Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

என்எக்ஸ்டி மாநாட்டில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

என்எக்ஸ்டி மாநாட்டில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்


 

வணக்கம்,

ஐடிவி நெட்வொர்க் நிறுவனரும் நாடாளுமன்றத்தில் எனது சகாவுமான கார்த்திகேய சர்மா அவர்களே, இந்த நெட்வொர்க்கின் ஒட்டுமொத்த குழுவினரே, இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் இருந்து வந்துள்ள அனைத்து விருந்தினர்களே, தாய்மார்களே வணக்கம்.  நியூஸ் எக்ஸ் வேர்ல்டின் மங்களகரமான தொடக்கத்திற்காக உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். இன்று, இந்தி, ஆங்கிலம் உட்பட உங்கள் நெட்வொர்க்கின் அனைத்து பிராந்திய அலைவரிசைகளும் உலக அளவில் செல்கின்றன. 

நண்பர்களே,

இதற்கு முன்பும் கூட இதுபோன்ற ஊடக நிகழ்ச்சிகளில் நான் கலந்து கொண்டிருக்கிறேன். ஆனால் இன்று நீங்கள் ஒரு புதிய போக்கை ஏற்படுத்தியுள்ளீர்கள் என்று நான் உணர்கிறேன். இதற்காகவும் நான் உங்களை வாழ்த்துகிறேன். இதுபோன்ற ஊடக நிகழ்வுகள் நம் நாட்டில் தொடர்ந்து நடக்கின்றன. இது ஒரு பாரம்பரியமாக தொடர்கிறது. இதில் சில பொருளாதார தலைப்புகள் உள்ளன. இது அனைவருக்கும் நன்மை பயக்கும் விஷயம். ஆனால் உங்கள் நெட்வொர்க் அதற்கு ஒரு புதிய பரிமாணத்தை அளித்துள்ளது. விதிமுறையிலிருந்து விலகி ஒரு புதிய மாதிரியை உருவாக்கியுள்ளீர்கள். முந்தைய உச்சிமாநாடுகள் குறித்தும் நேற்றிலிருந்து நான் கேட்டுக் கொண்டிருக்கும் உங்கள் உச்சிமாநாடு பற்றியும் நான் பேசினால், பல்வேறு ஊடக நிறுவனங்களால் ஏற்பாடு செய்யப்பட்ட முந்தைய உச்சிமாநாடுகள் தலைவர்களை மையமாகக் கொண்டவை. இது கொள்கையை மையமாகக் கொண்டது என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். கொள்கைகள் இங்கே விவாதிக்கப்படுகின்றன. 

நண்பர்களே,

இன்று ஒட்டுமொத்த உலகமும் 21-ம் நூற்றாண்டு இந்தியாவைப் பார்க்கிறது. உலகம் முழுவதிலுமிருந்து மக்கள் இந்தியாவுக்கு வர விரும்புகிறார்கள். இந்தியாவைப் பற்றி அறிய விரும்புகிறார்கள். இன்று உலகில் நேர்மறையான செய்திகள் தொடர்ந்து நடக்கும் நாடாக இந்தியா உள்ளது. செய்திகளை உருவாக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒவ்வொரு நாளும் புதிய சாதனைகள் படைக்கப்படுகின்றன, புதியது ஒன்று நடக்கிறது. பிப்ரவரி 26 அன்று, பிரயாக்ராஜில் ஒற்றுமையின் மகா கும்பமேளா நிறைவடைந்தது. ஒரு நகரத்தில், ஒரு தற்காலிக ஏற்பாட்டில், கோடிக்கணக்கான மக்கள் எப்படி நதிக்கரைக்கு வந்தார்கள், பல நூறு கிலோமீட்டர்கள் பயணம் செய்து, புனித நீராடிய பிறகு எப்படி உணர்வுகளால் நிறைந்தார்கள் என்பதைக் கண்டு உலகமே வியப்படைகிறது. இன்று உலகம் இந்தியாவின் புதுமையான திறன்களைக் காண்கிறது. செமிகண்டக்டர்கள் முதல் விமானம் தாங்கிக் கப்பல்கள் வரை அனைத்தையும் இங்கேயே தயாரித்து வருகிறோம். பாரதத்தின் இந்த வெற்றியைப் பற்றி உலகம் விரிவாக அறிய விரும்புகிறது.  

