் உரையாற்றினார்

என்சிசி, என்எஸ்எஸ் மாணவர்களிடையே பிரதமர் உரையாற்றினார்


தேசிய மாணவர் படையினர், நாட்டு நலப்பணித் திட்ட ஆர்வலர்கள்  இடையே பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். நேதாஜி சுபாஷ் சந்திர போசைப் போல உடையணிந்து, ஏராளமான குழந்தைகள் பிரதமரின் இல்லத்திற்கு வருவது இதுவே முதல் முறை என்று குறிப்பிட்ட பிரதமர், ஜெய்ஹிந்த் என்னும் மந்திரம் அனைவரையும் ஊக்குவிக்கிறது என்றார்.

கடந்த பல வாரங்களில் நாட்டின் இளைஞர்களுடன் கலந்துரையாடியதை நினைவு கூர்ந்த பிரதமர், ஒரு மாதத்திற்கு முன்பு வீர பால தினத்தை கொண்டாடியபோது, பாலர்களின் தீரத்தையம், துணிச்சலையும் நாடு முழுவதும் கொண்டாடியதைச் சுட்டிக்காட்டினார். கர்நாடகாவில் நடைபெற்ற தேசிய இளைஞர் திருவிழாவை பற்றி குறிப்பிட்ட அவர், முதல் தொகுதி அக்னி வீரர்களுடன் தமது கலந்துரையாடல், உத்தரப்பிரதேசத்தில் விளையாட்டு மகா கும்ப மேளாவில் இளம் விளையாட்டு வீரர்களுடன் பேசியது, தமது இல்லத்தில் நாடாளுமன்றத்தில் குழந்தைகளுடனும், பால விருதாளர்களுடனும், கலந்துரையாடியதை நினைவு கூர்ந்தார். தேர்வுக் குறித்து விவாதிப்போம் என்ற மாணவர்களுடனான நிகழ்ச்சி, வரும் 27-ம் தேதி நடைபெற உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இளைஞர்களுடனான உரையாடலின் முக்கியத்துவத்துக்கு இரண்டு காரணங்களை பிரதமர் விளக்கினார். முதலாவதாக, ஆற்றல், புத்துணர்வு, புதுமை, இளைஞர்களின் ஆர்வம், ஆகியவை தமக்கு  மேலும் இரவு பகலாக கடினமாக உழைக்க ஊக்கமளிக்கிறது என்று கூறிய பிரதமர், இரண்டாவதாக “நீங்கள் அனைவரும் இந்த அமிர்த காலத்தில், கனவுகளையும், அபிலாசைகளையும் கொண்டுள்ளீர்கள். வளர்ந்த இந்தியாவின் மிகப்பெரிய பயனாளிகளாக நீங்கள் இருக்க போகிறீர்கள். இதை கட்டமைக்கும் பெரும் பொறுப்பையும் நீங்கள் தாங்கி செல்வீர்கள்” என்றார்.

