Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

எக்னாமிக் டைம்ஸ் உலக வர்த்தக மாநாட்டில் பிரதமர் உரை

எக்னாமிக் டைம்ஸ் உலக வர்த்தக மாநாட்டில் பிரதமர் உரை

எக்னாமிக் டைம்ஸ் உலக வர்த்தக மாநாட்டில் பிரதமர் உரை


எக்னாமிக் டைம்ஸ் உலக வர்த்தக மாநாட்டில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று (23.02.2019) உரையாற்றினார்.

     அப்போது பேசிய அவர், 2013-14 காலகட்டத்தில், கட்டுப்படுத்த முடியாத பணவீக்கம், அதிக நிதி பற்றாக்குறை மற்றும் கொள்கை முடக்கம் போன்றவற்றை கொண்டதாக இருந்த இந்தியா, தற்போது மாற்றத்தைக் கண்டு வருவது கண்கூடாகத் தெரிகிறது என்றார்.

     தயக்கங்கள் நம்பிக்கைகளாகவும், தடைகள் வாய்ப்புகளாகவும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.

     2014-க்குப் பிறகு, அனைத்து சர்வதேச புள்ளி விவரங்கள் மற்றும் தரவரிசைப் பட்டியலிலும் இந்தியா குறிப்பிடத்தக்க அளவு முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

     தரவரிசைப் பட்டியல்களில் நாம் மிகவும் பின்தங்கியிருப்பதை உணர முடிந்தது.  அடிமட்டத்தில் ஏற்பட்ட மாற்றங்களுக்குப் பிறகே இந்த தரவரிசைப் பட்டியலில் மாற்றம் ஏற்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.  அந்த வகையில், தொழில் துவங்குவதற்கு உகந்த நாடாக மாற்றியதை சுட்டிக்காட்டிய அவர், பல்வேறு அளவு கோல்கள் மேம்பட்டிருப்பதை காண முடிகிறது என்றும் தெரிவித்தார்.

     புதிய கண்டுபிடிப்புகளுக்கான சர்வதேச தரவரிசைப் பட்டியலில்    2014-ல் 76-வது இடத்தில் இருந்த இந்தியா, 2018-ல் 57-வது இடத்திற்கு முன்னேறியிருப்பதை காண முடிவதாகவும் கூறினார்.  2014-க்கு முன்பும், பிறகும் பல்வேறு போட்டித்தன்மைகளில் நிலவிய முரண்பாடுகளையும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

     வளர்ச்சியை ஏற்படுத்துவது, முழுமையான சுகாதாரம், அல்லது முழுமையான மின்மயமாக்கல் அல்லது அதிக முதலீடு போன்ற நாம் விரும்பும் இலக்குகளை அடைவதும்தான், தற்போதைய போட்டியாக உள்ளன என்று அவர் தெரிவித்தார்.  ஆனால், இதற்கு நேர்மாறாக,  முந்தைய ஆட்சிக் காலத்தில், தாமதப்படுத்துவது அல்லது ஊழல் செய்வதில்தான் போட்டியைக் காணமுடிந்தது என்றார்.

     இந்தியாவில் சில விஷயங்களை செயல்படுத்த முடியாது என்று இருந்த நிலையை விளக்க, நேரம் போதாது என்றும் பிரதமர் கடுமையாக விமர்சித்தார்.

     முடியாது என்று கூறப்பட்டவை அனைத்தும் தற்போது சாத்தியமாகி இருப்பதாக குறிப்பிட்ட அவர், இந்தியாவை தூய்மையான, ஊழலற்ற நாடாக மாற்றுவதில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகவும், தொழில்நுட்பங்களை பயன்படுத்திவதில் இருந்த தேக்க நிலை மற்றும் பாகுபாடுகளை அகற்றுதல், கொள்கை வகுப்பதில் சமரசம் போன்றவற்றையும் சுட்டிக்காட்டினார்.

     வளர்ச்சியை அடையும் அரசு, ஏழைகளுக்கு உகந்ததாக இருக்க முடியாது என்ற கருத்து நிலவியதை சுட்டிக்காட்டிய அவர், இந்திய மக்கள் இவை அனைத்தையும் சாத்தியமாக்கி இருப்பதாகவும் கூறினார்.

     2014 முதல் 2019 வரையிலான கால கட்டத்தில், நாடு சராசரியாக 7.4% வளர்ச்சியை அடைந்திருப்பதோடு, பணவீக்கமும் 4.5 சதவீத்த்திற்குக் குறைவாக உள்ளதாக அவர் குறிப்பிட்டார். தாராளமயமாக்கலுக்குப் பிந்தைய இந்தியப் பொருளாதாரத்தில், முந்தைய ஆட்சி காலங்களைவிட, தற்போதுதான் சராசரி வளர்ச்சியில் உயர் விகிதத்தையும், பணவீக்கத்தில் குறைந்த அளவையும் காண முடிவதாகவும் அவர் தெரிவித்தார்.