நண்பர்களே,

சில மாதங்களுக்கு முன்பு, உலகின் மிகப்பெரிய தேர்தலை இந்தியா நடத்தியது. 60 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியாவில் ஒரு அரசு தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்துள்ளது. இந்த பொது நம்பிக்கையின் அடிப்படையே கடந்த 11 ஆண்டுகளில் இந்தியாவின் பல சாதனைகள். உங்கள் புதிய அலைவரிசை இந்தியாவின் உண்மையான கதைகளை உலகிற்கு எடுத்துச் செல்லும் என்று நான் நம்புகிறேன்.

நண்பர்களே,

சில ஆண்டுகளுக்கு முன்பு, உள்ளூர் பொருள்களுக்கான குரல், உலகளாவிய குரல் என்ற தொலைநோக்குப் பார்வையை நான் நாட்டுக்கு வழங்கினேன். இன்று இந்த கனவு நனவாகி வருவதை நாம் காண்கிறோம். இன்று நமது ஆயுஷ் தயாரிப்புகளும், யோகாவும் உள்ளூர் பயன்பாட்டிலிருந்து உலக அளவில் பரவியுள்ளன. உலகில் எங்கு சென்றாலும், யோகா தெரிந்த ஒருவரை நீங்கள் காணலாம்.

நண்பர்களே,

சிறுதானியங்களும், இந்தியாவின் மஞ்சளும் உலக அளவில் சென்றுவிட்டன. உலகின் 60 சதவீதத்திற்கும் அதிகமான மஞ்சளை இந்தியா வழங்குகிறது. இந்தியாவின் காபி உலக அளவில் சென்றுள்ளது. இந்தியா உலகின் ஏழாவது பெரிய காபி ஏற்றுமதியாளராக மாறியுள்ளது. இன்று இந்தியாவின் மொபைல்கள், மின்னணு பொருட்கள், இந்தியாவில் தயாரிக்கப்படும் மருந்துகள் ஆகியவை உலகளாவிய அடையாளத்தை உருவாக்கி வருகின்றன. இவை எல்லாவற்றோடு, மேலும் ஒரு விஷயம் நடந்துள்ளது. பல உலகளாவிய முன்முயற்சிகளை இந்தியா முன்னெடுத்து வருகிறது. அண்மையில் பிரான்சில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு செயல் உச்சி மாநாட்டிற்கு செல்லும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. செயற்கை நுண்ணறிவு எதிர்காலத்தை நோக்கி உலகை அழைத்துச் செல்லும் இந்த உச்சி மாநாட்டின் இணை ஏற்பாட்டாளராக இந்தியா இருந்தது. இப்போது அதை நடத்தும் பொறுப்பு இந்தியாவுக்கு உள்ளது. ஜி-20 உச்சி மாநாட்டுக்கு இந்தியா தலைமையேற்று நடத்தியது. இந்த உச்சிமாநாட்டின் போது, இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா வழித்தடம் வடிவில் ஒரு புதிய பொருளாதார பாதையை உலகிற்கு வழங்கியுள்ளோம். உலகளாவிய தெற்கிற்கும் இந்தியா ஒரு வலுவான குரலை அளித்துள்ளது. தீவு நாடுகளையும் அவற்றின் நலன்களையும் முன்னுரிமைகளுடன் இணைத்துள்ளோம். பருவநிலை நெருக்கடியை சமாளிக்க சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை என்ற தொலைநோக்குப் பார்வையை இந்தியா உலகிற்கு வழங்கியுள்ளது. அதேபோல, சர்வதேச சூரியசக்தி கூட்டணி, பேரிடர் தடுப்பு உள்கட்டமைப்புக்கான கூட்டணி போன்ற பல முன்முயற்சிகளை உலக அளவில் இந்தியா முன்னெடுத்து வருகிறது. இன்று இந்தியாவின் பல பிராண்டுகள் உலக அளவில் சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்தியாவின் ஊடகங்களும் உலகளாவியதாக மாறியிருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. 

