Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

எச்.எம்.டி நிறுவனத்திற்கு நிலுவையிலுள்ள ஊதியங்களை வழங்கவும், தாமாக முன்வந்து ஓய்வு பெறும் திட்டத்தை அறிமுகப்படுத்தவும் டிராக்டர் உற்பத்திப் பிரிவை மூடுவதற்கும் பட்ஜெட் ஆதரவு வழங்குவதற்கு அமைச்சரவை ஒப்புதல்


எச்.எம்.டி நிறுவனத்திற்கு நிலுவையிலுள்ள ஊதியம், சம்பளம் ஊழியர் தொடர்பான நிகர நிலுவைத் தொகைகளை வழங்கவும், பட்ஜெட் ஆதரவு தருவதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. எச்.எம்.டி டிராக்டர் பிரிவை மூடிவிட்டு அதன் ஊழியர்களுக்கு மிகவும் உகந்த தாமாக விரும்பி ஓய்வு பெறும் திட்டத்தை 2007 – ம் ஆண்டு ஊதிய விகிதங்கள் அடிப்படையில் வழங்கவும் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.

இதன் காரணமாக நிலுவையிலுள்ள ஊதியம், சம்பளம் மற்றும் சட்டப்படியான நிலுவைத் தொகைகளை வழங்கவும் டிராக்டர் பிரிவின் வங்கிக் கடன்கள் இதரக் கடன்களை செலுத்தி ஊழியர்களுக்கு தாமாக முன்வந்து ஓய்வு பெறும் திட்டத்தின்படி கருணைத் தொகை வழங்கவும் மொத்தம் நிதிச் சுமையாக ரூ. 718.72 கோடி ஏற்படும்.

பெங்களூரு மற்றும் கொச்சியில் உள்ள எச்.எம்.டி நிறுவனத்தின் தெரிவு செய்யப்பட்ட சிறிய நிலப்பகுதியை பல்வேறு அரசு நிறுவனங்களுக்கு பொது நலனுக்காக பயன்படுத்துவதற்கு மாற்றித் தருவதற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

பின்னணி:

மத்திய கனரக தொழில்கள் துறை அமைச்சகம் மற்றும் மத்திய அரசின் பொது துறை நிறுவனமும் ஆன எச்.எம்.டி நிறுவனம் பெங்களூருவில் 1953 – ம் ஆண்டு நாட்டின் தொழில் அடிப்படை வசதிக்கும் தேவையான இயந்திரக் கருவிகள் உற்பத்திக்கும் என நிறுவப்பட்டது. நாட்டின் பொறியியல் மற்றும் உற்பத்திதுறை திறன் பரிணாமத்திற்கு அடித்தளம் அமைப்பதில் எச்.எம்.டி நிறுவனம் முக்கியப் பங்காற்றியது. எச்.எம்.டி டிராக்டர் பிரிவு 1971 – ல் ஹரியானா மாநிலம் பிஞ்சோரில் எச்.எம்.டி டிராக்டர்களை உற்பத்தி செய்வதற்காக உருவாக்கப்பட்டது. தாராள மயமாக்கப்பட்ட சூழ்நிலை பின்னணியில் விலை உயர்வு, சர்வதேச நிறுவனங்களின் கடுமையான போட்டி, குறைந்த விலையில் இறக்குமதிப் பொருட்கள் கிடைக்காதது ஆகிய காரணங்களால் 1990 களில் இந்த நிறுவனத்தின் உற்பத்தி குறையத் தொடங்கியது. இந்த வளர்ச்சிக் குறைவுப் போக்கை சரிசெய்ய பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்ட போதிலும் நிறுவனத்தை லாபகரமாக செயல்படுத்துவதில் வெற்றிகாண முடியவில்லை. எச்.எம்.டி டிராக்டர் நிறுவனத்தின் வர்த்தகம் விற்பனைக் குறைவு, மூலத் திறனையும் பயன்படுத்த இயலாத நிலை பயன்பாட்டு மூலதனத் தட்டுப்பாடு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டது. டிராக்டர் வர்த்தகத்தை அந்தத்துறையின் முக்கியமான சந்தை பங்களிப்புடன் தொடர்வது நிதி அணுகுமுறையில் பார்த்தால் கட்டுபடியாகாது நிலைத்திருக்க முடியாது என்று கண்டறியப்பட்டது. எனவே இந்த டிராக்டர் வர்த்தகத்தை நிறுத்தி விடுவது சமயோசிதமானது என்று கருதப்பட்டது. இந்த வர்த்தகத்திலிருந்து வெளியேறி எந்திரக் கருவிகள் துறையில் கவனம் செலுத்துவது சிறந்தது என்றும் காணப்பட்டது.

டிராக்டர் பிரிவு தொடர்ச்சியாக நஷ்டத்தில் இயங்கி வந்தது. இந்தப் பிரிவினால் ஊழியர்களின் ஊதியம் இதர சட்டப்படியான உரிமைகளை வழங்க இயலவில்லை. பிஞ்சோரில் உள்ள டிராக்டர் பிரிவு ஊழியர்களுக்கு 2014 ஜூலை முதல் ஊதியம் வழங்கப்படவில்லை மற்றும் சட்டப்படியான இதரப் பணப்பயன்கள் 2013 நவம்பர் முதல் நிலுவையில் உள்ளன. எச்.எம்.டி டிராக்டர் பிரிவின் கம்பெனித் தலைமை அலுவலகம், பொது சேவைப் பிரிவு, அவுரங்காபாத்தில் உள்ள உணவுப் பதனீட்டு இயந்திரப் பிரிவு போன்ற இதரத் துறை ஊழியர்கள் ஊதியமும் நிலுவையில் உள்ளது. இந்த நிறுவனத்தின் மோசமாகிவரும் நிலையைக் கருத்தில்கொண்டும் அதன் ஊழியர்கள் ஊதியம் பெறாமலும் ஓய்வூதியப் பலன்கள் பெறாமலும் அவதிப்படும் நிலையிலும் எச்.எம்.டி டிராக்டர் பிரிவை மூடி விடுவதென முடிவெடுக்கப்பட்டது. அதன் ஊழியர்களுக்கு சிறப்பான தாமாக முன்வந்து ஓய்வூதியம் பெறும் திட்டத்தை வழங்கி அவர்களது பாக்கித் தொகைகளை வழங்கவும் முடிவு செய்யப்பட்டது.

****