பொது வாழ்க்கையில், இளைஞர்களின் பல்வேறு பரிமாணங்களின் பங்கு அதிகரித்து வருவதைப் பார்ப்பது உற்சாகம் அளிப்பதாக பிரதமர் கூறினார். விடுதலையின் அமிர்தப் பெருவிழாவின் நிகழ்ச்சிகள், பராக்கிரம தின நிகழ்ச்சிகளில் இளைஞர்கள் அதிகபடியாக பங்கேற்றதை நினைவு கூர்ந்த அவர்,  இது அவர்களது கனவுகளையும், நாட்டின் மீதான அர்ப்பணிப்பையும் பிரதிபலிப்பதாக தெரிவித்தார்.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் என்சிசி மற்றும் என்எஸ்எஸ் ஆர்வலர்களின் பங்களிப்பு குறித்து குறிப்பிட்ட பிரதமர்,  இந்த அமைப்புகளை ஊக்குவிக்க அரசு மேற்கொண்ட முயற்சிகள் பற்றி விளக்கினார். நாட்டின்  எல்லைப்பகுதிகள், கடலோர பிராந்தியங்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்கு இளைஞர்களை தயார்ப்படுத்த அரசு மேற்கொண்ட ஏற்பாடுகளை விளக்கிய பிரதமர், நாடு முழுவதும் ஏராளமான மாவட்டங்களின் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார். இந்த நிகழ்ச்சிகளில் ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவற்றின் உதவியுடன் சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படுவதாக அவர் கூறினார். இந்த பயிற்சிகள். இளைஞர்களை எதிர்காலத்திற்கு தயார்ப்படுத்துவதுடன், தேவையான சமயத்தில் அவற்றை சந்திக்கும் முதல் குடிமக்களாக இருக்கும் திறனையும், வளர்க்கும் என்று தெரிவித்தார். நாட்டின் எல்லைகளுக்கு அருகில் உள்ள கிராமங்களில் எழுச்சி மிகு எல்லைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதை பிரதமர் குறிப்பிட்டார். “எல்லைப்பகுதிகளில் இளைஞர்களின் திறனை ஊக்குவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. கல்வி மற்றும் வேலைக்கு சிறந்த வாய்ப்புகள்   வழங்கப்படுவதால், அவர்களது குடும்பங்கள் கிராமங்களுக்கு திரும்ப முடியும்” என்று பிரதமர் கூறினார்.

மாணவர்களாகிய உங்கள் ஒவ்வொருவரின்  வெற்றிக்கும், உங்கள் பெற்றோர் மற்றும் குடும்பத்தினரின் பங்களிப்பு இன்றியமையாதது என்ற பிரதமர், இதனைக் கருத்தில் கொண்டு அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம், அனைவரின் நம்பிக்கையைப் பெறுவோம் என்ற கொள்கையை மத்திய அரசு வடிவமைத்திருப்பதாகவும் கூறினார்.  இளைஞர்களின் இலக்குகள் நாட்டின் இலக்குகளோடு இணைந்திருக்கும் போது, இருதரப்பினருக்கும் வெற்றி எளிதானதாக இருக்கும் என்று குறிப்பிட்டார்.  இளைஞர்களின் வெற்றியை இந்தியாவின் வெற்றியாக உலகம் கருதுவதாகக் குறிப்பிட்ட பிரதமர், இதற்கு உதாரணமாக சாதனை படைத்த இந்திய பிரபலங்களின் பெயர்களையும் பட்டியலிட்டார்.  அறிவியல் விஞ்ஞானிகளான டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம், ஹோமி ஜஹாங்கிர் பாபா மற்றும் டாக்டர் சி வி ராமன், விளையாட்டு சாதனையாளரான மேஜர் தயான்சந்த் மற்றும்  இதர விளையாட்டு சாதனையாளர்களின் பெயர்களையும் குறிப்பிட்டுப் பேசிய பிரதமர், இவர்கள் அனைவரது மைல்கல் சாதனைகளையும், இந்தியாவின் வெற்றியாக உலகம் பார்ப்பதாகக் கூறினார்.  அதேநேரத்தில்  இந்தியாவின் சாதனைகளில் புதிய எதிர்காலத்தை உலகம் காண்பதாகவும், இந்த வரலாற்றுச் சாதனைகள் ஒட்டுமொத்த மனித குலத்தின் வளர்ச்சிக்கான அடித்தளத்தை அமைத்திருப்பதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.

தற்போதைய சூழ்நிலையில் இளைஞர்களுக்கு அபரிமிதமான வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு இருப்பதாகக் கூறிய பிரதமர், ஸ்டார்ட் அப் இந்தியா, மேக் இன் இந்தியா, தற்சார்பு இந்தியா ஆகியவை மனித குலத்தின் எதிர்காலம் மீதான புதிய எதிர்பார்ப்புகளை உருவாக்கி இருப்பதையும் சுட்டிக்காட்டினார்.