நண்பர்களே,

 இன்று இந்தியா உலகின் புதிய தொழிற்சாலையாக மாறி வருகிறது. நாம் ஒரு தொழிலாளர் சக்தியாக மட்டுமல்ல, ஒரு உலக-சக்தியாகவும் மாறி வருகிறோம்! ஒரு காலத்தில் நாம் இறக்குமதி செய்த பொருட்களின் ஏற்றுமதி மையமாக இன்று நாடு மாறி வருகிறது. ஒரு காலத்தில் உள்ளூர் சந்தைக்கு மட்டுப்படுத்தப்பட்ட விவசாயிகளின் உற்பத்தி, இன்று முழு உலகின் சந்தைகளையும் சென்றடைகிறது.  மின்னணுவியல் முதல் ஆட்டோமொபைல் துறை வரை, நமது அளவையும் திறனையும் உலகம் கண்டுள்ளது. நாங்கள் எங்கள் தயாரிப்புகளை உலகிற்கு வழங்குவதோடு மட்டுமல்லாமல், உலகளாவிய விநியோகச் சங்கிலியில் நம்பகமான கூட்டாளியாகவும் இந்தியா மாறி வருகிறது.

நண்பர்களே,

இன்று நாம் பல துறைகளில் முன்னணியில் இருக்கிறோம் என்றால், அதற்கு பல ஆண்டுகளாக நன்கு திட்டமிடப்பட்ட கடின உழைப்பே காரணம். முறையான கொள்கை முடிவுகளால் மட்டுமே இது சாத்தியமானது. இன்று உலகின் மிகப்பெரிய வாகன உற்பத்தியாளராகவும், ஏற்றுமதியாளராகவும் நாம் உருவெடுத்துள்ளோம்.

நண்பர்களே,

இதேபோன்ற மாற்றம் மின்னணு உற்பத்தியிலும் காணப்படுகிறது. கடந்த பத்து ஆண்டுகளில், முதல் முறையாக 2.5 கோடிக்கும் அதிகமான வீடுகளுக்கு மின்சாரம் சென்றடைந்தது. நாட்டில் மின்சாரத்திற்கான தேவை அதிகரித்தது. உற்பத்தியும் அதிகரித்தது. மின்னணு உபகரணங்களுக்கான தேவையும் அதிகரித்தது. டேட்டாவை மலிவானதாக மாற்றியபோது, மொபைல் போன்களுக்கான தேவையும் அதிகரித்தது. உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகை போன்ற திட்டங்களைத் தொடங்கினோம். இன்று, இந்தியா ஒரு முக்கிய மின்னணு ஏற்றுமதியாளராக மாறியுள்ளது.

நண்பர்களே,

இன்று இந்தியா மிகப் பெரிய இலக்குகளை நிர்ணயிக்க முடிகிறது, அவற்றை அடைந்து வருகிறது, எனவே இதன் மையத்தில் ஒரு சிறப்பு மந்திரம் உள்ளது. குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச ஆளுகை என்பதே இந்த தாரக மந்திரம். இதுதான் திறமையான  நிர்வாகத்தின் தாரக மந்திரமாகும். அதாவது அரசின் தலையீடும், அரசின் அழுத்தமும் இல்லை. கடந்த பத்தாண்டுகளில், முக்கியத்துவத்தை இழந்த சுமார் 1500 சட்டங்களை நாங்கள் ரத்து செய்துள்ளோம். 1500 சட்டங்களை ஒழிப்பது பெரிய விஷயம். இவற்றில் பல சட்டங்கள் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இயற்றப்பட்டவை. 