     கடந்த 4 ஆண்டுகளில் நாட்டில் பெறப்பட்ட அந்நிய நேரடி முதலீட்டின் அளவு, 2014-க்கு முந்தைய ஏழு ஆண்டுகளில் பெறப்பட்டதற்கு இணையானது என்றும் பிரதமர் தெரிவித்தார்.  சீர்திருத்தங்களை செயல்படுத்தியதால்தான், இந்தியாவால் இந்த சாதனையைப் படைக்க முடிந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.  திவால் சட்டம், ஜி.எஸ்.டி., ரியல் எஸ்டேட் சட்டம் போன்றவற்றின் மூலம் பல்லாண்டு கால உயர் வளர்ச்சிக்கான அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

     130 கோடி விருப்பங்களைக் கொண்ட நாடாக உள்ள இந்தியாவில், வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு ஒரே ஒரு தொலைநோக்குப் பார்வை மட்டும் போதாது என்றும் பிரதமர் தெரிவித்தார். “பொருளாதார ஏற்றத்தாழ்வு, சாதி, சமய, மொழி மற்றும் மதப் பாகுபாடின்றி,  சமுதாயத்தின் அனைத்துத் தரப்பினரின் விருப்பங்களை பூர்த்தி செய்யக் கூடிய புதிய இந்தியாவை படைப்பதே நமது நோக்கம்” என்றும் அவர் கூறினார்.

“கடந்த காலத்தில் நிலவிய சிக்கல்களுக்கு தீர்வுகண்டு, எதிர்கால சவால்களையும் சந்திக்கக் கூடிய புதிய இந்தியாவே நமது இலக்கு” என்றும் திரு. நரேந்திர மோடி தெரிவித்தார்.  அந்த வகையில் கீழ்கண்ட சில உதாரணங்களையும் அவர் குறிப்பிட்டார்;

  • அதிவேக ரயிலை தயாரித்த வேளையிலேயே, நாட்டிலிருந்த அனைத்து ஆள் இல்லாத ரயில்வே கிராசிங்குகளும் அகற்றப்பட்டுள்ளன.
  • ஐஐடி-க்கள் & எய்ம்ஸ் மருத்துவமனைகளை அதிவிரைவில் அமைத்து வரும் இந்தியாதான், நாடு முழுவதும் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் கழிப்பறைகளையும் கட்டியுள்ளது.
  • நாடு முழுவதும் 100 நவீன நகரங்களை கட்டமைத்து வரும் இந்தியாதான், வளர்ச்சியை விரும்பும் 100 மாவட்டங்களில் விரைவான வளர்ச்சியையும் உறுதி செய்துள்ளது.
  • மின்சாரத்தை ஏற்றுமதி செய்யும் அளவிற்கு உருவெடுத்துள்ள இந்தியாதான், நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து இதுவரை மின்சார வசதி இல்லாத கோடிக்கணக்கான வீடுகளுக்கு மின் இணைப்பை வழங்கியுள்ளது.

சமூக வளர்ச்சித்துறையில் மேற்கொள்ளப்பட்ட நல்விதமான தலையீடுகள் பற்றி குறிப்பிட்ட பிரதமர், 12 கோடி சிறு, குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 ரூபாய் கிடைக்கச் செய்துள்ளது என்றார்.  இதன்படி, 7.5 லட்சம் கோடி ரூபாய் அல்லது சுமார் 100 பில்லியன் டாலர் தொகை அடுத்த 10 ஆண்டுகளில் நமது விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

டிஜிட்டல் இந்தியா, தொடங்கிடு இந்தியா, இந்தியாவில் உற்பத்தி செய்வோம் மற்றும் கண்டுபிடி இந்தியா போன்றவற்றில் அதிக கவனம் செலுத்தியதன் விளைவாக, உரிய பலனை அனுபவித்து வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார். புதிதாக தொழில் தொடங்க பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களில் 44 சதவீதம், இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில்தான் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.  நாட்டில் வைத்திருக்க வேண்டியவை மற்றும் வைத்திருக்க கூடாதவற்றுக்கு இடையேயான இடைவெளியை தொழில்நுட்பம் பூர்த்தி செய்வதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தியா 10 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாக மாறுவதைக் காண, அரசு ஆவலுடன் எதிர்நோக்கி இருப்பதாக கூறிய பிரதமர், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளங்கள், மின்சார வாகனங்கள் மற்றும் எரிசக்தி சேமிப்பு கருவிகளைப் பயன்படுத்துவதில் உலகிற்கு வழிகாட்ட விரும்புவதாகவும் தெரிவித்தார்.

*****