விளையாட்டு போன்ற துறைகளில் இளைஞர்களின் சாதனைகள் அளப்பரியவை என்று குறிப்பிட்ட அவர், இதுதவிர பிற துறைகளில் உள்ள வாய்ப்புகளைத் தேடி கண்டுபிடித்து சாதிக்க வேண்டும் என வலியுறுத்தினார். 

எதிர்காலத்திற்கான இலக்குகள் மற்றும் தீர்மானங்கள், நாட்டின் முன்னேற்றத்திற்கு முக்கியமானது என்றும், அனைத்துத் துறைகளுக்கும் சம முக்கியத்துவம் அளித்து வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.    நாட்டில் அவ்வப்போது உருவாக்கப்படும் மாற்றங்களுக்கு ஏற்ப, இளைஞர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்ட பிரதமர், தூய்மை இந்தியா திட்டத்தில் இளைஞர்கள் தங்களது பங்களிப்பை செலுத்தி, தாங்கள் சார்ந்துள்ள பகுதி, கிராமம், நகரம் ஆகியவற்றை தூய்மையாக வைத்துக் கொள்ள உதவ வேண்டும் எனவும் தெரிவித்தார்.  அமிர்த காலத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்த ஒரு புத்தகத்தையாவது படிக்க வேண்டும், விடுதலைப் போராட்ட வீரர்கள் குறித்த கவிதை, கட்டுரை, கதை ஆகிய செயல்களில் மாணவர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்ட பிரதமர் இதற்கு ஏதுவாக பள்ளிகளும் போட்டிகளை நடத்த முன்வர வேண்டும் என்றும் கூறினார்.

அதேபோல், ஃபிட் இந்தியா இயக்கத்தில் இளைஞர்கள் தங்களை இணைத்துக் கொள்வதோடு, தங்கள் குடும்பத்தினரையும் ஈடுபடுத்த முயற்சி செய்ய வேண்டும் என்றும், இந்தியாவின் கலாச்சாரமாக திகழும் யோகாசனப் பயிற்சியை ஒவ்வொரு இல்லங்களிலும் மேற்கொள்ள வேண்டும் என்றார் பிரதமர்.  ஜி20 நாடுகளின் உச்சிமாநாடு தொடர்பான தகவல்களை இளைஞர்கள் தெரிந்து வைத்துக் கொள்வதோடு, இந்தியாவின் தலைமைத்துவம் சார்ந்த தங்கள் கருத்துக்களையும் தெரிவிக்க வேண்டும் என்றார்.

நமது பாரம்பரியத்தின்  பெருமை, மனரீதியான அடிமைத்தனத்தில் இருந்து விடுதலைப் பெறுதல் போன்ற தீர்மானங்களில் இளைஞர்களின் பங்களிப்பை எடுத்துரைத்த பிரதமர், குறிப்பாக நம்முடைய பாரம்பரிய சுற்றுலாத் தலங்களுக்கு இளைஞர்கள் பயணம் மேற்கொள்ள வேண்டும் எனவும் யோசனை தெரிவித்தார்.  இளைஞராக உள்ள இந்த நேரத்தில் உங்களுடைய எதிர்காலத்தை தற்போதே தீர்மானித்துக் கொள்வதோடு, புதிய எண்ணங்களையும் புதிய இலக்குகளையும் உருவாக்குபவராக மாறுவதன் மூலம் புதிய இந்தியாவின் வழிகாட்டியாக  மாற முடியும் என்றும் பிரதமர் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர், பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் அர்ஜூன் முண்டா, இணையமைச்சர்கள் திரு அஜய் பட், ரேணுகா சிங் சருதா, திரு நிஷித் பிரமானிக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

*************

(Release ID: 1893683)

AP/PKV/ES/RS/PK/KRS