நண்பர்களே,

 மூங்கில்தான் நமது பழங்குடியினர், குறிப்பாக வடகிழக்குப் பகுதியின் உயிர்நாடி. ஆனால், முன்பு மூங்கில் வெட்டியதற்காகக் கூட நீங்கள் சிறைக்கு அனுப்பப்பட்டீர்கள்.  மூங்கில் ஒரு மரமல்ல என்பதை நம் முந்தைய ஆட்சியாளர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. பிரிட்டிஷாருக்கு சொந்த நலன்கள் இருந்திருக்கலாம். ஆனால் நாம் ஏன் அதைச் செய்யவில்லை? மூங்கில் தொடர்பான பல ஆண்டுகால பழமையான சட்டத்தைக் கூட எங்கள்  அரசுதான் மாற்றியது.

நண்பர்களே,

10 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சாமானிய மனிதன் வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்வது எவ்வளவு கடினமாக இருந்தது என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். இன்று நீங்கள் சில நிமிடங்களில் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்கிறீர்கள். மேலும் சில நாட்களுக்குள் பணத்தைத் திரும்பப் பெறவும் முடிகிறது. இப்போது வருமான வரி தொடர்பான சட்டத்தை இன்னும் எளிமையாக்கும் செயல்முறை நாடாளுமன்றத்தில் நடந்து வருகிறது. நாங்கள் ரூ.12 லட்சம் வரை வருமானத்திற்கு வரி விலக்கு அளித்துள்ளோம். 

நண்பர்களே,

பூஜ்யம் என்ற கோட்பாட்டை உலகிற்கு வழங்கிய இந்தியா, இன்று எல்லையற்ற கண்டுபிடிப்புகளின் பூமியாக மாறி வருகிறது.  பாதுகாப்பான, செலவு குறைந்த டிஜிட்டல் கட்டண முறையை உலகம் விரும்பியபோது, நாங்கள் யுபிஐ முறையை உருவாக்கினோம். கொவிட் தொற்றுநோய்களின் போது, நமது தடுப்பூசி இந்தியாவின் தரமான சுகாதார தீர்வுகளின் முன்மாதிரியை உலகுக்குக் காட்டியது.  பொது நலனுக்காக செயற்கை நுண்ணறிவு குறித்த ஆராய்ச்சியில் இந்தியா ஈடுபட்டு வருவதுடன், தனது அனுபவத்தையும், நிபுணத்துவத்தையும் உலகத்துடன் பகிர்ந்து கொள்கிறது.

நண்பர்களே,

 இந்திய இளைஞர்கள் வளர்ந்த இந்தியாவின் மிகப்பெரிய பயனாளிகளாகவும், மிகப்பெரிய பங்குதாரராகவும் உள்ளனர். எனவே, இந்தியாவின் இளைஞர்களுக்கு நாங்கள் மிகப் பெரிய முன்னுரிமை அளிக்கிறோம். புத்தகங்களைத் தாண்டி சிந்திக்க குழந்தைகளுக்குப் புதிய தேசிய கல்விக் கொள்கை வாய்ப்பளித்துள்ளது.  இந்த ஆண்டு பட்ஜெட்டில், 50 ஆயிரம் புதிய அடல் டிங்கரிங் சோதனைக் கூடங்களை உருவாக்க நாங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளோம்.

