மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் வரும் பொது துறை நிறுவனங்களில் சிறிய ரத்னா நிறுவனமான எச்.எல்.எல். லைஃப்கேர் லிமிடெட் நிறுவனத்துக்கு சென்னைக்கு அருகே அமைந்துள்ள செங்கல்பட்டில் 330.1 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு விட பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. சிறப்பு நோக்க அமைப்பு மூலம் மருத்துவ கருவிகள் உற்பத்தி பூங்கா (மெடிபார்க்) அமைப்பதற்கு இந்த நிலம் ஒதுக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் எச்.எல்.எல். லைஃப்கேர் லிமிடெட் நிறுவனத்தின் பங்கு 50 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கும்.
இந்த மெடிபார்க் திட்டம் நாட்டின் மருத்துவ தொழில்நுட்பத் துறையில் முதலாவது உற்பத்தி தொகுதியாகும். மிக உயரிய பொருட்களை உள்ளூர் நிலையிலேயே குறிப்பிடத்தக்க குறைந்த விலையில் உற்பத்தி செய்வதை அதிகரிப்பதற்காக இத்திட்டம் செயல்படுகிறது. இதனால், சுகாதார சேவைகள் குறிப்பாக நோய் கண்டறியும் சேவைகள் வழங்குவதற்கான கட்டணம் வெகுவாகக் குறைந்து பெரிய அளவில் மக்கள் பயன்பெறுவார்கள். இந்த உத்தேச மெடிபார்க் திட்டம் மருத்துவ கருவிகள் மற்றும் தொழில்நுட்ப துறை மேம்பாட்டுக்கு பெரிய அளவில் பங்களித்து வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுடன் மத்திய அரசின் இந்தியாவில் தயாரிப்போம் இயக்கத் திட்டத்திற்கு உத்வேகம் அளிக்கும்.
இந்த மெடிபார்க் கட்டம் கட்டமாக மேம்படுத்தப்பட்டு ஏழு ஆண்டுகளில் நிறைவுபெறும். முதற்கட்டத்தில் அடிப்படை வசதிகள் உருவாக்கப்படும். மூன்றாம் ஆண்டிலிருந்து மனைகள் ஒத்திக்கு வழங்கப்படும். இரண்டாவது கட்டத்தில் அறிவு நிர்வாக மையம் துறைகளின் மானியம் மற்றும் இதர உதவிகளுடன் உருவாக்கப்படும். எச்.எல்.எல். லைஃப்கேர் லிமிடெட் நிறுவனம் இந்த நிலத்தை முதலீட்டாளர்களுக்கு வாடகைக்கு விடும். இதற்கு வெளிப்படையான ஏல நடைமுறை பயன்படுத்தப்படும். மருத்துவ கருவிகள் தயாரிக்கும் பிரிவுகளை அமைக்க விரும்பும் முதலீட்டாளர்கள் இந்த ஏலத்தில் பங்கேற்கலாம். முதல்கட்டமாக தகுதியுள்ள மருத்துவ கருவி தொழில்முனைவோர், உற்பத்தி தொழில் துறையினர் ஆகியோருக்கு மானிய விலையில் வழங்கப்படும். இதனால், இதர முதலீட்டாளர்களும் ஈர்க்கப்படுவார்கள். இதனையடுத்து தேவை அதிகரிக்கும் போது மனைகளின் விலையும் படிப்படியாக உயரும். இவ்வாறாக இந்த மெடிபார்க் திட்டம் இந்தியாவின் தரம்வாய்ந்த சுகாதார பராமரிப்பு சேவைகளில் முக்கியமான பங்காற்றும்.
இந்தத் திட்டம் நமது இறக்குமதி சார்பினை வெகுவாக குறைக்கும். உள்நாட்டு தொழில்கள் வளர்ச்சிக்கு வலுவான அடித்தளத்தை உருவாக்கும். அதிநவீன அடிப்படை வசதிகள் மற்றும் தொழில்நுட்பம் இதனால் கிடைக்கும். மருத்துவ கருவிகள் உள்நாட்டு உற்பத்தி, உறுதயளிக்கப்பட்ட குறைந்தவிலை சுகாதார சேவையை கொண்டு வருவதுடன், சுகாதார சேவைகளின் பரவலாக்குதலை வலுப்படுத்தி விரிவாக்கும்.