நண்பர்களே,

செய்தி உலகில், நீங்கள் பல்வேறு ஏஜென்சிகளிடமிருந்து சந்தா பெறுகிறீர்கள். இது சிறந்த செய்தி கவரேஜைப் பெற உங்களுக்கு உதவுகிறது. அதேபோல், ஆராய்ச்சித் துறையில், மாணவர்களுக்கு மேலும் மேலும் தகவல் ஆதாரங்கள் தேவைப்படுகின்றன. இதற்காக முன்பு அவர்கள் பல்வேறு பத்திரிகைகளுக்கு அதிக கட்டணத்தில் சந்தா செலுத்த வேண்டியிருந்தது. அவர்களே பணம் செலவழிக்க வேண்டியிருந்தது. எங்கள் அரசு அனைத்து ஆராய்ச்சியாளர்களையும் இந்த கவலையிலிருந்து விடுவித்துள்ளது. ஒரே நாடு ஒரே சந்தா கொண்டு வந்துள்ளோம். இதன் மூலம், நாட்டின் ஒவ்வொரு ஆராய்ச்சியாளரும் உலகின் புகழ்பெற்ற பத்திரிகைகளை இலவசமாக அணுகுவது உறுதி. இதற்காக அரசு 6 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலவிட உள்ளது. ஒவ்வொரு மாணவருக்கும் சிறந்த ஆராய்ச்சி வசதிகள் கிடைப்பதை நாங்கள் உறுதி செய்கிறோம். விண்வெளி ஆராய்ச்சி, உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சி அல்லது செயற்கை நுண்ணறிவு என எதுவாக இருந்தாலும், நமது குழந்தைகள் எதிர்கால தலைவர்களாக உருவாகி வருகின்றனர். 

நண்பர்களே,

ஒவ்வொரு உலக தளத்திலும் இந்தியாவின் கொடி பறக்கட்டும். இதுவே நமது விருப்பம். இதுவே நமது திசை.

நண்பர்களே,

சிறியதாக சிந்தித்து சிறிய நடவடிக்கைகளை எடுப்பதற்கான நேரம் இதுவல்ல. ஒரு ஊடக நிறுவனம் என்ற வகையில் நீங்களும் இந்த உணர்வைப் புரிந்துகொண்டீர்கள் என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை தேசத்தின் பல்வேறு மாநிலங்களுக்கு எப்படி சென்றடைவது என்று நீங்கள் சிந்தித்து வந்தீர்கள். உங்கள் ஊடக நிறுவனத்தை எப்படி மக்களிடம் கொண்டு சேர்ப்பது என்று சிந்தித்து வந்தீர்கள். ஆனால் இன்று உலகளவில் செல்வதற்கான தைரியத்தை நீங்களும் சேகரித்திருக்கிறீர்கள். இந்த உத்வேகம், இந்த உறுதிமொழி, இன்று ஒவ்வொரு குடிமகனுக்கும், ஒவ்வொரு தொழில்முனைவோருக்கும் ஒன்றாக இருக்க வேண்டும். உலகின் ஒவ்வொரு சந்தையிலும், ஒவ்வொரு வரவேற்பறையிலும், ஒவ்வொரு இடத்திலும் ஏதாவது ஒரு இந்திய பிராண்ட் இருக்க வேண்டும் என்பது எனது கனவு. இந்தியாவில் தயாரிப்போம் என்பது உலகின் தாரக மந்திரமாக மாற வேண்டும். 

நண்பர்களே,

அடுத்த 25 ஆண்டுகளில் வளர்ந்த இந்தியாவாக மாறுவதற்கான தீர்மானத்துடன் இந்தியா முன்னேறி வருகிறது. ஊடக நிறுவனமாக உங்களை உலக அரங்கில் கொண்டு வர வேண்டும் என்ற உறுதியுடன் நீங்களும் முன்னேறிச் செல்ல வேண்டும். இதில் நீங்கள் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள் என்று நான் நம்புகிறேன். நான் மீண்டும் ஒருமுறை ஐடிவி நெட்வொர்க்கின் ஒட்டுமொத்த குழுவினருக்கும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அனைவருக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

வணக்கம்.

பொறுப்புத் துறப்பு: இது பிரதமர் ஆற்றிய உரையின் உத்தேசமான மொழிபெயர்ப்பு. பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்.

*****  

PLM/KV